• சுவி. சுசி பிரபாகரதாஸ் •
(செப்டம்பர் – அக்டோபர் 2024)

சுவி. சுசி பிரபாகரதாஸ்

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே சத்தியவசன நேயர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சங்கீதம் 68:31 ஆம் வசனத்திலே எத்தியோப்பியா தேவனை நோக்கி கையெடுக்கத் தீவிரிக்கும் என்று வாசிக்கிறோம். இந்த இடத்திலே எத்தியோப்பியா என்கிற ஒரு வார்த்தை வருகிறது. கிரேக்க கலாச்சாரத்திலே கருப்பு நிறத்தை உடைய மனிதர் களை எத்தியோப்பியர்கள் என்று அழைப்பார்கள். எத்தியோப்பியாவைக் குறித்த வேதவசனங்கள் வேதாகமத்திலே சுமார் 22 இடங்களிலே வருகிறது.

அருமையானவர்களே, நாம் வேதத்திலே எத்தியோப்பிய நாட்டு ஸ்திரீயான சேபா நாட்டின் ராஜ ஸ்திரீயைக் குறித்து வாசிக்க முடிகிறது. சாலொ மோன் காலத்திலேயே சாலொமோனை காண வந்தவர் இந்த சேபாவின் ராஜஸ்திரீ. 1இரா ஜாக்கள் 10:2-13 வேதபகுதியில் சேபா நாட்டு ராஜ ஸ்திரீயாகிய அந்த எத்தியோப்பிய நாட்டு ராணியைக் குறித்து நாம் கற்றுக்கொள்ளலாம். அதேபோல அப்போஸ்தலர் 8: 27ஆம் வசனத்திலே பிலிப்பின் மூலமாக ஆண்டவரை ஏற்றுக் கொண்ட எத்தியோப்பிய மந்திரியைக் குறித்து நாம் கற்றுக்கொள்கிறோம். அதே சமயத்திலே ஆதியாகமம் 2:13ஆம் வசனத்தில் இரண்டாம் ஆற்றுக்கு கீகோன் என்று பேர்; அது எத்தி யோப்பிய தேசம் முழுவதையும் சுற்றி ஓடும் என்று எழுதப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

அருமையான சகோதர சகோதரிகளே, நம்முடைய வாழ்க்கையிலே இதிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற ஒரு பாடம் என்ன? இந்த எத்தியோப்பிய நாட்டின் ராஜ ஸ்திரீயைக் குறித்தும், மற்றும் பல மனிதர்களை குறித்தும் வேதாகமத்திலே ஏராளமான வசனங்கள் இருந்தாலும் இன்றைக்கு எரேமியா 38:7இல் இடம்பெற்றுள்ள எபெத்தெலேக் என்ற அந்த மனிதனைக் குறித்து நாம் கற்றுக் கொள்ளப்போகிறோம். இந்த மனிதன் யாரென்றால், இவன் அரண்மனையினுடைய அதிகாரியாக பணியாற்றியவன்.

