• Bro.ஆ.பிரேம்குமார் •
(ஜூலை – ஆகஸ்டு 2024)

Bro.ஆ.பிரேம்குமார்

ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான். ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம். ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார் (ஆதி.5:21-24).

அ. ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்தார்

ஏனோக்கின் பிறப்பை பற்றிக் கூறப்பட்ட பின் 65 வருடங்கள் வரை நடந்த காரியங்கள் ஒன்றும் சொல்லப்படவில்லை. 65 வயதில் அவன் மெத்தூசலாவைப் பெற்றபின் அவன் தேவனோடு சஞ்சரித்தான் என வாசிக்கிறோம். ஏனோக்கு ஏற்கனவே தேவனை அறிந்த ஒரு குடும்பத்தில்தான் பிறந்தான். தேவபக்தியுள்ள பெற்றோருக்குப் பிறந்ததால் தேவபக்தியுள்ளவனாக வளர்க்கப்பட்டிருப்பான். ஆனால் அவனது 65 வயதில் அவன் தனிப்பட்ட விதத்தில் தேவனோடு நெருக்கமான ஒரு உறவை ஏற்படுத்திக்கொண்டான்.

இந்த நெருக்கமான தனிப்பட்ட உறவு இடையில் ஏற்பட்ட ஒன்றாகும்! இன்று நாமும்கூட கிறிஸ்தவ குடும்பங்களில் பிறந்து தேவபக்தியுள்ள பெற்றோரால் வளர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஏனோக்கைப்போல தனிப்பட்டவிதத்தில் தேவனோடு ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளோமா? பிறக்கும்போதே தேவனோடு உறவு முறிந்தவர்களாய்ப் பிறக்கும் நாம், நமது வாழ்வின் ஒரு காலகட்டத்தில் தேவனோடு தனிப்பட்ட விதத்தில் உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதற்காக இயேசுகிறிஸ்து தன் உயிரைத் தியாகம் செய்தார். ஒரு குருவானவர் இப்படிச் சொன்னார்: “நான் 13 வருடங்களாக பாதிரியாராக இருந்தேன். ஆனால், இயேசுகிறிஸ்துவை (தனிப் பட்ட முறையில்) அறிந்திருக்கவில்லை” என்றார். பின்பு அவம் தனிப்பட்ட விதத்தில் தேவனை அறிந்ததை சாட்சியாக பகிர்ந்தார்.

தேவனோடு உறவுகொள்வது சலிப்புத் தட்டும், வெறுப்பூட்டும் காரியம் என நீங்கள் இதுவரை காலமும் நம்பியிருப்பீர்களானால் ஒன்றை அறிந்துகொள்வது நமக்கு நல்லது. எல்லா உறவுமுறைகளிலும் மிகவும் சந்தோஷம் நிறைந்த உறவுமுறை தேவனோடு நாம் கொள்ளும் உறவுமுறையாகும்! அவர் நமது உற்ற நண்பனாக மாறுகிறார். இந்த நண்பர் மற்ற நண்பர்களைப்போல நம்மை ஏமாற்றுகிறவரோ அல்லது கைவிடுகிறவரோ அல்ல! நமக்காகத் தனது உயிரையே கொடுக்கும் அளவிற்கு நம்மை நேசிப்பவர். அந்த நண்பனாகிய இயேசுகிறிஸ்துவோடு நெருக்கமான ஒரு உறவை ஏற்படுத்தியிருப்பதன் உள்ளான சந்தோஷத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது! அந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? சகோதரனே, சகோதரியே, உங்களுக்கு அந்த அனுபவம் உண்டா?

