• Dr.எம்.எஸ்.வசந்தகுமார் •
(செப்டம்பர் – அக்டோபர் 2024)

Dr.எம்.எஸ்.வசந்தகுமார்

பிதாவாகிய தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிகிற அறிவினால் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

“வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்” என்று கட்டளையிட்ட நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து “என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே” என்றார் (யோவான் 5:39) வேதவாக்கியங்களை வெறுமனே வாசிக்கும்படி இயேசுகிறிஸ்து கட்டளையிடவில்லை. மாறாக, ஆராய்ந்து பார்க்கும்படியே அறிவுறுத்தியுள்ளார். வேதவாக்கியங்கள் அவரைப்பற்றி சாட்சி கொடுப்பவைகளாதலால், அவைகளை ஆராய்ந்து பார்த்தால்மட்டுமே இயேசுகிறிஸ்துவை அறிந்து கொள்ளலாம். பிரபல வேதவியாக்கியானியான மேத்யூ ஹென்றி: “வேதாகமமெனும் நிலத்தில் புதைந்திருக்கும் மாணிக்கமே இயேசுகிறிஸ்து” என அழகாக இவ்வுண்மையை விளக்கியுள்ளார். உண்மையில் மாணிக்கம் தேவையாயின், நாம் நிலத்தைத் தோண்டி மண்ணை அகழ்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் அம்மண்ணை நன்கு பரிசோதித்துப் பார்க்கவேண்டும். அப்போதுமட்டுமே மாணிக்கக் கற்களை நம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அதேபோலதான் வேதாகமத்தையும் வெறுமனே வாசிப்பதனால் அல்ல, ஆராய்ந்து பார்த்தால்மட்டுமே. அவைகள் சாட்சி கொடுக்கும் இயேசுகிறிஸ்துவை நாம் கண்டடையலாம்.

உண்மையில் முழுவேதாகமமும் இயேசு கிறிஸ்துவைப்பற்றியே நமக்கு அறியத்தருகின்றது.

இயேசுகிறிஸ்து பிறப்பதற்கு முன்பே எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டில் அவரைப்பற்றி என்ன உள்ளது என நாம் வினவலாம். ஆனால் இயேசுகிறிஸ்துவே மோசேயின் நியாயப் பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் தன்னை பற்றி எழுதப்பட்டுள்ளன (லூக்.24:44)” என கூறியதோடு, தன்னுடைய சீடர்களுக்கு “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறவைகளை விவரித்துக் காண்பித்தார்” (லூக்கா 24: 27).

புதிய ஏற்பாட்டில் நற்செய்தி நூல்கள் அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கையில் அப்போஸ்தலருடைய நடபடிகள் அவர் தம் அப்போஸ்தலர்களுக்கூடாகச் செய்தவைகளைப்பற்றியும் நிருபங்கள் அவர் அப்போஸ்தலர்களுக்கூடாக உபதேசித்த சத்தியங்களையும் கொண்டுள்ளதோடு, கடைசிப் புத்தகம் அவருடைய வெளிப்படுத்தலாயுள்ளது. அதாவது முழுவேதாகமமும் இயேசுகிறிஸ்துவைப் பற்றியே நமக்கு அறியத்தருவதாயுள்ளது. எனவே 16ஆம் நூற்றண்டு சபைச் சீர்திருத்தத்தின் தந்தையான மார்டின் லூத்தர் அறிவுறுத்தியது போல, “குழந்தையைப் பார்ப்பதற்காகமட்டுமே நாம் தொட்டிலண்டை செல்வதுபோல இயேசு கிறிஸ்துவைப் பார்ப்பதற்காகமட்டுமே நாம் வேதப் புத்தகத்திடம் வரவேண்டும். உண்மையில்ஜாண் பிளான்சார்ட் கூறியதுபோல “தேவனுடைய வார்த்தையைக் கற்பது கிறிஸ்துவைக் கண்டடையவே” என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்க்க இயேசுகிறிஸ்து சொல்லக் காரணமாயிருந்தது அவைகள் அவரைப் பற்றி சாட்சி கொடுப்பதனாலேயேயாகும். எனவே இயேசுகிறிஸ்துவைக் கண்டடைய வேண்டும் எனும் நோக்கத்துடனேயே நாம் வேதாகமத்தை ஆராய ஆரம்பிக்க வேண்டும். யோவான் 5:39 இல் “ஆராய்ந்து” என்பதற்கு உபயோகிக்கப்பட்டுள்ள கிரேக்க பதம் வேட்டுவத் தொழிலுடன் சம்பந்தப்பட்டதாகும். மிருகமொன்றின் காலடிச் சுவடுகளை நிலத்தில் வேடனொருவன் கண்டால், அக்காலடிச் சுவடுகளைத் தொடர்ந்து சென்று மிருகத்தின் இருப்பிடத் தைக் கண்டுபிடித்துவிடுவான். அதேபோலதான் பழைய ஏற்பாட்டை நாம் ஆராயும்போது அவை எவ்வாறு கிறிஸ்துவுக்கு முன்னடையாளமான சம்பவங்களைக் கொண்டுள்ளது என்பதை கவனித்து, அது காட்டும் வழியில் தொடர்ந்து சென்று இயேசுவைக் கண்டடைய வேண்டும். இல்லையென்றால், நம்முடைய வேதவாசிப்பு அர்த்தமற்றதாகவே இருக்கும்.

