• சகோ. இ.வஷ்னி ஏனர்ஸ்ட் •
(மார்ச் – ஏப்ரல் 2024)
நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து, உலக மக்களின் பாவ விமோசனத்துக்காக தன்னையே பலியாக்கி சிலுவையில் மரிக்க தன்னை ஒப்புக் கொடுத்தார். கிறிஸ்துவின் பாடு, மரணங்களைக் குறித்து சிந்திக்கவேண்டிய நாம், இயேசுவோடு மரிப்பதையும், வாழ்வதையும் குறித்து அதிகம் சிந்திப்பது நல்லது.
இன்றைய தொற்றுநோய் தாக்கம், உலக நாடுகளின் யுத்தம், ஏறும் விலைவாசி உயர்வுகள் இவற்றின் மத்தியில் வாழ்வதற்காகவே நம்மில் பலர் சிந்திக்கின்றோம். சிலர் தமது மரணத்தைக் குறித்து சிந்திக்காமலும் இல்லை எனலாம். எனினும் மரணத்தைக்குறித்து பேச எவருக்குமே விருப்பம் இருக்காது. ஒருவித வேதனை, பயம், சங்கடம் காரணமாக மரணத்தைக் குறித்து பேசுவதை நாம் தவிர்க்கின்றோம்.
இன்று நீங்கள் ஒருவேளை மரணத்திற்குப் பிறகு எனக்கு என்ன நேரிடப் போகின்றது என்ற அச்சத்தினால் கவலைப்படுபவராக இருக்கலாம். எதிர்கால நித்திய வாழ்வைக்குறித்த நம்பிக்கை இல்லாதவராகவும் இருக்கலாம். எப்படியிருப்பினும். மரணம் என்ற ஒன்றினை ஒருநாள் நாம் முகங்கொடுத்தே ஆகவேண்டும்.
வேதாகமத்திலே, தனது மரணத்தைக்குறித்து முன்னறிவித்தவராக இயேசுவை சுட்டிக்காட்டலாம். இது உண்மையில், மிகவும் அசாதாரணமான ஒன்று. நான் எப்போது மரிப்பேன் என்று தன்னைக்குறித்து எவராலும் சொல்ல முடியாது. எனினும், இயேசுவானவர், நேரடியாக, உறுதியாக தமக்கு நேரிடப்போகின்ற மரணத்தைப் பற்றி சீடர்களிடம் கூறுகின்றார்.
மாற்கு 10:32ஆம் வசனம் கூறுகிறது: “பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்துபோனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப் போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத் தொடங்கினார்: இதோ. எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷ குமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். அவர்கள் அவரைப் பரியாசம் பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலை செய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்”. இயேசு கூறிய இந்த வார்த்தைகள் மிக அற்புதமான கூற்றாகும்! காரணம். அவர் தனது சொந்த மரணத்தைப் பற்றி அதன் விபரங்களை வரிசைப்படுத்தி கூறுகின்றார். நம்மில் யாராலும் இதைச் செய்யமுடியாது. ஆக, இது அவரது தெய்வீகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.
நிகழப்போகின்ற சூழ்நிலை எதுவாக இருப்பினும், அவற்றின் மீதான அவரது முழுமையான கட்டுப்பாட்டை இது காட்டுகிறது. தேவ சித்தத்தை நிறைவேற்றுபவராக, தாமாக விரும்பி அப்பாதையைத் தெரிந்தெடுத்தார்.
உலக மக்களின் பாவ விமோசனத்துக்காகவே கிறிஸ்துவானவர் சிலுவை அனுபவத்தில் தம்மை அர்ப்பணித்தார். இது விசேஷித்த ஒரு அனுபவம். உலகப்பிரகாரமான மக்களால் புரிந்துகொள்ள முடியாத மரண அனுபவம். கிறிஸ்துவுடனேகூட மரித்து வாழும் வாழ்க்கை ஒரு அற்புதமான அனுபவமாம். ஒரு உண்மை கிறிஸ்தவன் அற்புதமாய் தேவனுக்காக வாழ்கிறவனும் சுயநலனுக்கு மரித்தவனாக வாழ்கிறவனுமாயிருப்பான்!
ஒருவன் கிறிஸ்துவோடு பிழைத்திராவிட்டால், கிறிஸ்துவானவரைப்போல ஜீவியத்தை வெளிப்படுத்த இயலாது. கிறிஸ்து உங்களில் வெளிப்பட வேண்டுமானால், நீங்கள் கிறிஸ்துவோடே மரிக்க வேண்டும். பவுல் கூறுகின்றபடி, “கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்: நான் இப் பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன் (கலா.2:20).
