• Bro.ஆ.பிரேம்குமார் •
(செப்டம்பர் – அக்டோபர் 2024)

Bro.ஆ.பிரேம்குமார்
நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத் தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்ச ரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான் (ஆதி.9:20,21).
இன்று அநேக கிறிஸ்தவர்கள் மத்தியில் மது வகைகளை அருந்துவது சரியா? தவறா? என்பதைப் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. சிலர் மதுவகைகள் பாவகாரியங்கள் என்றும் மற்றும் சிலர் மது குடிப்பது பிழை அல்ல, வெறிக்கொள்ளும் அளவிற்கு குடிப்பதுதான் பிழை என்றும் எண்ணுகின்றனர். என்னைப் பொறுத்த வரையில் அது குடிப்பவனது மனோ பாவத்தையும் அவன் வாழும் சூழ்நிலையையும் பொறுத்தது என்பேன்.
மேற்கத்திய நாடுகளில் மது ஒரு குளிர்பானத்தைப்போல உபயோகிக்கப்படுகிறது. இதனை நமது கலாச்சாரத்திற்கும் புகுத்த முற்படுவது தவறாகும். அது ஒரு வீண் செலவு என்பதுடன் குடும்பத்தில் பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். அளவு மீறும்போது அது நம் உடல்நிலையையும் மன நிலையையும் பாதிக்கின்றது. நமது உடலுக்கு தீங்கானதைச் செய்வது தேவனுக்கு உகந்த காரியம் அல்ல. நமது உடல் நமக்குக் கொடுக்கப்பட்டப் போதும் அது தேவனுக்கு சொந்தமானதொன்றாகும். அதனை அழிப்போமாகில் தேவனுக்கு கணக்குக் கொடுக்கவேண்டியிருக்கும். சிலர் அளவோடு குடிப்பதில் தவறில்லை என வாதாடுகின்றனர். அளவு என்று எதனைக் குறிப்பிடுவது. சிலருக்கு சிறிதளவு குடித்தவுடன் வெறித்துவிடும் மற்றும் சிலருக்கு வெறிப்பதற்கு மிக அதிகமாகக் குடிக்கவேண்டும். எனவே, அளவு என எதனை குறிப்பது? எல்லாவற்றிற்கும் மேலாக மற்றவர் இடறுவதற்கு ஏதுவானதொன்றாக இது காணப்படுகின்றது. எனவே தான், பவுல் “மாம்சம் புசிக்கிறதும் மதுபானம் பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும் (ரோமர் 14:21)” என கூறுகிறான்.
நோவா வெறிகொண்டதால் அவன் இலட்சணத்தையும் கனத்தையும் இழந்தவனாகக் காணப்பட்டான். லோத்தும் வெறிகொண்டிருந்ததால் அவன் குமாரத்திகள் அவனோடு உடல் உறவு கொண்டார்கள் (ஆதி.19:35). இது தேவ பார்வையில் அருவருப்பாயிருந்தது. இன்று வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க முடியாத கோழைகள் அதற்கு தப்பித்துக்கொள்ள சாராயத்தை நாடுகின்றனர். அவர்கள் தப்பிக்கொள்வதற்கு மாறாக இன்னும் அநேகப் பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். “சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களை சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டே இருக்கிறவர்களுக்கு ஐயோ” (ஏசா. 5:11). “ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்கு துக்கம்? யாருக்கு சண்டைகள்? யாருக்கு புலம்பல்? யாருக்கு காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங் கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித்தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந் தானே! மது பானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், …… உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்” (நீதி.23:29-33) என வாசிக்கின்றோம். மது உயிரைக்கூட குடிக்கும். அது நீ சிந்தித்து செயல்படுவதை தடுத்து உன்னை ஆட்கொண்டு விடும். எனவே தேவனுக்குரிய இடத்தை வேறு எதற்கும் கொடாதே.
