• Dr.உட்ரோ குரோல் •
(செப்டம்பர் – அக்டோபர் 2024)

7. எபேசு – வெற்றிகரமான மிகப் பெரிய சபை!

Dr.உட்ரோ குரோல்

இந்த இதழில் நாம் வெளிப்படுத்தின விசேஷம் நூலின் இரண்டாவது அதிகாரத்தை ஆராய்வோம். பல்வேறு சபைகளுக்கு அளிக்கவேண்டிய செய்திகளை இயேசுகிறிஸ்து தமது சீடரான யோவானுக்குக் கூறினார். அதில் முதலாவது சபை எபேசு சபைக்குரியது. இதனை அதிகாரம் 2:1இல் “எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்” என்று உரைக்கிறார்.

இங்கு தூதன் என்பது வானதூதரைக் குறிக்காது; அது ஒரு தூதுவரைக் குறிக்கும். அவர் எபேசு சபையின் பிரதிநிதியாவார். அவர் ஒருவேளை போதகராகவோ, மூப்பராகவோ இருக்கலாம். ஆனால், இச்செய்தி எபேசுவிலுள்ள அனைத்து மக்களுக்கும் அறிவிக்கப்பட்டது. ஏனெனில் எபேசு என்றால் “விரும்பப்படத்தக்கது” என்று பொருளாகும்.

யோவான் நிருபங்கள் அனுப்பிய பட்டணங்களில் இதுவே அதிகம் விரும்பத்தக்கது. எபேசு மிகப்பெரிய பட்டணமாகும். யோவானின் காலத்தில் அரைமில்லியன் மக்கள் அதாவது 50,000 மக்களைக் கொண்டிருந்தது. ஆசியா மைனரின் தலைநகரமாகத் திகழ்ந்தது. வேதாகமத்தில் ஆசியா என்று குறிப்பிடப்படுவது ஆசியா மைனராகும். இது இன்றைய துருக்கி.

ஆகவே எபேசு பட்டணம் துருக்கியின் மேற்குக் கடற்கரையில் இருந்தது. இங்கு எபேசியர்களின் பெண் தேவதையான டயானாவின் கோவில் சிறப்பானது. பழங்காலத்து ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக தியானாளின் கோவில் கருதப்பட்டது. இது அநேக தூண்களைக் கொண்ட மிகப்பெரிய ஓர் அழகிய கோவிலாகும். தோற்றத்தில் ஏதென்ஸ் நகரின் பார்த்தீனான் அரங்கம் போன்று அமைந்திருந்தது. ஆனால் இன்று, தியானாள் கோவிலின் ஒரு பகுதியாக ஒரேஒரு தூண் மட்டுமே எஞ்சியுள்ளது. மற்றவை அழிக்கப்பட்டுவிட்டன.

இதைத்தவிர, அங்கு ஒரு பொது விளையாட்டு அரங்கமும் இருந்தது. அதில் சுமார் 25,000 பேர் அமரலாம். பவுல் இந்த அரங்கசாலையில் விக்கிரகங்களுக்கு எதிராகப் பேசினார் என்று நாம் அப்போஸ்தலர் 19ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். தெமேத்திரியு என்ற தட்டான் இந்த தியானாள் அல்லது அர்த்தமின் கோவிலின் சிலையை செய்வித்து அதினால் அநேகருக்கு மிகுந்த வருவாய் கிடைக்கச் செய்தார். பவுலின் செய்தியால் தங்க ளது வாழ்வாதாயம் பாதிக்கப்படும் என்று அஞ்சினர்.

இது கலாச்சாரத்தின் மையமாகவும் திகழ்ந்தது. ரோமாபுரி, ஏதென்ஸ் மற்றும் அலெக்சாண்டிரியா இடங்களில் இருந்த நூலகங்களைவிட மிகப்பெரிய நூலகம் இங்கு அமைந்திருந்தது. யோவான் பத்மு தீவுக்கு நாடு கடத்தப்படுமுன் அவர் பாலஸ்தீனாவிலிருந்து ஆசியா மைனருக்குச் சென்று பின்னர் எபேசு பட்டணத்தில் வாழ்ந்தார். இயேசுவின் தாயாகிய மரியாளும் இங்கேதான் வசித்திருக்கவேண்டும். ஏனெனில் இயேசு சிலுவையில் மரிக்கும்பொழுது தன் தாயை பராமரிக்கும் பொறுப்பை யோவானிடம் கொடுத்திருந்தார் என்பதை நாம் நன்கு அறிவோம்.

