• Dr.புஷ்பராஜ் •
(மார்ச் – ஏப்ரல் 2024)

Dr.புஷ்பராஜ்

மரணத்தை தமது மரணத்தால் வென்றார் இயேசுகிறிஸ்து!

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் திருச்சபைக்கு ஜீவன். அவருடைய உயிர்த்தெழுதல் அவருக்கும் அவரது அடியார்களாகிய நமக்கும் அவசியம்.

கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால், அவர் மாசற்ற பரிசுத்தர் என்பதும் தேவகுமாரனென்பதும், மனு மக்களை இரட்சிக்கவல்லவர் என்பதும், அவர் தம்மைக் குறித்துச் சொன்ன யாவும் பொய்யாகும். ஏனென்றால், இவை யாவற்றிற்கும் தமது உயிர்த்தெழுதலையே ஆதாரமாக சொன்னார்.

அவர் நல்லவராயிருந்து நல்ல மரணம் அடைந்தார் என்று சொல்லுகிறார்களே! அவர் உயிரோடே வராவிட்டால் அவரைப்போல் மோசக்காரன் இல்லை. பெரிய பெரிய காரியங்களைச் செய்வதாக வாக்குப்பண்ணித் தம்மை நம்பினோரைக் கைவிட்டு மரித்துப்போனவர் எப்படி நல்லவராயிருக்கக் கூடும்?

கிறிஸ்து உயிர்த்தெழவில்லையென்றால் கிறிஸ்தவர்களின் கதி என்னவாகும்? மரித்தோர் உயிரோடெழும்புவதைக் குறித்து கொரிந்து சபையில் சிலர் சந்தேகப்பட்டனர். அவ்வாறு சந்தேகிக்கும்போது ஏழு காரியங்கள் மோசத்துக்குள்ளாகுமென்று அப்போஸ்தலன் அவர்களை எச்சரித்தார்.

ஒன்று, மரித்தோர் எழுப்பப்படுவதில்லையென்றால் கிறிஸ்து எழுந்தாரென்பது பொய்யாகும்.

இரண்டு, கிறிஸ்து எழுந்திராவிட்டால் சுவி சேஷ ஊழியம் யாவும் வீணாகும்.

மூன்று, மனுஷர் கிறிஸ்துவின்மேல் வைத்த விசுவாசம் பாழாகும்.

நான்கு, தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று பிரசங்கிப்பது பொய்யாகும்.

ஐந்து, நாம் நமது பாவங்களிலிருந்து இரட்சிப்பு அடையாமல் ஆக்கினையடைவோம்.

ஆறு, கிறிஸ்துவை நம்பி மரித்தவர்கள் யாவரும் அழிந்தே போவார்கள். அவர்களை நாம் திரும்பக் காணப்போகிறதேயில்லை.

ஏழு, மேலான பாக்கியம் வருகிறதென்று. உலகத்தை வெறுத்து சகல பாடுகளையும் பொறுமையாய் சகித்து, கடைசியில் ஒன்றுமில்லாமல் போனால் எல்லா மனுஷரிலும் பரிதபிக்கப்படத் தக்கவர்களாவோம்.

அப்போஸ்தலன் இந்த ஏழு நியாயங்களையும் எடுத்துக்காட்டி அவர்கள் சந்தேகத்தைப் போக்கினார். கிறிஸ்துவுக்குப் பின் இருபதாம் வருஷத்தில் அப்போஸ்தலன் கொரிந்தியருக்குத் தமது முதல் நிருபத்தை எழுதினார். கிறிஸ்து உயிரோடெழும் பினதைக் கண்ட சாட்சிகளில் அநேகர் அப்போது உயிரோடிருந்ததாகச் சொல்லுகிறார். அப்படியில் லாதிருந்தால் அவர் சொன்னது பொய்யென்று நிரூபிக்கப்பட்டிருக்கும்.

கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறென்றையும் குறித்து மேன்மைபாராட்ட மாட்டேன் என்று அப்போஸ்தலன் தீர்மானித்திருந்தது மெய்தான். சிலுவையின் இரகசியத்தை அறியாமல் இடறலடைந்த யூதர், கிரேக்கர், ரோமருக்கு அவர் அவ்வாறு வற்புறுத்திப் பேசினது நியாயமே. சிலுவையின் அவமானத்தையும், குரூரமான மரணத்தையுமே அவர்கள் கண்டார்களேயன்றி அந்தச் சிலுவையில் நிறைவேற்றின தேவனுடைய மறைவான கிரியையை அவர்கள் அறியவில்லை.

அப்போஸ்தலன் சிலுவையைப்பற்றிப் பேசினது, அவர்களுக்குப் பைத்தியமாக தோன்றினது. ஆனால் மனுக்குலத்துக்காக கிறிஸ்துவின் மரணம் சம்பாதித்த மகிமையான இரட்சிப்பை அப்போஸ்தலன் தன் அனுபவத்தில் அறிந்திருந்த படியால் அவ்வாறு மேன்மைப்படுத்திப் பேசினார்.

கிறிஸ்துவின் மரணம் நமக்கு எவ்வளவு அருமையாயிருந்தபோதிலும், அவர் உயிரோடெழும் பாவிட்டால் அந்த மரணமும் வீணாகும். அப்போஸ்தலன் இதைப் பூரணமாய் அறிவார். அவர் மேற்கூறிய ஏழு நியாயங்களே இதற்கு ஆதாரம்.

