• Dr.உட்ரோ குரோல் •
(மார்ச் – ஏப்ரல் 2024)

4. முன் ஆயிரம் ஆண்டு கொள்கை:

வரப்போகும் நிகழ்வுகள் உண்டா? (பகுதி 2)

Dr.உட்ரோ குரோல்

எதிர்காலத்தைப் பற்றி ஆராயும் ஆர்வம் நமக்குப் புதியதல்ல. இதைக் காண விழையும் முதல் தலைமுறை நாமல்ல. மாமன்னர் ஜூலியஸ் சீசருக்கு, குறிசொல்பவர்கள், ஜோதிடர்கள், நிமித்தம் சொல்பவர்கள், அதிர்ஷ்டம் சொல்பவர்கள் அடங்கிய குழுக்கள் இருந்தன. அவை ஒரு நாட்டின் அதிபரது அமைச்சரவையைப்போலவே இருந்தன. அவர் போருக்குச் செல்லும் முன்னரும், தனது பேரரசின் காரியங்களைத் ஆரம்பிக்குமுன்னரும் இவர்களைக் கலந்து ஆலோசனை செய்தே முடிவெடுப்பார். அவருக்கு எதிர்காலம் முக்கியமானதாக இருந்ததால், அவருடைய அரசாங்கத்தில் கண்ணுக்குத் தெரியாதவற்றைக் கணிக்கும் மனிதர்கள் அதில் இடம்பெற்றிருந்தனர்.

இன்றைய உலகில் மக்கள் எதிர்காலத்தில் வாழ்கின்றனர். அதாவது அவர்கள் எதிர்காலத்தில் நடப்பதைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். நிகழ்காலத்தில் நடப்பதைப்பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. எதிர்காலத்தைப் பற்றி அறிவதில் சபை மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள உலகமும் ஆர்வமாகவே உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நம் மத்தியில் இருந்த முன் உபத்திரவகால கொள்கையாளரும், முன்னாயிரமாண்டு கொள்கையாளரும் அநேக தவறுகளைச் செய்திருந்தனர். ஆண்டவரின் வருகையை முன்னறிவித்த அநேகர் தவறான கணிப்பினைச் செய்திருந்தனர். அது எங்களுக்கு சங்கடத்தை அளித்தது.

நான் அத்தகைய கணிப்புகளைச் செய்யப் போவதில்லை. வெளிப்படுத்தல் புத்தகத்தை வாசிக்கும் நீங்கள் ஆண்டவராகிய இயேசுவின் மீதே கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில் இது யோவானின் வெளிப்பாடு அல்ல; இயேசுகிறிஸ்து வைப்பற்றி யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட காரியமாகும். இயேசுகிறிஸ்து திரும்பவருவார், ஆயிரமாண்டு ஆட்சிக்கு முன் சபையை இந்த உலகத்திலிருந்து எடுத்துக்கொள்வார்; ஏனெனில் உபத்திர வத்திலிருந்து நம்மைப் பாதுகாப்பதாக தேவன் வாக்களித்திருக்கிறார். அவர் வராவிட்டால், நம்மை அழைத்துச் செல்லாவிட்டால் அவருடைய வாக்குறுதி பொய்யாகிவிடும்.

பவுல் 1தெசலோனிக்கேயர் 1:9-10இல் “ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக் குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களை விட்டுத் தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனி வரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே” என்று எழுதியுள்ளார்.

இங்கு பவுல் இரு முக்கியமான காரியங்களைக் கூறியுள்ளார். அதாவது கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்றிலும் வெளிப்படுத்தல் காணப்படுகின்றன. இதனாலேயே நிறைவேறிய கொள்கையாளர்களின் “அனைத்தும் முடிந்துவிட்டது” என்பது சரியல்ல.

