• சகோ. செல்வின் •
(ஜூலை – ஆகஸ்டு 2024)

பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் வீரர்களின் பெலவீனங்கள் நம்முடைய வாழ்விற்கு ஒரு படிப்பினையாக ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளன. அநேக நேரங்களில் நாம் அவர்களை விசேஷித்த வரங்கள் உள்ள மனிதர்கள் என எண்ணுகிறோம். அதாவது நம்மிடம் இன்று இல்லாத விசேஷித்த ஏதோ ஒன்று அல்லது தேவனை பிரதிபலிக்கும் வித்தியாசமான செயற்பாடு உள்ளவர்களாக வீரர்களாக நாம் கணிக்கின்றோம். ஆனால் அவர்களும் நம்மைப்போன்ற சாதாரண மனிதர்கள்தான் என்பதை நாம் நினைவிற்கொள்ள மறந்துவிடுகின்றோம். இதனை எலியாவின் சம்பவம் உறுதிப்படுத்துகின்றது.

மேலும் யாக்கோபு 5:17ல் “எலியா என்பவன் நம்மைப்போல பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழை பெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம் பண்ணினான். அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழைபெய்யவில்லை” இது ஆச்சரியமல்லவா? எலியாவின் மூலமாக நாம் யார்? எப்படி நடக்கிறோம் என்பதைக் கற்றுக்கொள்வோம்.

1 இராஜாக்கள் 17,18ஆம் அதிகாரங்களில் எலியாவை ஒரு “விசுவாச வீரனாக” நாம் காண்கிறோம். சாதாரணமாக எலியா தைரியமுள்ளவனாகவும் பலவிதமான சச்சரவுகளின் மத்தியிலும் அதற்கு எதிராக வெற்றி பெறுபவனாகவும் இருந்தான். “கர்த்தருடைய கை எலியாவின்மீது இருந்ததினால் அவன் தன் அரையைக் கட்டிக் கொண்டு யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாப் அரசனுக்கு முன் ஓடினான்” (1இராஜா 18:46). அதாவது அவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட பெலனைக் கொண்டு இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் ஓடுபவனாகவும் செய்வதற்கு அரிய பல காரியங்களைச் செய்த அனுபவத்தை உடையவனாகவும் இருந்தான்.

அவன் ஒரு வெற்றி சிறந்த தேவமனிதன். அவர் ஜெபிக்க அக்கினி இறங்கியது. மழை பெய்தது. நின்றது. ஆனால், 19ம் அதிகாரத்தில் பயத்தினால் ஓடிய ஒரு கோழையாக அவரைக் காண்கிறோம். ஆம், எலியா பயமுள்ளவனும், பீதி நிறைந்து ஓடியவனும், களைப்படைந்தவனும், மிகவும் சோர்வடைந்தவனும், மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்தவனுமாக. நாம் அவனைக் காண்கிறோம். இந்த மாற்றங்கள் ஏன்?

ஆகாப் ராஜா, தன் மனைவியான யேசபேலிடம் எலியா செய்த காரியங்கள் அனைத்தையும் சொன்னான், ஆனால் “கர்த்தர்தான் அதைச் செய்தார்” என அவன் தன் மனைவியிடம் கூறவில்லை. அவள் எலியாவைக் கொல்ல நினைத்தாள். எலியா தன் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள அவளுக்குப் பயந்து தன் வேலைக்காரனையும் விட்டுவிட்டு தனிமையாக வனாந்திரம் நோக்கி (ஏறக்குறைய 75 மைல்கள்) சாகவேண்டும் என மனதில் எண்ணியவனாக ஓடினான் ஓடினான், வாழ்வில் எல்லைவரை ஓடினான்.

ஆம், எலியாவும் நம்மைப் போன்ற சாதாரண மனிதன்தான். எலியாவிற்கும் மனஉளைச்சல்கள், சோர்வுகள், துவண்டுபோகுதல்கள், மனரீதியான போராட்டங்கள் போன்றவைகள் ஏற்பட்டன. 1 இராஜாக்கள் 17,18இல் காணப்படும் எலியாவுக்கும் 19ஆம் அதிகாரத்தில் காணப்படும் எலியாவுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. இதை வேதாகமம் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. அவற்றில் சிலவற்றை நாம் கவனிப்போம்.

