• கலாநிதி தியோடர் வில்லியம்ஸ் •
(நவம்பர் – டிசம்பர் 2024)

கலாநிதி தியோடர் வில்லியம்ஸ்
கிறிஸ்துமஸ் சம்பவங்களிலே பயப்படாதே, பயப்படாதே என்று பலரிடம் சொல்லப்பட்டதை நாம் காணமுடியும். சகரியாவிடம் தூதன் பயப்படாதே என்று சொல்லும்போது அது நம்பிக்கையின் சொல்லாயிருந்தது. அதேபோல மரியாளுக்கு தைரியத்தின் சொல்லாயும், யோசேப்பிற்கு நிச்சயத்தின் சொல்லாயும், மேய்ப்பருக்கு அங்கீகரிப்பின் சொல்லாயும் அவ்வார்த்தை காணப்பட்டது. ஏரோதுவுக்கோ பயப்படாதே என்ற சொல் சொல்லப்படவேயில்லை. ஆனால், ஏரோதுவுக்கு எச்சரிக்கையின் சொல்லாக தேவன் ஏரோதுவோடு பேசினார். அதேவேளை சாஸ்திரிகளுக்கும் தேவனுடைய வார்த்தை ஆலோசனையின் வார்த்தையாக இருந்தது. இதைக் குறித்து தியானிப்போம்.
சாஸ்திரிகள் எத்தனைபேர் வந்தனர் என்று வேதத்திலே சொல்லப்படவில்லை. ஆனால், அவர்கள் கொடுத்த சன்மானங்கள், ஈவுகள் இவற்றை வைத்து மூன்று பேர் இருந்திருக்கலாம் என்று நாம் யூகித்துக்கொள்ளலாம். அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள் (மத்.2:11) என்று பார்க்கிறோம். இவ்வாறு மூன்றுவிதமான வெகுமதிகளைக் கொடுத்தனர். ஆகையினாலே மூன்று சாஸ்திரிகள் வந்து ஒருவர் பொன்னையும், ஒருவர் தூபவர்க்கத்தையும், ஒருவர் வெள்ளைப்போளத் தையும் கொடுத்திருக்கலாம் என்று நாம் ஊகித்துக் கொள்கிறோம்.
கிறிஸ்துமஸ் நாட்களிலே அந்த நிகழ்ச்சியை அவ்விதமாகத்தான் சிறுபிள்ளைகளும் பெரியவர்களும் நடித்துக்காட்டுகின்றனர். ஆனால், எத்தனை பேர் என்று வேதம் சொல்லவில்லை. இந்த சாஸ்திரிகள் கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் அவர்கள் யூதர்கள் அல்ல. ஒருவேளை பாரசீக மார்க்கத்தைச் சார்ந்தவர்களாய் இருந்திருக்கலாம். ஆனால், அவர்களும் உண்மையான தேவனை வணங்கினவர்கள்தான். மேசியா பிறப்பார் என்கிற நம்பிக்கை அவர்களுக்குள் இருந்தது. ஒருவேளை பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களை அவர்கள் அறிந்தவர்களாய் இருக்கலாம். அப்படிப்பட்ட நிலையிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டார்கள். ஏதோ ஒரு அடையாளம் வானத்திலே அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் வானத்தில் இருக்கின்ற நட்சத்திரங்களையும் அடையாளங்களையும் ஆராய்ந்துகொண்டு வருகிறவர்களானபடியினாலே அந்த அடையாளத்தினாலே அவர்கள் வலியுறுத்தப்பட்டு மேசியாவைத் தேடி வந்தார்கள். ஆனால், தேடி வந்தவர்கள் தவறான இடத்திற்கு போய்விட்டனர். ஏரோதுவின் அரமனைக்கு சென்றுவிட்டனர். அதுதான் இங்கு பிரச்சனையை உண்டாக்கிவிட்டது.