எரேமியா தீர்க்கரைக் குறித்து நாம் ஒரு சில காரியங்களைப் பார்ப்போம். எரேமியா ஒரு தேவனுடைய தீர்க்கன். இவனுடைய தகப்பன் தேவனுடைய ஆலயத்திலே பணிவிடை செய்கிற ஆசாரிய வகுப்பை சார்ந்தவர். எரேமியாவை ஆண்டவர் ஆசாரிய திருப்பணிக்கு அழைக்கவில்லை. ஆனால், தீர்க்கனுடைய பணிக்கு அழைக்கிறார். அதாவது, ஆசாரினுடைய பணி என்பது ஒழுங்கும் கிரமமுமாக செய்யப்படுகிற ஒரு பணியாகும். ஆனால், தீர்க்கனுடைய பணி என்பது ஆண்டவர் சொல்வதைச் சொல்லுகிற ஒரு பணியாகும். ஆண்டவருக்கு வாயாக இருந்து ஆண்டவருடைய இருதயத் துடிப்பை சொல்லுகிற பணிதான் தீர்க்கனுடைய பணி. இந்த தீர்க்கதரிசன பணியில் தீர்க்கர்கள் இரண்டு விதமான செய்தியை சொல்லுவார்கள். முதல் செய்தி என்ன? தேவனுடைய ஜனங்கள் ஆண்டவருக்குள்ளே உற்சாகமாய் இருந்தால் அவர்களுக்கு உற்சாகமான ஆசீர்வதிக்கப்பட்ட செய்திகளைச் சொல்வார்கள். தேவனுடைய ஜனங்கள் தேவனைவிட்டு தூரம் போனால், அவர்கள் எச்சரிப்பின் அல்லது சபிக்கப்பட்ட வார்த்தைகளை ஆண்டவருடைய நாமத்தினாலே சொல்லி எச்சரிப்பார்கள்.

எரேமியாவின் காலத்திலே வாழ்ந்த மக்கள் ஆண்டவரைவிட்டு முற்றிலும் தூரம் போயிருந்தனர். ஆகவே, எரேமியா அவர்களுக்கு விரோதமான நியாயத்தீர்ப்பின் வார்த்தைகளை சொல்லுகிறார். பாபிலோன் கையில் ஒப்புக்கொடுக்கப்படு வீர்கள். கல்தேயரை நம்பி அவர்கள் பின்னாலே சென்றால் நீங்கள் சுகித்திருப்பீர்கள் என்று செய்தியைச் சொல்கிறார். ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலையிலே பிரபுக்கள் வந்து இதை ராஜாவினிடத்தில் அறிவிக்கின்றனர். அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனுஷன் கொல்லப்பட உத்தரவாகவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற யுத்த மனுஷரிடத்திலும், மற்றுமுள்ள சகல ஜனங்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினாலே அவர்களுடைய கைகளைத் தளர்ந்துபோகப் பண்ணுகிறான்; இவன் ஜனத்தின் சேமத்தைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள் (எரேமி. 38:4) இவன் சாகவேண்டும் என்று சொன்னவுடனே ராஜா சொல்லுகிறார்: இதோ, அவன் உங்கள் கைகளில் இருக்கிறான்; உங்களுக்கு விரோதமாய் ராஜா ஒன்றும் செய்யக்கூடாது என்றான். அந்த சிதேக்கியா ராஜா என்பவர் அதிகாரம் இல்லாத (Powerless king) ஒரு ராஜாவைப் போல அவன் செயல்படுகிறார்.

எரேமியா 38:6ஆம் வசனத்திலே இதை நாம் வாசிக்கிறோம். அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்து கொண்டிருந்தான். அருமையானவர்களே, இதிலே நாம் கற்றுக்கொள்கிற ஒரு காரியம் என்னவென்று சொன்னால், இந்தச் சூழலில்தான் இதை கேள்விப்பட்ட எபெத்மெலேக் என்னும் ஒரு பிரதானி அந்த தீர்க்கதரிசியைக் காப்பாற்றுகிற அந்த பணியிலே அவன் இறங்குகிறதை நாம் அறிந்துகொள்கிறோம்.

இந்த எபெத்மெலேக்கைக் குறித்து ஒரு சில குறிப்புகளை நான் சொல்ல விரும்புகிறேன். முதலாவதாக, இவன் கர்த்தரை நம்பினவன் என்று அங்கே சொல்லப்பட்டிருக்கிறது (எரேமியா 39:18). எபெத்மெலேக் ஆண்டவரை நம்பின ஒரு மனிதன். ஆகவேதான், தீர்க்கதரிசியை நன்றாக அறிந்தவனாகவும் தீர்க்கன் மேலே கரிசனை உள்ளவனுமாயிருந்தான். தீர்க்கன் மேலே அன்பு வைத்ததினால் அவன் தண்ணீர் இல்லாத உளையிலே அமிழ்ந்து கொண்டிருக்கிற காரியத்தைக் கேள்விப்பட்டவுடனே அவன் ராஜாவினிடத்தில் போய் பேச ஆரம்பிக்கிறான்.

