• சகோதரி சாந்தி பொன்னு •
(ஜூலை – ஆகஸ்டு 2024)

சகோதரி சாந்தி பொன்னு

அநேக வருடங்களுக்கு முன்னர் ஒரு புதிய வீடு குடிபுகுதலுக்கான வைபவத்திற்கு வந்திருந்த ஒரு ஊழியர் கூறிய மிகவும் பெறுமதிவாய்ந்த வார்த்தைகள் இன்றும் நினைவில் இருக்கிறது. அவர் சொன்னது இதுதான்: “வீடு என்பது வெறும் கல்லினாலும் மண்ணினாலும் சிமிண்டினாலும் கட்டப்பட்ட ஒரு கட்டடம். ஆனால், அதனுள் உயிரோட்டமுள்ள மக்கள் வாழும்போது, அந்தக் கட்ட டம் உயிரூட்டம் பெற்றுக்கொள்கிறது; இதனால் இப்போ அது வெறும் வீடு அல்ல; இப்போது அது “இல்லம்” என்று அழைக்கப்படுகிறது” என்றார்.

ஒரு சாதாரண கட்டடமான வீடு, ஒரு இல்ல மாக வெளிச்சம் கொடுப்பதற்கு அங்கே வாழுகின்ற குடும்பம் காரணமாகுமானால், “குடும்பம்” என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது! அதே சமயம், வீடு சிறிதோ பெரிதோ பெரிய மாளிகையோ எதுவானாலும், அந்தக் கட்டடத்தின் அஸ்திபாரம் மிகமிக முக்கியம்; அப்படியானால், அந்தக் கட்டடத்தை இல்லமாக மாற்றிப்போடுகின்ற குடும்பம் என்ற கட்டமைப்பு உறுதியாய் கெம்பீரமாய் நிமிர்ந்து நிற்க அதன் அஸ்திபாரம் மிகமிக முக்கியம் அல்லவா!

இதனை இன்றைய சந்ததியினர் எவ்வளவுக்கு உணருகிறார்கள் என்பது கேள்வியே(?). உறுதியற்ற அஸ்திபாரங்கள் ஆடிப்போய் கட்டடங்கள் இடிந்து விழுந்த செய்திகள் அநேகம் கேள்விப்படுகிறோம். அதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமாக போடப்பட்ட பெலவீனமான அஸ்திபாரமே முதற்காரணமாயிருக்கும். இப்படியிருக்க, இன்று குடும்பங்கள் இடிந்துவிழுவது சர்வசாதாரணமாகிவிட்டது. அப்படியானால் குடும்ப அஸ்திபாரம் பெலவீனமானதா? அஸ்திபாரத்தின் உறுதி ஏன் உருக்குலைந்துபோகிறது?

நோவாவின் குடும்ப அஸ்திபாரம்

“விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்துத் தேவஎச்சரிப்புப் பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்” (எபி.11:7).

மாம்சமான யாவரின் முடிவும் வந்தது, நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன். நீ உனக்கு ஒரு பேழையை உண்டு பண்ணு என்று சொன்ன கர்த்தர், “தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நோவா செய்து முடித்ததும்” “நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்” (ஆதி.6ஆம் 7ஆம் அதிகாரங்கள்) என்று சொன்னபோது, நோவா அந்த வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார். மழை என்றால் என்ன, வெள்ளம் என்றால் எப்படியிருக்கும் என்று எதுவும் தெரியாதிருந்தபோதும், 120 ஆண்டுகளாக சுற்றத்தார் யாவரினதும் கேலிக்கும் பரிகாசத்திற்கும் ஆளாயிருந்தபோதும், தனித்தவனாக, கர்த்தர் சொன்னபடி கீழ்ப்படிந்து பேழையைச் செய்து, கர்த்தர் சொன்னபடியே அந்த அழிவிலே தன் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொண்டார் நோவா என்பது சாதாரண விஷயம் அல்ல.