ஏரோது அதைக் குறித்து கேள்விப்பட்டு கலக்கமடைந்தான். எருசலேம் நகரத்தார் அனைவரையும் கலக்கிவிட்டான். அது மட்டுமல்ல, ஏரோது அநேக இரண்டு வயதுக்குட்பட்ட ஆண்பிள்ளைகளை அநியாயமாய்க் கொன்றான். குழந்தையாகிய இயேசுவுக்கும்கூட ஆபத்து இருந்தது. இதற்கெல்லாம் ஒருவேளை இந்த சாஸ்திரிகள் செய்த தவறுதான் காரணமா? தவறான இடத்திற்கு சென்றார்களே. வசனத்தையும் தீர்க்கதரிசனங்களையும் ஆராய்ந்து இருக்கவேண்டுமல்லவா? நட்சத்திரத்தை பின்பற்றி இருக்கவேண்டுமல்லவா? நட்சத்திரம் நிச்சயமாக ஏரோதுவின் அரமனைக்கு அவர்களை நடத்தி இருக்கமுடியாது. சிலவேளைகளில் நாமும் இப்படிதான் தவறு செய்து விடுகிறோம். ஆண்டவரின் அழைப்பைப் பெறுகிறோம். அவர் நம்மை ஒரு குறிப்பிட்ட வழியிலே நடக்க சொல்லுகிறார் என்று அறிந்துகொண்டு தொடர்ந்து அவரை சார்ந்து இருப்பதில்லை. அவருடைய வசனத்தை ஆராய்ந்துபார்த்து அவருடைய வழி நடத்துதலை பெற்றுக்கொள்வதில்லை.
சூழ்நிலைகளைப் பார்க்கிறோம். மனித ஆலோசனையை கேட்கிறோம். நம் சொந்த புத்தியின்மேல் சார்ந்து நம் சொந்த வழியிலே சென்றுவிடுகிறோம். அதன்மூலமாய் எவ்வளவு ஆபத்துகள் ஏற்படுகின்றது அல்லவா? நமக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஆபத்துதான். ஒருவேளை இந்த கிறிஸ்துமஸ் நாட்களிலே இப்படி நன்றாய் ஆரம்பித்து பிறகு வழிதப்பிப்போய் உன் சொந்த வழியிலே சென்றுவிட்டதினாலே உன் வாழ்க்கையிலே பல காயங்கள், பல தோல்விகள், வீழ்ச்சிகள் என்ற நிலையிலே இருக்கிறீர்களா?
என் அருமையான சகோதரனே, சகோதரியே உங்களுக்கும் “பயப்படாதே” என்ற சொல் வருகிறது. ஆம், சாஸ்திரிகள் தவறாய் சென்றுவிட்டனர். ஏரோது கேள்விப்பட்டவுடன் “அவர் எங்கே பிறப்பார்” என்று அங்கு கூடியிருந்த பிரதான ஆசாரியர், வேதபாரகர் எல்லாரையும் அழைத்து அவர்களிடத்தில் கேட்டான். பெத்லகேமிலே அவர் பிறப்பார் என்று அறிந்துகொண்டான். ஆகையினால் தான் பெத்லகேமில் உள்ள இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளை அவன் கொன்றான் என்று பார்க்கிறோம்.
சாஸ்திரிகள் பிறகு நட்சத்திரத்தைக் கண்டுகொண்டார்கள். மத்தேயு 2:9ஆம் வசனத்தை எடுத்துப்பாருங்கள். ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்கு மேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தையே பின்பற்றி வந்திருக்கவேண்டும். ஆனால், வழிதவற விட்டுவிட்டார்கள். அதுமட்டுமல்ல, வசனத்தையும் அவர்கள் அறியவில்லை. நம்முடைய வாழ்க்கையிலும் பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலையும், அவருடைய உள்உணர்வுகளையும் வழி நடத்துதலையும் அறியாமல் எவ்வளவு தவறு செய்துவிடுகிறோம். மேலும் வசனத்தை அறியாதபடியினாலே தவறுகளை செய்துவிடுகிறோம்.