மனிதரின் கொடிய பாவத்திற்கான தண்டனை கிரயத்தை செலுத்தும்படிக்கு தன்னையே மரணத்தில் அர்ப்பணித்தார் இயேசு. ஆம், பிதாவாகிய தேவன் வகுத்த திட்டத்திற்கு தன்னை முற்றிலும் கீழ்ப்படுத்தினார். அவரது பாவவிமோசன திட்டத்தை இயேசுவானவர் செயற்படுத்தினார். அதோடுகூட அவர் தனது உயிர்த்தெழுதலையும் முன்னறிவித்தார். “ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்” (2கொரி. 13:4).
சிலுவையில் அறையப்பட்ட வாழ்க்கை என்பது ஒரு செத்துப்போகின்ற வாழ்க்கையாகும். உலகத்திற்கும், அதன் முகஸ்துதிகளுக்கும். அதன் புகழ்ச்சிக்கும், அதன் இச்சைகளுக்கும் நாம் செத்துப்போக வேண்டும். உங்களது ஜாதியை, மதத்தை, மொழியை, உங்களது நாட்டை, உங்களது தொழிலை, பதவியை. முன்னேற்றத்தைக் குறித்து பெருமை பாராட்டுகின்றீர்களா? நீங்கள் இயேசுவை கவனியுங்கள்.
நாம் உலகத்திற்கு மரிக்கவேண்டும். அப்போது தான் ஜீவனுக்கேதுவாக அவருடன்கூட நாமும் ஜெயிக்க முடியும். “நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும் பொருட்டாக. நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்” (ரோம 6:6).
கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் என்று கூறிய பவுல். இங்கு உலகம் தனக்கு செத்தது என்கிறார். உலகத்தின் மீது அவர் இடைவிடாத போராட்டம் போராடினார். எப்பொழுதும் கிறிஸ்துவானவர் அவரை வெற்றி சிறக்கப் பண்ணுவார் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆம். “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கின்றார்கள்” (கலா. 5:24) “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமா னீர்கள்” (1பேதுரு 2:24) என பேதுரு கூறுகின்றார்.
இயேசுவானவர் நமது பாவங்களைச் சிலுவையில் சுமந்தார். அவரது முகத்தில் துப்பினார்கள், தலையில் குட்டினார்கள். முள்முடி சூட்டினார்கள். அவரைப் பின்பற்றியவர்களும்கூட அவரை மறுதலித்தார்கள், அவரோ அவர்களுக்கு பதிலுக்குப் பதில் எதுவும் செய்யவில்லை.
இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனாகவும், நமது இரட்சகராகவும், தெய்வீக நபராகவும், நாம் நம்பிக்கை வைக்க தகுந்த நபராகவும் இருப்பதை சுவிசேஷ புத்தகங்களிலே காண்கின்றோம்.
ஒருமுறை செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் இயேசுவிடம் வந்து: போதகரே. நாங்கள் கேட்டுக்கொள்ளப் போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே. எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள் செய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனாலும் என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக் கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார் (மாற்கு10:35-40).
இங்கே சற்று கவனியுங்கள். உலகத்து மக்களைப்போல யாக்கோபும் யோவானும் இயேசுவின் வலதுபக்கத்திலும் இடதுபக்கத்திலும் இருந்து ஆளுகை செய்ய விரும்பினார்கள். இது தவறா? இன்றும்கூட இதுபோல உலகில் உயர்ந்த இலட்சியம் கொண்ட அநேகர் உண்டு. அவர்கள் உலகத்திற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள், இன்றைய சில கிறிஸ்தவர்களும்கூட யாக்கோபு யோவானைப்போல தமக்குரிய ஆசனத்தைப் பெறுவதிலேயே நோக்கமாய் இருக்கிறார்கள். இவர்கள் தேவனின் பரிசுத்த தெய்வீக அநாதி திட்டத்தை முற்றிலும் மறந்து பூமிக்குரிய மக்களைப்போன்றே செயற்படுகின்றார்கள்.
