• சகோதரி சாந்தி பொன்னு •
(மார்ச் – ஏப்ரல் 2024)

இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார் (எபி.11:39,40).

சகோதரி சாந்தி பொன்னு

கால ஓட்டத்திலே இன்னுமொரு லெந்துகாலம், இன்னுமொரு பெரிய வெள்ளி, இன்னுமொரு உயிர்த்தெழுந்த நாள் என்று நாமும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் நமது ஆவிக்குரிய வாழ்வும், இவ்வுலகில் ஆண்டவரை மகிமைப்படுத்தி அவர் சித்தம் செய்யும் வாழ்விலும் கடந்த ஆண்டின் இந்த நாட்களில் நாம் இருந்ததைப் பார்க்கிலும் இந்த ஆண்டில் நாம் வளர்ந்திருக்கிறோமா என்பதை நம்மைநாமே கேட்டுப் பார்ப்பது நல்லது. இந்த நவீன காலத்தில் நவீனங்களுக்குள் தள்ளப்பட்டிருக்கும் தேவபிள்ளைகளின் வாழ்வு கேள்விக் குறியாகிவிட்டிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. நம்மை நாம் ஆராய்ந்துபார்த்து, தேவனுடனான உறவில் உறுதிப்பட நம்மை ஒப்புக் கொடுப்போமாக. ஏனெனில், இதுவல்ல நமது வாழ்வு; இந்த உலகிற்கு அப்பால் உள்ள வாழ்வே நிரந்தரம். இந்த வாழ்வின் நமது ஒவ்வொரு தெரிந்தெடுப்பும், வாழ்வின் வழிகளுமே அந்த நிரந்தரத்தை நமக்கு நிர்ணயிக்கின்றன. ஆகவே, இயேசுவின் பாடுகள் மரணம் உயிர்த்தெழுதல் ஆகியவை நமது வாழ்வில் இன்னுமொரு படி முன்னேறி, தேவனுடனான உறவில் உறுதிப்படுவதற்கு நம்மைப் பெலப்படுத்தட்டும்!

வேதவாக்கியங்களும், வேதாகம வரலாறுகளும், அவற்றுள் பொதிந்துள்ள மறையாத மங்காத தெளிவான சத்தியங்களும் அன்றும் இன்றும் மாத்திரமல்லாமல், உலகின் இறுதி மனிதனின் வாழ்வையும் சிந்திக்கவும் சீர்செய்யவும் வல்லமைமிக்கது என்பது நித்திய சத்தியம். ஆனால், நாம் வேதவாக்கியத்துக்கு எவ்வளவு முக்கியத்துவமும் கனமும் கொடுக்கிறோம் என்பதுவே முக்கியமாக சிந்திக்கவேண்டிய விஷயமாகும். ஒரு மனித வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் அவன் நடக்கவேண்டிய சிந்திக்கவேண்டிய செயலாற்றவேண்டிய சகலத்துக்கும் வேதாகமத்தைப்போல வெளிச்சம் தரக்கூடியதும் பதில் தரக்கூடியதுமான எதுவும் இந்த உலகில் இல்லவே இல்லை.

“நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?” (உபா.4:7). மாத்திரமல்ல, கர்த்தர் கொடுத்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியமங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது என்றும் மோசே அன்று வனாந்தரத்திலே நின்றிருந்த இஸ்ரவேலைப் பார்த்துக் கேட்டார். இன்று, இந்தக் கேள்வியை சற்று ஆழமாகக் கேட்டால், கல்வாரியின் ஏகபலியையும், நமது பாவத்திற்காகச் சிந்தப்பட்ட பரிசுத்த இரத்தத்தையும், அதனாலுண்டான மீட்பையும் பெற்றுக்கொண்ட இவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் யார்? தேவன் நமக்குச் சமீபமாக அல்ல, நமக்குள் தங்கி இருக்கிற பரிசுத்த ஆவியின் ஆலயமாக இருக்கிறதும் (1கொரி.6:19), ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறதுமான (2கொரி.6: 16ஆ) கிருபையைப் பெற்றிருக்கிற நம்மைப் போன்ற மக்கள் யார்? இந்தப் பெரிய கிருபையைப் பெற்றிருக்கிற நமது வாழ்வு தேவனுக்குப் பிரியமானதாய், தேவனை மட்டுமே பிரியப்படுத்துவதாய் இருக்கிறதா என்பதை அடிக்கடி நாம் சோதித்துப்பார்ப்பது அவசியமாகும்.

