• சகோதரி சாந்தி பொன்னு •
(செப்டம்பர் – அக்டோபர் 2024)

சகோதரி சாந்தி பொன்னு
போர்க்களத்தில் நெருக்கடிகள் ஆபத்துக்கள் சூழ்ந்திருக்கும்போது, சில பொறுப்பான முக்கிய பணிகளை படைத்தளபதி பொறுப்பற்றவிதத்தில் எவரிடமும் கொடுக்கமாட்டார்; தனக்கு நம்பிக்கைக்குரியவரிடமே அந்தப் பணியைக் கையளிப்பார், இல்லையா! அப்படியேதான், இந்த உலகமும் ஒரு போர்க்களம் போன்றதுதான். ஆண்டவர் நமக்கு சில பொறுப்புகளைத் தந்து, ஒரு கடினமான இடத்தில் நிறுத்துகிறார் என்றால், நாம் அவருக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கிறோம் என்பதை நாம் புரிந்திருக்கவேண்டும். அதே சமயம் அவர் நம்மோடிருப்பார், அந்தப் பணியை முடிக்கத்தக்க பெலனையும் நிச்சயம் தருவார். அன்று இயேசு, திரளான ஜனங்கள் கூடி வந்த போதும், தம்மிடம் வந்த சீஷர்களை நோக்கியே உபதேசிக்க ஆரம்பித்தார் என்று மத்.5:1-2ல் வாசிக்கிறோம். பாக்கியவசனங்கள் என்று நாம் குறிப்பிடுகிற இந்தப் பகுதியில் இயேசு குறிப்பிடுகின்ற குணாதிசயங்களைத் தமது சீஷர்கள் கொண்டிருக்கவேண்டுமென்பதே அவரது சித்தம். ஏனெனில், இயேசுவிடம் காணப்பட்ட குணநலன்களும், அவர் நடந்த பாதையும் அதுவேதான்.
இப்படியிருக்க, இன்று ஆண்டவரைத் தெய்வமாகக் கொண்டு, அவர் நடந்த பாதையில் நடக்க வேண்டுமென்று தங்களை அர்ப்பணித்திருக்கிற அவருடைய சீஷர் யார்? நாமேதான். அப்போ, இன்று நம்மை நம்பி, நம்மிடம் ஒப்படைத்திருக்கிற ஒப்பற்ற பொறுப்புகளைக்குறித்து நாம் எவ்வளவுக்கு விழிப்புள்ளவர்களாக இருக்கிறோம்? ஆவியில் எளிமையும், சாந்தகுணமும், நீதியின் மேல் பசிதாகமும், நீதியினிமித்தம் துன்பம் அனுபவித்தலும் இப்படியாக இவையாவும், நமது வாழ்வின் குணாதிசயங்களாக மாறியிருக்கிறதா? “கர்த்தாவே, நீர் எங்களிடம் எதிர்பார்க்கின்ற இந்தக் குணநலன்களைத் தரித்து நீர் நடந்த பாதையில் நடக்கவேண்டும்” என்று நாம் ஜெபிப்பதுண்டா? இந்த உலகத்துக்கு நான் உப்பாகவும் வெளிச்சமாகவும் இருக்கக் கிருபை தாரும் என்று நாம் கேட்டதுண்டா?
இயேசு தமது சீஷர்களிடம், “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது (மத். 5:14)” என்றார் இயேசு. ஒன்று. நாம் வெளிச்சமாயிருக்க வேண்டும், அடுத்தது, வெளிச்சமாயிருந்தால் அந்த வெளிச்சத்தை நம்மால் மூடி மறைக்கமுடியாது, அதன்பின்னர் “இவ்விதமாய்” என்று ஆண்டவர் ஆரம்பிக்கிறார். “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு…” என்று தொடருகிறார். ஆக, வெளிச்சமாயிருக்க அழைக்கப்பட்ட நாம், பிற மனுஷர் பரலோக பிதாவை மகிமைப்படுத்தும்படிக்கு வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து, பிறருக்கு முன்பாக நற்கிரியைகளை நடப்பிக்க வேண்டும். ஒரு விஷயம், நாம் ஒளியல்ல, ஒளியிலிருந்து வெளிச்சத்தைப் பெற்றுக்கொண்டு பிரகாசிக்க வேண்டியவர்களே!