அடுத்ததாக, அவரது மனைவி, மூன்று மகன்கள், அவர்களுடைய மனைவிகள் என்று குடும்பமாக எட்டுப்பேரும் நோவா சொன்னபடியே பேழைக்குள் ஏறி அமர்ந்திருந்து, திரும்பவும் பூமியில் கால் வைக்கும் வரைக்கும் நோவாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள் என்றால், அந்தக் குடும்பத்தின் அஸ்திபாரத்தை நோவா எவ்வளவு உறுதியாகப் போட்டிருப்பார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்த அஸ்திபாரத்தின் இரகசியம்தான் என்ன? “நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்தான்” (ஆதி.6:9).

இதைத்தான் இயேசுவும் கூறினார்: “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது” (மத்.7:24,25) என்றார். அப்படியானால் இன்றைய குடும்பங்களின் அஸ்திபாரம் ஆட்டம் காண்பது என்ன? அவற்றின் அஸ்திபாரம் எதன்மேல் போடப்பட்டிருக்கிறது?

தற்கால அஸ்திபாரம்

ஆலயமணி ஒலி நம் எல்லோருக்குள்ளும் ஒருவித உணர்வைக் கொடுப்பதை மறுக்க முடியாது. ஆனால் அந்த ஒலியிலும் வித்தியாசங்கள் உண்டு. ஆலய ஆராதனை ஆரம்பத்திற்கு ஒருவிதம், சபையில் ஒருவர் மரித்தால் அதை அறிவிக்கும் மணி ஓசை இன்னொரு விதம். ஆனால், ஒரு திருமண வைபவ ஆரம்பத்தில் மணமகன் பின்னர் மணமகள் ஆலயத்துள் நுழையும்போது அந்த மணி தொடர்ந்து அடித்து எழுப்புகின்ற ஓசை அவர்களுடைய வருகையைக் கூறுகின்ற விதமே தனிதான். பூக்களால் ஆலயம் அலங்கரிக்கப்பட்டிருக்க, அழைப்புப் பெற்றவர்கள் புன்னகை பூத்தவர்களாக அலங்காரமாகக் கூடியிருக்க, ஒரு விசேஷ ஆராதனை ஆலயத்தில் ஏறெடுக்கப்பட்டு, தேவனுடைய சந்நிதானத்தில் தேவன் சாட்சியாக உடன்படிக்கை செய்து, அதற்கான அடையாளங்கள் பரிமாறப்பட்ட பிற்பாடு, “இதினிமித்தம் இவனும் இவளும் இன்று கணவன் மனைவி ஆனார்கள் என்று அறிவிக்கிறேன். தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன்” என்று மணமக்களின் கரங்களை ஒன்றுசேர்த்து உயர்த்தி போதகர் பலத்த சத்தத்துடன் அறிவித்தல் கொடுக்கின்ற அந்தக் கணம், மணமக்கள் வாழ்வில் மிக மிக முக்கிய கணமாகும். இந்தப் பிரகடனம் மணமக்களுக்கு மாத்திரமல்ல, வந்திருக்கும் மக்களுக்கும் ஒரு எச்சரிப்புக் கொடுக்கிறது என்பதை அந்த நேரத்திலே யார்தான் உணருகிறார்கள்?

இந்த வைபவம் வெறும் ஒரு நாள் நிகழ்வு மாத்திரமே. ஆனால் இது ஒரு நீண்டகால சம்மந்தத்தின் ஆரம்பம் என்பது மிகமுக்கியம். இந்த சம்மந்தம் அந்த ஒருநாள் ஆரவார கொண்டாட்டத்துடன் முடிவடைவதில்லை. உடன்படிக்கையில் உறுதிப்படுத்தப்படுகின்ற உறவு, அங்கேதான் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டு வாழ ஆரம்பிக்கிறது. ஆனால், அந்த ஒருநாளுக்கும் அதன் ஆயத்தங்களுக்கும் கொடுக்கின்ற முக்கியத்து வத்தை, தாங்கள் வாழப்போகின்ற மரணம் பிரிக்கும் வரையான நீண்ட வாழ்வுக்கான ஆயத்தத்துக்கும், தமக்கு முன்னே கர்த்தர் வைத்திருக்கும் பொறுப்புக்கும் கொடுக்கிற மணமக்கள் எத்தனை பேர்?

