• Dr.தியோடர் எச்.எஃப். •
(செப்டம்பர் – அக்டோபர் 2024)
9. காலங்களின் காலங்கள்

Dr.தியோடர் எச்.எஃப்.
நித்தியம்,புதிய காரியங்களை காணும்படி செய்கிறது. வீழ்ச்சியடைந்த மனிதனின் மற்ற ஏழு காலங்களோடு எவ்வித தொடர்புமில்லை. பழைய ஒழுங்கும் முந்தைய காரியங்களும் இனி இல்லை. அந்த இடத்தில் நித்திய பரிபூரண ஆசீர்வாதம் என்றும் நிலைத்திருக்கும்.
ஏழு என்பது பரிபூரணத்திற்கான தேவனுடைய எண்ணிக்கை ஆகும். ஏழு காலங்கள் (யுகங்கள்) முடிந்த பின்னர் இந்த பாவ உலகத்தைப் பொறுத்த மட்டில் தேவனுடைய திட்டம் முற்றுப்பெறுகிறது.
எட்டு என்பது புது தொடக்கத்தில் தேவனின் எண்ணாகும். அதுதான் எழுத்தின்படி நித்தியத்தைக் குறித்ததான இந்த பாடத்தில் நம்முன் இருக்கிறது.
இந்த முடிவில்லா காலத்திற்கு முன்பு கோகு, மாகோகு தண்டிக்கப்படுகின்றனர். இக்காலத்திற்கு முன்பு சாத்தானுக்கான தண்டனையும் அவிசுவாசிகளுக்கான நியாயத்தீர்ப்பும் தரப்படுகின்றன (வெளி.20:7-15).
வானமும் பூமியும் புதுப்பிக்கப்படுகிறது!
வானமும் பூமியும் புதுப்பிக்கப்படுதல் பற்றி 2 பேதுரு 3:10-13இல் விவரிக்கப்பட்டுள்ளது. இப் பகுதியில் வானம் என்று குறிப்பிட்டுள்ளது. இது முதல் வானமானது வளிமண்டல வானமாகும். மூன்று வானங்கள் இருப்பதாக வேதவசனம் நமக்குப் போதிக்கிறது. வளிமண்டல வானம், கிரகங்களின் வானம் மற்றும் தேவனின் வாசஸ்தலமான பரதீச வானம். வளிமண்டல வானமானது சாத்தான் கிரியை செய்கிற இடமாதலால், அவன் “வானமண்டல வல்லமையின் அதிபதி” எனக் கருதப்படுகிறான். இது புதுப்பிக்கப்படும். அதோடு நாம் வசிக்கும் பூமியும் புதுப்பிக்கப்படும். “ஒழிந்து போகும்” (2 பேதுரு 3:10) “கடந்துபோகும்” என்ற வார்த்தைகள்(வெளி.21:1). “பரேலூசன்டல்” (parel-eusontal) என்ற கிரேக்க வார்த்தையின் மொழியாக்கமாகும். அது ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குக் கடந்துவருதல் என்பதாகும். அதாவது, முற்றிலும் அழிக்கப்பட வேண்டுமென்ற அவசியமில்லை.
சங்கீதம் 104:5இல் பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார் என்று நாம் வாசிக்கிறோம். எனவே இந்த புதுப்பித்தலால் இது பாதிக்கப்படுவதில்லை. பாவத் தினால் கறைப்பட்ட இந்த பூமி மற்றும் வானமண் டலம் முற்றிலும் சுத்திகரிக்கப்படும். அங்கே புதிய வானமும் புதிய பூமியும் உண்டாயிருக்கும். இந்த நிலையில் பூமியானது என்றென்றும் மாறாது நிலைத்திருக்கும் (ஏசா.66:22). இந்தப் புதுப்பித்தலில் பூமியின் அஸ்திபாரம் மாற்றப்படாமல் அப்படியே இருக்கும், மேற்பரப்பு மட்டுமே பாதிக்கப்படும் என்ற நிலையில் பிடிவாதமாக வலியுறுத்த தேவையில்லை. மனிதன் மற்றும் தூதர்களின் நித்திய எதிர்காலத்திற்காக செய்யப்படும் எதுவுமே முற்றிலுமாக புதிதாக்கப்படும்.