அருமையான தேவமக்களே, தெய்வ வசனத்திற்கு கொடுக்கவேண்டிய இடத்தை வாழ்க்கையிலே கொடுக்கவேண்டும். பரிசுத்த ஆவியானவர் சொல்லுவதை கேட்கவேண்டும். அவர்தாமே நம்மை வழிநடத்துகிறார். மனிதர்கள் அல்லவே. அல்லது நமது சொந்த புத்தி அல்லவே. சொந்த புத்தியைச் சார்ந்து தீர்மானங்கள் எடுப்போமானால் தவறிவிடுவோம். மற்றவர்களுக்கும் அதினாலே ஆபத்து ஏற்படக்கூடும்.
இந்த சாஸ்திரிகளுக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டது. எப்படியெனில், அவர்கள் ஒரு வேளை ஏரோதுவின் தயவை நாடி ஏரோதுவைப் பிரியப்படுத்துவதற்காக குழந்தை இயேசுவைச் சந்தித்துவிட்டு மறுபடியும் ஏரோதுவைக் காணச் சென்று இருப்பார்களேயானால் ஏரோது அவர்களையும்கூட கொன்றுபோட்டிருப்பான். இப்படி ஒரு பெரிய ஆபத்து அவர்களுக்கு காத்திருந்தது. ஆனால் தேவன், “பயப்படாதே” என்று மற்றவர்களுக்கு சொன்னவர் இவர்களுக்கு என்ன சொன்னார்? அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள் (மத்.2:12).
இதைக் கேள்விப்பட்ட ஏரோது அதிகமாக கோபப்பட்டு இரண்டு வயதிற்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலை செய்தான் என்று 16வது வசனத்திலே பார்க்கிறோம். சாஸ்திரிகள் தேவனால் எச்சரிக்கப்பட்டார்கள். பயப்படாதிருங்கள்!! நான் உங்களை காத்துக்கொள்வேன். வேறு வழியிலே செல்லுங்கள் என்று தேவன் அவர் களை வழிநடத்தினார்.
என் அருமையான சகோதரனே, சகோதரியே உங்கள் வாழ்க்கையிலே தவறான தீர்மானங்கள் செய்து சுயபுத்தியை சார்ந்து உங்களது சொந்த வழியிலே சென்றது போதும். இந்த கிறிஸ்துமஸ் நாட்களிலே, உங்களைப் பார்த்துப் பயப்படாதிருங்கள்! நான் உங்களை வேறு வழியிலே நடத்துகிறேன் என்று தேவன் அழைப்பாரானால் உங்கள் வாழ்க்கையை முழுவதுமாய் அவர் கரத்தில் ஒப்புக் கொடுத்துவிடுங்கள். ஏரோதுவினிடத்தில் மறுபடியும் நீங்கள் போகவேண்டாம் என்று சாஸ்திரிகளிடம் சொன்னாரே! அவ்வாறு உங்களையும் பார்த்து அப்படி ஏதாவது ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை வழியைப்பற்றி அல்லது குறிப்பிட்ட உறவைப்பற்றி, நட்பைப்பற்றி தேவன் எச்சரிக்கிறாரா? பல பழக்கங்களைக் குறித்து எச்சரிக்கின்றாரா? வேறு வழியிலே செல் என்று உங்களை அழைக்கிறாரா? அவரது எச்சரிப்பைப் பெற்றுக்கொள்வோம். அவருடைய ஆறுதலைப் பெற்றுக்கொள்வோம். அவருடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்வோம். அப்பொழுது நமக்கும் ஒரு நல்ல எதிர்காலம் உண்டு. இந்த சாஸ்திரிகள் வேறு வழியாய் சென்றார்கள். அவர் கள் தங்கள் வாழ்க்கையை காத்துக்கொண்டார்கள். அதையே நாமும் செய்வோமானால் நமக்கும் நல்வாழ்வு உண்டு.
நினைவுகூருங்கள்!
நமது உள்ளத்தில் இயேசு பிறக்காதவரைக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை அர்த்தமற்றதாகவே இருக்கும்!