• Dr.எம்.எஸ்.வசந்தகுமார் •
(ஜூலை – ஆகஸ்டு 2024)

Dr.எம்.எஸ்.வசந்தகுமார்
(மே-ஜுன் இதழின் தொடர்ச்சி)
2.வேதாகமம் எதற்காக எழுதப்பட்டுள்ளது?
வேதாகமத்திலுள்ள 66 புத்தகங்களும் பலதரப்பட்டுள்ள விஷயங்களைக் கொண்டுள்ளது என பார்த்தோம். இன்றைக்கு அநேகர் பிழையான கோணத்திலிருந்து வேதாகமத்தைப் பார்ப்பதனாலேயே அவர்கள் வேதாகமத்திலிருந்து பெறும் செய்தியும் பிழையானதாக இருக்கின்றது. எனவே வேதாகமம் எதற்காக எழுதப்பட்டுள்ளது என பார்ப்போம்.
வேதாகமத்தில் பலதரப்பட்ட விஷயங்கள் எழுதப்பட்டுள்ளபோதிலும், ஆரம்பம் முதல் முடிவு வரை அவற்றிடைய ஒரு தொடர்பு இருப்பதை நாம் அறிந்திடலாம். வேதாகமத்திலுள்ள 66 புத்தகங்களிலும் தேவன் தன்னை மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார். வேதாகமத்தின் மூலமாக அவரை அறிந்துகொள்ளக் கூடியதாயுள்ளது. எனினும் தேவனைப்பற்றிய விஷயங்களை நாம் வெறுமனே நம்முடைய அறிவினால் அறிந்துகொள்ளுவதற்காக அல்ல, மாறாக அவரை அறிந்து, அவரோடு அன்னியோன்ய உறவை நாம் ஏற்படுத்திக்கொள்தற்காகவே வேதாகமம் எழுதப்பட்டுள்ளது. இதனால்தான் வேதவாக்கியம் முழுவதும் இயேசுகிறிஸ்துவைப்பற்றி சாட்சிகொடுக்கின்றது (யோவான் 5:39). இயேசுகிறிஸ்துவின் மூலமாக மட்டுமே தேவனை அறிந்திடலாம் (யோவான் 1:18, 14:9). “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கிறது (யோவான் 20:31). “வேதாகமம் முழுவதும் இழையோடும் அதன் மையக் கருத்து, இயேசுகிறிஸ்துவில் மக்களுக்கு கிடைக்கும் இரட்சிப்பாகும். தன்னைவிட்டுப் பிரிந்துபோன மனிதனுடன் மறுபடியும் ஒரு உறவை ஏற்படுத்த தேவன் எடுக்கும் செயல்களையே நாம் வேதாகத்தில் காணலாம்” (ஸ்டொட்).
உண்மையில் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினால் நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்கத் தக்க பரிசுத்த வேத எழுத்துக்களையே வேதாகமம் கொண்டுள்ளது (2 தீமோ.3:15). “மக்களை இரட்சிப்புக்குள் நடத்தும் ஞானமார்க்கத்தைக் காட்டும் புத்தகமாக வேதாகமம் உள்ளது. இதில் தேவனிடம் செல்லு வதற்கான மார்க்கம் திறந்துள்ளது” (பாக்ளே).
