• திருமதி ஐ. மெடோஸ் •
(ஜூலை – ஆகஸ்டு 2024)

திருமதி ஐ.மெடோஸ்
அன்பானவர்களே, நான் உங்களுக்குக் கொடுக்கும் இந்த செய்தியானது வேதத்திலுள்ள வசனங்களைக் கேட்பவர்களுடைய ஆவிக்குரிய வாழ்விற்கு பிரயோஜனமாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்க தேவன் கிருபைபுரிவாராக. வேதத்தை எழுதினவர்கள் தங்கள் தங்கள் சுயபலத்தினாலோ, அல்லது சுயஞானத்தினாலோ அல்லது சுயபுத்தியினாலோ எழுதவில்லை என வேதம் நமக்குத் தெளிவாகக் கூறுகின்றது.
2 பேதுரு 1:21ஆம் வசனத்தில் இப்படியாக வாசிக்கின்றோம்: “தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்” என்றும், 2 தீமோத்தேயு 3:16இல் “வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினாலே அருளப்பட்டிருக்கிறது” என்றும் 1பேதுரு 1:25இல் “கர்த்தருடைய வசனமோ என் றென்றைக்கும் நிலைத்திருக்கும்” என்றும் வாசிக்கிறோம். ஆகவே கிறிஸ்தவர்களாகிய நாம் அலட்சியம் செய்யாமல் அன்றாடம் வேதம் வாசித்து தியானித்து ஜெபிக்கவேண்டும்.
வேதவசனங்கள் ஒவ்வொன்றும் முத்துக்களைப் போன்றதாகும். எனவே அவைகளை வாசிக்கும்போது மிகவும் கவனமாக, ஆழமாக மனதில் பதிக்கக்கூடியதாக வாசிக்கவேண்டும். இல்லையென்றால் ஆவிக்குரிய வாழ்வில் தோல்வியடைந்தவர்களாகவே இருப்போம்.
“மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டும் என்று இருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது” (கலா.5:17). மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இருக்கும்போது நாம் நினைத்ததைச் செய்யமுடியாமல் போகிறது. ஆனாலும் அப்படியான சமயங்களில் வேத வசனங்கள் மூலம் தேவன் நம்மை ஆறுதல்படுத்தி உற்சாகப்படுத்துகிறார்.
“நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று சொல்லுகிறார் (எபி.13:5). யோசுவா 1ஆம் அதிகாரம் 9ஆம் வசனம், “பலன் கொண்டு திடமனதாய் இரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருக்கிறார்” என்று சொன்ன கர்த்தர் உன்னோடும் இருக்கிறார் என்பதை மறந்து போகாதே.
வேதபுத்தகத்தில் தேவனின் வார்த்தைகள், உவமைகள், சரித்திரங்கள், கதைகள், தீர்க்க தரிசனங்கள், புத்திமதிகள் ஆகியன அடங்கியிருப்பதை நாம் அறிவோம். மேற்கூறியவைகளின் மூலம் தேவன் பேசுகிறார். சங்கீதம் 119: 105ம் வசனம் “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கிறது” என்று தாவீது ராஜா சொல்லுகிறார். ஆம்! தேவனுடைய வசனம் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கிறதுபோல மனிதன் பாவவழிக்குப் போகாத வண்ணம் நம் பாதைக்கு வேத வசனம் வெளிச்சம் கொடுக்கிறது. ஆகவே, வேதவசனம் நம் உள்ளத்தில் எப்போதும் இருக்கவேண்டும். மனிதவாழ்க்கையில் மிகுந்த போராட்டங்கள் பிரச்சனைகள், கவலை, கண்ணீர், சஞ்சலம், இன்னும் எதிர்பாராத கஷ்டநஷ்டங்கள் நேரிடுவதுண்டு. எந்தச் சூழ்நிலையிலும் வேதத்தைத் தவறாது வாசித்து வருகிறவர்களுக்கு சமாதானமும் சந்தோஷமும் உண்டு. இவைகளைக் கொடுப்பது தேவனுடைய பரிசுத்தமும் வல்லமையும் நிறைந்த வசனங்களே. 1பேதுரு 2:3ல் “நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாய் இருங்கள்” என்று பேதுரு எழுதுகிறார்.
