• சகோ.சற்குணம் சாமுவேல்ராஜ் •
(மார்ச் – ஏப்ரல் 2024)
“அவர்களை ஆசீர்வதிக்கையில் அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்” (லூக்கா 24:51)
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் சத்திய வசன வாசகர்களுக்கும் பங்காளர்களுக்கும் எங்களுடைய வாழ்த்துக்களைக் கூறுகிறோம். இந்த நாளிலும் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சம்பவத்தைக் குறித்து தியானிப்போம். “அவர்களை ஆசீர்வதிக்கையில் அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்” (24: 51) என லூக்கா குறிப்பிடுகிறார்.
தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து இந்த உலகம் படைக்கப்படும்போது தேவனோடு உடன் இருந்தார் என்பதை யோவான் முதலாம் அதிகாரம் முதல் மூன்று வசனங்களிலே குறிப்பிடுவதைப் பார்க்கிறோம். ஆதியிலே வார்த்தை இருந்தது; அந்த வார்த்தை தேவனாய் இருந்தது; அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது (யோவான் 1:1).
கொலோசெயர் 1:17இன் படி “அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலை நிற்கிறது.” இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்ததன் நோக்கம் பாவத்தில் சிக்கித்தவிக்கிற மனிதனை விடுவிக்கவேண்டும் என்பதற்காகவும், இரட்சிப்புக்கு ஒரு வழியை ஏற்படுத்தும்படியாகவும் பிதாவானவர் தம்முடைய குமாரனை அனுப்புகிறார். இயேசு இவ்வுலகத்திற்கு அனுப்பப்பட்டதின் நோக்கத்தை நிறைவேற்றி அவர் உயிர்த்தெழுந்த பின்பதாக, பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நடைபெற்ற 3 காரியங்களைக் குறித்து தியானிப்போம்.
1. பிதா தனக்குத் தந்த பணிகளையெல்லாம் பூலோகத்தில் செய்துமுடித்தார்.
இயேசு பரமேறிய பின் நடைபெற்ற முதல் காரியம் என்னவெனில், இவ்வுலகில் இயேசுவின் ஊழியம் நிறைவுபெற்றது. இயேசு வந்து ஊழியத்தை ஆரம்பித்து சிலுவைவரைக்கும் சென்று உயிரோடு எழுந்து பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார். இயேசுகிறிஸ்து பூலோகத்திற்கு இன்னொருமுறை வரப்போகிறார். இயேசு கிறிஸ்து இவ்வுலகில் இருக்கும்போது நிறைவேற்றின ஊழியமும் அவர் பரலோகத்தில் இப்போது செய்து கொண்டிருக்கிற ஊழியமும் பூலோகத்தில் இப்போது நடைபெற்றுவருகிற ஊழியமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கிறது.
பிலிப்பியர் இரண்டாவது அதிகாரம் 6 முதல் 11 வரையிலான வேதபகுதிக்கு நம்முடைய கவனத்தைத் திருப்புவோம். “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்”. சிலுவைக்கு சென்று பரலோகத்துக்கு ஏறிச்சென்ற இயேசுகிறிஸ்து மேலான நாமத்தை உடையவராக, பிதா தனக்குத் தந்த வேலைகளையெல்லாம் பூலோகத்தில் முடித்தவராக அவர் அங்கே போகிறார், சிலுவையில் தொங்கும்போது “முடிந்தது” என்று சொல்லி தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார் (யோவான் 19:30). பிதாவானவர் அவருக்கு என்ன வேலையை கொடுத்தாரோ அவற்றையெல்லாம் நிறைவேற்றி முடித்தார்.
இரட்சிப்பின் திட்டத்திலே எந்த பங்கை நிறைவேற்ற வேண்டும், அதை எப்படி நிறைவேற்ற வேண்டும், அதற்காக எவ்வளவு கடின பாதையில் நடக்கவேண்டும்; சிலுவையை சுமந்து சிலுவையிலே மரிக்க வேண்டும்; கடைசி சொட்டு ரத்தத்தையும் கொடுக்கவேண்டும். இவை எல்லாவற்றையும் மனிதனை மீட்பதற்காக அவர் செய்து முடித்தவராக அங்கே நிற்கிறார்.