இந்த இடத்திலே நாம் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு செய்தி என்ன? எபெத்மெலேக் ஒரு பழைய ஏற்பாட்டு சமாரியனைப்போல இவன் காணப்படுகிறான். பழைய ஏற்பாட்டு சமாரியன்போல இங்கு செயல்பட்டு தீர்க்கதரிசியைக் காப்பாற்றுகிற முயற்சியிலே ஈடுபடுகிறார். ஆண்டவருடைய ஊழியர்கள், ஆண்டவருடைய ஜனத்திற்காக ஜெபித்து உபவாசித்து ஆண்டவரிடத்தில் இருந்து அநேக அற்புதங்களைப் பெற்று விடுவிப்பார்கள். ஆனால், இந்த பகுதியிலே தமது தீர்க்கனைக் காப்பாற்ற அல்லது ஊழியரைக் காப்பாற்ற ஆண்டவர் எபெத்மெலேக்கைப் பயன்படுத்துகிறார். அப்போஸ்தலர் 9:23-26ஆம் வேதபகுதியை வாசித்தால், யூதர்கள் பவுலைக் கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள். சீஷர்கள் இராத்தியிலே அவனைக் கூட்டிக்கொண்டு போய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டனர்.

அப்போஸ்தல் 12:5-7ஆம் வசனத்தில் அங்கே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார்கள். கர்த்தருடைய தூதன் சிறைச்சாலையிலிருந்து பேதுருவை வெளியே கொண்டுவந்தார். ரோமர் 16:3 மற்றும் 4ஆம் வசனத்தில் பிரிஸ்கில்லா, ஆக்கில்லாவைக் குறித்து பவுல் எழுதும்போது, அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள் என்று எழுதுகிறார். அப்போஸ்தலர் 23:16,17 வசனங்களை வாசித்தால் பவுலைக் கொலை செய்யும்படி ஆலோசித்திருந்த இந்தச் சர்ப்பனையைப் பவுலினுடைய சகோதரியின் குமாரன் கேள்விப்பட்டு பவுலுக்கு அறிவித்ததையும், அதற்கு பிறகு நடந்த சம்பவத்தையும் நாம் திருமறையிலே வாசிக்கமுடிகிறது. அருமையானவர்களே, இந்தச் சூழ்நிலை மிக வித்தியாசமான ஒரு சூழ்நிலையாகும். ஆண்டவருடைய ஊழியர்களைக் காப்பாற்றுகிற அந்த திருப்பணியிலே எபெத்மெலேக் இறங்குகிறான்.

இரண்டாவதாக, இந்த எபெத்மெலேக்கு மிகுந்த தைரியமும் மிகுந்த ஞானமுள்ளவன். அந்த சமயத்திலே மிகுந்த ஞானத்தோடு விரைந்து செயல்பட்டான். எரேமியா 38:9ஆம் வசனத்தைப் பாருங்கள். ராஜாவினிடத்தில் போய் துணிந்து பேசுகிறான். எரேமியா தீர்க்கதரிசியைத் துரவிலே போட்டுச் செய்ததெல்லாம் தகாத செய்கையாய் இருக்கிறது என்று தைரியமாக பேசுகிறான். தேசத்திலே பஞ்சம் இருக்கிறது. அவன் இருக்கிற இடத்திலே பட்டினியினால் சாவானே, இனி நகரத்திலே அப்பமில்லை என்றான். இவ்வாறு சொன்னவுடனே, ராஜா எபெத்மெலேக்கை நோக்கி: நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனுஷரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போய், எரேமியா தீர்க்கதரிசி சாகாததற்கு முன்னே அவனைத் துரவிலிருந்து தூக்கிவிடு என்று கட்டளையிட்டான். அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனுஷரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரமனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழம்புடவைகளையும் கந்தைத் துணிகளையும் எடுத்துக்கொண்டு போய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவண்டைக்குத் துரவிலே இறக்கிவிட்டு, எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியன் எரேமியாவுடனே: கிழிந்துபோன இந்தப் பழம்புடவைகளையும் கந்தைகளையும் உம்முடைய அக்குள்களில் கயிறுகளுக்குள் அடங்கவைத்துப் போட்டுகொள்ளும் என்றான்; எரேமியா அப்படியே செய்தான். அப்பொழுது எரேமியாவைக் கயிறுகளால் தூக்கி, அவனைத் துரவிலிருந்து எடுத்துவிட்டார்கள் (38:11-13).

இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையிலே தைரியம் உண்டு; ஞானம் இல்லை. சிலருக்கு ஞானம் உண்டு; ஆனால், தைரியம் இல்லை. எபெத்மெலேக் ஞானமாய் செயல்பட்டது மாத்திரம் அல்லாமல் தீர்க்கனை முற்றிலுமாய் விடுவித்து வெளியே கொண்டுவருகிறார். முதலாவது, எபெத்மெலேக்கு கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தவன். இரண்டாவது தைரியத்தோடு ஞானத்தோடு அன்போடு செயல்பட்டவன்.

மூன்றாவதாக, இதினாலே எபெத்மெலேக்கிற்கு என்ன ஆசீர்வாதம் கிடைத்ததென்பதை எரேமியா 39:16-18ஆகிய வேதபகுதியில் நாம் பார்க்கிறோம். அவனுடைய செய்கைக்குத்தக்க பலனை ஆண்டவர் அவனுக்குத் தருகிறார். 17ஆம் வசனத் தில், “கர்த்தரால் உண்டான வசனம் என்னவென்றால். இதோ, என்னுடைய வார்த்தைகளை இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன்; அவைகள் அந்நாளிலே உன் கண்களுக்கு முன்பாக நிறைவேறும். ஆனால் அந்நாளிலே உன்னைத் தப்புவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ பயப்படுகிற மனுஷரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை” என்று சொல்கிறார். அதுமாத்திரமல்லாமல், “உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை; நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்கும் … என்றார்” (எரே.39:18).

இந்த செய்தியிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற உண்மை என்ன? ஆண்டவருடைய ஊழியர்களும் பல சமயங்களிலே சிக்கல்களிலே, பிரச்சனைகளிலே, வியாதிகளிலே ஒருவேளை வெளியே வரமுடியாத உளையான அந்த சூழ்நிலையிலே தள்ளப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எரேமியா இவ்வாறு துரவிலே போடப்பட்டதற்கு காரணம் என்ன? அவன் ஆண்டவருக்காக உறுதியாய் நின்றதுதான். ஆண்டவருடைய வார்த்தையை கலப்படமில்லாமல் சொன்னது. ஆண்டவர் சொன்ன வார்த்தைகளை எந்தவிதத்திலும் குறைக்காமல் அப்படியே அவர் சொன்னது தான். அந்த வைராக்கியத்தின் விளைவுகளினாலே மக்கள் எதிர்த்து வந்து அவனுக்கு எதிராளியாய் செயல்பட்டு அவன் உயிருக்கு ஆபத்தை உருவாக்குகிறார்கள்.