உதாரணமாக, ஒரு பறவையை எடுத்துக்கொள்ளுவோம். அப்பறவைக்கு இரண்டு செட்டைகள் இருந்தால் மாத்திரமே, தான் நினைத்தபடி ஆகாயத்தை நோக்கி உயரப் பறக்கமுடியும். இல்லையென்றால் பறக்கமுடியாமல், தான் இருந்த இடத்திலேயே இருக்க நேரிடும். உயரப் பறப்பதற்கு இரண்டு செட்டைகளும் மிகவும் அவசியம். ஒரு செட்டையுள்ள பறவையை பறக்கவிட்டுப் பாருங்கள். அதினால் பறக்க இயலாது. பறப்பதற்கு இரண்டு செட்டைகள் அவசியமாயிருப்பதைப்போல கிறிஸ்தவர்களுக்கும் ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறுவதற்கு திருவசனமாகிய வேதமும் ஜெபமும் மிகவும் அவசியம். வேதத்தை மாத்திரம் வாசித்துவிட்டுப் போக முடியாது. அதற்குத் துணையாக ஜெபமும் சேரவேண்டும்.
இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் எவ்வளவு ஆறுதலான அருமையான வசனங்கள்! அவரது வசனங்கள் தேனாய் இனிப்பது யாருக்குத் தெரியும்? தேவனின் அன்பை ருசித்து, அவருடன் ஐக்கியமாய் இருப்பவர்களுக்கு மாத்திரமே. சங்கீதம் 19:7-10 வரையிலான வசனங் களில் “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது… கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தை சந்தோஷிப்பிக் கிறதுமாயிருக்கிறது; வேதவசனங்கள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதாயும் இருக்கின்றது”.
ஒரு மந்திரவாதி தேவஊழியரைத் தாக்க எண்ணி தனது தீயசக்தியினால் எவ்வளவோ முயற்சித்தும் அவன் விரும்பியது பலிக்கவில்லை. அப்போது அவன் தேவஊழியனைப் பார்த்து இதன் இரகசியம் என்ன? உன் சரீரத்தில் இருப்பதைக் கழற்று என்றான். கைகடிகாரத்தைக் கழற்று என்றான். ஆனாலும், அவன் மந்திரம் பலிக்கவில்லை. கடைசியாக ஊழியன் கையிலிருந்த வேதப்புத்தகத்தை எறிந்துவிடச் சொன்னான். அப்போதும் அவன் மந்திரம் பலிக்கவில்லை. அப்போது அவன் அதன் இரகசியம் என்னவென்று கேட்டபோது, என் உள்ளத்தில் இருக்கும் ஜீவவசனங்களை எவரும் எடுக்க முடியாது என்று அந்த ஊழியர் கூறினார். அவைகள் எனக்குள் சாட்சியாய் இருக்கிறது. அதை ஒரு வராலும் என் உள்ளத்திலிருந்து எடுத்துப்போட முடியாது என்றார் அந்த ஊழியர்.
வேதம் வாசிக்கவும் ஜெபிக்கவும் நேரம் இல்லை என்று சொல்லாதே. அப்படியானால், தேவன் உன்னைப் பார்த்து என்ன சொல்வார் என்பதின் பதில் உனக்குத் தெரியும். ஆகவே, துணிகரமாக நேரம் இல்லை என்று சொல்லாதே. உனக்குத் தேவன் 24 மணித்தியாலம் கொடுத்திருக்கிறார். அந்த 24 மணி நேரத்தில் உனக்கு 10 நிமிடம் இல்லையா? நீ சாப்பிட, குளிக்க, உடுத்த, குடும்ப பிரச்சனைகளைக் கவனிக்க உனக்கு நேரமில்லையா? நீ எப்பாடு பட்டும் அவைகளைக் கவனிப்பாய் அல்லவா? அதுபோலவே, தேவனின் காரியத்திலும் நேரத்தை ஒதுக்கி தேவனின் பாதத்தில் செலவழித்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்.
இச்செய்தியை வாசிக்கும் நீங்கள் உங்கள் பாதை இருளாய் இருந்தால் இனிமேலாவது உங்கள் வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுக்கும் வேதத்தை வாசிக்கத் தொடங்குங்கள். அதுதான் உங்கள் வாழ்வு பிரகாசிக்க ஒரே வழியாகும்.