கிறிஸ்துவின் ஜீவியம் முழுவதுக்கும் அவர் உயிர்த்தெழுதலே பிரதானம். மற்றவை அற்பமென்று நாம் சொல்லுகிறதில்லை. அவரது அற்புத பிறப்பு விசேஷமே. அவரது மாசற்ற ஜீவியம் விசேஷமே. அவரது நிகரற்ற உபதேசம் விசேஷமே. அவரது பலத்த செய்கைகள் விசேஷமே. அவரது மரணமும் விசேஷமே. ஆகிலும் அவர் உயிரோடே எழுந்திராவிட்டால் இவைகள் யாவும் என்னத்துக்காகும்? இவைகளால் மாத்திரம் பாவிகள் இரட்சிக்கப்படுவதில்லை. இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னுள்ள ஓர் பரிசுத்தவானைப்பற்றிய ஞாபகமும், அவருடைய உபதேச அறிவும் கிறிஸ்தவ மார்க்கமல்ல. கிறிஸ்தவ மார்க்கம் என்ற வார்த்தை வேதத்தில் இல்லை. உலகத்தில் பல மார்க்கங்கள் இருப்பதால் கிறிஸ்தவ மார்க்கம் என்று பேச நேரிட்டது. யூத மார்க்கமென்று வாசிக்கிறோம். அது போலவே முகமது மார்க்கம், புத்த மார்க்கம். இந்து மார்க்கமென்றும் பேசுகிறோம். அவைகளை மார்க்கமென்று அழைப்பது சரியே. ஆசாரங்களும் கொள்கைகளும் அடங்கியது மார்க்கமாகும்.

மார்க்கங்களை உண்டு பண்ணினவர்கள் அம்மார்க்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டுமென்றல்ல. யூதருக்கு மோசே கூடயிருப்பது அவசியமல்ல. அவரவர் உண்டுபண்ணின பிரமாணங்களும் உபதேசமுமே அவர்களுக்குப் போதும். புத்தன் தன் சீஷரைப் பார்த்து. நீங்கள் என்மேல் பற்றுதலாயிருங்கள்; நான் உங்களை இரட்சித்துக் காப்பாற்றுவேன் என்று சொல்லாமல், என் உபதேசங்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். அவைகள் உங்களுக்குச் சமாதானம் கொடுக்கும் என்றார்.

மார்க்கங்களை உண்டாக்கினவர்கள் மறைந்தார்கள். அவர்கள் உபதேசங்கள் இருக்கின்றன. கிறிஸ்து மார்க்கம் அப்படிப்பட்டதல்ல. கிறிஸ்துவும் தமதடியாருக்கு திருவுபதேசஞ் செய்திருக்கிறார். அவைகளைச் சுவிசேஷத்தில் காண்கிறோம். ஆனால், கிறிஸ்து இல்லாமல் அவருடைய உபதேசங்கள் மாத்திரம் மார்க்கமாகாது. அவருடைய ஆழமான உபதேசங்கள் சுவிசேஷத்தில் நிறை வாயிருந்தாலும் குறைவாயிருந்தாலும், எல்லாமே எழுதப்பட்டிருந்தாலும் சில விடப்பட்டிருந்தாலும், கிறிஸ்தவ மார்க்கம் உபதேசத்தில் மாத்திரம் நிலை நிற்பதல்ல. கிறிஸ்துவே கிறிஸ்து மார்க்கம். மார்க்கம் வேறே, அவர் வேறேயல்ல. அவரே “மார்க்கமும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்.” அவரே நமக்குள் ஜீவனாயிருந்து தமது சத்தியத்தை நமக்குள் பலிதப்படுத்துகிறார்.

அவர் உயிரோடெழும்பாவிட்டால் நமக்குள் அவர் ஜீவனுமாய் இருப்பது எப்படி? ஆயிரமாயிரமான ஏழைப்பாவிகள் முற்றிலும் மாற்றப்பட்டு பரிசுத்தவான்களாவது எப்படி? கல்வியும் நாகரிகமும் உள்ளவர்கள் வாக்குவாதம் செய்யாத சாந்தமான பக்தர்களாவதெப்படி? மனுமக்கள் ஜீவியத்தில் விளங்கும் இந்த மகத்துவ வல்லமை எங்கே யிருந்து வந்தது. செடியும் கொடிகளும் ஒரே சாரத்தினால் பிழைக்கிறதுபோல கிறிஸ்துவும் விசுவாசிகளும் ஒரே ஜீவனால் இணைக்கப்பட்டிருக்கிறார்களே. இந்தப் பிராண ஐக்கியம் மரித்துப்போன கிறிஸ்துவை ஞாபகத்தில் வைக்கிறதினால் அல்ல, அவரே தமது ஆவியினால் நமக்குள் பிழைப்பதினால் அல்லவோ உண்டாகிறது. அவரது ஜீவியமும் மரணமும் எவராலும் மறக்கக்கூடாத சரித்திரமாயிருக்கிறது போலவே, அவர் உயிர்த்தெழுத லும் ரூபிக்கக்கூடிய மெய்யான சம்பவமாயிருக்கிறது. அவருடைய மரணம் மாத்திரம் சுவிசேஷமல்ல. மரணம் உயிர்த்தெழுதலும் சேர்ந்ததே சுவிசேஷம்.

தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள். நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் (2தீமோ 2:8; 1கொரி.15:3,4).