அவன் தேவனோடு சஞ்சரித்தான் (வச.22) என்பதை வாழும் இறைவாக்கு வேதாகமத்தில் “அவன் தேவனோடு ஐக்கியப்பட்டிருந்தான், அவன் தேவனோடு தொடர்ச்சியாக உறவு கொண்டிருந்தான்” என இலகுபடுத்தி எழுதப்பட்டுள்ளது. ஏனோக்கு தேவனோடு உறவு ஏற்படுத்தியதோடு நின்றுவிடவில்லை. தேவனோடு தொடர்ச்சியாக உறவாடிக்கொண்டிருந்தான். இன்று நீங்களும் தேவனோடு ஐக்கியப்பட்டிருக்கிறீர்களா? தொடர்ந்தும் அவரோடு உறவு கொண்டிருக்கிறீர்களா?

ஏனோக்கிற்கும் குடும்பம் இருந்தது, பிள்ளைகளும் இருந்தனர். இந்தப் பொறுப்புகள் மத்தியிலும் தேவனோடு செலவழிக்க அவன் நேரத்தை ஒதுக்கினான் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நீங்கள் அனுதினமும் ஆண்டவருடைய வேதத்தை வாசித்து, அனுதினமும் அவரோடு ஜெபத்தின் மூலம் பேசுகிறீர்களா? நமக்கும் தேவனுக்கும் இடையிலான உறவில் தளர்ச்சியை ஏற்படுத்தும் உங்கள் பாவங்களை அனுதினமும் அறிக்கையிடுகிறீர்களா?

இரண்டுபேர் பேசிக்கொண்டிருக்கையில் ஒருவன் “நான் ஒவ்வொரு நாள் இரவும் அந்த நாளில் செய்த பாவங்களை தேவனிடம் சொல்லி மன்னிப்புக் கேட்பேன்” என்றானாம். அதைக் கேட்ட மற்றவன் வியந்து “சரி, காலையில் எப்படி ஜெபம் பண்ணுவாய்” என்று கேட்க அவன் மறு மொழியாக “ஒவ்வொரு நாள் காலையிலும் நான் செய்யப்போகிற பாவங்களை தேவனிடம் சொல்லி மன்னிப்புக் கேட்பேன்” என்றானாம்.

இது நமக்கு சிரிப்பை ஏற்படுத்தினாலும் நாமும் இதே பிழையைச் சொல்லாமல் செய்கிறோம் அல்லவா? நீதிமொழிகள் 28:13இல் “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான், அதனை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” என்று வாசிக்கிறோம். எனவே 1 யோவான் 1:7,9இல் சொல்லியபடி நாம் நமது பாவங்களை அறிக்கையிட்டு விட்டுவிடத் தீர்மானிக்கும்பொழுது தேவன் நம் பாவங்களை முற்றிலும் அகற்றி அவருக்கும் நமக்கும் இடையிலான உறவை சீர்படுத்துகிறார்.

“தேவனோடே சஞ்சரித்தான்” என்பதை “தேவனோடு நடந்தான்” என்று ஆங்கில வேதாகமம் மொழிபெயர்க்கிறது. ஆமோஸ் 3:3இல் “இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ” என்று வாசிக்கிறோம். ஆம், ஏனோக்கு தேவனோடு ஒருமனப்பட்டிருந்தான். அவன் காயீனின் சந்ததியான ஏனோக்கைப் போல (ஆதி.4:17) தேவனுக்கு எதிராக நடக்கவில்லை. மாறாக தேவனோடு நடந்தான்! இன்று நீங்கள் சேத்தின் சந்ததியான ஏனோக்கைப்போல தேவனோடு நடக்கிறீர்களா˜ அல்லது காயீனின் சந்ததியான ஏனோக்கைப்போல சுய இச்சைகளின்படி நடக்கிறீர்களா? நீங்கள் தேவனோடு நடக்கிறேன் என்று சொல்லியும் உங்கள் இச்சைப்படி நடப்பீர்களானால் நீங்கள் தேவனோடு நடக்கவில்லை என்பதுதான் உண்மை (கலா. 5:24).