“நிறைவேறிவிட்டது” என்ற கொள்கையை உடையவர்கள் அனைத்தும் கடந்த காலம் எனக் கூறுகிறார்கள். அவர்கள் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு “கடவுளிடம் திரும்பியதை” கடந்த காலம் என்கின்றனர். ஜீவனுள்ள தேவனை சேவிக்க, விக்கிரகங்களைவிட்டுத் திரும்பியதை நிகழ்காலம் என்றும், வரப்போகும் கோபத்திலிருந்து நம்மை விடுவித்த அவருடைய குமாரன் பரத்திலிருந்து வருவதற்காகக் காத்திருப்பதை எதிர்காலம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

உபத்திரவகாலத்துக்குமுன் நாம் இவ்வுலகிலிருந்து எடுத்துக்கொள்ளப்படாவிட்டால் “வரவிருக்கும் கோபத்துக்கு” நாம் தப்பித்துக்கொள்ள முடியாது. உபத்திரவத்திலிருந்து நம்மைப் பாதுகாப்பதாக தேவன் அளித்த வாக்குறுதி உண்மைத்துவத்தை இழந்துவிடும்.

1தெசலோனிக்கேயர் 5ம் அதிகாரத்தில் பவுல் பின்வருமாறு எழுதியுள்ளார். “சகோதரரே, இவைகள் நடக்குங் காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள் மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை. சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே. நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.

ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம். தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச் சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம். தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார் (1 தெசலோனி. 5:1-9).

முதல் அதிகாரத்தில், இரட்சிப்பு பெற்றதை கடந்தகாலமாகக் கூறிய பவுல், 5ஆம் அதிகாரத்தில் “தேவன் நம்மை அந்த கோபாக்கினைக்கு நியமிக்கவில்லை” என்று கூறுகின்றார். அதுவும் கடந்தகாலம் 4ஆம் அதிகாரத்தில் கோபாக்கினைக்கு முன்பதாக நம்மை எடுத்துச்செல்லும் ஆண்டவருடைய வருகையை விளக்குகிறார். “ஏனெனில், கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர் கொண்டு போக, மேகங்கள்மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1 தெசலோனி. 4:16-17).

நாம் எப்பொழுதும் தேவனுடன் இருந்தால் இப்பொழுது அவருடன் இருப்போம் என்பது சரியாகப் பொருந்தாது. எனவேதான் “நிறைவேறிவிட்டது” கொள்கையாளர்களின் கூற்று வேதாகமத்தோடு ஒத்துப்போகவில்லை என நான் நினைக்கிறேன். கோபாக்கினைக்கு முன் தேவன் சபையை எடுத்துக்கொள்வார், ஏனெனில் தேவன் நம்மை கோபாக்கினைக்கு நியமிக்கவில்லை என்பது அவரது வாக்குறுதி.

முன்உபத்திரவகாலத்தையும், ஆயிரமாண்டு ஆட்சிக்குமுன் ஆண்டவரின் வருகையையும் நான் நம்புவதன் முதல் காரணம், 1 தெசலோனிக்கேயர் நிருபத்தின்படி உபத்திரவகாலத்துக்கு முன்னரும், ஆயிரமாண்டு ஆட்சிக்கு முன்னரும் சபை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

இரண்டாவதாக இயேசுகிறிஸ்து தமது சபையை அழைத்துச்செல்ல உபத்திரவகாலத்துக்கு முன் வருவார் என நான் நம்புகிறேன். இல்லையெனில் கிறிஸ்துவின் பாவநிவிர்த்தி போதுமானதா, அவருடைய இரத்தம் என்னை நியாயத்தீர்ப்பிலிருந்து பாதுகாத்ததா, இல்லையா? என்ற வினாக்கள் எழும்பும்.

யோவான் 3இல் இயேசுகிறிஸ்து உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி வராமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே வந்தார் என்றும், யோவான் 5:24 இல் நாம் இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டால் நாம் ஆக்கினைத்தீர்ப்புக்கு உட்படாமல் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்றும் தெளிவாகக் கூறுகிறது.

கிறிஸ்துவின் வாழ்வு நம்மை சுத்தமாக்குகிறது. அது தேவனுடைய பார்வையில் நம்மை நீதிமானாக்குகிறது. அது தனியாகவும், கூட்டாக அவரது சரீரமாகிய சபையாகவும் உருவாக்குகிறது. நாம் சபையின் அங்கமாக மாறுகிறோம்.