எபேசுவில் ஒரு சபை இருந்தது. இந்த சபைக்கு அப்.பவுல் ஒரு நிருபத்தை எழுதினார். பவுலின் மூன்றாவது அருட்பணி பயணத்தில் இந்த சபையை பவுல் நிறுவினார். இதைப்பற்றி மேலும் அறிய அப்போஸ்தலர் 19ம் அதிகாரத்தை வாசியுங்கள். பவுல் எபேசு பட்டணத்தில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து தனது ஊழியத்தைச் செய்தார். இது நன்கு நிறுவப்பட்ட ஒரு தேவாலயமாக இருந்தது. மேலும் கிறிஸ்தவ கோட்பாடுகளை நன்கு அறிந்திருந்தது. எபேசு ஒரு காலத்தில் மிகப்பெரிய துறைமுக நகரமாக இருந்தது. ஆனால், இன்று அது துறைமுகமாக இருக்கவில்லை.

உலகின் சிறந்த இடிபாடுகள் பாதுகாக்கப்பட்ட இடத்தை நீங்கள் காணவிரும்பினால் எபேசு பட்டணத்துக்குச் செல்லுங்கள். ஒவ்வொரு ஏக்கரிலும் ரோமானிய கட்டிடக்கலையின் சான்றுகளை அங்கு நீங்கள் காணலாம். சமஇடைவெளிகள்கொண்ட மிகப்பெரிய தூண்வரிசைகளுடன் அமைந்த தெருக்களும், நகரம் முழுவதும் மிகப்பெரிய நடைபாதையுடன் கூடிய வீதிகளும் இருந்தன.

இன்று எபேசு நகரில் அப்பெரிய நூலகத்தின் கட்டிடத்தைமட்டுமே நாம் பார்க்கலாம். ஒரு காலத்தில் இது மிகப்பெரிய துறைமுக நகரமாக இருந்தது. எபேசுவின் வழியாகப் பாய்ந்த கேஸ்டா நதி கடலில் பாயுமுன் துருக்கியின் மலைகளில் இருந்து ஏராளமான வண்டல் மண்ணைக் கொண்டுவந்து நதியின் முகத்துவாரத்தில் சேர்த்து வைத்தது. இதன் விளைவாக கடல்நீர் பட்டணத்திலிருந்து தூரமாக அகன்றுவிட்டது. ஒரு காலத்தில் கடலாக இருந்த இடம் சதுப்பு நிலமாக மாறிவிட்டது. எனவே எபேசு பட்டணம் கடலில் இருந்து பல மைல்களுக்கு அப்பால் விலகிவிட்டது.

எபேசு பட்டணம் நிலவியல் மற்றும் ஆன்மீக வாழ்விலும் ஒரு துறைமுகமாக இருந்தது. ஆனால், இப்பட்டணத்துக்கு நிலவியலில் நடந்ததே ஆன்மீகத்திலும் நடந்தது. புதிய ஏற்பாட்டில் மிகப்பெரிய சபை எபேசு சபையாகும். ஆனால், அது ஆதியிலிருந்த அன்பை இழந்துவிட்டது. துறைமுகத்தை கேஸ்டா நதியின் வண்டல்கள் நிரப்பிவிட்டது. ஆன்மீகத்திலும் இதுவே நிகழ்ந்தது. பாவம் என்னும் வண்டல் மண் சபைக்குள் வந்தது. சபை பலமாக இருந்தாலும், பட்டணம் பலமாக இருந்தாலும் அனைத்தும் நன்றாகவே நிகழ்ந்தாலும் பாவத்தின் வண்டல் கொஞ்சம்கொஞ்சமாக அதனை நிரப்பியது.

இதற்கு தீர்வு காணவேண்டும். எபேசு சபைக்கு இயேசு கொடுக்கும் செய்தியானது 2ம் அதிகாரம் 2ம் வசனத்தில் ஆரம்பமாகிறது. “உன் செயல்களையும், உன் கடின உழைப்பையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலர் அல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்” (வெளிப்படுத்தல் 2:2-3).

