• சகோ. பிரகாஷ் ஏசுவடியான் •
(மார்ச் – ஏப்ரல் 2024)

சகோ. பிரகாஷ் ஏசுவடியான்

ஒருமுறை நான் ஒரு குறிப்பிட்ட நண்பருடைய வீட்டிற்குச் சென்றபோது கண்ட ஒரு காட்சியை, உங்களில் அநேகர் கண்டிருப்பீர்கள். அந்த வீட்டில் அழைப்பு மணியை நான் அடிக்க முயற்சித்தபோது உள்ளே இருந்து பட், படார், டமால் என்ற சத்தங்கள் கேட்டன. அதோடு இணைந்து, “என் பிள்ளையை அடிக்காதீங்க. என் பிள்ளையை அடிக்காதீங்க” என்ற பெண் குரல் கேட்டது. சில நிமிட இடைவேளைக்குப் பின்பதாக கணவன் மனைவி மகன் அனைவரும் சத்தமிட்டு சிரிக்கும் சத்தம் கேட்டது. உள்ளே என்ன நடக்கிறது என்று புரியாதவனாக நான் கதவைத் தட்டினேன். கதவைத் திறந்த என் நண்பரும், அவர் மனைவியும் புன்முறுவலோடு, உள்ளே வாருங்கள்” என்று என்னை வரவேற்றார்கள். அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது உள்ளே என்னதான் நடந்தது என்பதை அறியப் பிரயாசப்பட்டேன்.

அவர்கள் விவரித்த நிகழ்ச்சி நம் வாழ்க்கையிலும் நடந்திருக்கக்கூடும். சிறுமகன் ஏதோ குற்றம் செய்ததற்காக அப்பா அவனைத் தண்டிக்கிறார். அவர் அவனை அடிக்கும் சத்தத்தைக் கேட்டு சமையல் அறையிலிருந்து தாய் ஓடி வருகிறாள். “என் பிள்ளையை அடிக்காதீர்கள்” என்பது அவளது கூக்குரல். படுக்கை அறைக்குள்ளே எட்டிப்பார்த்த தாய் உள்ளே நடப்பதை உற்று நோக்கினாள். மகனை தண்டிக்கும் தகப்பனார், அவனது முதுகில் தன் இடதுகையை வைத்துக் கொண்டு, அடிப்பதுபோல் பாவனை செய்து தன்னையே அடித்துக்கொள்ளுகிறார். இதைப் பார்த்த தாய் சிரிக்க தகப்பன், மகன், தாய் மூவரும் சேர்ந்து சத்தமிட்டு சிரிக்கிறார்கள்.

இந்த சம்பவம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு வரவேண்டிய தண்டனையை தன் மேலேயே ஏற்றுக்கொண்டதை ஓரளவு சித்தரிக்கிறது. நாம் பெறவேண்டிய அடிகளை தாமே ஏற்றுக்கொண்டார். நமக்காக தன்னையே “அடி”த்துக்கொண்டார். இந்த சத்தியத்தை இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஏசாயா தீர்க்கதரிசி 53வது அதிகாரத்தில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

“மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு. நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு. சிறுமைப்பட்டவரென்று எண் ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரத்தையும் அவர்மேல் விழப் பண்ணினார்” (ஏசாயா 53:4-6). இதுதான் இக்காலத்தில் நாம் சிந்திக்கும் பெரும் நற்செய்தி.

இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை, “முரண்பாட்டு ஒற்றுமை” (Paradox) நிறைந்த ஓர் வாழ்க்கையாகும், “முரண்பாடுகள் உள்ளதுபோல் தோன்றும் இரண்டு கருத்துக்கள் ஒரே சத்தியத்தை வெளிப்படுத்துவதற்காகவே அறிவிப்பதை “முரண்பாட்டு ஒற்றுமை” என நாம் அழைக்கிறோம். உதாரணமாக, இயேசுகிறிஸ்து முன்னணையில் பிறந்தவர். கந்தைகோலம் பூண்ட இராஜாதி ராஜா. கழுதையில் பிரயாணம் செய்த மாபெரும் மன்னன். சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்ட தெய்வ குமாரன்! இயேசுகிறிஸ்துவின் சிலுவையை நாம் பார்க்கும்போது முரண்பாடு உள்ள இரண்டு தெய்வீக குணாதிசயங்கள் வெளிப்படுகின்றன:

1) தேவன் நீதியுடையவர்! பாவம் செய்கிற ஒவ்வொரு மனிதனும் தண்டிக்கப்பட வேண்டுமென்று அவரது நீதி சொல்கிறது.

2) தேவன் அன்புடையவர்! பாவம் செய்கிறவன் மன்னிக்கப்படுவான் என்று தேவ அன்பு சொல்கிறது.

தேவநீதியும், அன்பும் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் வெளிப்படும் இடம் இயேசுகிறிஸ்துவின் சிலுவையே!

1. பாவம் செய்த நாம் தண்டிக்கப்படவேண்டும்.

“பாவத்தின் சம்பளம் மரணம்: தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்” (ரோமர் 6:23) என்பது தேவநீதியாகும். நாம் அனுபவிக்க வேண்டிய இத்தண்டனையை இயேசுகிறிஸ்து தன் மேல் ஏற்றுக்கொண்டு தேவநீதியை நிறைவேற்றினார். “மேற்குக்கும், கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்” (சங்.103: 12) என்று சங்கீதக்காரன் கூறுகிறான். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:9) என்பது யோவானுடைய சாட்சி.

“பாவிகளை இரட்சிக்க கிறிஸ்துஇயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்” (1 தீமோ.1:15) என பவுல் அடிகள் உறுதிப்படுத்துகிறார்.

2. இயேசுகிறிஸ்து நம் பாவங்களை மன்னிப்பது மட்டுமல்ல, மறந்துவிடுகிறார் என்பது வேத வாக்கு நமக்கு கொடுக்கும் நிச்சயமாகும்.

“ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எபி.8:12).

“அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார் (எபி.10:17).

இம்முரண்பாட்டு ஒற்றுமையை விளக்கும்படியாக இயேசுகிறிஸ்து பிரதான ஆசாரியர் என்றும், தேவஆட்டுக்குட்டி என்றும் அழைக்கப்பெற்றார். பிரதான ஆசாரியார்தான் ஆட்டுக்குட்டியை பலியிடுபவர். எனவே இயேசுகிறிஸ்து சிலுவையிலே மாண்டபொழுது பிரதான ஆசாரியராகிய அவரே, ஆட்டுக்குட்டியான தம்மையே அடித்துக்கொண்டார். இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைந்தது ரோம போர்வீரர்கள் அல்ல; அவர் தம்மையே தண்டித்துக்கொண்டார். அவர் நம்முடைய பாவங்களுக்கு வரவேண்டிய தண்டணையை ஏற்றுக் கொண்டு, நம் பாவங்களை மன்னிக்கும் மாபெரும் இரட்சிப்பை ஏற்படுத்தினபடியால், அவரை விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை என்ற உறுதியை அளிக்கிறார்.

மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த இயேசு கிறிஸ்து! நம் உள்ளங்களைத் தட்டிநிற்கிறார். “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒரு வன் என் சத்தத்தை கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்” (வெளி.3:20).

உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவுக்கு நம் உள்ளத்தில் இடங்கொடுத்து. நமது பாவங்களை அறிக்கை செய்து பாவமன்னிப்பை பெறும்போது அவருடைய பிள்ளையாக வாழும் பெரும் பாக்கியத்தை தேவன்தாமே நம் ஒவ்வொருவருக்கும் தந்தருளுவார்!