தேவனோடு நடந்தான் என்பதை தேவனுடைய வழிகளில் நடந்தான் என்றும் பொருள் படுத்தலாம். இன்று நீங்கள் போகின்ற, கண்களுக்கு இன்பமான அந்த வழி தேவனுடைய வழிகளோடு முரண்படுமாயின் நீங்கள் அந்த வழியைவிட்டு தேவனிடம் திரும்பவேண்டும். “மனுஷருக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு. அதன் முடிவோ மரண வழிகள்” (நீதி.14:12) என்று வேதம் கூறுகிறது.

போதைப் பொருள் அருந்துபவனுக்குக்கூட ஆரம்பத்தில் அவன் வழி இன்பமானதாகத்தான் இருக்கும். எலும்புகள் வலுவிழந்து வேதனையில் துடிக்கையில்தான் அதன் முடிவு விளங்கும்! அவ் வண்ணமே இன்று உங்களுக்கு இனிப்பாகத் தோன்றுகின்ற வழி உங்களை மரண பாதைக்கு இட்டுச்செல்லும் என்பதை மறவாதீர்கள்!

ஏனோக்கு தேவனுக்குப் பிரியமானவன் என்று எபிரெயர் 11:4இல் வாசிக்கிறோம். அவன் வாழ்ந்த சூழ்நிலை காயீனின் சந்ததியார் தங்களைப் பிரியப்படுத்தி பிழையான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவந்த காலத்தில், ஏனோக்கு தேவனோடுள்ள உறவில் அக்கறை செலுத்தித் தேவனைப் பிரியப்படுத்திக் கொண்டிருந்தான். அவன் 300 வருடங்களாக தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான். தேவனுக்குப் பிரியமானவனாய் ஜீவித்தான். நாமும் நமது ஜீவிய காலம் முழுவதும் தேவனை பிரியப்படுத்தக்கூடும் என்பதற்கு ஏனோக்கை திருஷ்டாந்தமாகக் கொள்ளலாம். நாம் உலகத்தை நேசித்து, உலகத்தையும் நமது மாம்ச இச்சைகளையும் பிரியப்படுத்தி ஜீவிப்பவர்களாக இருந்தால் நாம் தேவனைப் பகைக்கிற வர்களாக இருப்போம் என யாக்கோபு தனது நிருபத்தில் எழுதியுள்ளார் (யாக்கோபு 4:4).

உங்கள் அதிகாரிகளை நீங்கள் பிரியப்படுத்த பொய் சொல்வீர்களானால், நீங்கள் இச்சையை நிறைவேற்ற லஞ்சம் கொடுப்பீர்களானால் நீங்கள் தேவனைப் பிரியப்படுத்துகிறவர்களாக இருக்க மாட்டீர்கள். ஆண்டவரை வேதனைப்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு, அதே பிழையை செய்துகொண்டு அதே நிலையில் இருப்பீர்களானால் உங்களுக்கு விடிவு இல்லை!

நான் தேவனைப் பிரியப்படுத்த விரும்புகிறேன், என்னால் முடியவில்லை, திரும்பத் திரும்ப தோற்றுப்போகிறேன் என ஒருவேளை நீங்கள் கூறலாம். தோல்வி முடிவானது அல்ல! நீங்கள் திரும்பத்திரும்ப பாவத்தில் விழும்போது, திரும்பத் திரும்ப எழுந்து அதை அறிக்கையிட்டு விட்டுவிட முயற்சிப்பீர்களானால் நீங்கள் தோல்வியடைந்தவனல்ல. ஆனால், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தேவனுக்குப் பிரியமாக ஜீவிக்க என்னால் முடியாது என நீங்கள் முயற்சியைக் கைவிடும்போதுதான் நீங்கள் உண்மையாகவே தோற்றுப்போவீர்கள். சாத்தானும் அதைத்தான் விரும்புகிறான்.