தேவகட்டளையை மீறி பாவம்செய்து அவரை விட்டுப் பிரிந்துபோன மனிதன் இயேசுகிறிஸ்துவின் மூலமாக அவரை அறிந்து இரட்சிப்படைய வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, இவ்வாறு இரட்சிக்கப்பட்ட மனிதன் கிறிஸ்தவ வாழ்வில் வளர்ச்சியடைவதையும் நோக்காகக்கொண்டு வேதாகமம் எழுதப்பட்டுள்ளது. இதனால்தான் தேவாவியினால் அருளப்பட்ட வேதவாக்கியங்கள், தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கின்றது (2தீமோ.3:16,17) என வேதாகமம் கூறுகிறது. இரட்சிக்கப்பட்ட மனிதனுக்கு நான்கு விதங்களில் வேதாகமம் பிரயோஜனமாயுள்ளதை இவ்வசனம் அறியத்தருகிறது. முதலாவதாக, இரட்சிக்கப்பட்ட மனிதன் கிறிஸ்தவ சத்தியத்தில் உபதேசிக்கப்படல் வேண்டும். இரண்டாவதாக, அவனுடைய வாழ்வின் பிழைகள் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு, கண்டித்து உணர்த்தப்படல் வேண்டும். மூன்றாவதாக, அவனுடைய வாழ்வு சீர்திருத்தப்படல் வேண்டும். நான்காவதாக, அவனுக்கு நீதியான வாழ்வுமுறை படிப்பிக்கப்படல் வேண்டும். இதனால் இரட்சிக்கப்பட்ட தேவனுடைய மனிதன் தேறினவனாகி (அதாவது பக்குவமடைந்து) எந்த நற்கிரியையும் செய்யத் தகுதியுள்ளவனாயிருப்பான். இதை சாத்தியமாக்குவது வேதாகமமேயாகும். எனவே வேதாகமம் இதற்காகவும் எழுதப்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, வேதாகமமானது பாவியான மனிதன் தேவனிடமிருந்து இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்காகவும், இரட்சிக்கப்பட்ட மனிதன் தன்னுடைய கிறிஸ்தவ வாழ்வில் வளர்ச்சியடைய வேண்டும் என்பதையும் நோக்காகக்கொண்டு எழுதப்பட்டுள்ள ஒரு புத்தகமாகும்.
(3) வேதாகமம் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது?
வேதாகமமானது பாவிகளான நமது ஆத்தும இரட்சிப்புக்காகவும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்காகவும் எழுதப்பட்டுள்ள புத்தகம் என்பதனால் அது மற்றைய புத்தகங்களைப் போலல்லாது சற்று வித்தியாசமான முறையில் எழுதப்பட்டுள்ளது. இதனால் அது எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.
வேதாகமமானது கிட்டத்தட்ட 40 பேரால் எழுதப் பட்ட ஒரு புத்தகமாக உள்ளது. இந்த நாற்பது பேரும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் அல்ல. இவர்களில் அநேகர் ஒருவரையொருவர் அறியாதவர்களாக, நேரடியாக சந்திக்காதவர்களாக, எவ்வித தொடர்பும் அற்றவர்களாகவே இருந் தனர். வேதாகமமானது சுமார் 1500 ஆண்டு கால இடைவெளியில் எழுதப்பட்ட ஒரு புத்தகமாகும். இது 60 தலைமுறைகளை உள்ளடக்குகிறது. வேதா கமம் கிட்டத்தட்ட கி.மு.1400க்கும் கி.பி.100க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டுள்ளது.
வேதாகமத்தை எழுதிய 40க்கும் அதிகமான ஆசிரியர்கள் வித்தியாசமான காலகட்டத்தில் வாழ்ந்தது மட்டுமல்ல, வித்தியாசமான கல்விதராதரத்தை உடையவர்களாகவும், வித்தியாசமான தொழில்களில் ஈடுபட்டவர்களாகவும் இருந்தனர். எல்லோருமே எழுத்தாளர்களாக பணிபுரிந்தவர்கள் அல்ல. வேதாகம எழுத்தாளர்களின் பட்டியலில் அரசர்கள், விவசாயிகள், தத்துவ ஞானிகள், மீனவர்கள், கவிஞர்கள், அரச அலுவலர்கள், பண்டிதர்கள் போன்ற பலதரப்பட்ட அந்தஸ்தில் உள்ளவர்களும் அடங்குவர். உதாரணமாக மோசே, எகிப்தின் சகல கலைகளையும் கற்றுத்தேர்ந்த அரசியல் தலைவன். பேதுரு ஒரு மீனவன், ஆமோஸ் ஒரு மேய்ப்பன், யோசுவா ஒரு இராணுவத் தலைவன், நெகேமியா ஒரு பானபாத்திரக்காரன், தானியேல் ஒரு பிரதம மந்திரி, லூக்கா ஒரு வைத்தியன், சாலொமோன் ஒரு அரசன், மத்தேயு ஒரு ஆயக்காரன், பவுல் ஒரு பரிசேயன்.
வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த வேதாகம ஆசிரியர்கள், வெவ்வேறு இடங்களில் இருந்தே வேதாகமத்தை எழுதினார்கள். எசேக்கியேல் பாபிலோனில் அடிமையாயிருக்கையிலும், பவுல் சில நிருபங்களை ரோம சிறைச்சாலையில் இருக்கும்போதும், தாவீது அநேக சங்கீதங்களை வனாந்திரத்திலும், தானியேல் அரமனையிலும், யோவான் பத்முதீவில் நாடு கடத்தப்பட்டிருந்தபோதும், லூக்கா பிரயாணம் செய்யும்போதும், இன்னும் பலர் வேறு பல இடங்களிலுமிருந்து எழுதினார்கள். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா என்னும் மூன்று கண்டங்களிலும் வைத்து எழுதப்பட்ட வேதாகமம், மூன்று மொழிகளில் எழுதப்பட்டது. இது 2 இராஜாக்கள் 18:26-28 இல் யூதாவின் மொழி என்றும், ஏசாயா 19:18இல் கானாவின் மொழி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுகிறிஸ்து பேசிய அரமேய மொழியிலும் ஒரு சில பழைய ஏற்பாட்டு பகுதிகள் எழுதப்பட்டன. கி.மு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி நான்காம் நூற்றாண்டு வரை இம்மொழியே கீழ்த்திசை நாடுகளின் பொதுவான மொழியாயிருந்தது. புதிய ஏற்பாடானது கிறிஸ்துவின் காலத்தில் சர்வதேச மொழியாக இருந்த கிரேக்கத்தில் எழுதப்பட்டது.
வேதாகமமானது பல்வேறு வகையான கல்வித்தராதரமும் அந்தஸ்தும் தொழிலுமுடைய பலரால் பல இடங்களில் வைத்து பல்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்டுள்ளபோதிலும் அது ஒரு தெய்வீக ஆசிரியருடைய ஆக்கமாயிருக்கிறது. …வேதவாக்கியங்களெல்லாம் தேவாவியினால் அருளப்பட்டிருக்கிறது (2தீமோத்.3:16). தேவனு டைய ஆவியானவர் வேதாகமத்தை எழுதிய 40 தேவதாசர்களுக்கூடாகவும் வேதாகமத்தில் உள்ள விஷயங்களை எழுதியுள்ளார். இதையே “தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்தாவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள்” (2பேதுரு 1:21) என வேதாகமம் கூறுகிறது. தேவாவியானவரின் ஏவுதலி னால்இவர்கள் வேதாகமத்தை எழுதிய போதிலும், இவர்கள் ஆவியானவரால் ஒரு தட்டச்சு இயந்திரம் போலவோ இல்லையென்றால் எழுதுகோல் போலவோ உபயோகிக்கப்படவில்லை.
மாறாக, இவர்களுடைய எழுத்தாற்றல், மொழி நடை, கல்வியறிவு, சிந்தனைகள் அனைத்தும் பரிசுத்தாவியானவரினால் உபயோகிக்கப்பட்டன. இவர்கள் பரிசுத்தாவியானவரால் வழிநடத்தப்பட்டு வேதாகமத்தை எழுதினார்கள். “பரிசுத்தாவியானவரின் வார்த்தைகளும் வேதாகம ஆசிரியர்களின் வார்த்தைகளும் ஒரே சமயத்தில் ஒன்றானதாயிருக்கும் வண்ணம் பரிசுத்தாவியானவர் வேதாகம ஆசிரியர்களினூடாக வேதாகமத்தை எழுதியுள்ளார்” (ஸ்டொட்)
வேதாகமத்தை எழுதியவர்கள் தங்கள் கைகளினால் வேதாகமத்தை எழுதினாலும் அவர்கள் தேவாவியானவரின் வழிநடத்துதலின்படி வேதாகமத்தை எழுதியுள்ளனர்.