• சகோ. பிரகாஷ் ஏசுவடியான் •
(செப்டம்பர் – அக்டோபர் 2024)
வேதாகமத்தின் அடிப்படையிலே சரித்திரத்திலே நடந்த காரியத்தை குறித்தும், சரித்திரத்திலே மக்கள் நமக்கு கற்றுக்கொடுத்த காரியங்களையும் நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம். வாழ்க்கையில் எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதைக் குறித்து நாம் கவனிக்கும்பொழுது, வேதாகமத்தில் நாம் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்பதைக் குறித்து பல இடங்களிலே சொல்லப்பட்டிருக்கிறது. அவைகளைக் குறித்து நாம் சிந்திக்கும்பொழுது ஒன்றுதான் அவசியம். தேவையானது ஒன்றே! இப்படிப்பட்ட வாக்கியங்களை நாம் வேதத்திலே பார்க்கிறோம்.
உதாரணமாக லூக்கா 18:19ஆவது வசனத்திலே அப்பொழுது தலைவன் ஒருவன் இயேசு கிறிஸ்துவை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவரும் இல்லையே என்பதெல்லாம் சொல்லிவிட்டு நியாயப்பிரமாணங்களிலே சொல்லப்பட்டுள்ள சில வசனங்களை அவர் குறிப்பிடுகிறார். இவைகளையெல்லாம் என் சிறுவயது முதல் நான் கைக்கொண்டிருக்கிறேன் என்று அவன் சொன்ன பொழுது, 22வது வசனத்தில் இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்கு கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றி வா என்றார்.
இப்படிப்பட்ட சம்பவங்களை நாம் படிக்கும் பொழுது அதில் உள்ள உண்மையான கருத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மனிதன் ஒரு தலைவனாக இருந்தான். அப்படியென்றால் அவனுக்கு ஒரு பதவி இருந்தது. அதேசமயத்தில் அவன் நல்ல போதகரே என்று இயேசுகிறிஸ்துவண்டை வந்தான். நல்ல வாழ்க்கை வாழ்ந்தவனாக அவன் இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் விபச்சாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக என்ற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்று இயேசு சொன்னபொழுது இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்று அவன் சொல்லுகிறான். அப்படியென்றால் என்ன அர்த்தம்? இவன் நல்ல வாழ்க்கை வாழ்ந்த ஒரு வாலிபன். நல்ல வேலை அவனுக்கு இருக்கிறது, பதவி இருக்கிறது, புகழ் இருக்கிறது. எல்லாம் அவனுடைய வாழ்க்கையில் இருந்தாலும் அவன் இயேசுகிறிஸ்துவண்டை வந்து நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறான்.
இந்த உலகத்திலேயே எனக்கு பதவி, பணம், புகழ் இருக்கிறது. நல்லதொரு வாழ்க்கை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த உலகத்தைவிட்டு கடந்துபோன பிறகு அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கை இருக்கிறது; அதைத்தான் நித்திய ஜீவன் என்று அவன் கருதினான். அந்த நித்திய வாழ்க்கைக்குள் நான் பிரவேசிக்க வேண்டுமென்றால் நான் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வியைத்தான் இயேசுவிடம் கேட்கிறான். இதை நாம் உன்னிப்பாய் கவனிக்கும்பொழுது, நல்லதொரு மனிதன் நல்லதொரு கேள்வியோடு நல்ல போதகராகிய இயேசுகிறிஸ்துவண்டை வந்து நல்லதொரு கேள்வியை அவன் கேட்கிறான். இவைகள் எல்லாம் நல்ல காரியங்கள்தான்! ஆனால், இயேசு கிறிஸ்து அவனுக்குக் கொடுக்கின்ற பதிலைப் பார்த்தால் அவனது வாழ்க்கையில் இருக்கிற குறைவை நாம் கண்டுகொள்ள முடிகிறது. இவைகள் எல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் உனக்கு இருந்தபோதிலும் முதலாவது, தரித்திரரைக் குறித்த கவலை உனக்கு இல்லையே என்பதைதான் இயேசு இங்கு சுட்டிக்காட்டுகிறார்.
இரண்டாவது, உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு. உனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்குக் கொடு என்று சொல்கிறார். அப்படியென்றால் என்ன அர்த்தம்? வாழ்க்கையில் இருக்கிற எல்லா காரியத்தையும் நாம் விற்று தரித்திரருக்குக் கொடுத்துவிட்டால், உலகத்திலே இருக்கிற பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா?
ஒரு மனிதன் எல்லாரும் பணக்காரர்களாக வேண்டும் என்று கனவு கண்டானாம். அன்று காலையில் விழித்தபொழுது அவருடைய உள்ளத்தில் இருந்த ஒரு எண்ணம் எல்லாரும் பணக்காரர்கள் ஆகிவிட்டால் உலகத்திலே பிரச்சனையே இருக்காது என்ற ஒரு நிலை. அவன் காலையில் எழுந்தவுடனே தினமும் ஒருவன் அவனுக்கு காபி டீ போட்டுக்கொடுப்பான். ஆனால், அன்றைக்கு அவன் வேலைக்கு வரவில்லை. ஏன் வரவில்லையென்று பார்த்தபொழுது அவன் பணக்காரனாகிவிட்டான் என்று கேள்விப்பட்டான். சரி, வெளியிலே வந்து எதிரில் இருக்கிற ஒரு டீக்கடையில் போய் டீ குடிக்கலாம் என்று போனால் அந்த கடை திறக்கப்படவில்லை. ஏனென்றால் அந்த கடையை நடத்தினவனும் பணக்காரன் ஆகிவிட்டான். சரி, பஸ்ஸில் ஏறி போய் அடுத்த பஸ் ஸ்டாப்பில் போய் டீ குடிக்கலாம் என்றால் பஸ் வரவில்லை. ஏனென்றால் பஸ்ஸை ஓட்டின ஓட்டுனர் கண்டக்டர் எல்லாரும் பணக்காரர்கள் ஆகிவிட்டார்கள். என்று அவன் கேள்விப்படுகிறான். அன்பானவர்களே, நமது வாழ்க்கை நடைமுறையிலே நடக்கக் கூடாத ஒரு காரியமாகும். எல்லாரும் வசதியோடு கூட வாழவேண்டும் என்பதும் எல்லாம் நமக்கு இருக்கிறது என்று சொல்கிற நிலையும் முடியாத ஒரு நிலையாகும். இன்றைக்கு உலகத்தில் இருக்கிற பல கொள்கைகளிலே ஒன்று எல்லாரும் பணக்காரர்களாக இருக்கவேண்டும். இந்த கொள்கைக்கு உள்ளாக நாம் போய் பார்க்கும்பொழுது நடை முறையிலே இது சாத்தியமாகாத காரியமாகும்.
அதோடுகூட மாத்திரமல்ல, ஆண்டவர் சொல்லுகிறார்: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலேயும் எந்தப் பகுதியிலே குறை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறார். பணஆசையே எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது” என்று பவுல் அப்போஸ்தலன் தீமோத் தேயுவிற்கு சொல்லியிருக்கிறார்; இவையெல்லாவற்றையும் நாம் ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுது பணத்தின் மேலும் உலகத்தின் காரியங்களின் மேலும் இருக்கிற ஆசையும் அதன்மேல் இருக்கிற பற்றும் இறைவனைத் தேடுவதற்கும் நித்திய ஜீவனைப் பற்றி சிந்திப்பதற்கும் தடையாய் இருப்பதை நாம் பார்க்கிறோம்.
இயேசுகிறிஸ்துவண்டை வந்த மக்களில் அநேகர் நித்திய ஜீவனைக் குறித்த கேள்விகளைக் கேட்டிருக்கின்றனர். அப்படி வந்தவர்கள் எல்லாருக்கும் இதே பதிலை இயேசு சொல்லவில்லை. நிக்கொதேமு என்ற ஒரு மனிதன் வந்தபொழுது நித்திய ஜீவனை அடைய நீ மறுபடியும் பிறக்க வேண்டும் என்று சொல்லுகிறார். சமாரியா ஸ்திரீயிடம் பேசும்பொழுது இயேசுகிறிஸ்து நீ நித்திய ஜீவனை அடைய ஜீவத்தண்ணீரைக் கொடுக்கக் கூடிய இயேசுவை நீ ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறினார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பதில்களை இயேசு கொடுக்கிறார். ஆகவே இந்த பதில் எல்லாருக்குமுரிய ஒரு பதில் அல்ல என்பதை இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியென்றால் ஏன் இதை அவர் சொன்னார்? ஒருவேளை இங்கே வந்து கிறிஸ்துவண்டை அந்த கேள்வியைக்கேட்ட அந்த வாலிபன் இந்த உலகத்தின் பொருள்களையும் உலகத்தின் காரியங்களையும் பற்றிக்கொண்டு, நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்வதற்கு ஆயத்தமற்றவனாகவும் இருந்திருக்கவேண்டும்.
இந்தச் செய்தியைப் படித்துக்கொண்டிருக்கிற உங்களது வாழ்க்கையிலே தேவனிடத்திற்கு வருவதற்கு எது தடையாய் இருக்கிறது என்பதை சிந்திக்கவேண்டும். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பல தடைகள் இருக்கலாம். இந்த தலைவனுடைய வாழ்க்கையிலே உலகப்பிரகாரமான பொருட்கள்தான் தடையாக இருந்திருக்கிறது. சிலருடைய வாழ்க்கையிலே சன்மார்க்க வாழ்க்கையில் ஏற்படுகிற தோல்விகள் தடையாக இருக்கும். சிலருடைய வாழ்க்கையில் சுயநலம் தடையாக இருக்கும். சிலருடைய வாழ்க்கையிலே பலவிதமான காரியங்கள் தடையாக இருக்கிறது. ஒரு வேளை உங்கள் வாழ்க்கையிலே இன்றைக்கு எந்தக் காரியத்திலே உங்களுக்கு தடை இருக்கிறதோ அந்தக் காரியத்தை நீங்கள் ஆண்டவருக்கு என்று சொல்லி அர்ப்பணிக்க வேண்டும். அப்படி அர்ப்பணிக்கும்பொழுது நம் வாழ்க்கையில் நித்திய ஜீவனைப்பற்றி சிந்திக்க ஆரம்பிப்போம். இந்த உலகத்தின் ஆசைகள் உலகத்திலேயே இருக்கிற காரியங்களைவிட்டு நாம் விடுதலையடையும்பொழுது நாம் ஆண்டவரோடுகூட நாம் சேருகிற வாழ்க்கையைப்பற்றி அதிகமாக சிந்திக்க ஆரம்பிப்போம். “The detachment from this world is the only secret of attachment with God or The Attachment with God is the secret of detachment from this world.”
உங்களுடைய வாழ்க்கையிலே எது தடையாய் இருக்கிறதோ அந்தத் தடைகளை இயேசு கிறிஸ்துவண்டை கொண்டுவந்து அவரிடத்திலே சரணாகதியாக அர்ப்பணித்துவிடும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் நித்திய ஜீவனைப் பற்றிய விஷயத்தை ஆண்டவர் கொடுக்கிறார்.
உங்களுக்குத் தெரியுமா?
இருதய கடினம் என்பது பொல்லாதது. அது தேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுக்காதபடி உதாசீனத்துக்குள் தள்ளி, தேவனைவிட்டே நம்மை விலக்கிப்போடுகிறது.