சத்திய வசனம் பங்காளர் மடல்

(செப்டம்பர் – அக்டோபர் 2024)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

அதிசீக்கிரமாய் வரப்போகும் அன்பின் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்விதழ் வாயிலாக தங்களைச் சந்திக்க தேவன் கிருபை செய்தபடியால் அதிக மகிழ்ச்சியடைகிறோம். ஒருபுறத்தில் தேசங்களுக்குள் நீடித்துக்கொண்டே இருக்கும் யுத்தங்களின் செய்திகளை நாம் கேள்விப்படுகிறோம். மற்றொரு புறம் நமது தேசத்தில் அன்றாடம் ஜனங்களுக்கு விரோதமாய் ஜனங்கள் எழும்பி கலகமுண்டாக்கும் சூழ்நிலை உருவாக்கப்படுவதை நாம் கண் கூடாக பார்த்து வருகிறோம். இவைகளெல்லாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையின் அடையாளமாய் காணப்படுகிறது. எனவே நாம் விழித்திருந்து ஜெபிப்பதோடு நமது தேசத்திற்காகவும், உலக நாடுகளின் சமாதானத்திற்காகவும் திறப்பில் நிற்க கடமைப்பட்டிருக்கிறோம்.

சத்தியவசன ஊழியங்களின் வாயிலாக தாங்கள் அடைந்த நன்மைகளை எங்களுக்குத் தெரிவித்துவரும் பங்காளர்களுக்கும் நேயர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம். கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளையெல்லாம் உங்கள் கண்கள் அல்லவோ கண்டது (உபா.11:7). சத்தியவசனம் வெளியீடுகள் மற்ற அனைத்து ஊழியங்களின் மூலமாக தேவன் செய்துவரும் மகத்தான கிரியைகளுக்காக ஆண்டவரை ஸ்தோத்திரிக்கிறோம். உங்கள் ஜெபக்குறிப்புகளையும், மன பாரங்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுக்காக பாரத்துடன் ஜெபிப்போம்.

இவ்விதழில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் வெளிப்படுத்தின விசேஷத்தில் எபேசு சபையைக் குறித்து அளித்த வேதபாடமும், சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் எபெத்மெலேக் என்ற தலைப்பில் எபெத்மெலேக்கின் சிறந்த குணாதிசயங்களைக் குறித்து அளித்தச் செய்தியும், வெளிச்சமாயிரு! வெளிச்சத்தின் பிள்ளையாயிரு! என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ள சிறப்புச்செய்தியும் இடம்பெற்றுள்ளது. மேலும் இயேசுவின் அன்பு நம்முடைய பாவங்களை மூடினதுபோல நாமும் மற்றவர்களுடைய குறைகளை, பாவங்களை மூடவேண்டும் என்பதை விளக்கி அன்பு திரளான பாவங்களை மூடும் என்ற தலைப்பில் சகோ.பிரேம் குமார் அவர்கள் எழுதிய கட்டுரையும், வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் என்ற தலைப்பில் Dr.எம்.எஸ்.வசந்தகுமார் அவர்கள் எழுதிய கட்டுரையும், உன்னிடத்தில் ஒரு குறை உண்டு என்ற தலைப்பில் சகோ.பிரகாஷ் ஏசுவடியான் அவர்கள் எழுதிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதிய காலங்களைப் பற்றிய சத்தியம் என்ற தொடர் வேதபாடமானது இவ்விதழோடு முற்றுப்பெறுகிறது.

கே.ப.ஆபிரகாம்

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன் என்றெழுது (வெளி.2:7).