உலகத்தில், தமது ராஜ்யத்தை இயேசு ஸ்தாபிக்கப்போகிறார் என்று யாக்கோபும் யோவானும் அன்று தப்பெண்ணம் கொண்டனர். அதில் அங்கத்துவம் பெற்று அரசாள விரும்பினார்கள். ஆனால், இயேசுவோ, தம்முடைய ஆவிக்குரிய ராஜ்யத்தையே வலியுறுத்தினார். இவ்வுலகில் ஒரு முடியாட்சியை நிறுவ இயேசு பாலனாக பிறக்கவில்லை. எனினும் அவர் ராஜாதிராஜாவாக மெய்யாகவே இருந்தும்கூட புதிய ஏற்பாடு கூறுகின்றபடி, கிறிஸ்துவின் சரீரமாக அவர் ஆவிக்குரிய ராஜ்யத்தையே ஏற்படுத்தினார். தமது சிலுவை மரணத்திற்கூடாக உலகத்தையும் பிசாசையும் அதன் வல்லமையையும் முறியடித்தார். நித்தியமான ராஜ்யத்திற்கான தமது அரசாட்சியில் மனிதர்களாகிய நம்மை நித்தியத்தில் சேர்ப்பதற்கான தனது பணியை சிறப்பாக நிறைவேற்றினார்.
இயேசு தனக்கு வரவிருக்கும் மரணத்தை விவரிக்கும்போது, யாக்கோபு யோவானிடம் “நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும். உங்களால் கூடுமா” என்று கேட்டார். அன்று யோவான் ஸ்நானன் வனாந்தரத்தில் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, மனந்திரும்புதலுக்கான அழைப்பை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்டவர்களுக்கு முழுக்கு ஸ்நானம் கொடுத்தார்.
இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து சபைக்குள் வருகின்ற நபர்கள் இன்றும் அவ்விதமாகவே திருச்சபைக்குள் இணைத்துக் கொள்ளப்படுகின்றார்கள். ஞானஸ்நானமும் மனந்திரும்புதலும் நமது பாவ வாழ்வை மாற்றுவதற்கான அடையாளமாகும். இன்றும் நமது ஆண்டவர், வாழ்க்கையை மாற்றுவதற்கு. மனந்திரும்புவதற்கு மக்களை அழைக்கின்றார். நமது பாவத்தை அறிக்கையிட்டு, இயேசுவின் மரணத்திற்கூடாக வருகின்ற இரட்சிப்பை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் அர்த்தம், மேசியாவாகிய இயேசுவை தனது சொந்த இரட்சகராக விசுவாசித்து தங்கள் இதயங்களில் அவரை ஏற்றுக்கொண்டு மனந்திரும்புவதாகும். இயேசுகிறிஸ்துவை அறிந்துகொள்ள வாஞ்சிக்கின்றீர்களா?
முதலில் பாவத்திற்கு நீங்கள் மரிக்கவேண்டும். தினசரி வாழ்வில் சிலுவையில் அறையப்பட்ட ஜீவியத்தை ஜீவிக்கவேண்டும். அந்த ஜீவியமானது கிறிஸ்துவுக்கும், உயிர்துறந்த அவரது அன்புக்கும் முழுவதுமாக தன்னையே ஒப்புக் கொடுத்த வாழ்க்கையாகட்டும். கர்த்தரை மாத்திரமே மேன்மை பாராட்டும் வாழ்க்கையாகட்டும். அது வேறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டமாட்டாது.
நாம் இன்று, இயேசுவின் சீடராக ஜீவிக்க வேண்டுமாயின், கிறிஸ்து நமக்குக் கட்டளையிட்ட யாவற்றையும் கற்றுக்கொள்ள, கைக்கொள்ள வேண்டும். மற்றவர்களுக்காக இயேசு சிலுவையில் மரித்தது போலவே, உண்மையில், நாமும் பிறருக்கான கிறிஸ்துவின் பேரன்பை காண்பிக்க வேண்டும். அன்பு பாராட்டவேண்டும். அன்பு சகலவற்றையும் சகிக்கும். அந்த கிறிஸ்துவின் அன்பு எப்பொழுதும் வெற்றியடையும்.
இயேசுவின் சீஷராக, இன்று நாமும் சிலுவை வழியைப் பின்பற்ற ஆயத்தமா? இதுவே நமது இரட்சிப்புக்கான வழிமுறையாகும். அன்று யாக்கோபும் யோவானும் இயேசு அனுபவித்த வேதனையை, துன்பத்தை, ஸ்நானத்தை அறியாதவர்களாக இருந்தார்கள். அறிந்துகொண்டபோது இயேசுவுக்காக இரத்தசாட்சிகளாக மரிக்கவும் தம்மை அர்ப்பணித்தார்கள். நாமும் அந்த பரிசுத்தவான்களின் வரிசையிலே பிதாவாகிய தேவனை சந்திக்க மகிழ்ச்சியோடு நம்மை அர்ப்பணிப்போம்.