நான் சபையின் அங்கம், ஆனால், “கிறிஸ்து தலை” என்று எபேசியர் 1 மற்றும் கொலோசெயர் 1 இவற்றில் நாம் காணலாம். நான் உலகத்திலிருந்தால் உபத்திரவத்தின் வழியாகக் கடந்துசெல்ல வேண்டும். ஆனால் தலையாகிய கிறிஸ்து பரலோகத்தில் இருக்கிறார். இதில் கீழ்க்கண்ட இரு தெரிவுகள் உள்ளன.

1. தலையில்லாத சரீரம் உபத்திரவப்பட வேண்டும்; அதாவது, தலையில்லாத சபை உபத்திரவப் படவேண்டும்.

2. தலையாகிய கிறிஸ்து திரும்பிவந்து தனது சபையுடன் இணைந்து உபத்திரவப்பட வேண்டும்.

நான் உபத்திரவப்பட்டால் கிறிஸ்துவின் இரத்தம் என்னை நியாயத்தீர்ப்புக்கு தப்புவித்து, அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கென்று வைக்கப்பட்ட தண்டனைக்கு விலக்கும் என்பதில் ஐயம் எழுகிறதல்லவா?

இரண்டாவதாக, தலையாகிய கிறிஸ்து உபத்திரவகாலத்துக்கு முன்னர் வந்து, தமது சரீரமாகிய சபையை இந்த உலகத்திலிருந்து எடுத்துச் செல்வார். பூமியில் அவருடைய கோபம் ஊற்றப்படும் பொழுது நாம் பரலோகத்தில் அவருடன் இணைந்திருப்போம் என்பதே நன்கு பொருந்துகிறது.

தேவனுடைய கோபத்தை மனிதகோபத்துடன் குழப்பிக்கொள்ளக்கூடாது. நம்முடைய அயலார் நம்முடைய தோட்டத்தை நாசம்பண்ணினால் நாம் அவரிடம் கோபப்படுகிறோம். அது நீண்ட நாட்கள் இருக்குமெனில் அது கடுங்கோபமாக மாறிவிடுகிறது. அது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதும் நோக்கமுள்ளதுமாகும். நம்முடைய அயலார் எதைச் செய்தாலும் அதற்கு எதிர்மறையான பதிலையே கொடுப்போம்.

ஆனால் தேவனுடைய கோபமோ பாவத்துக்கு எதிரான பரிசுத்த வெறுப்பாகும். எந்தவிதமான பாவத்தையும் சகித்துக்கொள்ளமுடியாத பரிசுத்த தேவனிடமிருந்து அதையே நாம் எதிர்பார்க்கிறோம். அவ்வாறு இல்லையெனில் அவர் தேவனே அல்ல; வேதாகமம் கூறுகின்ற, பாவ உலகின்மீது தம்முடைய சினத்தை ஊற்றும் தேவன் அற்பமானவர் அல்லர்; அவர் பரிசுத்தமான தேவன். எனவேதான் பாவசெயல்களுக்கு தண்டனையைத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்; அதை நிறைவேற்றவும் செய்வார்.

இயேசுகிறிஸ்து உபத்திரவகாலத்துக்கு முன் தன்னுடைய சபைக்காக வரவேண்டும் என நான் நினைக்கிறேன். இல்லையெனில் வெளிப்படுத்தல் புத்தகத்திலுள்ள முக்கியமான அநேக அடையாளங்களை நாம் இழந்துபோக நேரிடும்.

அடையாளங்களின் அடிப்படையில் சமயக் கோட்பாடுகளை நாம் ஒரு போதும் உருவாக்க முடியாது. உபத்திரவகாலத்துக்கு முன் இயேசு வந்து நம்மை அழைத்துச் செல்லாவிட்டால் நாம் அழிந்து போவோம் என்பதற்கு வெளிப்படுத்தல் புத்தகத்தில் அநேக அடையாளங்கள் உள்ளன. வெளிப்படுத்தல் 1: 1-3: “சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தைக் குறித்தும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். இந்தத் தீர்க்க தரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.”