இயேசு அனைத்து சபைகளுக்கும் கூறும் காரியம் அவர்களுடைய சில தவறுகளையும், பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டுவதுதான்; ஆனால், அதற்கு முன்னதாக அவர்களைப் பாராட்டுகிறார். “நீ வெற்றிகரமான சபை; நன்கு உழைக்கிறாய்” என்று புகழ்ந்துவிட்டு, அவர்கள் செய்த சரியான ஏழு ஊக்கமான காரியங்களையும் எடுத்துரைத்து உற்சாகப்படுத்துகிறார்.

1. “உன் கிரியைகளை நான் அறிவேன்.”

எபேசுவிலிருந்த மிகப்பெரிய சபையைப் பற்றி அனைவரும் அறிவர். எபேசியர்கள் மரபுவழி திருச்சபையில் மூர்க்கக் குணம் உடையவர்கள் என்று சக் சுவின்டல் என்று அமெரிக்க போதகர் குறிப்பிடுகிறார். சத்தியத்தை அச்சபையினர் காத்து கள்ளப் போதகர்களை துரத்திவிடுவார்கள். எனவே இயேசு “உன் கிரியைகளை நான் அறிவேன்” என்றார்.

2. “உன் பிரயாசங்களை நான் அறிவேன்.”

எபேசு சபையைக் கட்டுவதற்கு அதன் பணியாளர்கள் விடாமுயற்சியுடன் உழைத்தனர். அது நன்கு வெற்றிபெற்ற சபை. சபை மக்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். ஒவ்வொரு வரும் கடினமாக உழைத்து இந்நிலையை அடைந்தனர். எனவே இயேசு, “உன் பிரயாசங்களை நான் அறிவேன்” என்கிறார்.

3. “உன் பொறுமையையும் விடாமுயற்சியையும் நான் அறிந்திருக்கிறேன்.”

எபேசு சபையின் வளர்ச்சி ஒரே நாளில் நடக்கவில்லை. அது வளர்வதற்கு அநேக காலம் ஆனது. அவர்கள் அதைத் தக்கவைத்துக்கொண்டனர். எனவேதான் இயேசு, “உங்களை நான் பாராட்டுகிறேன்” என்கிறார்.

4. “உன்னுடைய அதிகாரபூர்வ நிலைப்பாட்டை நான் அறிவேன்.”

“பரிசோதனை செய்யப்பட்டு, பொய்யான தீர்க்கதரிசிகள் என்று கண்டுபிடிக்கப்பட்டவர்களை நீங்கள் சகிக்கமாட்டீர்கள். நீங்கள் மரபு வழியில் நிற்பவர்கள்; நற்செய்திப்பணியின் மையமானவர்கள். நீங்கள் சிலுவைமேல் வைத்திருக்கும் விசுவாசத்தையும், இயேசுவின் இரத்தத்திலும் அவரது கன்னிப்பிறப்பிலும் உள்ள நம்பிக்கையையும் யாரும் சந்தேகிக்க முடியாது. நீங்கள் அவைகளைப் பாதுகாத்துவருகிறீர்கள்.”

5. “உன்னுடைய மனஉறுதியை நான் அறிவேன்” (வசனம் 3).

“நீ சோதிக்கப்பட்டாய்; அனைத்து நிலைகளிலும் உனக்கு பாடுகள் இருந்தது. மிகச்சிறிய சபைகளிலிருந்து மிகப்பெரிய சபைகள் வரையிலும் உன்னை விமர்சித்தனர். மற்ற பட்டணங்களும் உன்னை நிந்தித்தனர். நீ அவைகளைத் தாங்கிக்கொண்டாய். உன் பாடுகளை நான் அறிவேன்”.

6. “உன் சோர்வின்மையை நான் அறிவேன். சோர்வடையாது விடாமுயற்சியுடன் இருந்தீர்கள்”.

இச்சபை வளர ஆரம்பித்தது. செயற்குழு மற்றும் சபை மக்கள், மூப்பர்கள் கூடி “அதன் வளர்ச்சியைப் பற்றி விவாதித்தனர். சோர்வில்லாமல் அவர்கள் உழைத்து அடுத்த நிலைக்குச் சென்றனர். இது பல பாராட்டுகளைப் பெற்றுக்கொண்ட மிகப்பெரிய சபையாகத் திகழ்ந்தது.