லூக்கா 24:45-51 வேதபகுதியில் சீஷர்களோடு உரையாடுகிறதைப் பார்க்கிறோம். பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டு போய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப்பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அப்போஸ்தலர் 1 அதிகாரம் 3 முதல் 9 வரையுள்ள வேதபகுதியிலும் இந்த சம்பவத்தைப் பார்க்கிறோம். எல்லாரும் பார்த்துக்கொண்டிருந்த போது அவர் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப் படுகிறார். பரலோகம் ஏன் அவரை எடுத்துக்கொள்கிறது? இனி அடுத்த பணி பரலோகத்தில் அவருக்கு இருக்கிறது. பூமியிலே பிதாவால் கொடுக்கப்பட்ட வேலையை அவர் முடிக்கிறார். ஆகையினாலே பரலோகம் அவரை எடுத்துக்கொள்கிறது.
இன்னொரு அர்த்தத்தில் இதை நாம் பார்ப்போம் என்று சொன்னால், ஒவ்வொரு விசுவாசியும் இதே வழியில் இயேசுவைப் பின்பற்றி அவர் நமக்கு நியமித்த சிலுவையை சுமந்து இந்த உலகத்தில் பரிசுத்தமாய் வாழ்ந்து அவருடைய சித்தத்தை செய்து நமக்கு அவர் வைத்த சகல பணிகளையும் முடித்து நாமும் அதேவழியில் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்போது நாமும் அங்கே வரவேற்கப்படுவோம். இதை நாம் எவ்வாறு விசுவாசிக்கலாம்? இயேசுகிறிஸ்து மரித்தபிறகு உயிர்த்தெழுதலிலே முதற்பலனானானபடியால் அதே உயிர்த்தெழுதல் உங்களுக்கும் எனக்கும் வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை சத்திய வேதம் சொல்கிறது. முதல் குறிப்பாக நாம் பார்க்கிறோம்: அவர் பூலோகத்தில் தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றி முடித்தவுடன் பரலோகம் அவரை எடுத்துக்கொள்கிறது. அதை சீஷர்கள் எல்லாரும் பார்க்கிறார்கள்.
2.பரலோகத்தில் இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியம் தொடங்கியது.
இதைத்தான் பிதாவினுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார் என்று வாசித்தோம். பரலோகத்திற்கு சென்ற ஆண்டவர் எந்தவிதமான பணிகளைச் செய்கிறார் என்று நாம் சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம்.
அ.நமக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுகிறார்.
இயேசு தமது சீஷர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது “நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” (யோவான் 14:3) என்றார். இங்கு பிதாவினுடைய அந்த திட்டத்தை சொல்லுகிறார். ஆனால் சீஷர்களுக்கு அந்த நேரத்தில் அது புரியவில்லை. அப்பொழுது தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார் (யோவான் 14:5-7).
அதாவது, முதலில் நான் போய் பிதாவின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்தபிறகு, என்னைப் பின்பற்றி இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்று என்னிடம் கடந்துவருகிற ஒவ்வொரு பரிசுத்தவான்களுக்காகவும் அவர்கள் என்னோடுகூட தங்கி இருக்கும்படியாகவும், நான் அவர்களோடு இருக்கும்படியாகவும் பரலோகத்தில் ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணப்போகிறேன். இதுதான் அவர் செய்கிற முதல் காரியமாகும். பிரியமானவர்களே, நாம் எல்லாரும் அங்கு போய் பார்க்கப்போகிறோம். ஜீவ புத்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்களாக இரட்சிப்பின் அனுபவத்தை நாம் அடைந்தோமென் றால் நமக்காக அவர் ஆயத்தம் பண்ணப்பட்ட ஸ்தலத்திலே அவரோடு கூட இருப்போம்.
ஆ.பூலோகத்தில் பலிசெலுத்தும் பணி ஓய்ந்தது.
இரண்டாவது பரலோகத்தில் அவர் செய்கிற பணி என்னவென்றால் தம்மையே ஒரு பலியாக அவர் தந்துவிட்டபடியினால் பூலோகத்தில் பலி செலுத்தும் பணி ஓய்ந்துவிட்டது. இதை உறுதிப் படுத்துவதற்காக தேவனுடைய வலதுபரிசத்தில் அவர் உட்காருகிறார். இதை நாம் எபிரெயர் 10:11-14 இல் விரிவாகப் பார்க்கிறோம். “அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும் வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.”