இன்று அநேகர் வேதவாக்கியங்களை வாசிக் கின்றார்கள். ஆனால் எல்லோருமே அவைகளில் இயேசுவைக் காணவேண்டும் எனும் நோக்கத்தோடு வாசிப்பதில்லை. சிலர் தங்களுடைய சுய அபிப்பிராயங்களுக்கும், அனுபவங்களுக்கும் உபதேசங்களுக்குமான ஆதாரங்களைத் தேடுவதற்காக வாசிக்கின்றார்கள். வேறு சிலர் பிழைகளைக் கண்டுபிடிப்பதற்காகவும், இன்னும் சிலர் தர்க்கங்களுக்காகவும் வேதத்தை ஆராய்கின்றார்கள். இவர்கள் எல்லோரும் வேதவாக்கியங்களை ஆராய்வதற்காக இயேசுகிறிஸ்து தெரிவித்த காரணத்தை அறியாதவர்களாகவும், அதைப்பற்றிய அக்கறையற்றவர்களாகவும், அதை அலட்சியம் செய்பவர்களாகவுமே இருக்கின்றனர். இதனால் நாம் அனைவரும் ஜாண் சார்ட் என்பாரின் அறிவுரைகளின்படி வேதவாக்கியங்களை ஆராயவேண் டியது அவசியமானதாயுள்ளது. அவர் தான் எழுதிய The Bible Book for Today எனும் நூலில் நம்மை பின்வருமாறு எச்சரிக்கிறார்.

“இயேசுவெனும் குழந்தை பள்ளிகொள்ளும் முன்னணையே வேதவாக்கியமாகும். எனவே முன்னணையைப் பரிசீலித்துப்பார்ப்பதில் நேரத்தை செலவழிப்பதில் குழந்தையை வழிபடுவதை மறந்துவிடாமலிருக்க வேண்டும். மட்டுமல்ல, இன்றும்கூட மக்களை இயேசுவண்டை வழிநடத்திச்செல்லும் நட்சத்திரமாக வேதபுத்தகம் உள்ளது. வானசாஸ்திரத்திலுள்ள ஆர்வம் காரணமாக, அந்நட்சத்திரம் இயேசு இருக்கும் இல்லத்தைக் காட்டுவதைக் கவனியாதிருந்து விடக்கூடாது. அத்தோடு, இயேசுவெனும் விலையேறப்பெற்ற முத்துக்களைக்கொண்ட பெட்டியே வேதாகமமாகும். பெட்டியின் அழகைப் புகழ்வதில் உள்ளிருக்கும் முத்துக்களைப் பாராமலிருந்துவிடக் கூடாது.”

இயேசுகிறிஸ்துவை அறிவதற்கான ஒரே ஒரு வழி வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்ப்பதேயாகும். ஏனெனில் அவரைக் குறித்து சாட்சி கொடுப்பவைகள் அவைகளே! எனவே வேதவாக்கியங்களை வெகுசிரத்தையோடு வாசிக்கவேண்டும். நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள் (2 பேதுரு 3:18) என பேதுரு கட்டளையிட்டுள்ளார். வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தால்மட்டுமே இது சாத்தியமாகும்.

சத்தியவசன வாசகர்கள் அனைவரும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து, இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளரவேண்டும் என்பதே என் வாஞ்சையும் வாழ்த்துமாகும். தேவ கிருபை உங்களை நடத்துவதாக.