7. “நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய் ” (வசனம் 6)

இந்த நிக்கொலாய் மதஸ்தர்கள் யார்? இச் சொல்லின் பொருள் “பாமரர்களைக் கவருபவர்” அல்லது “மக்களை வெல்பவர்” என்பதாக இருக்கலாம். உறுதியாகக் கூறஇயலாது. ஆனால், மிகவும் கூர்மையான, மிகவும் அறிவார்ந்த, திறமையான, பிரபலமான, முக்கியத்துவமான தேவாலயத் தலைவரைக்கொண்ட சபையையும் குறிக்கலாம். அவர்கள் மக்களை வென்றனர். ஆனால், இயேசு இந்த நிக்கொலாய் மதத்தினரையும் அவர்கள் செயல்களையும் நீ வெறுக்கிறாய்” என்றார். எனவே இந்த சபையில் தலைவர் அனைத்தையும் செயல்படுத்துவதில்லை. இந்த சபையில் நடக்கும் யாவையும் அங்குள்ள மக்களே திட்டமிட்டு செய்தனர்.

மிகப்பெரிய பட்டணத்தில் இருந்த மிகப் பெரிய ஜனநாயக சபையான எபேசு சபையைப் பாராட்ட அநேக காரியங்கள் உண்டு. இச்சபையைப் பற்றி நேர்மறையான ஏழு காரியங்களை அவர் கூறினார். உங்களுக்குத் தெரிந்த சபைகளைப் பற்றிய ஏழு நற்காரியங்களைப் பற்றி சிந்தியுங்கள். அது அவ்வளவு எளிதல்ல; ஆனால் எபேசு சபையிலும் சில பிரச்சனைகள் இருந்தன. இத்தனை பாராட்டுக்கள் இருந்தாலும் எபேசு மக்கள் அந்த பிரச்சனைகளைக் காணவில்லை என நினைக்கிறீர்களா? எல்லாவற்றிற்கும் மேலாக, நல்லவற்றைப் பார்த்து, தீயனவற்றை புறக்கணிப்பது எளிது. அதையே நாம் அனைவரும் செய்கிறோம்.

எபேசு சபையின் காரியங்கள் சிறப்பாக நடந்து கொண்டிருந்தன. அவர்கள் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருந்தனர். அப்பகுதியில் மட்டுமல்ல, ஆசியா மைனர் முழுவதும் மிகவும் செல் வாக்கு நிறைந்த தேவாலயமாக அது மாறிக் கொண்டிருந்தது. சிலவேளைகளில் வெற்றி தலைக்கு ஏறும்பொழுது அது இருதயத்தின் அன்பை எடுத்துப்போடுகிறது.

அப்போஸ்தலனாகிய பவுலின் காலத்தில் எபேசு ஒரு துறைமுகப்பட்டினமாக இருந்தது. ஆனால் தற்போது அது நிலப்பரப்புக்குள் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. காரணம் அங்கு பாய்ந்த நதியானது பல ஆண்டுகளாக வண்டல்களை அரித்துவந்து முகத்துவாரத்தில் சேர்த்துவிட்டது. எனவே எபேசு சபை சேற்றுகளால் நிரப்பப்பட்டுவிட்டது.

எபேசு பட்டணம் ஆற்றின் வண்டல்களால் மூழ்கியது போலவே அச்சபையும் பாவத்தின் சேற்றினால் அமிழ்ந்துவிட்டது. நம்முடைய வாழ்வையும் பாவமானது கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கடித்து நம்மை கலங்கரை விளக்காகவோ அல்லது துறைமுகமாகவோ இல்லாதபடி அழித்துவிடும். இதைப்போல் நம் சபையிலும் நம் வாழ்விலும் நடந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?

பாவம் நம்மை அணுகாமல் இருக்க நாம் விழிப்புடன் இருக்கவேண்டும். நாம் திடீரென்று பாவத்தில் விழுந்துவிடுவதில்லை; நாம் பாவத்துக்குள்ளாக சறுக்கிச் செல்லுகிறோம். பாவத்தை நோக்கி வைக்கும் ஒரு சிறிய தப்படியே ஒரு மாபெரும் பாய்ச்சலாக மாறிவிடுகிறது. மற்றவர்களின் கண்டிப்புக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். நம்மைநாமே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

பாவத்தைக் குறித்து கண்டித்து உணர்த்த தேவ ஆவியானவரின் உதவியைக் கேட்கவேண்டும். தேவனுடைய வார்த்தையில் நமது நேரத்தை செலவழிப்பதில் உண்மையாயிருக்கவேண்டும். ஏனெனில் இவைகளே நம்மை பாவத்தில் விழாமலிருக்க உதவும்.