இந்த வசனத்தின் வாயிலாக நாம் என்ன அறிந்துகொள்கிறோமென்றால் இயேசு கிறிஸ்து பிரதான ஆசாரியராக அங்கே உட்கார்ந்து இருக்கிறார். நாம் நமது பாவங்களை மனம்வருந்தி அறிக்கையிடும்போது, அவர் பிரதான ஆசாரியராக ஒரே தரம் பலியிடப்பட்டு அந்த பாவத்திற்காக மரித்த ஒரு தேவனாக அங்கே உட்கார்ந்திருக்கிறபடியினால் அவர் நமக்காக பிதாவினிடம் பரிந்து பேசுகிறார். அவரிடம் பரிந்துபேசி நமது பாவங்களை அங்கேயிருந்து மன்னிக்கிறார். இன்றும்கூட உலகத்தில் எந்த மூலையில் இருந்தும் எந்த ஒரு மனிதனும் கண்களை மூடி தேவனே நான் பாவம் செய்துவிட்டேன்; இனி நான் தப்பிப்பதற்கு வேறு வழி இல்லையென்றும் நான் அந்த பாவத்திலிருந்து வெளியே வரவேண்டுமென்றும் கதறும்போது பரலோகத்தில் உட்கார்ந்திருக்கிற இயேசு கிறிஸ்து சிந்தப்பட்ட அவரது ரத்தத்தை அங்கே நினைவுகூர்ந்தவராக அந்த ரத்தத்தினாலே அவர் இன்றும் அவனை மீட்டெடுக்கிறார். அவனை மன்னித்து அந்த பாவத்திலிருந்து என்றும் அவர் தூக்கிவிடுகிறார். இந்த பணியைச் செய்வதற்காக பிதாவின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார்.
இ.தேவனுடைய வலதுபாரிசத்தில் அமர்ந்து நமக்காக பரிந்துபேசுகிறார்.
மூன்றாவதாக, அவர் பரலோகத்திலிருந்து செய்கிற பணியென்னவென்றால் அவர் நமக்காக பரிந்துபேசுகிறார். இதை ரோமர் 8:34இல் இவ்வாறு வாசிக்கிறோம்: ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக் காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே என்று. அதே அதிகாரத்திலே அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெரு மூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்று 26ஆம் வசனத்தில் பார்க்கிறோம். இந்த கிருபையின் காலத்தில் ஒருவேளை நாம் செய்துவிட்ட பாவத்திற்கான கடுமையான தண்டனை இன்றும் நமக்கு வராமல் இந்த கிருபை மூடிக்கொள்ளுவதற்கான ஒரேகாரணம், இயேசு கிறிஸ்து பிதாவினிடத்தில் நமக்காக பரிந்து பேசுகிறார் என்பதை நாம் அறியவேண்டும். நம்மேல் தேவனுடைய கோபம் திரும்பிவிடாதபடிக்கு அவர் நமக்காக வேண்டுதல் செய்கிறவராக அங்கே நிற்கிறார். அவரது பணியிலே முக்கியமான பணி நமக்காக அவர் பரிந்து பேசுகிற பணியாகும்.
ஈ.சத்துருக்களை பாதபடியாக்கிப் போடும் வரைக்கும் இயேசு காத்திருக்கிறார்.
இறுதியாக, அவர் பரலோகத்திலிருந்து செய்கிற இன்னொரு பணியைக் குறித்து 1கொரிந்தியர் 15:24-26இல் பார்க்கிறோம். “அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத் தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகை செய்ய வேண்டியது. பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.” அதாவது, சத்துருக்களை பாத படியாக்கிப்போடும் வரைக்கும் இயேசு காத்திருக்கிறார். இதே காரியத்தை நாம் எபிரெயரிலும் வாசிக்கிறோம்.
இன்றும் சத்துருக்களாலும் பிசாசினாலும் தேவ மனிதர்களுக்கு போராட்டம் இருக்கிறது. அந்த போராட்டத்தில் அவர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை பெலப்படுத்துகிறார். ஒவ்வொரு போராட்டத்திலும் தேவனுடைய மனிதன் சத்துருவை ஜெயித்தவனாக எழும்பி நிற்க வேண்டும். சிலுவையிலே இயேசுகிறிஸ்து வெற்றி சிறந்தார். அதேபோல இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து இன்றும் அவரை பின்சென்று வாழ்கிற ஒவ்வொரு விசுவாசியும் எதிராக எழும்பக் கூடிய சத்துருக்கள் எல்லாரையும் அவன் ஜெயிக்க வேண்டும். இதற்கு நான் எப்படி உதவி செய்யலாம். இவ்வாறு இயேசு பரலோகத்திலிருந்து நான்கு பணிகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இது இயேசு பரமேறிய பின் நடைபெறுகிற இரண்டாவது குறிப்பாக நாம் பார்த்தோம்.