இப்பகுதியை வாசிக்கும் “நிறைவேறிவிட்டது” என்ற கொள்கையாளர் “காலம் சமீபமாயிருக்கிறது” என்று கூறியுள்ளதால், அது கி. பி.70இல் நிறைவேறிவிட்டது. ஆனால் காலம் என்பதற்கான வரையறை தரப்படவில்லை. பல தலைமுறைகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு புத்தகமானது அவர்களுக்கு எதிர்காலமாகவும் நமக்கு சமீபமாகவும் இருக்கலாம்.இங்குள்ள அடையாளம் என்ன? “யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது:” (வசனம்4). வெளிப்படுத்தல் புத்தகத்தில் முதன்முறையாக இங்கே சபை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் அதிகாரத்தில் சபை அல்லது சபைகள் என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது. வசனம் 8 “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.”

வசனம் 11: “நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது”.

வசனம் 20: “என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்”.

மீண்டும் இரண்டாம் அதிகாரத்தில் வசனம் 1: “எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன்குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக் கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது …”

வசனம் 7: “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங் கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது”.

வசனம் 8: “சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது …”

வசனம் 11: ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங் கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.

வசனம் 12: பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது.

வசனம் 17: ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

வசனம் 18: தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்:

வசனம் 23: அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்து கொள்ளும்;

வசனம் 29: ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

எனவே 2ஆம் அதிகாரத்தின் பொதுவான கருத்தும் “சபை” என நாம் தெளிவாக அறிந்து கொள்ளுகிறோம்.

மூன்றாம் அதிகாரத்திலும் இந்த சொல் பல முறை உபயோகிக்கப்படுகிறது.

வசனம் 1: சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்:

வசனம் 6: ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

வசனம் 7: பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவெனில்:

வசனம் 13: ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

வசனம் 14: லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்:

வசனம் 22: ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.

முதல் மூன்று அதிகாரங்களிலும் 19 முறை “சபை” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இனி 4ஆம் அதிகாரத்தைக் காண்போம்.

வசனம் 1: “இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.”

முன்னர் நான் கூறியிருந்தபடி, சிறிய காரியங்களுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

வசனம் 7: “முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும் …” இங்கேயும் சபை காணப்படவில்லை.

இனி 5ஆம் அதிகாரத்தைக் காண்போம்.

வசனம் 1: “ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்”. இங்கும் சபை என்ற சொல் இல்லை.

தொடர்ந்து 5 முதல் 21ம் அதிகாரம் வரை சபையைக் காணோம். 22ம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து, “சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன்” என்று கூறினார்.

முதல் மூன்று அத்தியாயங்களில் 19 முறை குறிப்பிடப்பட்ட கோட்பாட்டை உருவாக்க வேண்டாம். நான்காம் அதிகாரத்திலிருந்து இறுதிவரை அந்த சொல் காணப்படவில்லை. வெளிப்படுத்துதல் 4 முதல் 19 வரையுள்ள அதிகாரங்கள் உலகத்தில் உபத்திரவகாலத்தைப்பற்றி விவரிக்கிறது. ஏன் இங்கு சபையைப் பற்றி குறிப்பிடப்படவில்லை? ஏனெனில், வேதாகமத்தில் அநேக இறையியல் காரணங்கள் கொண்ட நம்பிக்கைகள் உண்டு. எனக்கு எந்த வேதாகமப் பயிற்சியும் இல்லையென்பதால், எனது வேதாகமம் விளக்கும் இந்த முடிவுக்கு வந்தேன். எனக்கு இறையியல் பயிற்சி இருந்தாலும் இதே முடிவுக்கு வந்திருப்பேன்.

அன்பானவர்களே, ஆண்டவரின் வருகை எந்தவேளையிலும் இருக்கலாம். அது எதிர்கால நிகழ்வு இல்லையெனில் 1 தெசலோனிக்கேயர் 4ஆம் அதிகாரத்தின் வார்த்தைகளால் நமக்கு ஆறுதல் இல்லை. நான் முன்னாயிரமாண்டு கொள்கையாளன். இதுவே வேதாகமத்தின் உண்மைகளுடன் நன்கு பொருந்துகிறது.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

 உங்களுக்குத் தெரியுமா?

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்தான் “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்ற கேள்விக்கான பதிலாகும்!