மக்கள் மத்தியில் வாசம்பண்ணும் தேவன்

கடவுள் ஏதோ மிகவும் எட்டாத உயரத்தில் இருப்பவர் என்றும் அவரை நம்மால் கிட்டிச்சேர முடியாது என்றும் எண்ணுகின்ற மக்கள் இருக்கிறார்கள். ஆனால், “நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்” (ஏசா.57:15) என்கிறார். “கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்” (நீதி.16:4). அதாவது, தாம் உறவாயிருப்பதற்காகவே அவர் தமது சாயலில் மனிதனைப் படைத்தார். அந்தப்படியே ஏதேனின் தோட்டத்திலே தேவனாகிய கர்த்தர் பகலில் குளிர்ச்சியான வேளையிலே மனிதனுடன் அவர் உலாவினார் என்று பார்க்கிறோம். ஆம், கர்த்தர் மனுஷர் மத்தியில் வாசம்பண்ணுகிறவர்; மனுஷரின் இருதயத்தில் வாசம்பண்ணுகிறவர். ஏதேனின் தோட்டத்தில் மனுஷருடன் உறவாடிய தேவன், பின்னர் தாமே மனிதனாக வந்து மனுஷருடன் வாசம்பண்ணியவர், இன்று நமக்குள் வாசம்பண்ணுகிறவர், இறுதியில், “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள். தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்” (வெளி. 21:3) என்று பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தை யோவான் கேட்டார்.

ஆனால், மனிதன் பாவத்தைத் தழுவிக் கொண்டபோது இந்த உறவு அறுந்தது; அவன் ஏதேனைவிட்டுத் துரத்தப்பட்டான். என்றாலும் கர்த்தர் அவனைக் அழித்துப்போடவோ கை விடவோ இல்லை. பாவத்திற்கு அடிமையான மனுக்குலத்தை மீட்கும் தமது அநாதி திட்டத்தின் திருஷ்டாந்தமாக ஆபிரகாம், பின்னர் ஈசாக்கு யாக்கோபு, பின்னர் யாக்கோபின் சந்ததியாகிய இஸ்ரவேலைத் தெரிந்தெடுத்து, எகிப்தில் அடிமை களாக்கப்பட்டிருந்த தமது ஜனத்தை, மோசே என்ற இரட்சகனை எழுப்பி, விடுதலையாக்கி, ஆபிரகாமுக்கு வாக்களித்த கானானை நோக்கி வனாந்தர பாதையில் வழிநடத்திவந்தார்.

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி, “அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக. நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படி… அதைச் செய்வீர்களாக” (யாத்.25:8,9) என்றார். ஒன்று, பரிசுத்த கர்த்தர்தாமே தமது மக்கள் மத்தியில் வாசம் பண்ண அவரே சித்தங்கொண்டார். ஆனால், மகா பரிசுத்தர் மக்கள் மத்தியில் வாசம்பண்ண வந்தால் பாவம் நிறைந்த மக்கள் சாம்பலாகிவிடு வார்கள். அதனால்தான் தமக்கென்று ஒரு வாசஸ் தலத்தை, அவரை ஆராதிக்கின்ற ஒரு ஆசரிப்புக் கூடாரத்தை அமைக்கும்படி சொன்னார்.

அடுத்தது, பரிசுத்த தேவனாகிய கர்த்தருக்கு அவர் வாசம்பண்ணும் ஸ்தலத்தை பாவத்தில் இருக்கும் மனிதன் ஏற்படுத்தவும் முடியாது, கட்டவும் முடியாது; ஆகவே, கர்த்தரே அந்த மாதிரியை மோசேக்குக் காண்பித்தார். ஆனால் இதைக் கட்டியது யார்? யார் இந்தப் பணியைச் செய்தார்?

அந்தப் பணியைச் செய்வதற்கு ஆட்களை கர்த்தரே தெரிந்தெடுத்து மோசேக்குக் கொடுத்ததை வாசிக்கிறோம். “நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து, ……சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவ ஆவி யினால் நிரப்பினேன்” (யாத்.31:2-5). அத்துடன் நிறுத்தவில்லை. “மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் குமாரனாகிய அகோலி யாபையும் அவனோடே துணையாகக் கூட்டின துமன்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்” (31:6) என்றும் கூறினார்.

பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின் சகல ஊழி யத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளை கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தார்கள். மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும் அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகலவித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள் (யாத். 35:21-22). அப்படியே பொன், வெள்ளி, வெண்கலம் என்றும், இளநீலநூல், இரத்தாம்பர நூல், மெல்லிய பஞ்சுநூல் என்று சகலத்தையும் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

மேலும், “ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று…… கொண்டுவந்தார்கள். எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞானஎழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள் (வச.25,26).” பிரபுக்களும் தங்கள் பங்களிப்பைக் கொடுத்தார்கள். இவைகள் யாவும் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலரிடம் எப்படி வந்தது? எகிப்திலிருந்து வந்தபோது, எகிப்தியரிடமிருந்து பெற்றுக்கொண்டவைகளே இவைகள் (யாத்.11:2-3; 12:35-36). சகலமும் அறிந்த கர்த்தர் இந்த பொருட்களை முன்கூட்டியே இஸ்ரவேலர் பெற்றுக்கொள்ளச் செய்திருந்தார். இருந்தும், மக்களும் இவற்றைத் தங்களுக்கென்று வைத்துக்கொள்ளாமல் யாவரும் மனப்பூர்வமாக, அதாவது எவ்வித தூண்டுதல்களும் இல்லாமல் சகலத்தையும் கொடுத்தார்கள்.. பெசலெயேலையும் அகோலியாவையும் கர்த்தர் பெயர்சொல்லி அழைத்து ஞானத் தையும் புத்தியையும் அறிவையும் அருளி, தேவ ஆவியினாலே நிரப்பி, போதிக்கும் வரத்தையும் அருளினார் (35: 33,34). அப்படியே எல்லோரும் ஒன்றிணைந்து பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகலவேலைகளையும் கர்த்தர் கற்பித்தபடியெல்லாம் செய்யத் தொடங்கினார்கள். அப்படியே “கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடி யெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் சகல வேலைகளையும் செய்தார்கள். மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; கர்த்தர் கற்பித்த படியே அதைச் செய்திருந்தார்கள்” (39:42,43).

இது எப்படி ஆனது? ஒன்று அதற்குரிய ஆட் களைக் கர்த்தரே பெயர் சொல்லி அழைத்தார். அழைக்கப்பட்டவர்களுக்கு ஞானஇருதயத்தையும் அறிவையும் ஆற்றலையும் கொடுத்தார். மாத்திரமல்லாமல், அவர்களை தேவஆவியால் நிரப்பி, மற்றவர்களுக்குப் போதிக்கிற வரத்தையும் கொடுத்தார். இது மாத்திரம் நடந்திராவிட்டால் இஸ்ரவேலரால் எப்படி இந்த வேலையை முடித்திருக்க முடியும்? ஆண்கள் பெண்கள் என்று பாராமல் பிரபுக்கள் என்றும் பாராமல், பொன் வெள்ளி உடைமைகள் என்றும் கணக்கிடாமல் கர்த்தருடைய விருப்பத்தை, சித்தத்தை, ஊழியத்தை இவர்கள் மனப் பூர்வமாகச் செய்தார்கள் என்றால், இது கர்த்தராலேயே ஆனது! “இப்படியே ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்” (யாத்.39:32).

யாத்திராகமம் 40வது அதிகாரத்தில் “கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே” என்று ஏழு தடவைகள் பதியப்பட்டுள்ளதை நாம் கவனிக்கவேண்டும். மோசே ஆசரிப்புக் கூடாரத்தை ஸ்தாபனம் பண்ணி, சகலத்தையும் அதனதன் இடத்தில் வைத்து தொங்குதிரையையும் தொங்க வைத்தான். “இவ்விதமாய் மோசே வேலையை முடித்தார்” என்று பார்க்கிறோம். “அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று” (40: 34). அதாவது கர்த்தர் அந்தப் பணியை அங்கீகரித்தார். கர்த்தரே, தமக்கென்று, தாமே வடிவமைத்து, தாமே மக்களை எழுப்பி மோசேயின் தலைமையில் நடத்தி இந்தப் பெரிய பரிசுத்த பணியைச் செய்துமுடித்தார்.

