சத்திய வசனம் பங்காளர் மடல்

(ஜூலை – ஆகஸ்டு 2024)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை என வாக்குப் பண்ணின ஆண்டவருடைய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். சமீபத்தில் கேரளா வயநாட்டில் இயற்கை பேரிடரினால் ஏற்பட்ட கோரமான சம்பவங்களை நாம் பார்க்கும் போது மனிதர்களுடைய வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது என்பதை அறியக்கூடியதாயுள்ளது. தேவன் அம்மக்களுக்கு ஆறுதல் செய்யவும், இவ்வாறான பேரிடர்களிலிருந்து நம் தேசமக்களை தேவன் பாதுகாக்கவும் வேண்டுதல் செய்வோம். தொடர்ந்து நம் தேசத்திற்காக திறப்பில் நிற்போம்.

சத்தியவசன வெளியீடுகள் மூலமாக தேவன் ஆற்றிவரும் மகத்துவமான கிரியைகளுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். இவ்விதழ் வாயிலாக தாங்கள் பெற்றுவரும் ஆசீர்வாத அனுபவங்களை எங்களுக்குத் தெரிவிக்க மறவாதீர்கள். நாங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தபடி ஜூலை 16,17ஆகிய தேதிகளில் சென்னையில் Pastors & Partners Equip Conference ஆசீர்வாதமாக நடைபெற்றது. இதில் பங்குபெற்ற பங்காளர்களுக்கு நன்றி கூறுகிறோம்.

சத்தியவசன ஊழியப்பணிகளை உதாரத்துவமான காணிக்கையினாலும் ஜெபத்தினாலும் தாங்கிவருகிற அன்பு பங்காளர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். நீண்டநாட்கள் விசுவாசபங்காளர் சந்தாவைப் புதுப்பிக்காத பங்காளர்கள் புதுப்பித்து தொடர்ந்து இவ்வூழியத்தைத் தாங்க நினைவூட்டுகிறோம். மேலும் சத்தியவசன தொலைக்காட்சி ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து இவ்வூழியத்தைத் தாங்க அன்பாய் வேண்டுகிறோம். சத்தியவசன ஊழியப்பணிகள் வாயிலாக அநேகமாயிரம் ஜனங்கள் நற்செய்தியை அறிய வேண்டுதல் செய்யுங்கள்.

இவ்விதழில் வேதாகமத்தைக் குறித்து நம்மில் எழும் கேள்விகள் என்ற தலைப்பில் Rev.நாட் கிராஃபோர்டு அவர்கள் எழுதியுள்ள செய்தியும், வேதாகமத்தை அறிந்துகொள்ளுதல் என்ற தலைப்பில் Dr.எம்.எஸ்.வசந்தகுமார் அவர்கள் எழுதிய கடந்தமாத இதழின் தொடர்ச்சியும், நமது வாழ்க்கையைப் பிரகாசிக்கப்பண்ணும் வேதவசனம் என்ற தலைப்பில் திருமதி மெடோஸ் அம்மா அவர்கள் எழுதிய கட்டுரையும், Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதிய காலங்களைப் பற்றிய சத்தியம் என்ற தொடர் வேதபாடமும் இடம் பெற்றுள்ளது. மேலும் விவாகசம்மந்தம் எத்துணை பெறுமதிப்பானது என்பதை விளக்கி அஸ்திபாரம் ஆடினால்… என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய சிறப்புச் செய்தியும், சகோ.செல்வின் அவர்கள் எழுதிய எலியாவின் மனஉளைச்சல் என்ற கட்டுரையும், சகோ.பிரேம்குமார் அவர்கள் எழுதிய காணப்படாமற் போன ஏனோக்கு என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. இவ்விதழில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு செய்தியும் தங்களுக்கு ஆசீர்வாதமாகவும் பிரயோஜனமாகவும் இருக்கும்படி தேவனிடம் வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும், வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும் (ஏசாயா 30:21).