ஒரு சபை அநேக அங்கத்தினர்களைக் கொண்டிருந்தாலும், மிகப்பெரிய கட்டிடமாக இருந்தாலும், தேவனுடைய ஆவி இல்லாமல் இருப்பது சாத்தியமா? நம்முடைய திட்டங்களும், செயல்களும் இன்றைய சபையில் நாம் செய்கிற அனைத்துக் காரியங்களும் தேவனுடைய வல்லமையான ஆவி இல்லாதிருந்தால் அது எபேசு சபையைப் போல் மாறிவிடும்.

எபேசு சபையைப்பற்றி இயேசு அக்கறையுடன் கூறுவது, “மனந்திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீ மிகப்பெரிய சபையாக மாறுவதற்குச் செய்த காரியங்களை மீண்டும் செய்ய நான் விரும்புகிறேன். இல்லையெனில் உன்னிடமுள்ள விளக்குத்தண்டை அகற்றிவிடுவேன்.” ஆம். இதுதான் எபேசு சபைக்கு நடந்த சோகம். அவர்கள் மிகப்பெரிய சபையினர். மற்ற சபைகளை உருவாக்கி தங்களுடைய வீரியத்தைக் தக்கவைத்துக்கொண்டனர். நாம் பார்க்க இருக்கும் மற்ற சபைகளும் எபேசு சபையிடமிருந்து சில நன்மைகளைப் பெற்றுக்கொண்டனர்.

எபேசு சபை மிகப்பெரிய சபை; அநேக சபைகளுக்கு தாய் சபையாக இருந்து தன்னைச் சுற்றியிருந்த அநேக சிறு சபைகளுக்கு உதவியது. ஆனால் தன்னுடைய வைராக்கியத்தை இழந்துவிட்டது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண் டுகளில் கிழக்கத்திய பேராயர்களின் பிறப்பிடமாக இருந்தது. மூன்றாம் நூற்றாண்டில் (கி.பி.431) அயல் நாட்டு பொதுத்தூதர்களின் சந்திப்பு இடமாக இருந்தது.

ஐந்தாம் நூற்றாண்டில் எபேசுவின் மாபெரும் சபை இறந்துவிட்டது. அது காணப்படவில்லை. ஏனெனில் உலகத்தின் பார்வையில் வெற்றியாகத் தெரிந்த காரியங்கள் யாவும் தேவனுடைய பார்வையில் வெற்றிகரமாகத் தெரியவில்லை. எனவேதான் ஆண்டவர் இச்சபையிடம் “கவனமாக இரு; உன்னை மிகப்பெரிய சபையாக மாற்றிய என்னைப் பிரியப்படுத்தும் காரியங்களுக்குத் திரும்பிப்போ, இல்லையேல் விலையேறப்பெற்ற முத்து இல்லாத வெறும் காலி சிப்பி ஓடாகவே இருப்பாய்” என்று கூறுகிறார்.

இந்த மெகா சபையுடன் நான்கு சொற்கள் தொடர்புபடுத்தப்படுகின்றன.

முதலாவது வார்த்தை: மனந்திரும்பு

நாம் நம்முடைய வெற்றியின் களிப்பில் இருக்கும்போது, இயேசுவுடன் உள்ள உறவு குளிர்ந்து விடுகிறது. இது சிறு சபைகளுக்கு உண்மையாக இருக்கலாம். ஆனால், சிறு சபைகள் வெற்றி சபைகளாக நமது சமுகத்தில் காணப்படுவதில்லை.

இரண்டாவது வார்த்தை: நினைத்துப்பார்

உங்கள் ஆத்துமாவின் வசந்தகாலத்தை நினைத்துப் பாருங்கள். உங்கள் சபைக்கு திரளான மக்கள் வருவதற்கு முன்னரும், மிகப்பெரிய கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு முன்னரும் இருந்த ஆதிகாலத்தை நினைத்துப் பாருங்கள். தற்போது வெற்றி நிலையை அடைவதற்கு முன்னர் சபையில் அதிகமான மகிழ்ச்சி இருந்ததல்லவா?