எலியாவில் வித்தியாசங்கள்!

தேவனுக்குள் பெலமுள்ளவனாயிருந்தான். எனினும் தனக்குள் பெலவீனனாகவும் இருந்தான். சமயத்திற்கேற்ற சாதுரியம், சாமர்த்தியம் இருந்தும், பிரச்சனைகளுக்கு முகங்கொடுப்பதில் அவன் தைரியமற்றவனாக இருந்தான். எலியா நமக்கு 17,18ஆம் அதிகாரங்களில் ஒரு நல்ல முன் மாதிரியாக இருக்கின்றான். எனினும் 19ஆம் அதி காரத்தில் அப்படியல்ல. அங்கு நாம் அவனை முற்றி லும் “சோர்வடைந்தவனாகவும் பின்வாங்கிப் போனவனைப்போலவுமே” காண்கிறோம். சுருக்கமாகச் சொன்னால், கர்த்தரின் வல்லமையால் அவன் பலவான். ஆனால், தனிமனிதனாக பலவீனனாக இருந்தான்.

பெலம் வாய்ந்த எலியா, மக்களுக்கு ஊழியம் செய்தவன்; இப்போது கைவிடப்பட்டவனாக, பெலனற்றவனாக, தப்பியோடுபவனாக, தேவ மக்களுக்கு உதவி செய்ய முடியாதவனாக சோர்வடைந்துவிட்டான். எனினும் எலியா காத்தரோடு இருந்தபோது மக்களுக்கு ஊழியம் செய்தார் என்பதை மறுப்பதற்கில்லை.

வெற்றி பெற்றவனான எலியா, தைரியமுள்ளவனாக ஆகாபையும் அவனுடைய பாகால் தீர்க்க தரிசிகளையும் எதிர்த்து நின்றவன். இப்போது தோல்வியடைந்தவனைப்போல, சோர்வுற்றவனாக, யேசபேலுக்கு பயந்தவனாக. மரணத்தை விரும்பியவனாக (செயற்பாடுகள் அற்றவனாக) அதைரியப்பட்டுவிட்டான். சுயநீதியுள்ளவனாக அவன் இப்போ தனக்கு முக்கியமானதையே செய்ய விரும்பினான். அவன் எதிர்பார்த்த காரியம் நேரடியாக நடைபெறாதபோது பின்வாங்கிப்போனான்.

அதாவது, ஜனங்கள் பாகாலை புறக்கணித்துவிட்டு கர்த்தரை பின்பற்றுவார்கள் என அவன் கர்மேல் சம்பவத்திற்குப் பின் எதிர்பார்த்தான். ஆனால், மக்களோ அனலுமின்றி. குளிருமின்றி, எவ்வித மனமாற்றமில்லாமல் இருந்தனர். ஆதலால் மனமுடைந்துபோனான். நாம் எதிர்பார்க்கும் காரியங்கள் நடைபெறாவிட்டால் நாமும் (எலியாவைப்போல) மனம்துவண்டு போய்விடுகின்றோம் அல்லவா?

தேவனுடைய பிரசன்னத்தில் தரித்திருந்தவன் இப்போது மக்களினாலும் சந்தர்ப்ப சூழ்நிலையினாலும் தன்னை தேவனால் நிரப்பப்படாதவனைப்போல எண்ணிக்கொண்டான். பிரச்சனை சார்ந்த உலகையே அவன் நோக்கினான். ஜெபிக்கத் தவறினான், காத்தருடைய வாக்குத்தத்தங்களின்மீது தரித்திருக்க தவறினான். அவனுடைய தவறான இலக்கையே இது காட்டுகிறது.

இங்கு இந்த அதிகாரத்தில் அவன் ஒருமுறை கூட ஜெபித்ததாக கூறப்படவில்லை. யேசபேல் கூறினதும் உண்மையாக நிகழ்ந்தது (1இராஜா.19:21). எனவே கர்த்தருடைய வார்த்தைகளும் பொய்யாகிவிடும் என்பதுபோல் நடந்துகொண்டான். அநேக நேரங்களில் நாமும் இன்னவிதமாக நம்முடைய பிரச்சனைகளுக்குள் நாம் அமுக்கப்பட்டு அதையே சிந்தித்து தியானித்து அதை ஒரு பெரிய இராட்சத மலைபோல சித்தரித்துக் கொள்கிறோம்.