இருளுக்குள்ளும் அந்தகாரத்துக்குள்ளும் உருண்டுகொண்டிருக்கும் இந்த உலகத்தினுள், பிசாசின் இருண்ட கிரியைகள் நிறைந்த இந்த உலகத்தினுள், இந்தப் போர்க்களத்தில் ஆண்டவர் நமக்கு இப்பெரிய பொறுப்பைத் தந்திருக்கிறார் என்றால், அவர் நம்மில் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை நாம் சற்றுச் சிந்தித்து, நமக்குள் இருக்கும் வெளிச்சத்தைப் பிரகாசிக்க வேண்டாமா! அப்படியானால் இந்த ஒளிப்பிரகாசத்தை நாம் எங்கிருந்து பெற்றுக்கொள்கிறோம்?
தேவனே ஒளி!
“பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது”, “தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்” (ஆதி.1:2-4). “ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கிய மேது?” (2கொரி.6:14). இங்கே,”வெளிச்சம் உண்டாகக்கடவது” என்ற வாக்கியத்தின் மூல மொழியின் சரியான மொழிபெயர்ப்பின்படி, “வெளிச்சம் புறப்படக்கடவது” என்பதே அதன் சரியான அர்த்தம் என்று சொல்லப்படுகிறது.
ஆம், புறப்பட்ட வெளிச்சம் எங்கிருந்து புறப்பட்டது? சூரியன் சந்திரன் யாவும் நான்காம் நாள் தான் சிருஷ்டிக்கப்பட்டன. ஆகவே, அதுவும் சாத்தியமல்ல. ஆக, அந்த ஒளி யார்? தேவாதி தேவனே அந்த ஒளி! தேவனுடைய ஒளி பூமியிலே பிரகாசித்தபோது இருள் வெருண்டு அகன்றது. ஆனால் தேவனோ, இருளை அழித்துப்போடாமல் வேறுபிரித்து வைத்து, ஒளிக்கும் இருளுக்கும் சம்மந்தம் இல்லாமல் பிரித்துவைத்தார். இருள் என்று ஒன்று இல்லாவிட்டால் ஒளியின் பெறுமதி, தார்ப்பரியம், அதன் முக்கியத்துவத்தை நாம் நினையாதிருந்திருப்போம்.
இருளுக்கும் ஒளிக்கும் சம்மந்தம் இல்லாதது போலவே, ஒளியின் பிள்ளைகளுக்கும் இருளின் பொல்லாப்புகளுக்கும் சம்மந்தம் இருக்கக்கூடாது, இருக்கவும் முடியாது.
வார்த்தையே ஒளி
அடுத்ததாக, “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. ……அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. …உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” (யோவா.1:1-5,9). “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்” (யோவா.1:14).
ஆம், ஆதியிலே இருந்த அந்த ஒளி, நமக்குள்ளே, அதாவது, அன்று கர்த்தர் சொன்னபடி மோசே உண்டாக்கிய வாசஸ்தலத்தில் எப்படி தேவனுடைய மகிமை வந்து வாசம்பண்ணியதோ, அதேமாதிரி இன்று அந்த ஒளி நமக்குள் வந்து வாசம்பண்ணினார். ஆம், “நான் உலகத்தி லிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” (யோவான் 9:5) என்று சொன்ன கிறிஸ்துவாக வந்த வார்த்தையே அந்த ஒளி! அவர் நமக்குள் இருக்கிறார். அந்த ஒளியின் பிரதிபலிப்பாக, அதன் வெளிச்சத்தை உலகினுள் வீசவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
சுவிசேஷமே ஒளி!