நோவா நிர்வாணமாக இருந்தான். ஆனால் அதனை உணரவில்லை. லோத்தும் குடிவெறியினால் தன் சொந்த மகள்மார் அவனோடு விபசாரம் செய்ததை அறியவில்லை (ஆதி. 19:35,36). இது எவ்வளவு பயங்கரமானது. ஓசியா 7:9இல், “அந்நியர் அவனுடைய பலத்தை தின்கிறார்கள்; அவனோ அதனை அறியான்; நரைமயிரும் அவனில் தெளித்திருக்கிறது, அவனோ அதை அறியாதிருக்கிறான்” என தனக்கு வரும் அழிவை உணராதிருக்கிற எப்பிராயீமைப் பார்த்து தேவன் கூறுகிறார். அறியாமல் உணர்வில்லாமல் இருப்பது எவ்வளவு பயங்கரமானது. இன்று நீ உன் வாழ்க்கையை ஆராய்ந்து பார். நீ உணராமல் இருக்கும் சில பாவகாரியங்கள் உன்னை அழித்துக்கொண்டு போகிறது. இது சிறிய பாவம்தானே அது என்ன செய்யப் போகிறது என உணர்வற்றிராதே! அதன் விளைவு பயங்கரமாயிருக்கும்.
நோவா உணர்வற்றிருக்க திராட்சரசம் காரணமாயிருந்தது. இன்று நீ உணர்வற்றிருப்பதற்கு காரணம் என்ன? அதை அகற்று; உன் இருதயத்தைக் கடினப்படுத்தாதே!
தேவ ஊழியன் நோவா குடித்து வெறித்து நிர்வாணமாயிருந்தது நமக்கு அதிருப்தியையே ஏற்படுத்துகிறது. நமது உடலை வேறெந்த காரியமும், எந்த சூழ்நிலையும் கட்டுப்படுத்த இடங்கொடுக்கக்கூடாது. மாறாக, பவுல் கூறியதுபோல “துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறி கொள்ளாமல், ஆவியினால் நிறைந்து: சங்கீதங் களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப் பாட்டுகளினாலும், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லிக் கொண்டு உங்கள் இருதயத்தில் கர்த்தரைப்பாடிக் கீர்த்தனம்பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து..” (எபே.5:18-20) கீழ்ப்படிந்திருப்போமாக. மதுபானம் அல்ல, தேவ ஆவியே நம்மை ஆட்கொள்ள வேண்டும். அவர் உன்னை நிரப்பவேண்டுமானால் முதலில் நீ இயேசுவை ஏற்றுக்கொண்டவனாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அவர் உனக்குள் வருகிறார். பின்பு தேவ ஆவியானவர் உன்னை நிரப்பவேண்டுமென வாஞ்சித்து, அவர் உன்னை நிரப்புவார் என விசுவாசித்து உன் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் அவருக்கு ஒப்புக்கொடு. அப்பொழுது அவர் உன்னை நிரப்புவார். கேவலப்படுத்தும் மதுபானம் அல்ல; உன்னை சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் நிரப்பும் தேவ ஆவியானவரே உன்னை ஆட்கொள்ள வேண்டும். அதற்கு இடங்கொடுப்பாயா?
“அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியிலிருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான்” (ஆதி.9:22). நோவாவின் நிர்வாணத்தைக் கண்ட காம் அதனை மூடுவதற்கு பதிலாக தன் சகோதரருக்கு அறிவித்தான். “கண்டு” என்பது வெறுமனே பார்ப்பது அல்ல, அதற்கு மேலான ஒன்றைக் குறித்து நிற்கிறது. அவன் தன் தகப்பனின் நிர்வாணத்தை தற்செயலாகத்தான் கண்டான். ஆனால் அதனைக் குறித்து வேதனைப் படவில்லை. மூடுவதற்கும் எந்த பிரயாசமும் எடுக்கவில்லை.
வெறுமனே பார்ப்பதைவிட ஆழமான, சொல்லப்படாத ஒரு காரியம் இருந்திருக்கவேண்டும். அவன் கிரியை அவன் மனோ பாவத்தை வெளிப்படுத்துகிறது. அவன் மனதுக்குள்ளிருந்த தீய எண்ணம் அவன் செய்கையில் வெளிப்பட்டது. அவன் தன் தகப்பனை கனயீனப்படுத்தினான். தன் தகப்பனின் நிர்வாணத்தை உற்று நோக்கியவன் மனஸ்தாபப்படாதவனாய் போய் தன் சகோதரருக்கு அறிவித்தான். அவர்களோ ஒரு வஸ்திரத்தை எடுத்து நிர்வாணத்தைப் பாராதபடி பின்னால் திரும்பியவர்களாய் வந்து நோவாவின் நிர்வாணத்தை மூடினார்கள்.