மூன்றாவது வார்த்தை : திரும்பச் செய்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின்மேல் ஆரம்பகாலத்தில் இருந்த உற்சாகத்துக்கும் அன்புக்கும் திரும்பச்சென்று மீண்டும் தொடங்குங்கள். அந்தஸ்து, சின்னம், வெற்றி இவற்றுடன் அல்ல; இரட்சகரின் மேலுள்ள அன்புக்குத் திரும்பி செயல் படுங்கள்!

இறுதி வார்த்தை: மீண்டும் கவனம் செலுத்து.

சபை ஆரம்பிக்கப்பட்ட செயல்களும் அப்போஸ்தலர் புத்தகங்களின் நிகழ்வுகளும் 21ஆம் நூற்றாண்டு சபைகள் இழந்துவிட்டன. எனவேதான் இயேசு அப்போஸ்தலர் புத்தகத்துக்குத் திரும்பிச்செல்லுங்கள் என்கிறார். சபையின் ஆரம்பத்துக்குச் சென்று அதன் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள்.

அப்போஸ்தலர் புஸ்தகத்தில் சபைகள் செய்த பெரிய காரியங்களில் ஒன்று, அவர்கள் ஜெபத்துக்கும் வார்த்தையின் ஊழியத்துக்கும் தங்களை அர்ப்ணித்தனர். எனவேதான் அவர் “21 ஆம் நூற்றாண்டின் சபையே! உங்கள் முழங்கால்களுக்குத் திரும்புங்கள். வேதாகமத்துக்குத் திரும்புங்கள். சபையை பெரியதாக்கும் காரியங்களுக்குத் திரும்புங்கள். மீண்டும் சபை பெரிதாகட்டும். அது கிரியையில்லாத ஆபத்துக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம்.

ஹெர்ப் மில்லர் எழுதிய “Actions Speak Louder Than Words” என்ற நூலிலிருந்து ஒரு நிகழ்வை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். இது 21ம் நூற்றாண்டின் மகாபெரிய சபையிலும் நடக்க வாய்ப்பு உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கென்டக்கி மாநிலத்தில் இரு விவசாயிகள் பந்தயக் குதிரைகளின் தொழுவத்தின் உரிமையாளர்களாயிருந்தனர். அவர்களுக்கிடையே போட்டி எழுந்தது. ஒருநாள் இருவரும் அநேக தடைகளோடு கூடிய ஒரு பந்தய மைதானத்துக்குச் சென்றனர். ஒரு விவசாயி, தொழில் ரீதியான பந்தயக் குதிரை வீரர் வெற்றியடைய வாய்ப்பு நிச்சயம் என்று எண்ணி ஒருவரை வாடகைக்கு அமர்த்தினார். இரு குதிரைகளும் அப்பெரிய மைதானத்தின் இறுதிவரை சமமாகவே ஓடிச்சென்றன. ஆனால், திடீரென்று இரு குதிரைகளும் கீழே விழுந்து மேலேயிருந்த ஓட்டுநர்களையும் தள்ளிவிட்டன.

பந்தயத் தொழில் வீரன் சீக்கிரமாய் சுதாரித்து எழுந்து, குதிரையின்மேல் ஏறிச்சென்று வெற்றியைத் தொட்டான். மீண்டுமாக பந்தயம் துவங்கும் இடத்துக்கு வந்தபொழுது, அவனை வாடகைக்கு அமர்த்திய விவசாயி மிகவும் கோபமாக இருப்பதைக் கண்டான். “நான்தான் வெற்றி பெற்றுவிட்டேனே! பின்னர் ஏன் கோபம்?” என்று கேட்டான்.

“ஆம், உண்மைதான், நீ வெற்றி பெற்றுவிட்டாய். ஆனால், முடிவு எல்லைக்கு தவறான குதிரையை ஒட்டிச்சென்று சேர்ந்தாய்” என்று கர்ஜித்தார். வீழ்ச்சிக்குப் பின்னர் குதிரைப் பந்தய தொழில் வீரன் அவசரத்தில் தனது எதிராளியின் குதிரையில் ஏறிச் சென்றுவிட்டான்” என்று ஹெர்ப் மில்லர் விளக்கினார். சரியான குதிரையில் ஏறிச் சென்று இறுதி எல்லையை அடைவதே வெற்றியாகும். இதைத்தான் இயேசுவும் எபேசு சபைக்குச் சொன்ன செய்தியாகும்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை