சத்திய வசனம் பங்காளர் மடல்
(மார்ச் – ஏப்ரல் 2024)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
சத்தியவசனம் மார்ச் – ஏப்ரல் இதழ் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இவ்வூழியத்தின் வாயிலாக தேவன் செய்துவரும் மகத்துவமான கிரியைகளுக்காக தேவனைத் துதிக்கிறோம். தொலைகாட்சி, இலக்கியம், இணையதளம், சோஷியல் மீடியாக்கள் ஆகியனவற்றின் வாயிலாக ஒவ்வொருநாளும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கவும் சத்தியத்தைப் பகிர்ந்துகொடுக்கவும் கர்த்தர் கிருபை செய்து வருகிறார்.
சத்தியவசனம் ஊழியம் மதுரையில் ஆரம்பிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைய தேவன் கிருபை செய்துள்ளார். தேவன் இவ்வூழியத்திற்கு போதுமானவராக இருந்து, இதுவரை தேவைகள் அனைத்தையும் சந்தித்து வழிநடத்தினபடியால் அவரைத் துதிக்கிறோம். இவ்வூழியத்தை அன்பின் காணிக்கையாலும் ஊக்கமான ஜெபத்தாலும் தாங்கிய அனைத்து பங்காளர்களையும் நினைவுகூருகிறோம். தேவன் இவ்வூழியத்திற்கு தந்த தரிசனம் தொடர்ந்து நிறைவேற வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசன ஊழியத்தின் வாயிலாக தாங்கள் பெறும் ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு தொடர்ந்து பகிர்ந்துகொள்ள அன்போடு உங்களை அழைக்கிறோம்.
நமது தேசத்தில் ஏப்ரல் 19 முதல் + ஜுன் 1ஆம் தேதிவரை நடைபெறவுள்ள 18வது மக்களவை தேர்தலை தேவன் தாமே ஆசீர்வதிக்கவும் வன்முறை கலவரமின்றி அமைதலோடும் நியாயமாக நடைபெறவும் மன்றாடுவோம். சபை மக்கள் ஏறெடுத்துவரும் கருத்தான ஜெபங்களைக் கேட்டு நமது தேசத்திலே கர்த்தர் பெரிதான காரியங்களை செய்வார். உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் (தானி-4:17).
இவ்விதழில் கிறிஸ்துவின் சிலுவையில் நான் என்ற தலைப்பில் சகோ.வஷ்னி ஏர்னஸ்ட் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும், கிறிஸ்துவின் முரண்பாட்டில் வெளிபட்ட ஒற்றுமை என்ற தலைப்பில் திரு.பிரகாஷ் ஏசுவடியான் அவர்கள் எழுதிய சிறப்புச் செய்தியும், கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும் சேர்ந்ததே சுவிசேஷம் என்பதை விளக்கி நானே உயிர்த்தெழுதல் என்ற தலைப்பில் Dr.புஷ்பராஜ் அவர்கள் எழுதிய செய்தியும், உயிர்த்தெழுந்த கிறிஸ்து பரத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுதலை இயேசுகிறிஸ்துவின் பரமேறுதல் என்ற தலைப்பில் சகோ.சற்குணம் சாமுவேல்ராஜ் அவர்கள் அளித்த செய்தியும் இடம்பெற்றுள்ளது. மேலும் யார் போனார்? யார் போவார்? என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து Dr.உட்ரோ குரோல் அவர்கள் வழங்கிய வேத பாடமும், காலங்களைப் பற்றிய சத்தியம் என்ற தலைப்பில் Dr.தியோடர் எச்.எஃப். அவர்கள் எழுதிய தொடர் வேதபாடமும் இடம்பெற்றுள்ளது. கட்டுரைகள் அனைத்தும் தங்களது ஆவிக்குரிய வாழ்விற்கு அதிக பிரயோஜனமாய் இருக்கும் என்றே விசுவாசிக்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்