நீங்கள் தேவனுக்குப் பிரியமாக ஜீவிக்க வேண்டுமென்ற ஒரு தணியாத தாகம் உங்களுக்குள் இல்லாவிடில் நீங்கள் தேவனைப் பிரியப்படுத்த முடியாது. உங்களுக்குள் இருக்கும் அந்த வாஞ்சை தேவபலத்தில் தங்கியிருக்கவேண்டும். தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பதை நமது பெலத்தோடு ஒப்பிட்டுப்பார்த்து இது என்னால் முடியாது என்ற முடிவுக்கு வருகிறோம். முடியாத ஒன்றைச் செய்யுமாறு தேவன் சொல்லமாட்டார். தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பதை தேவனால் செய்யக்கூடுமெனத் தேவனை நோக்கி அவர் நம்மை முற்றி லும் ஆட்கொள்ள இடங்கொடுத்து, அவரை நம்பி தொடர்ந்து முயற்சியெடுக்கும் வேளையில் நாம் நிச்சயமாகத் தேவனுக்குப் பிரியமாக ஜீவிக்கிறவர்களாக இருப்போம். ஏனோக்கு நமக்கு ஓர் சிறந்த முன்மாதிரி!

ஆ. ஏனோக் நியாயத்தீர்ப்பை அறிவித்தார்

ஏனோக்கின் பெயரையுடைய மூன்று புத்தகங்கள் யூதர்கள் மத்தியில் உண்டு. இவை வேதாக மத்தில் சேர்த்துக்கொள்ளப்படாத புத்தகங்களாகும். அவற்றில் ஏனோக்கு பரலோகத்தைக் குறித்தும், எதிர்காலத்தைக் குறித்தும் தான் பரலோக தரிசனங்கள்மூலம் கண்ட இரகசியங்களை வெளிப்படுத்துகிறான். இதில் ஒன்றிலிருந்துதான் (1 ஏனோ. 1:9) யூதா தனது புத்தகத்தில் 14ஆம் வசனத்தை எடுத்துள்ளான். இவற்றில் ஒரு புத்தகம் புதிய ஏற்பாட்டின் பின்னணியை விளக்குவதற்கு மிகவும் முக்கியமானது.

ஏனோக்கு நியாயத்தீர்ப்பை அறிவித்தான் (யூதா.14) இன்று அநேகர் தேவனுடைய அன்பைப்பற்றி மட்டுமே பேசி மனந்திரும்புதலையும், நியாயத்தீர்ப்பையும் பற்றி அதிகம் பேசுவதில்லை. இயேசுவோ நியாயத்தீர்ப்பைக் குறித்து அதிகமாய்ப் பேசினார். யூதா 14,15ல் “ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கும் இவர் களைக்குறித்து: இதோ எல்லோருக்கும் நியாயத் தீர்ப்புக் கொடுக்கிறதற்கும் அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய் செய்து வந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும் தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகள் எல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும் ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடும் கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்!” எனக் காண்கிறோம். ஆம், இயேசு பரிசுத்தவான்கள் படைசூழ வானத்திலிருந்து இறங்கிவருவார். பூமியின் கோத்திரத்தார் அவரைப் பார்த்து புலம்புவார்கள் (வெளி.1:7). இயேசு நிச்சயமாகவே நியாயத் தீர்க்க வருவார். இந்தப் பயங்கர நாளுக்குத் தப்பிக்கொள்ள மக்கள் மனந்திரும்பி இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படுவது அவசியம். இல்லாத பட்சத்தில் நியாயந்தீர்க்கப்பட்டு அக்கினிக் கடலுக்குள் சதாகாலத்துக்கும் வேதனைப்படுமாறு தள்ளப்படுவர் என வேதம் கூறுகிறது (வெளி.20:10-15).