3.இயேசுகிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தை அறிவிக்கும் பணி இன்றும் தொடர்கிறது.
மூன்றாவது குறிப்பாக, உலகில் இயேசு கிறிஸ்துவினுடைய ஊழியம் இன்றும் தொடர்கிறது. இயேசுகிறிஸ்து தமது ஊழியத்தை முடித்துவிட்டார் என்று முதல் குறிப்பிலே பார்த்தோம். ஆனால், அந்த ஊழியத்தின் பொறுப்பை தம்முடைய சீஷர்களுடைய கையிலே அவர் கொடுத்திருக்கிறார். இயேசுகிறிஸ்து மனிதர்களை இரட்சிக்கிறார். அந்த மனிதனை இரட்சித்ததோடு அல்லாமல் அவன் இரட்சிக்கப்பட்ட பிறகு அந்த செய்தியை மற்றவர்களுக்கு அவன் எடுத்துச் சொல்லவேண்டும் என்றார். இதைத்தான் தமது சீஷர்களுக்கு “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்று கட்டளையாக அவர் கொடுத்திருக்கிறார்.
அந்த கட்டளை இன்றும் தொடர்ந்து அவருடைய பிள்ளைகளுக்கு கடந்து வந்துகொண்டே இருக்கிறது. விசுவாசித்து அவருடைய சீடர்களாக வாழ்கிற நாம் ஒவ்வொருவரும் இந்த பணியை இன்றும் செய்துகொண்டிருக்கிறோம். சுவிசேஷம் இந்த நாட்களில் உலகமெங்கும் அறிவிக்கப்படுவதனுடைய நோக்கம் என்ன தெரியுமா? இயேசு கிறிஸ்து விட்டுச்சென்ற அந்த பணியை அவருடைய சீஷர்களாகிய நீங்களும் நானும் தொடர்கிறோம்.
அதுமாத்திரமல்ல, இயேசுகிறிஸ்துவை அறிவிக்கும் ஊழியம் இன்னொரு வகையிலும் செய்யப்படுகிறது. அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று என்று அப்போஸ்தலர் 11வது அதிகாரம் 26வது வசனத்தில் வாசிக்கிறோம். கிறிஸ்து அவர்களுடைய சாயல் ஆனது மாத்திரமல்ல, அவர்களுடைய குணாதிசயங்கள் ஒவ்வொன்றுமே இயேசுகிறிஸ்துவைப் போலவே இருந்தது. அவர்கள் இயேசுகிறிஸ்துவைப் போன்று அன்புள்ளவர்களாயும் அவரைப்போல பொறுமை உள்ளவர்களாயும் கிறிஸ்துவைப் போல பரிசுத்தம் உள்ளவர்களாகவும் இருந்தனர்.
ஆகையினால்தான் அங்கே வாழ்ந்த மக்கள் அவர்களுக்கு “கிறிஸ்தவர்கள்” என்று ஒரு பெயரை சூட்டுகிறார்கள். அந்த சாட்சியின் வாழ்க்கையை இன்றும் அவருடைய சீஷர்களாக நாம் தொடரும்போது அதன் மூலமாகவும் நாம் சுவிசேஷத்தை அறிவிக்கிறோம். வார்த்தைகளினாலே வேதவசனங்களை சொல்லி அறிவிப்பது ஒரு புறம்! இயேசுகிறிஸ்துவைப்போல வாழ்ந்து காண்பித்து அறிவிப்பது இன்னொரு புறம்!! இயேசு கிறிஸ்து இப்படித்தான் வாழ்ந்தார். இயேசுகிறிஸ்து தமது வாழ்க்கையில் குணாதிசயத்தோடு வாழ்ந்து காட்டினார். அதே குணாதிசயங்களை நம்மிடத்திலும் அவர் கொடுத்திருக்கிறார். நானும் நீங்களும் அவரைபோல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த செய்தி மிகவும் வலிமையுள்ள செய்தியாகும். அறிவிக்கும் செய்தியைவிட சாட்சியாய் வாழ்ந்து காண்பிக்கும் அந்த வாழ்க்கை மிகவும் வல்லமை உள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்விரண்டையும் செய்யும்படி தமது சீஷர்களுக்கு கொடுத்திருந்தார். இப் பணியை நாமும் செய்கிறோமா?
ஒன்று வார்த்தையினால் அறிவிப்பது! இன்னொன்று நம் வாழ்க்கையின் மூலம் அறிவிப்பது!! இவ்விரண்டையும் செய்து ஆண்டவருடைய பணியை நிறைவேற்றுவோம்.