இங்கே. இயேசு தன்னை ஒரு மீட்கும் பொருளாகக் கொடுக்கிறார். “அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும். அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” (மத். 20:28). அவர் புறஜாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் அவரை கேலி செய்தார்கள். அவர்மீது துப்பினார்கள், கசையடி கொடுத்து கொலையும் செய்தனர். இந்த கொடூரமான மரண நிகழ்வுகளை இயேசு முன்னரே அறிந்திருந்தார்.
இந்த பாடுகள் சிலுவை மரணத்தின் மத்தியிலும், மகிமையிலே இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை நாம் இன்று அறிந்திருக்கின்றோம்.
இயேசுவின் மரணத்தின் சாயலில் நாமும் இணைக்கப்பட்டவர்களாக இருந்தால், அவரது உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். தமக்கு நேரிடப்போகும் யாவற்றையும் இயேசு அறிந்தவராக, பிதாவின் சித்தத்தை நிறைவேற்றினார். அவர் நமது பாவங்களுக்கான மீட்கும் பொருளாக தன்னை அர்ப்பணிக்க இதை செய்தார்.
ஒருவேளை இன்று நீங்கள் ஒரு பணயக்கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்தால், உங்களது விடுதலைக்கு விரும்புவீர்கள் அல்லவா, இன்று உலகெங்கிலும் பல தனிநபர்கள், பல குழுக்கள் தீயவற்றினால் பாவத்தினால் சாபத்தினால் பிசாசின் வல்லமையினால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு மீட்பர் தேவை. அவர்களை அதிலிருந்து விடுவிக்கும் ஒரு இரட்சகர் தேவை.
இன்று நமது பாவம்கூட, நம்மை பணயக் கைதியாக பிடித்துவைத்து உள்ளதல்லவா! மனிதராகிய நம் அனைவருக்கும் விடுதலை தேவை என்பதை ஆண்டவர் அறிந்திருந்தார். ஆகவேதான், இயேசு தமது மரணத்தை முன்னறிவிப்பதற்கூடாக, நம்மை விடுவிக்கும் திட்டத்தை வகுத்தார். அதற்கான வலிமை, திறமை, வல்லமை இயேசுவிடம் மாத்திரமே உண்டு. வேறு எந்த தீர்க்கதரிசியாலோ, அப்போஸ்தலராலோ, போதகராலோ இதைச் செய்ய முடியாது. கிறிஸ்து ஒருவரே நமக்கான இரட்சகர்.
இயேசுவானவர் தனது மரணத்திற்கூடாக, கொடூரமான துன்பத்தை அனுபவித்து, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததுபோல, நாமும் பாவத்திற்கு மரித்து ஒரு புதிய வாழ்க்கையை பெற்றிட முடியும். உயிர்த்தெழுதலின் சாயலில் நாம் பங்குபெறுவதை உறுதிப்படுத்த இன்றே ஞானஸ்நானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். இயேசுவின் நாமத்தில் இலவசமாக தரப்படுகின்ற இரட்சிப்பையும் நித்திய ஜீவனையும் இலவசமாக பெற்றுக்கொள்வோம்.
சிலுவையில் வெற்றிசிறந்த இயேசுகிறிஸ்து தாமே மரணத்தை வென்றார். மிகவும் சிறப்பான அழகான காரியம் இது. அவர் உயிர்த்தெழுந்தார். இன்றும் உங்கள் வாழ்வில் பாவத்திற்கு மரிக்கும்போது, நித்திய ஜீவனை அருளுபவர் அவரே. அவரே நம்மை விடுவிப்பவர். அவரது நாமத்தில் நீங்கள் விசுவாசம் வைப்பீர்களா? மற்றவர்களையும் இன்றே கிறிஸ்து இயேசுவிடம் அழைத்துவாருங்கள், இன்றே அவரை விசுவாசிப்பதை வாயினால் அறிக்கையிடுங்கள். பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுவித்து, நித்தியவாழ்வின் நம்பிக்கையைத் தருவதற்காக பிதாவாகிய தேவன் அனுப்பிய இரட்சகரான இயேசுவை நோக்கிப் பாருங்கள். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!