சத்திய வசனம் பங்காளர் மடல்

(நவம்பர் – டிசம்பர் 2024)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினால் அன்பின் வாழ்த்துக்கள்.

ஆண்டவருடைய பெரிதான கிருபையால் இவ்வருடத்தின் கடைசி மாதத்திற்குள் பிரவேசிக்க தேவன் நமக்கு கிருபைசெய்திருக்கிறார். இந்த கிறிஸ்துமஸ் நாட்கள் நமக்கும் நம் குடும்பத்திற்கும் ஆசீர்வாதமாய் அமைய வேண்டுதல் செய்கிறோம். நாட்களை விசேஷித்துக் கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான் (ரோமர் 14:6) என்ற வேதவாக்கின்படி விசேஷித்த இந்த நாட்களில் நாம் வாழும் பகுதியில் உள்ள ஆண்டவரை அறியாத மக்களுக்கு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை அறிவிக்க நாம் யாவரும் முன்வருவோம்.

இவ்வாண்டு முழுவதும் சத்தியவசன ஊழியத்தை தங்கள் உதாரத்துவமான காணிக்கையாலும் ஜெபத்தாலும் தாங்கின அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். தேவன் அற்புதவிதமாய் இவ்வூழியத்தின் தேவைகளை சந்தித்து வந்திருக்கிறார். இவ்வூழியங்களின் வாயிலாக தாங்கள் பெற்ற ஆவிக்குரிய நன்மைகளை எங்களோடு பகிர்ந்துகொண்ட அனைத்து பங்காளர்களுக்காகவும் தேவனைத் துதிக்கிறோம். சத்தியவசன வெளியீடுகளை தங்கள் நண்பர்களுக்கும் விசுவாச குடும்பங்களுக்கும் அறிமுகப்படுத்த அன்பாய் கேட்கிறோம். இவ்வாண்டிலும் தங்களது ஆதரவாளர் காணிக்கையாலே தொலைக்காட்சி ஊழியத்தைத் தாங்கின ஆதரவாளர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம். வருகிற புதிய ஆண்டிலும் ஆதரவாளர்கள் திட்டத்தில் இணைந்து தாங்க அன்பாய் வேண்டுகிறோம்.

இவ்விதழில் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் என்ற தலைப்பில் சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் அளித்த சிறப்புச்செய்தியும், சாஸ்திரிகள் என்ற தலைப்பில் கலாநிதி தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும், பேராசிரியர் S.C.எடிசன் அவர்கள் வழங்கிய நமக்கொரு பாலகன் பிறந்தார் என்ற தலைப்பிலான சிறப்பு கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. மேலும் இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார் என்ற தலைப்பில் கிறிஸ்துமஸ் சிறப்புச் செய்தியை Dr.வாரன் W.வியர்ஸ்பி அவர்கள் எழுதியுள்ளார்கள். இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வெளிப்பட்டதன் நோக்கம் என்ற தலைப்பில் சகோ.K.P.ஆபிரகாம் அவர்கள் எழுதியுள்ள சிறப்பு செய்தியும், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து தொடர்செய்தியாக சிமிர்னா சபையைப் பற்றி Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய வேதபாடமும், வருடத்தின் இறுதியில் நாம் சிந்தித்து பார்க்க வேண்டியதும், தேவனுக்கு நன்றி செலுத்தவேண்டியதுமான காரியங்களை அறிந்து கொள்ளும்படி சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய நன்றி செலுத்துவோமா! என்ற சிறப்புச் செய்தியும் இடம் பெற்றுள்ளது.

இவ்விதழில் இடம்பெற்றுள்ள அனைத்து செய்திகளும் அனைவரின் ஆவிக்குரிய வாழ்விற்கும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசன ஊழியத்தின் சார்பாக இனிய கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும் (எண்ணாகமம் 24:17).