வேதாகமத்தில் இதைப்போன்ற ஏனைய பல உதாரணங்களையும் கொஞ்சம் காண்போம்.

1). எண்ணாகமம் 13:40-14:4இல் தம்மை வெட்டுக்கிளிகளாக எண்ணிய இஸ்ரவேல் மக்கள்.

2). சவுலுக்கு பயந்து ஓடி, எதிரியான பெலிஸ்தியர் பகுதிக்குச் சென்ற தாவீது (1சாமு. 27அதி),

3). இயேசுவை நோக்கி தண்ணீரின் மீது நடந்து வந்த பேதுருவின் விசுவாசமின்மை (மத். 14:30)

இவையாவும், இவ்விதமான மன உளைச்சலினால் ஏற்பட்ட விளைவு எனவும் மனமடிவினால், விசுவாசமின்மையினால் ஏற்பட்ட தவறான தீர்மானங்கள் எனவும் கூறலாம்.

எலியா சரீரப்பிரகாரமாக தேவனால் உணவூட் டப்பட்டதோடு தேவனுக்காக காத்திருக்கும் அனுபவத்தை பெற்றவருங்கூட. இப்போது சரீரப்பிரகாரமாக பெலவீனமாக, களைப்படைந்து, உணவற்றவராக, தேவனை நோக்கி கவனத்தைத் திருப்ப முடியாதபடி தன்னுடைய உபாயத்தின்படியே நடந்துகொண்டார். எலியாவில் காணப்பட்ட இந்த நோய் அறிகுறிகளானது பயம், தேவனைவிட்டு தூரமாக ஓட ஆயத்தம், உணர்வுகளினால் அழுத்தப்பட்டமை, ஏமாற்றப்பட்டமை, சோர்வுகள் போன்றவைகளாகும்.

தேவனுக்கு கணக்கொப்புவிப்பதற்கு மாறாக எலியா செயற்பட்டார். அவர் தன்னில்தானே கோபம் அடைந்தது மட்டுமல்ல, தேவன் நிமித்தமும் மக்கள் நிமித்தமும் கோபமடைந்தான். ஒரு சமயத்தில் தேவன் தன்னை கைவிட்டதாகவும் எண்ணினான். சுயநலமுள்ள வார்த்தைகளையும் வெளியிட்டான். “நான் தேவனாகிய காத்தருக்காக வெகுபக்தி வைராக்கியமாயிருந்தேன்”, “நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்”, “நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல” (வச.4.10.14) என்றான். இவைபோன்ற வார்த்தைகள் அவனிடமிருந்து வந்தன. நான் ஒருவன் மாத்திரம்… என் முற்பிதாக்களை விட சிறந்தவன் அல்ல, எனக்கூறி நழுவ முயன்றான்.

எலியாவின் வாழ்க்கையிலிருந்து நமக்கான பாடங்கள்: வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்தது!

இலக்குகள் ஒரு பிரச்சனை அல்ல. எனவே, நாம் தேவனை நோக்கிப் பார்த்து அதில் தரித்திருக்க பழகவேண்டும். பக்கவாட்டில் தோன்றும் வழிகளில் நடவாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இங்கு பிரச்சனையானது நமது உபாயமல்ல. தேவனுடைய தீர்வு ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து அவருடைய வழிகளை நாம் ஏற்றுக்கொள்ள பழகவேண்டும்.

மன உளைச்சல் இன்று உலகில் காணப்படும் நம்பர் 1 வியாதியாகும். ஆண்களைவிட பெண்கள் இருமடங்கு மன உளைச்சலினால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றவர்களைவிட 3 மடங்கு அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். நமது மூதாதையர் களைவிட நாம் வாழ்வில் அதிக முன்னேற்றத்துடன் வாழ்ந்தாலும் இன்றைய உலகத்தாரை வாட்டி வதைப்பது இந்த நோயாகும். இது மனிதர்களுடைய தனிப்பட்ட ஆவி ஆன்மா சரீரத்தையே அதிகமாக பாதிக்கின்றது.