பவுலடியார் கொரிந்து சபைக்கு எழுதிய போது, “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி” (2கொரி. 4:4) என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சுவிசேஷம் எது? சுவிசேஷம் “கிறிஸ்துவே”. ஆகவே தான், “அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு இப்பிரபஞ்சத்தின் தேவனானாவன் (சாத்தான்) அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்” என்று தொடருகிறார். அப்படியானால், கிறிஸ்துவை விசுவாசிக்கிற நமக்குள் அந்த சுவிசேஷத்தின் ஒளி பிரகாசிக்கிறது அல்லவா! அந்தப் பிரகாசத்தை எப்படி நம்மால் மூடிமறைக்க முடியும்?
ஒரு இரகசியம்!
பவுலடியார் ஒரு இரகசியத்தைக் குறித்து கொலோசெயருக்கு எழுதியுள்ளார். ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்தது, இப்பொழுது கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனம் இன்று பூரணமாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்கிறார் பவுல். இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் என்ன தெரியுமா? “கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்” என்று பவுல் அந்த இரகசியத்தைப் போட்டு உடைத்துவிட்டார் (கொலோ.1:24-27). யாராயிருந்தாலும் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கின்ற அனைவருக்குள்ளும் அவர் வாழுகிறார். மகிமையின் நம்பிக்கையாகிய கிறிஸ்து இன்று நமக்குள் வாழுகிறார். அவருடைய ஒளி இன்று நமக்குள் இருக்கிறது.
வெளிச்சத்தின் பிள்ளைகள்!
உள்ளிருக்கும் ஒளி, வெளிச்சமாகப் பிரகாசிப்பது என்றால் எப்படி? நம்மைச் சுற்றிலும் ஒரு ஒளிவட்டம் காணப்படுமா? இல்லை! பிறருடைய கண்கள் கூசிப்போகுமளவுக்கு அவர்கள் நம்மை அணுகமுடியாதவர்களாக நாம் இருப்போமா? இல்லை! “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது” (மத்.5:14) என்றார் இயேசு. மலையிலுள்ள பட்டணத்தை மறைக்க முடியுமா? அதிலும் இரவில் அந்தப் பட்டணத்தில் ஏற்றிவைக்கப்படும் வெளிச்சம் பல கிலோ மீட்டர்களுக்குத் தெரியுமல்லவா?
பின்னும் இயேசு, “இவ்விதமாய் மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்.5:16) என்றார். ஆக, உலகுக்கு நாம் வெளிச்சமாயிருப்பது, அதாவது நமக்குள் இருக்கிற வெளிச்சத்தைப் பிரகாசிப்பிப்பது என்பது, வெளிச்சத்தின் கிரியைகள் நம்மில் வெளிப்படுவதே அல்லாமல் வேறில்லை. “முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்”(எபே.5:8) என்கிறது வேதவாக்கியம்.
மேலும், “ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லா தவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், ….…சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிற தென்று வெளியாகும்படிக்கு ஒளியினிடத்திற்கு வருகிறான்” (யோவா.3:19-21) என்றார் இயேசு. இந்த வாக்கியங்கள், வெளிச்சத்தின் பிள்ளைகள், இருளின் பிள்ளைகள் என்பது நாம் வாழ்வில் வெளிப்படுத்தும் கிரியைகளில் வெளிப்படுகிறது என்பது தெளிவாயிருக்கிறது. அதனால்தான் பவுல், நமது ஜீவன் கிறிஸ்துவுக்குள் மறைந்திருப்பதால், இருளின் கிரியைகளாகிய அழித்துப்போட வேண்டியவற்றை அழித்துவிடவும், விட்டுவிட வேண்டியவற்றை விட்டுவிடவும், தரித்துக்கொள்ள வேண்டியதைத் தரித்துக்கொள்ளவும் திட்டவட்டமாக நமக்கு எழுதி வைத்துள்ளார் (கொலோ.3:3-10).