அருமையானவர்களே, உண்மையான ஊழியர்களுக்கு, உண்மையாய் ஆண்டவருக்கென்று வாழ்கிறவர்களுக்கு, உண்மையாய் ஆண்டவருக்கென்று நிலைத்திருக்கிறவர்களுக்கு போராட்டங்களும் பிரச்சனைகளும் அதிகமாகி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் இன்று அநேகர் உறுதியற்று இணங்கி பிறரோடு ஒத்துப் போகிறார்கள். எரேமியா அவ்வாறு ஒத்துப் போகவில்லை. ஆகையினால் ஆண்டவர் அவருடைய திருப்பணி இன்னும் தொடரவேண்டும் என்பதற்காக எபெத்மெலேக்கை அனுப்பி விடுவித்தார். எரேமியா விடுவிக்கப்படுகிறதற்குப் பிரயாசப்பட்ட அந்த மனிதனுக்கும் ஆண்டவர் ஆசீர்வாதங்களைத் தருகிறார்.

எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே, ஆண்டவருடைய ஊழியர்களுக்காக ஊழியத்திற்காக அல்லது அவருடைய நற்செய்தி பணிக்காக அவருடைய ராஜ்யவிரிவுக்காக ஆண்டவரால் பயன்படுத்தப்படுகிற ஊழியர்கள், போதகர்கள், ஒவ்வொரு குழுக்களின் தலைவர்கள், ஒவ்வொரு ஊழிய ஸ்தாபன தலைவர்கள் ஆகியவர்களுக்காக நாம் ஜெபிக்கக் கடமைப்பட்டுள்ளோம். அதற்கு ஆண்டவர் நம்மை அன்போடு அழைக்கிறார். நாம் ஆண்டவருடைய ஊழியத்துக்காக ஆண்டவர் சார்பாக செயல்படுகிற ஒவ்வொரு மக்களுக்காக நாம் செய்கிற உதவியை ஆண்டவர் ஏற்ற காலங்களிலே நமக்கு திரும்பத் தர வல்லமையுள்ளவராய் இருக்கிறார். எபெத்மெலேக்கு எரேமியாவை விடுவித்தார். ஆகவே, அந்த எபெத்மெலேக்குவை ஆண்டவர் விடுவிப்பேன் என்று சொல்லி வாக்குக்கொடுக்கிறார்.

அருமையானவர்களே,இந்நாட்களிலே எபெத்மெலேக்கோடு உங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பாருங்கள். எபெத்மெலேக் கர்த்தரை நம்பினான். எபெத்மெலேக்கு அவன் தைரியமாய் செயல்பட்டான், அவன் ஞானமாய் செயல்பட்டான். எபெத்மெலேக்கு என்பவன் தான் மாத்திரமல்ல; தனக்கு கொடுக்கப்பட்ட 30 மனிதர்களோடு அவன் குழு போல செயல்பட்டான். இன்று அநேகர் மற்ற மக்களோடு சேர்ந்து கூட்டுப்பணி செய்ய முடியாதநிலை யில் இருக்கிறார்கள். ஆண்டவருடைய திருப்பணி மற்றும் நற்செய்தி பணி குழுவாக இணைந்து செய்யும் பணியாகும். ஆகவே, மற்றவர்களோடு இணைந்து செயல்பட நம்மை ஆண்டவர் அன்போடு அழைக்கிறார். விடுவித்த மனிதனை ஆண்டவர் விடுவிக்கிறேன் என்று சொல்கிறார்.

அருமையானவர்களே, ஆண்டவருக்காக, ஆண்டவருடைய ஊழியத்துக்காக, தேவராஜ்யத்துக்காக, சபைகளுக்காக, மிஷனரிபணிகளுக்காக அல்லது ஆத்மாக்களுடைய அறுவடைக்காக நீங்கள் பண்ணுகிற ஜெபங்கள் நீங்கள் பண்ணுகிற உபவாசங்கள் நீங்கள் பண்ணுகிற ஒவ்வொரு உதவிகளையும் ஆண்டவர் மறவாமல் நிச்சயமாய் பதில் கொடுக்க வல்லவராய் இருக்கிறார்.

ஆண்டவரே! எபெத்மெலேக்கைப் போல எங்களை மாற்றும் என்று நாம் ஜெபிப்போமா!