ஏழு புதிய காரியங்கள்
1. புதிய பூமி (வெளி.21:1).
2. புதிய வானம் (வெளி.21 : 1,2). இது புதிய வாயு மண்டல வானத்தைக் குறிக்கிறது.
3. புதிய மனிதர்கள் (வெளி.21:3-5). இவர்கள் ஒரு காலத்தில் பாவத்தில் உலகில் வாழ்ந்து புதிய மாற்றப்பட்ட இதயங்களைப் பெற்றவர்கள். கிறிஸ்துவிடமிருந்து இவர்கள் புதுஜீவன் பெற்று இந்த புதிய பூமியில் புதிய சரீரத்தைப் பெறுவார்கள். அவர்கள் முற்றிலும் புதிதாக்கப்பட்டு இனி ஒருபோதும் பாவத்தில் விழமுடியாதவாறு இருப்பார்கள்.
4. புதிய எருசலேம் (வெளி.21:10-27). தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட ஒரு நகரம் இப்போது அவருடைய வானத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வரப்படும். இயேசு தமது சீஷர்களிடம், உங்களுக்கு ஒரு வாசஸ்தலத்தை நான் ஆயத்தம் பண்ணபோகிறேன் என்று கூறினார் (யோவா. 14:2-4). பரலோகத்திலிருந்து பூமிக்குக்கொண்டு வரப்பட இருக்கும் இந்த புதிய எருசலேமைத்தான் அவர் குறிப்பிட்டார் என்பதில் ஐயமில்லை. அதுதான் உலகத்திற்கு, ஏன் அண்டசராசரத்திற்கும் தலைநகரமாக இருக்கும். இந்த புதிய எருசலேமில் கிறிஸ்துதாமே இருப்பார். அங்கிருந்து அவர் பூமியையும் அண்ட சராசரத்தையும் ஆண்டு ஒழுங்குபடுத்துவார்.
5. புதிய ஆலயம் (வெளி. 21:22). சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.
6. புதிய வெளிச்சம் (வெளி.21:23-25). சூரியனிடமிருந்து வெளிச்சம் வராது. ஆனால் தேவனிடமிருந்து ஒளிவரும். இது தேவனுடைய ஷெக்கினா மகிமையாகும். அந்த ஒளி வெளிச்சத்தில் மனிதர்கள் பார்க்கவும், புதிய பூமியில் பயணிக்கவும் செய்வர்.
7. புதிய பரதீசி (வெளி.22:1-5). வெளிப்படுத்தல் 22ஆம் அதிகாரத்தில் இந்த புதிய பரதீசி பற்றிச் சொல்லப்படுகிறது. இது தேவனுடைய பிள்ளைகளான மக்களுக்கானதாகும்.
“இனி இல்லை” என்ற ஒரு காலம்
நித்தியத்தில் பூரண சந்தோஷம் உண்டாயிருக்கும். வெளிப்படுத்தல் 21இல் தேவன் 10 முறை “இனி இல்லை” என்று கூறியுள்ளார்.
1. சமுத்திரம் இராது (வச.1)
2. மரணமில்லை (வச.4)
3. துக்கமில்லை (வச.4)
4. அலறுதல் இல்லை (வச.4)
5. வருத்தமில்லை (வச.4)
6. தேவாலயமில்லை (கைகளால் செய்யப்பட்டது) (வச.22)
7. சூரியன் இல்லை (வச.23)
8. சந்திரன் இல்லை (வச.23)
9. இரவு இல்லை (வச.25)
10.அருவருப்பு இல்லை (வச.27)
(முற்றிற்று)
மொழியாக்கம்: Bro. A.Manuel