திருமணத்தன்று மணமகள் கையிலிருக்கும் பூங்கொத்து, வாடாதபடி Fibreஇல் Embose பண்ணி Frame பண்ணிக்கொடுக்கின்ற ஒரு கடையிலே Frame பண்ணி தொங்கவிடப்பட்ட அநேக பூங்கொத்துக்களின் படங்களைப் பார்த்தேன். “ஏன் ஐயா, இந்தத் தம்பதிகள் இன்னமும் இதைப் பெற்றுக்கொள்ள வரவில்லை?” என்று கேட்டதற்கு அவர் தந்த பதில் இதுதான்: அந்தக் கொடுமையை என்னென்று சொல்ல. Fibreஇல் Embose பண்ணுகின்ற இந்தப் படிமுறைக்கு குறைந்தபட்சம் ஆறுமாதங்கள் தேவை. அத்துடன் இதன் செலவும் மிகவும் அதிகம். ஆகையால் முன்னர் எல்லாம் ஒரு சிறுதொகை முன்பணத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டு வேலையை ஆரம்பிப்பேன். அவர்களும் 6 அல்லது 7 மாதங்கள் கழித்து மீதியைச் செலுத்திவிட்டு படத்தை எடுத்துச்செல்வர். இப்போ மாறிவிட்டது. ஆரவாரமாகக் கொண்டுவந்து தருகிறவர்கள், நாம் ஆயத்தம் செய்தபின் ஒரு வருடமாகியும் எடுத்துப்போக வருவதில்லை. ஆகையால் நான் இப்போதெல்லாம் முன் பணம் அல்ல, முழுப் பணத்தையும் செலுத்தச் சொல்லுவேன். அப்படியிருந்தும் இதோ இத்தனை பூங்கொத்துகளும் இனி இங்கேதான் தொங்கும்” என்றார். ஏன் அப்படி என்று கேட்டதற்கு: “இப்போதெல்லாம் 6 மாதங்கள் என்ன 3 மாதங்களுக்குள்ளேயே விவாகரத்து நடந்துவிடுகிறது. பின்னர் இதை எடுக்க யார் வருவார்” என்று பெருமூச்சு விட்டார் அவர்.

விவாக சம்மந்தமும் குடும்ப உறவும்

பிரியமானவர்களே, விவாக சம்மந்தம் என்பது மனிதன் தனக்குத்தானே, தனக்கு வேண்டும் என்று ஏற்படுத்திய உறவு அல்ல. அது படைப்பிலேயே தேவனால் மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்டது. அதாவது, இந்த சம்மந்தத்தின் அஸ்திபாரத்தில் உருவாகும் “குடும்பம்” என்ற அற்புதமான கட்டமைப்பு தேவனுடைய அநாதி திட்டமாகும். சிருஷ்டிக்கப்பட்ட பிற சிருஷ்டிகளுக்கோ, மண்ணிலிருந்து படைக்கப்பட்ட மிருகஜீவன்களுக்கோ இப்படியொரு காரியத்தை தேவன் செய்யவில்லை. ஆனால், தமது படைப்பின் முடிவாக, ஒரு கிரீடமாக, தமது சாயலில் தமக்கென்று படைத்த மனித படைப்பில், ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பரிசுத்த இணைப்பை ஆணிலிருந்து பெண்ணை உருவாக்கியதன் நிமித்தம் ஏற்படுத்தி, தமது படைப்பை தேவன் பூர்த்தி செய்தார் என்றால், இந்த உறவின் மேன்மையை நாம் உதாசீனம் செய்யலாமா?