காமின் மனதிலிருந்த அசுத்தம் அவன் கிரியையில் வெளிப்பட்டது. அவன் அந்த நிர்வாணத்தை உற்றுநோக்கி சந்தோஷப்பட்டு அவன் சகோதரருக்கு அறிவித்ததைப்போன்று தோன்றுகின்றது. அவன் சகோதரனின் மனோபாவம் காமினுடையதைப் போன்று இருக்கவில்லை. காம் தகப்பனுடைய நிர்வாணத்தை ரசித்து பகிரங்கப்படுத்தினான். சேம், யாபேத் என்பவர்களோ அதனைப் பார்க்காமல் மூடினார்கள். எவ்வளவு பெரிய வித்தியாசம்! காம் தகப்பனை கனப்படுத்தவில்லை. ஒருவிதத்தில் அவமானப்படுத்தினான். இவர்களோ கனப்படுத்தினார்கள்.
இன்று ஒரு சகோதரனோ, சகோதரியோ பாவத்தில் விழுந்துவிட்டால் நாம் அதனை அவர்களுக்கு உணர்த்திவிட்டு மறைக்கவேண்டுமே ஒழிய தம்பட்டம் அடிக்கக்கூடாது. இன்று மற்றவர்கள் செய்யும் பாவத்தை பகிரங்கப்படுத்துவது அநேகருடைய தொழிலாக ஏன் சிலருடைய ஊழியமாகக் கூட மாறிவருகிறது. ஒருவன் பிழை செய்தால் அவன் என் சகோதரன் என்று உணர்ந்து அதனை சாந்தகுணத்தோடு அவனுக்கு உணர்த்தி அவன் அதிலிருந்து வெளி வருவதற்கு உதவி செய்ய வேண்டும் (கலா.6:1-2). அவன் கேட்காவிட்டால் இன்னும் சிலருடன் போகவேண்டும். அதற்கும் கேட்காதபட்சத்தில் ஆவிக்குரிய தலைவர்களுடன் போய் அவன் குற்றத்தை உணர்த்தவேண்டும். அதுவும் கேட்காதபோது அது மற்றவரையும் பாதிக்கும் பட்சத்தில் மற்றவர்களுக்கு பயமுண்டாகும்படி பாவம் செய்தவர்களை எல்லோருக்கும் முன்பாக கடிந்துகொள்ள வேண்டும் (1தீமோத். 5:20). மற்றபடி ஒருவனு டைய பிழையைப் பகிரங்கப்படுத்துவது தவறு. அவன் எந்தச் சபையை சேர்ந்தவனாயிருந்தாலும் இயேசுவின் சரீரத்தில் ஒரு அங்கம். நமது சரீரத் தில் ஒரு எலும்பு முறிந்துவிட்டால் அதனை சரி செய்யவேண்டுமேதவிர பகிரங்கப்படுத்தக்கூடாது. அவனுடைய தகப்பன் எனக்கும் தகப்பன் என்றால், அவன் என் சகோதரன்! எனவே அவனை நாம் அன்பு கூருவது அவசியம்.
1 பேதுரு 4:8இல் “எல்லாவற்றிக்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்” என வாசிக்கிறோம். ஆம், இயேசுவின் அன்பு நமது பாவங்களை மூடியதுபோல் நமது அன்பு மற்றவர்களுடைய பாவங்களையும் பலவீனங்களையும் குறைகளையும் மூடவேண்டும். உன் பாவங்களை மூடினால் வாழ்வடையமாட்டாய். மற்றவர்களுடைய பாவங்களை மூடு; ஆசீர்வாதமடைவாய். மற்றவர்கள் குறைகளை ஜெப விண்ணப்பம் என்ற போர்வையில்கூட பகிரங்கப்படுத்துவதை இன்றே நிறுத்தி சேம், யாபேத் செய்வதைப்போல அவர்கள் குறைபாடுகளை மூடுவோமா?
நினைவுகூருங்கள்!
பொய் பேசி பிறரை ஏமாற்றி மகிழ்கிறவன் அதில் திருப்தியடைவான்; ஆனால், அதன் முடிவோ அழிவுதான்!