கர்த்தருடைய ஊழியப்பணி

இஸ்ரவேல், தேவனாகிய கர்த்தரால் தமக்கென்று கிருபையாகத் தெரிந்தெடுத்திருந்த இந்த ஜனம் கர்த்தருக்கென்று செய்த முதலாவது பெரிய ஊழியப்பணி இந்த ஆசரிப்புக்கூடாரத்தின் ஊழியமே! இன்று நம்மைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம். இன்று ஆசரிப்புக் கூடாரமும் இல்லை; சாலொமோன் கட்டிய தேவாலயமும் இல்லை, அதன்பின்னர் கட்டப்பட்ட ஆலயமும் இல்லை. அன்று கல்வாரியில் சிலுவையில் தொங்கிய ஆண்டவருடைய விலா குத்தப்பட்டபோது, சீறிப் பாய்ந்த இரத்தமும் தண்ணீரும் சாட்சியாய் நிற்க, பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்தாவியானவர் பகிரங்கமாக இறங்கி, மணவாளன் இயேசுவின் மணவாட்டியாய் சபை உண்டானது. சபை என்பது என்ன? இது கட்டடம் அல்ல, தேவபிள்ளைகள் நாமே இந்த சபை என்பதையும் நாம் அறிவோம். மாத்திரமல்லாமல், பரலோக ராஜ்யத்தின் கட்டுமானப் பணிக்கு கர்த்தர் இன்று ஏராளமான மக்களை விதம்விதமாகவும், தனித்தனியாகவும், குழுக்களாகவும் எழுப்பியிருக்கிறார்.

இன்று விதவிதமான சபைகள், விதவிதமான ஊழியப்பணிகள், ஸ்தாபனங்கள், அதில் பணி செய்யும் ஊழியர்கள் என்றும், வானொலி தொலைக்காட்சி என்றும் இணையத்தளம் என்றும் ஏராளமான ஊழியங்களில் ஏராளமானபேர் ஈடுபட்டிருக்கிறார்கள். இவை யாவும் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டு, அவருடைய ஆவியானவரால் நிரப்பப்பட்டு, கர்த்தருடைய மகிமைக்காகவே செய்யப்படுகிறதா என்பதை சிந்திக்கவேண்டிய காலப்பகுதியில் நாம் இருக்கிறோம். சகல பணிகளும் கர்த்தரால் அங்கீகாரம் பெற்றிருக்கிறதா? இன்று பணிகளுக்குக் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம், தேவனோடுள்ள தனிப்பட்ட உறவுக்குக் கொடுக்கப்படுகிறதா என்பது ஒரு பெரிய கேள்வி!

மோசே அன்று கர்த்தரிடத்தில் கேட்டுக் கொண்டவற்றை அப்படியே மக்களிடம் ஒப்புவித்தார். மக்களும் கேட்டார்கள், செய்தார்கள், கர்த்தரும் அதனை அங்கீகரித்தார். இன்று நடப்பது என்ன? கர்த்தருக்காக உழைக்கவும், இந்த உலகின் போக்கை வெறுத்து, நமது சிலுவையைச் சுமந்து, இயேசு நடந்த பாதையில் நடப்பதற்கு அழைக்கப்பட்ட நாம் இன்று எந்தப் பாதையில் நடக்கிறோம்?

இதோ ஒரு கேள்வி!

அன்று ஆசரிப்புக்கூடாரத்தை மக்கள் தாங்கள் நினைத்தபடி செய்யவுமில்லை, கர்த்தர் நியமித்துக் கொடுத்த காரியங்களைப் பின்தள்ளவுமில்லை. சொன்னதைச் சொன்னபடியே கீழ்ப்படிந்து செய்தார்கள். கர்த்தரும் அதை அங்கீரித்தார். அந்த வாசஸ்தலத்தின் கிருபாசனத்தில் தேவனுடைய பிரசன்னம் அவர்களுடன் கூடவே இருந்தது. தேவனுடைய பணியில் அவர்கள் ஒருமனப்பட்டு, தங்கள் உடைமைகளை மனப்பூர்வமாய்க் கொடுத்து, கர்த்தர் சொன்னபடி மோசே கற்பிக்க, கர்த்தரின் ஆவியால் ஏவப்பட்டு, கர்த்தருடைய ஞானத்தால் நிரப்பப்பட்டு, அவர் சொன்னதைச் சொன்னபடியே செய்துமுடித்தனர். அவர்கள் செய்த வேலை கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்டது. அத்தனைத் திரள் ஜனமும் கூடியிருக்க, “அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று” (யாத்.40:34). அங்கிருந்து கர்த்தர் தமது ஜனத்தை வழிநடத்தினார். இப்போது நாம் ஒரு கேள்வியைக் கேட்டுப்பார்க்க வேண்டும்.