இ. ஏனோக் காணப்படாமற் போனார்

ஆதியாகமம் 5ஆம் அதிகாரத்திலுள்ள வம்ச அட்டவணையில் “மரித்தான்” என்ற பதம் அநேக முறை வருவதற்கு காரணம் ஒருவன் மரிக்கவில்லை என்பதை அழுத்திக் காட்டுவதேயாகும். ஏனோக்கு மரிக்கவில்லை! அவன் விசுவாசத்தினாலே தேவனிடம் எடுத்துக்கொள்ளப்பட்டான்! வேதத்தில் மரணத்தை ருசிக்காமல் எடுத்துக்கொள்ளப்பட்ட இருவர் ஏனோக்கும் எலியாவுமே ஆவர்.

தேவனோடு சஞ்சரிப்பவனுக்கு மரணம் முடிவானதல்ல! தேவனோடு தனிப்பட்ட விதத்தில் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்தியவன் ஆவிக்குரிய மரணத்தைக் காண்பதில்லை! தேவனோடு சஞ்சரிப்பவன் சரீரப்பிரகாரமாக மரித்தாலும்கூட மறுமையில் தேவனோடு சதாகாலமும் ஜீவிப்பான். இரண்டாம் மரணம் அவனை அணுகாது; எனவே இயேசுகிறிஸ்துவோடு தனிப்பட்டவிதத்தில் ஒரு உறவை ஏற்படுத்தி இயேசுகிறிஸ்துவை நமது நம்பிக்கையாகக் கொண்டிருக்கும் நாம் மரணத்தைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை! மரணம் நமக்கு முடிவல்ல; அது ஆரம்பமே! பரலோக சந் தோஷத்தின் ஒரு பகுதியை தேவனோடு உறவை ஏற்படுத்திய பின்பு ருசித்த ஏனோக்கு பரலோக சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க எடுத்துக்கொள்ளப்பட்டான்.

ஏனோக்கைக் குறித்து கலாநிதி சாம் கமலேசன் ஒருமுறை பேசுகையில் பின்வரும் சம்பவத்தைக் கூறினார்.”ஏனோக்கு என்று ஒருவன் இருந்தானாம், அவன் தன்னுடைய வாழ்க்கையிலே தினந்தோறும் இயேசுவோடு நெருங்கி நடந்தானாம் என்று ஒரு ஓய்வு நாள் பள்ளிக்கூடத்திலே சிறு பிள்ளைகளுக்கு ஏனோக்கின் கதையைச் சொல்லிக் கொடுத்தாராம் ஆசிரியர். போதகர் அங்கு வரவே பிள்ளைகள் எவ்வளவு அறிந்துகொண்டார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காக “ஏனோக்கு யார்? அவருக்கு என்ன நடந்தது? என்று கேட்டாராம்”. அதற்கு ஒரு பிள்ளை சொல்லிற்றாம்: “ஏனோக்கு என்பவன் சாதாரணமாக நம்மைப் போல வாழ்ந்த ஒருவன். சாயங்காலம் வீட்டுக்கு வந்தவுடனே அவருடைய நண்பராகிய ஆண்டவர் வீட்டுக்கு வருவார். அவனை அழைத்து நீயும் நானும் உலாவப் போகலாம் வா என்று கூப்பிடுவாராம். தேவனோடே அவன் உலாவும்பொழுது தனது கஷ்டங்களையும், நஷ்டங்களையும், பாரங்களையும் தேவனோடு பகிர்ந்துகொள்ளுவான். ஆண்டவர் அவனுக்கு நன்மொழி கூற திரும்ப அவன் வீட்டுக்கு வரும்பொழுது உற்சாகத்தோடு மறுபடியும் வருவானாம். இப்படியே காலம் கழிந்தது.