அந்த ஒளி!
தேவனிடத்திலிருந்து புறப்பட்ட ஒளி, கிறிஸ்துவாக நமக்குள் வந்து வாசம்பண்ணின ஒளி, சுவிசேஷமாக சகலருக்கும் அருளப்பட்ட ஒளி, இன்று நமக்குள் மகிமையின் நம்பிக்கையாக பிரகாசித்துக்கொண்டிருக்கும் இந்த ஒளி, நமது வாழ்வில் வெளிச்சமாக வெளியே பிரகாசிக்கிறதா என்பதே கேள்வி. ஆண்டவர் நமக்குள் வாசம்பண்ணுவது மெய்யானால், அந்த ஒளி நமக்கூடாக இந்த இருண்ட உலகுக்குள் வெளிச்சமாக, வெளிச்சத்தின் கிரியைகளாகப் பிரகாசித்து, இருளுக்குள் இருக்கும் மக்களையும் அந்த வெளிச்சத்திற்குள் அழைத்துவரவேண்டுமே! அன்று இயேசுவோடிருந்த சீஷர்கள், பவுலடியார், முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவ விசுவாசிகள், மிஷனரிகள், மேலும் பல தேவஊழியர்களுக்கூடாகப் பிரகாசித்த அந்த வெளிச்சம் இன்று எங்கே?
அன்று கர்த்தர் தமக்குச் சாட்சியாக அழைத்த இஸ்ரவேலோ தோற்றுப்போனது. இன்று இயேசுவின் இரத்தத்தால் மீட்டெடுத்து, தமது மகிமையின் ஒளியை உலகில் பிரகாசிக்கும்படி நம்மை நம்பி அழைத்திருக்கிற ஆண்டவருக்கு நாம் உண்மையுள்ளவர்களாக நடக்கிறோமா? “இயேசு நடந்த பாதையில் நானும் நடக்கிறேன்” என்றால், அவர் வாழ்ந்திருந்தபோது அவரில் வெளிப்பட்ட சகல கிரியைகளும் இன்று என்னில் வெளிப்படவேண்டும். இயேசுகிறிஸ்து எனக்குள் வாழுகிறாரென்றால் அந்த ஒளியின் பிரகாசம், நற்கிரியைகள், ஆவியின் கனி என்னில் வெளிப்படவேண்டும். அந்த வெளிச்சத்தின் பிரகாசம் இருளுக்குள் பிரகாசித்து, இருளுக்குள் வாழ்ந்த நம்மை ஒளியினிடத்திற்கு அழைத்து வந்தவருக்கு சாட்சியாக நின்று, இன்று பிறரை அந்த வெளிச்சத்துக்குள் அழைத்து வரவேண்டும். இதற்கு நான் உண்மையாயிருக்கிறேனா?,
இல்லையானால், தடைதான் என்ன?
பாவத்தினுள் இருந்த என்னை இயேசு தமது பலியினால் மீட்டு இரட்சித்தபோதே, பரிசுத்த ஆவியானவர் என்னைப் பொறுப்பேற்று, அவர் தங்கி வாழும் ஆலயமாக என்னை ஏற்றுக்கொண்டு எனக்குள் வாழுகிறார் என்றால், இன்று என் வாழ்க்கையின் கிரியைகள் அந்த மகிமையின் விடுதலையை வெளிப்டுத்துகிறதா? வெளிச்சத்தின் பிள்ளையாக என் கிரியைகள், எனக்குள் இருக்கும் ஒளிக்கு சாட்சி பகருகிறதா? இல்லையானால் அதற்கு என்ன தடை?