ஆதாமின் துணையை ஆதாமின் விலா எலும்பிலிருந்தே உருவாக்கி, இவள் உனக்குள் இருந்துதான் வந்தாள் என்று சொல்லாமல் சொல்லி, அவளை தேவன்தாமே அழைத்து வந்து, ஆதாமிடம் கொடுத்தார் என்று பார்க்கிறோம். ஆதாமும் அவள் தன்னிலிருந்து எடுக்கப்பட்டதனால் அவள் மனுஷி என்று ஏற்றுக்கொண்டான். இதுதான் படைப்பின் நிறைவுக்கு நிறைவாக அமைந்த சம்பவம். அவர்கள் இப்போது தேவ சாட்சியாக, புருஷனும் மனைவியுமானார்கள்.

யூத கலாச்சாரத்திலே விவாகப் பிணைப்பு மூன்று படிமுறைகளில் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. முதலாவது, பார்த்து முடிவு செய்வது, இரண்டாவது, முடிவுசெய்ததை நிச்சயம் செய்வது. இது எங்கள் பதிவுத்திருமணம் போன்றது. அதாவது அவர்கள் இனி சட்டரீதியாக கணவன் மனைவிதான், ஆனால், ஒன்றாக வாழமுடியாது. மூன்றாவது, மிகவும் கோலாகலாமாக சகல உறவினரையும் அழைத்து, மணமகன் மணமகள் சேர்ந்து வாழுவதற்காக அவர்களை ஆசிகூறி அனுப்புவர்.

ஆக, விவாக வைபவம் என்பது, முன்னர் நியமிக்கப்பட்டு, பின்னர் வாழவேண்டிய வாழ்வை, கணவன்-மனைவி என்று பகிரங்க அறிவித்தலுடன், தேவனுடையதும் சுற்றத்தார் உற்றத்தார் அனைவரினதும் ஆசீர்வாதத்துடன் இணைகின்ற, தேவசந்நிதானத்தில் உடன்படிக்கையில் உறுதிப்படுகின்ற உறவின் ஆரம்ப நிகழ்வேயாகும். இது வெறும் சட்டரீதியானது மாத்திரமல்ல, இது தேவனுடைய ஒழுங்கு ரீதியானது! மற்றும், இனி வாழப் போகின்ற புதிய வாழ்வுக்குப் போடுகின்ற அஸ்திபாரத்தின் முதற்கல்லும் இதுதான்! ஆக, இந்த விவாக வைபவத்தின் ஆயத்தங்களுக்கும், வைபவத்திற்கும் கொடுக்கின்ற முக்கியத்துவத்தில் எவ்வளவை, மணமக்கள், தாங்கள் வாழப்போகின்ற வாழ்வுக்கான ஆயத்தத்துக்குக் கொடுக்கிறார்கள்? அந்தப் பொறுப்புடனா இந்த வைபவத்தை நாம் செயற்படுத்துகிறோம் என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.

அஸ்திபாரமாகும் கிறிஸ்தவ விவாக சம்மந்தம்

இன்னுமொரு விஷயத்தையும் சிந்திக்க உங்களை அழைக்கிறேன். ஒரு கிறிஸ்தவ விவாக வைபவத்திலே கொடுக்கப்பட்ட அருளுரையில் இவ்விதமாகக் கூறப்பட்டது: “ஆலயங்களிலே நடைபெறுகின்ற சகல கிறிஸ்தவ விவாகங்களும் பரிசுத்த விவாகம் அல்ல. இரட்சிப்புப்பெற்ற ஒரு மணமகனும் இரட்சிப்புப்பெற்ற ஒரு மணமகளும் தேவ சந்நிதானத்தில், தேவன் சாட்சியாக, நடத்தும் போதகர் சாட்சியாக, வந்திருக்கும் உற்றார் உறவினர் சாட்சியாக திருமண உடன்படிக்கையில் இணைவார்களானால் அதுவே கிறிஸ்துவுக்கு ஏற்ற விவாக சம்மந்தம்; அதுவே பரிசுத்த விவாகம்.” இது சிந்திக்கவேண்டிய விஷயமாகும். ஆம், தேவ பிள்ளைகளே, கிறிஸ்தவ விவாகம் அதாவது கிறிஸ்துவுக்குள்ளான விவாகம் அது வெறும் விவாகம் அல்ல, அது பரிசுத்த விவாகம்! அதுவே குடும்பத்தின் அஸ்திபாரம்; விவாக சம்மந்தத்தைப் பரிசுத்தமாய் ஏற்படுத்திய தேவனுக்கு மகிமை சேர்ப்பதுவும் இதுதான்.

இன்னுமொரு காரியத்தையும் நாம் சிந்திக்க வேண்டும். உலகில் தேவன் ஏற்படுத்தி வைத்தி ருக்கிற உறவுகளானாலும் சரி, இயற்கையின் தோற்றமானாலும் சரி, நடைபெறுகின்ற நிகழ்வுகளானாலும் சரி, எல்லாவற்றிலும் தேவன் தம்மை மனுக்குலத்துக்கு வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். உதாரணத்துக்கு, தகப்பன் உறவு தேவனுடைய தகப்பன் அன்பை உணர்த்துகிறது. தென்றல் காற்றும், நீரும் வெளிச்சமும் அவருடைய கருணையின் வடிவாய் தோற்றமளிக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் உலகில் நிறைவேற்றப்படுகின்ற தேவ பிள்ளைகளின் விவாக சம்மந்தமும் முக்கிய நிகழ்வு ஒன்றை நமக்கு உணர்த்துகிறது என்பதை நம்மில் யார் உணருகிறோம்? “ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது. அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன்” (வெளி.19:7) என்று வாசிக்கிறோம். இறுதியிலே நடக்கவிருக்கிற ஆட்டுக்குட்டியானவருக்கும் அவருடைய இரத்தத்தால் மீட்கப்பட்ட அவருடைய சபைக்கும் நடக்க விருக்கிற கலியாணவிருந்தை நாம் மறக்கக் கூடாது. இந்த உலகில் தேவபிள்ளைகள் இணைகின்ற ஒவ்வொரு விவாக வைபவமும், விவாக உறவும், நடக்கவிருக்கும் கலியாண விருந்தை உலகுக்குப் பறைசாற்றும் சாட்சியாக அமைய வேண்டியது அவசியம் அல்லவா!

இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொண்டுள்ள தேவபிள்ளைகள் இந்த விவாக உறவின் அஸ்திபாரத்தைக் குறித்துப் பொறுப்பற்று இருப்பது தகுமா?

குடும்ப உறவின் ஒழுக்கவிதிகள்

மேலும், ஆதாம் ஏவாளை இணைத்த தேவன் குடும்ப வாழ்வின் அஸ்திபாரத்தைத் தமது ஒழுங்குவிதியினால் நிறைவாக்குகிறார். “இதினிமித்தம்” என்றால் “எதினிமித்தம்?” பெண் என்பவள் ஆணின் எலும்பின் எலும்பும், மாம்சத்தின் மாம்சமுமாய் எடுக்கப்பட்டதினிமித்தம்… “புருஷன் தன் தகப்பனையும் தாயையும்விட்டு (அதற்காக பெற்றோரை உதறித்தள்ளுவது அல்ல, பொறுப்பு பொறுப்புத்தான்; ஆனால், இனி இவர்கள் ஒரு தனி அலகு என்பதை மறக்கக்கூடாது), தன் மனைவியோடே இசைந்திருப்பான் (ஒன்றிணைந்து, விட்டுக்கொடுத்து, ஒருவர் குறைவை மற்றவர் நிவர்த்தியாக்கி…), அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள் (உடல் ரீதியாக மாத்திரமல்ல, ஆத்மரீதி யாகவும் ஒருவருக்கொருவர் ஒளிவுமறைவின்றி வாழும் வாழ்வு).

வீதிச் சட்டங்கள் எதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. தவறாக வாகனத்தை ஓட்டும் ஓட்டுனர்களைக் கைதுசெய்வதற்கா? இல்லை. அவர்கள் ஒழுங்காக வாகனத்தை ஓட்டவேண்டும், விபத்துக்கள் தவிர்க்கப்படவேண்டும் என்பதற்காகவேதான். நாட்டில் சட்டதிட்டங்களை எதற்காக வரைந்திருக்கிறார்கள்? குற்றம் செய்கிறவனைத் தண்டிப்பதற்காகவா? இல்லை. யாவும் ஒழுங்காக நேர்த்தியாக நடக்கவேண்டும் என்பதற்காகவே தான். இப்படியிருக்க, ஒரு குடும்ப உறவின் அஸ்திபாரம் ஆட்டம்காணாமல், உறுதியாய் கட்டியெழுப்பப்படவேண்டுமானால் அதற்கு ஒரு ஒழுங்கு விதி மிகமிக அவசியமல்லவா! அதற்காக தேவனாகிய கர்த்தர் மூன்று ஒழுங்குவிதிகளைக் கொடுத்திருக்கிறார். அநேகமான திருமண வைபவங்களில் அன்பைப்பற்றி பேசுகிறவர்கள், மேற் கண்ட இந்த முக்கியமான விஷயமான இந்த மூன்று ஒழுங்குவிதிகளைக் குறித்து அறிவுரை கொடுப்பது மிகவும் அரிதாகிவிட்டது.

இப்படியிருக்க இன்று அஸ்திபாரம் ஆட்டம் காண்பது ஏன்?

இப்படியாக, பரிசுத்தமாக, சாட்சியாக, மகிழ்ச்சியின் உச்சமாக வாழவேண்டிய விவாக சம்மந்தம் இன்று சீரழிந்துபோகிறதே, இதற்கு என்ன காரணம்? ஒன்று, குடும்பம் என்ற கட்டமைப்பை அமைத்த தேவனை இவர்கள் அவமதிக்கிறார்கள்; அடுத்தது, தேவன் நியமித்த ஒழுங்குவிதிகளை இவர்கள் மீறுகிறார்கள்; இதுதானே ஏதேனிலே நடந்தது. அடுத்தது, மூன்றாவது சத்தத்துக்கு எப்போது ஏவாள் செவி கொடுத்தாளோ, அப்போதே அஸ்திபாரம் சரிய ஆரம்பித்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால் அடுத்த சந்ததிக்கு இவர்கள் தீமையான சாட்சியைக் கொடுத்துவிட்டார்கள். இது அன்று நடந்தது.

இன்று இன்னுமொரு முக்கிய விஷயத்தையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். இன்றைய பெற்றோர் தங்கள் பொறுப்புகளைப் பிள்ளைகளிடம் தங்கள் அறிவுக்குத் தெரியாமலேயே கையளித்துவிட்டார்களா என்பது பெரியதொரு கேள்வி? பெரியோர் பேசி ஒழுங்குசெய்து, ஒருவரையொருவர் திருமணத்தன்றே பார்த்துக்கொண்ட எத்தனை தம்பதிகள் நீண்டகாலம் ஒருமித்து வாழ்ந்து மரித்திருக்கிறார்கள். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. பிள்ளைகளே தங்கள் தெரிவுகளை தங்கள் அறிவுக்கும் விருப்பத்துக்கும் ஏற்றபடி செய்து, அதனை ஏற்றுக்கொள்ளும் நவீன பெற்றோரின் சம்மதத்துடன், விவாக வைபவ ஒழுங்குகளையும் அவர்களே செய்கிறார்கள். அது மாத்திரமல்லாமல், விவாகத்துக்கு முன்னான போட்டோ எடுப்பது போன்ற பல விஷயங்களும் இன்று மலிந்துவிட்டது. இப்படியெல்லாம் செய்யாவிட்டால் மரியாதை இல்லை என்ற நிலை உருவாகி, இதற்காகவே பணத்தை விரயமாக்கி, கடன் வாங்கி, இப்படியாக பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த விஷயத்தில் சிலர் மணம் முடிக்காமலே ஒன்றாக வாழுகின்ற அலங்கோலத்துக்கு ஆளாகிவிட்டிருக்கின்றனர் என்பதை மறுக்கமுடியாது. அதுமாத்திரமல்லாமல், இன்று திருமணமே வேண்டாம் என்று பல இளவயதினர் தனித்து வாழ முடிவெடுத்திருப்பதையும் நாம் அறிகிறோம்.

இப்படியாகத் தடுமாறுகின்ற இளவயதினர், நிலைகுலைந்துபோன விவாக உறவுகளைப் பார்த்து விவாக உறவைக் குறித்து தவறாகப் புரிந்துகொள்வதையோ, தவறான வாழ்வை வாழுவதைத் தெரிந்தெடுப்பதையோ விடுத்து, நற்சாட்சிகளாக வாழுகின்ற பல தம்பதியினரை தங்களுக்கு மாதிரிகளாக ஏன் கொள்ளக்கூடாது? இன்றைய கலாச்சாரம், வாழ்வுமுறை, சுற்றி நிற்கும் பலவித தூண்டுகோல்கள் எல்லாம் இன்று விவாக சம்மந்தத்தை பெறுமதியற்ற ஒன்றாக மாற்றிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அல்லது ஏதோ கலியாணம் ஒன்று செய்யவேண்டும் என்றோ அல்லது தங்கள் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டோ இதற்கு உடன்படுகிறவர்களாகவும் இன்று பலர் இருக்கிறார்கள். இதுவும் குடும்ப உறவு கொச்சைப்பட்டுப் போக ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது.

ஆனால் இன்று, கல்வாரியில் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் சகலத்தையும் மாற்றிவிட்ட பின்னரும், ஏவாளின் பாவத்தை நாம் சாக்காகச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. தேவனுடைய வார்த்தையை எவனொருவன் மீறுகிறானோ அவன் அதன் விளைவை அனுபவிக்கத்தான் வேண்டும். கர்த்தரின் வார்த்தை ஒருபோதும் மாறாதல்லவா!

சிந்திப்போம்

அழகாக பரிசுத்தமாக தேவனாகிய கர்த்தரால் கட்டமைக்கப்பட்ட குடும்ப உறவுகள் இன்று ஆட்டம்கண்டு பிரிவில் முடிவுறுவது மிகவும் துக்கத்துக்குரிய விஷயமாகும். குடும்ப உறவு என்பது தேவன் வகுத்த அஸ்திபாரத்தில், தேவன்- கணவன்-மனைவி என்று ஒரு முக்கோணமாக அமைந்திருக்கிறது. இந்த முக்கோணப் பிணைப்பைக் கிழித்துப்போட நாம் முதலில் இடமளிக்கக்கூடாது. நோவாவிடம் இருந்த பொறுப்புணர்வு இன்றைய குடும்ப உறவில் மறைந்துவருவதை ஜாக்கிரதையுடன் சிந்திப்போம். இது தேவனையே அவமதிப்பது போலாகாதா? என்றாலும், கர்த்தருக்குள் உறுதியாக ஸ்திரமாக சரி பிழைகள் பிரச்சனைகள் – இவை இயல்பானவை என்பதை உணர்ந்து – அவற்றின் மத்தியிலும் மனரம்மியத்துடன் தங்கள் விவாக சம்மந்தத்தின் அஸ்திபாரம் தளர்ந்துவிடாமல், கர்த்தருக்குள் சிறப்பாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

திருமணம் அல்லது விவாக சம்மந்தம் என்பது தேவனால் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட பெரியதொரு அருட்கொடை மாத்திரமல்ல, அந்த உறவிலே தேவன் நமக்கு தமது பிரசன்னத்தை வைத்திருக்கிறார், அவரும் நம்மில் மகிமைப்படுகிறார்.

அருமையானவர்களே, இந்தப் பரிசுத்த விவாகத்தின் அஸ்திபாரம் ஆட்டம் காணாதபடிக்கு ஜாக்கிரதையாயிருங்கள்.