“தேவன் கட்டளையிட்ட பணியை கர்த்தருக்கென்று செய்துமுடித்து, கர்த்தரால் அங்கீகாரம் பெற்றவர்களாகிய மோசே உட்பட இந்தத் திரள் ஜனக்கூட்டத்தில் எத்தனைபேர் வாக்குப்பண்ணப்பட்ட கானானுக்குள் பிரவேசித்தார்கள்?”.

இதற்கு நம்மில் அநேகர் யோசுவா, காலேப் என்பர். ஆனால் இந்த ஆசரிப்புக் கூடாரத்தின் கட்டு மானப்பணியின்போது இவர்கள் பெயர்கள் குறிப்பிட்டு எழுதப்படவில்லை. என்றாலும் அந்த சந்ததியில் அத்தனை இலட்சம் ஜனத்துக்குள் இந்த இருவர் மாத்திரமா? என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். உண்மைதான்! இவர்கள்மாத்திரமே அந்த சந்ததியிலிருந்து கானானுக்குள் பிரவேசித்தவர்கள் ஆவர். மீதியான அத்தனை திரள் ஜனத்துக் கும் நடந்தது என்ன?

சிந்திப்பீர்!

பணிகள் முக்கியம்; ஆனால் பணிக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை தேவனுடனான உறவிலும், அவருடைய வார்த்தைப்படி வாழுவதிலும் நாம் செலுத்துகிறோமா? அவருக்குள் நிலைத்திருக்கும் வாழ்வு, இதனையே கர்த்தர் நம்மிடம் எதிர் பார்க்கின்ற முதற் காரியம். பரம கானானுக்குள் செல்லவேண்டும் என்பது நமது வாஞ்சைதான்; அதில் தவறில்லை. ஆனால், அதற்கு ஆயத்த காலமாகிய இந்த உலக வாழ்வில் நாம் தேவனுக்குப் பிரியமானவர்களாக, அவருடனான பரிசுத்த உறவில் நிலைத்திருக்கிறவர்களாக, நமது அழைப்பை உணர்ந்தவர்களாக, கர்த்தர் கிருபையாய் நமக்குக் கொடுத்துள்ள சிலுவையை அடையாளம் கண்டு, மனப்பூர்வமாய் அதைச் சுமந்து, இயேசு நடந்த பாதையில் அவருக்கே மகிமையாக நாம் வாழுகிறோமா? அந்த வாழ்வில் நமது பணிகள் நிச்சயம் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே இருக்கும். இன்று நாம் தேவனுக்கா, பணிக்கா? எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? அன்று இஸ்ரவேலுக்கோ மோசேக்கோ கிடைக்காத “விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாகவே நியமித்து …” (எபி.11:40). இன்று நாம் அதைப் பெற்று அனுபவித்தும் இருக்கிறோம்! அந்தக் கிருபையைப் பெற்றிருக்கிற நாம், நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவை சந்திக்க ஆயத்தமாக இருக்கிறோமா? கர்த்தர்தாமே நம் அனைவரையும் தமது சந்நிதானத்தில் நிறுத்த வல்லவராய் இருப்பதால், நம்மை அவர் கரத்திலே கொடுத்து, அவருடனான உறவில் உறுதியாக வளர அவரே நம்மை நடத்துவாராக.

தேவன் நமக்காக வைத்திருக்கிற அந்த நித்திய ராஜ்யத்திலே நாம் அனைவருமே நித்திய நித்தியமாய் வாழ தேவன்தாமே அருள்புரிவாராக.

சிந்தியுங்கள்!

 யாரை சிலுவையில் அறையவேண்டுமென்று தேர்ந்தெடுக்கும் நிலை வரும்போது கூட்டம் எப்போதும் பரபாஸைத்தான் காப்பாற்றும்!

நினைவுகூருங்கள்!

நமக்காக மரித்த கிறிஸ்துவுக்காக நாம் எல்லாவற்றையும் செய்யவேண்டும்; உயிருள்ள கிறிஸ்துவானவர் நமக்காக எல்லாவற்றையும் செய்கிறார்.