ஆம், இன்று உலகம் அநேக காரியங்களை நமக்கு முன்பாகத் தூவிவிட்டிருக்கிறதை மறுக்க முடியாது. அவற்றைப் பட்டியலிட்டு முடியாது. பல கவர்ச்சிகள், இது பாவம் என்றுகூட உணர முடியாத அளவுக்கு நமது கண்களைப் பிசாசானவன் மங்கப்பண்ணிவிட்டான். உலகத்தோடு ஒத்துப்போகாவிட்டால் ஆபத்து என்று பயமுறுத்தி, சாட்சியாக நிற்கவேண்டிய இடங்களில் நம்மைக் கோழைகளாக்கிவிடுகிறான். பாவம் நமக்குள் நுழைந்துவிட நாம் மெதுவாக அனுமதிக்கிறோம். சுவிசேஷத்தை மழுங்கடித்துவிட்டு, தனியாக திருச்சபையாக பல்வேறு காரியங்களில் மிகவும் அலுவற்காரராக இருக்கிறோம். பட்டம், பதவி, பணம், ஆசை, பெருமை, இச்சை என்றும் போலியான தீர்க்கதரிசனங்கள் போலிப்போதனைகள் என்றும் அவற்றை நாடி ஓடி ஆண்டவரைத் தள்ளி வைத்துவிடுகிறோம். மொத்தத்தில் சுயத்திற்காக, பிறருக்குள் பிரகாசிக்க வேண்டிய நமக்குள்ளான வெளிச்சத்தை மூடி மறைக்கிறோமா என்று கேட்கத்தோன்றுகிறது.
உடைபடும்வரைக்கும் ….
நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டுமென்று ஆண்டவரிடம் கேட்டு வந்த வாலிபன், அவனிடத்திலுள்ள குறையை எடுத்துக்கூறி, தரித்திரர் மத்தியில் நற்கிரியையைச் செய்து, பின்னர் சிலுவையை எடுத்துக்கொண்டு தம்மைப் பின்பற்றும்படி இயேசு சொன்னபோது, அவன் துக்கத்தோடே போயேவிட்டான். இன்று நம் மிலும் அநேகர் இப்படியேதான் இருக்கிறோமா?
“இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்”. ஆக. இன்று அந்த மகிமையின் ஒளி நமக்குள் இருக்கிறது. இந்த ஒளியை நாம் எதனுள் பெற்றிருக்கிறோம் என்பதையும் பவுல் விளக்குகிறார். “இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்” (2கொரி. 4:6,7). ஆக, மண்பாண்டங்களாகிய நமக்குள் பெற்றிருக்கிற இந்த மகிமையின் ஒளியின் பிரகாசம் நமக்குள்ளிருந்து வெளியே பிரகாசிக்காதபடிக்கு உள்ள தடைதான் என்ன?
ஆம்,கடினப்பட்ட மண்பாண்டமேதான் தடை. ஆக, இந்த மண்பாண்டம், நமது சுயம், இந்த மாம்சம் உடைத்தெறியப்படவேண்டும்! இதைத்தான் ஆண்டவரும் சொன்னார். ஒருவன் அவரைப் பின்பற்றிச் செல்லவேண்டுமென்றால், முதலில் அவன் தன்னைத்தான் வெறுத்து விடவேண்டும், அதாவது அவனுடைய சுயத்தை வெறுக்கவேண்டும்; பின்பு தனக்குரிய சிலுவையை எடுக்கவேண்டும், அதாவது அவன் தன் சிலுவையில் அறையப்படவேண்டும், பின்னர் ஒருநாள் இரண்டு நாள் அல்ல, தினமும், இறுதி மூச்சுள்ளவரைக்கும், இயேசுவை, இயேசுவை மாத்திரமே பின்பற்றி அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். இதைச் செய்யாதபடிக்குள்ள தடைகள் யாவையும் ஒரே சொல்லில் சொன்னால் அதுதான் “சுயம்”. அது உடையவேண்டும்.
உடைக்கப்பட்ட பானைகள்!
மீதியானியருக்கு எதிராக யுத்தம் செய்யும்படி கர்த்தருடைய தூதனானவர் கிதியோனைப் பெலப்படுத்தி அனுப்புகிறார். அப்போது அவனோடிருந்த யாவரும் அவனுடன் புறப்பட்டார்கள். கர்த்தரோ, தங்களாலேதான் வெற்றி கிடைத்தது என்று ஜனங்கள் சொல்லாதபடிக்கு அவர்களுக்குச் சோதனைகளை வைத்தார். 32,000 பேராக இருந்தவர்கள் 300 பேராகக் குறைக்கப்பட்டார்கள். யுத்தம் என்றால் போர்வீரர் அதிகம் தேவை. ஆனால் இங்கே வெறுமனே 300 சாதாரண மக்கள் கிதியோனுடன் இருக்கிறார்கள். உறுதிப்பாட்டைப் பெற்றவுடன், அந்த 33 பேரையும் மூன்று படையாக வகுத்த கிதியோன், அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் போராயுதங்களைத்தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவன் கொடுத்தது, ஒரு எக்காளம், வெறும் பானை, அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டி. இதனால் போர் செய்ய முடியுமா? பின்னர் தான் செய்வதுபோல அவர்களும் செய்யவேண்டும் என்று சொல்லி, ஒரு வார்த்தையையும் கற்றுக்கொடுக்கிறான்.
பாளயத்தைச் சுற்றி எக்காளத்தை ஊதி, “கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம்” என்று சொல்லி பானைகளை உடைக்க வேண்டும். அவ்வளவும்தான். அப்படியே அவர்கள் பானையை உடைத்து தீவட்டிகளை இடதுகையிலும் எக்காளத்தை வலதுகையிலும் பிடித்து, “கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம்” என்று சத்தமிட்டு, அவரவர் தங்கள் நிலையிலே நின்றார்கள். அப்பொழுது கர்த்தரே யுத்தம் செய்தார். பகைவன் தெறித்து ஓடினான்.
வெறும் பானையா என்று முறுமுறுத்திருந்தால், அல்லது சொன்னபடி கீழ்ப்படிந்து பானையை உடைக்காது விட்டிருந்தால் வெற்றி கிடைத்திருக்குமா? பானைகள், மண்பாண்டங்கள் உடைக்கப்படும்வரைக்கும் உள்ளிருக்கும் தீவட்டிகளின் வெளிச்சம் பிரகாசிக்க முடியாது.
பிரியமானவர்களே, மண்பாண்டங்களாகிய நம்மை நம்பியே ஆண்டவர் தமது ஒளிப் பிரகாசத்தை நமக்குள் தந்திருக்கிறார். நாம் உடையும் வரைக்கும், நமது சுயம் கர்த்தருக்காய் சிலுவையில் அறையப்படும்வரைக்கும், கிறிஸ்துவுக்காய் நாம் – சுயம் – சாகும்வரைக்கும், நமக்குள் உள்ள வெளிச்சம், கிறிஸ்துவுக்குள்ளான நற்கிரியைகள், கிறிஸ்துவைப் பிரதிபலிக்கின்ற சாட்சியின் வாழ்வு, இந்த இருண்ட உலகினுள், அந்தகாரத்தில் வாழு கின்ற மக்கள் மத்தியில் பிரகாசிப்பது எப்படி? இன்று என்னை நான் ஒப்புவிப்பேனா? “நொறுக்கும் உருக்கும் உடையும்வனையும் உமக்கே உகந்த தூய சரீரமாய்” என்ற பாடலோடு நின்று விடாதபடிக்கு நாம் உடைக்கப்பட ஒப்புவிப்போம்.
ஆண்டவர் இயேசு நம்மிடம் எதிர்பார்த்தபடி இந்தப் பூமிக்கு வெளிச்சங்களாகப் பிரகாசித்து, அவரையும் அவருடைய நற்கிரியைகளையும் வெளிப்படுத்துவோம்.
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். ஆமென்.