மன உளைச்சல் என்ற நோயானது ஆவியில் துக்கத்தையும். ஆன்மாவில் தவறான தீர்மானத்தையும், இருளையும், சரீரத்தில் தூக்கமின்மையையும் தருகிறது. அது தனிப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, அது உலகளாவிய மனிதர்களது பிரச்சனை, உங்கள் வாழ்வையும் அதை நீங்கள் கையாளும் முறையையும் பாதிக்கக்கூடியது. அதற்குத் தப்பியவர்கள் அரிது.

ஒருவருடைய பொது அறிவினாலும் அதை ஒன்றும் செய்யமுடியாது. அது முதியவர்களை தாக்குவதுபோலவே இளைஞர்களையும் தாக்குகின்றது. மனோதத்துவம் தெரிந்தவர்களையும் தெரியாதவர்களையும் சாந்தகுணமுள்ளவர்களையும் தாக்கும், நம் எதிர்பார்ப்புக்களை தவற விடும்போது, நமது தோல்விகளில், அது நமது உறுதியை தவறவிடச் செய்யும்.

துக்கம், மற்றவர்களினால் ஒதுக்கப்படுதல் என்பன உற்சாகமின்மைக்கு வழிநடத்தும். பதவி, பேராசை, ஆஸ்தி அதிகாரம் பெற வாஞ்சை, சொத்து ஆகியன நமது தேவைகளை, தனிப்பட்ட சந்தோஷத்தை பூர்த்தி செய்யாதபட்சத்தில் மனச்சோர்வு அதிகமாக தாக்குகின்றது. இந்த மனச்சோர்வுகளை நீக்குவதற்கு நமக்கு தேவனுடைய உதவி தேவைப்படுகின்றது.

எலியாவிற்கு தேவனுடைய உதவிகள் இதோ:

தூக்கம், தகுந்த நித்திரை

தூதன், தேவ தூதனின் உதவிகள்

ஆகாரம். தேவையான உணவு

தேவனின் கேள்விகள் அவை சிந்தனையை திசைதிருப்பும் வினாக்கள் அல்லவா!

குகைக்குள், எலியாவின் குகை அனுபவங்கள், மறுபடியும் பயன்படுத்தப்படுதல், எலியா மறுபடியும் தேவனால் உபயோகிக்கப்பட்டார்.

ஆம். வாழ்க்கை என்பது ஓர் நீர்க்குமிழி போன்றது. இன்பமும் துன்பமும் வெற்றியும் தோல்வியும் கலந்ததுதான் வாழ்க்கை. நேற்றைய வெற்றி நிரந்தரமானதல்ல. எலியா சந்தித்தது போல வெற்றிக்குப் பின்னர் தோல்வி நமக்கு வரலாம். எலியாவைப் போன்று பல சமயங்களில் நாமும் மனமுடைந்து காணப்படலாம். நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு தேவவல்லமையை உணராமல் இருக்கலாம்.

மன உளைச்சல் என்பது பல தேவமனிதர்களையும் பாதிப்படையச் செய்துள்ளது. வில்லியம் கேரி, ஸ்பர்ஜன் உட்பட ஊழியர்கள் பலரிடம் இதன் பாதிப்பு ஒருவிதக் குணாதிசயமாகக் காணப்பட்டது. இதினால் மனம் சோர்வடையாது எதிர்நீச்சல் போடவேண்டுமென்பதை அவர்கள் கற்றுக்கொண்டனர். மனஉளைச்சலுக்கு எதிராக போராடி, எதிர் நீச்சல் பெற உபவாசித்து, தேவனை விசுவாசித்து ஜெபித்தார்கள். இப்படி தேவபெலத்தால் மீண்டும் புத்துணர்ச்சி பெறுவது திண்ணம்.

இன்று நாமும் சோர்ந்திருந்த எலியாவை புதுப்பித்த தேவனை நோக்கிப் பார்ப்போம். அவர் நம்மையும் புதுப்பிக்க வல்லவர் அல்லவா?