ஏனோக்கு வயது முதிர்ந்தவனாகிவிட்டான். ஒரு நாள் பொறுப்பு அதிகமாயிருக்க ரொம்ப களைத்துப் போய் வீட்டுக்கு வந்தான். அன்றையதினம் ஆண்டவரோடு அவன் உலாவும்பொழுது நேரம் போவதைப்பற்றிய சிந்தனையே அவனுக்கு இல்லாமற் போய்விட்டது. வானத்திலே நட்சத்திரங்கள் உதிக்கத்தொடங்கி, தெருவிலே விளக்குகள் எல்லாம் பிரகாசிக்கத் தொடங்கின. ஆனால் பூங்கா நகரத்துக்கு வெளியே இருந்தபடியினால் பூங்காவினூடாக நடந்துகொண்டிருந்த ஆண்டவரும், ஏனோக்கும் நேரம் போவதை நினைக்காமலே ஆழ்ந்த சிந்தனையிலே ஒருவரோடு ஒருவர் பேசி நடந்து கொண்டிருந்தார்கள். இப்படி நேரம் கழிந்தபின் ஐயா ரொம்ப தூரம் வந்துவிட்டேன், வீடு திரும்ப வேண்டும், நேரமாயிற்று என்று கூறினான். ஆண்டவர் அவனைப் பார்த்து இனி உன் வீட்டுக்குப் போவது என்றால் தூரம். எனது இல்லம் அருகி லிருக்கிறது. ஏன் திரும்ப நீ உன் வீட்டுக்கு நடக்க வேண்டும்? என்னோடே கூடவா, என் வீட்டில் நீ இருக்கலாம் என்று அழைத்துச்சென்றார். ஆண்டவரின் இல்லத்துக்குள் போன ஏனோக்கு திரும்ப அதைவிட்டு வெளியே வர மனதில்லாமல் அங்கேயே தங்கிவிட்டானாம். இது தான் கதை என்று அந்த பிள்ளை சொன்னது.”

இயேசு மரணத்தை வென்றவர்! அவர் “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்” என்றார் (யோவான் 11:25). எனவே நாம் மரணத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்குவோம்.

அது மட்டுமல்ல, ஏனோக்கு எடுத்துக்கொள்ளப் பட்டதுபோல இயேசு ஒருநாள் தமது சபைக்காக வருகையில் நாமும் எடுத்துக்கொள்ளப்படுவோம். “கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத் திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1 தெச.4:16,17). ஆம், இயேசு திரும்ப வருகையில் இயேசுவை ஏற்றுக்கொண்ட பின் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். அவர்களுக்குப் புதிய சரீரம் கொடுக்கப்படும்.

இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு உயிரோடு இருக்கும் விசுவாசிகள் நொடிப்பொழுதில் மறுரூபமாகி உயர வானத்தில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். அவர்களுக்கும் புதிய சரீரம் கொடுக்கப்படும் (1 கொரி.15:42-54). அப்பொழுது நாம் சதா காலத்துக்கும் அவரோடு ஜீவிப்போம். “அவர் நம் கண்ணீர் யாவையும் துடைப்பார். இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை… வருத்தமுமில்லை” (வெளி.21:4). நாம் பாவமற்றிருப்போம். மற்ற சில மதங்கள் நம்புவதுபோல உப்பு, கடலில் கரைவது போல ஆத்துமா பரமாத்துமாவோடு ஒன்றாகி விடுவதில்லை. மாறாக, தேவனை ஆராதிக்கும் தனிப்பட்ட ஆள்த்தன்மை உள்ளவர்களாய் இருப்போம். ஒருவரை ஒருவர் இனங்காணக்கூடியதாயும் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை முகமுகமாய் தரிசித்து சந்தோஷத்தினால் நிறைந்திருப்போம். இது எவ்வளவு மகத்துவமான பாக்கியம்!

எனவே ஏனோக்கை அழைத்துக்கொண்ட தேவன் நம்மையும் அழைக்க எந்த நேரத்திலும் வரலாம் என்று ஆவலோடு எதிர்பார்த்திருப்போமா?

உங்களுக்குத் தெரியுமா?

நாம் தேவனுடைய அநாதித் திட்டத்தின் பங்குதாரர்கள்! இந்த அறிவை நாம் பரிசுத்த ஆவியானவருடைய ஆளுகைக்குள் வரும்வரை அறிந்திட முடியாது.