• Prof.S.C.எடிசன் •
(நவம்பர் – டிசம்பர் 2024)

Prof.S.C.எடிசன்
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்திலே சத்திய வசன வாசகர்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர்; ஆலோசனை கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு என்னப்படும் (ஏசாயா 9:6).
“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்” என்ற வேத வாக்கியத்திலிருந்து இயேசுவுக்கு “பாலகன்” என்று பெயர் குறிப்பிடப்பட்டதை அறிகிறோம். இந்தப் பாலகனைக் குறித்து வேதத்திலே ஐந்து காரியங்களைக்குறித்துத் தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் சொல்லியிருந்தார்கள்.
முதலாவதாக, ஏசாயா 8ஆம் அதிகாரத்திலே ஒரு பாலகனைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பாலகன் நடக்கப்போகிற காரியங்களுக்கு ஒரு அடையாளமாக இங்கே சொல்லப்பட்டிருக்கிறான். 18ஆவது வசனத்திலே, “இதோ நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலிலே அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்” என்று வாசிக்கிறோம். அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கின்ற பாலகன் பிறந்தபொழுது தேசம் எப்படி இருந்தது? 22ஆம் வசனத்தில், இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும். இடுக்கத்தால் இருளடைந்து அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்தகாரத்திற்கும், இருளுக்கும் ஒரு அடையாளமாக அந்தப் பாலகன் பிறந்திருந்தான்.
அதேவேளையில் ஏசாயா 9ஆம் அதிகாரத்திலே, இன்னொரு பாலகனைக் குறித்துப் பார்க்கிறோம். இந்த பாலகன், அவர் நமக்குக் கொடுக்கப்பட்டார் என்று சொல்லியிருக்கிறது. எதற்காகக் கொடுக்கப்பட்டார் என்றால், இருளிலுள்ள ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் காணும்படியாக நமக்கு இந்தப் பாலகன் கொடுக்கப்பட்டார். இந்தப் பாலகனைக் குறித்து வேதவசனங்களை நாம் தியானிக்கும்பொழுது ஐந்து காரியங்களை நாம் பார்க்கலாம்.
1. கிருபையின் பாலகன்:
லூக்கா 1:28-30இல் மரியாளின் வயிற்றில், இந்தப் பாலகன் உருவாகுமுன்னதாகவே அவளுக்கு சில காரியங்கள் சொல்லப்பட்டன. வசனம் 28-ல், அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து, கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார். ஸ்திரீகளுக்குள்ளே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். வசனம் 30-ல், மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய் என்றான். அவள் கர்ப்பவதியாகிறதை தேவனுடைய பெரிய கிருபையாக சொன்னான். அந்தப் பாலகன் பிறக்கும்போதே, கிருபையின் பாலகனாகப் பிறக்கிறார். யோவான் 1:14-16-ல், அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும். சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார். அவருடைய பரிபூரணத்தினாலே நாம் எல்லாரும் கிருபை மேல் கிருபை பெற்றோம். பாலகன் பிறந்ததினாலே, கிருபை மேல் கிருபை பெற்றோம்.
அந்தப்பாலகன் வளர்ந்தபோதும் லூக்கா 4:22-ல், எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவர் வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இந்த பாலகன் பிறந்தது முதல் அவர் மரிக்கும் வரைக்கும் கிருபை நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார். அவருடைய கிருபைக்கு நான் பாத்திரவானாக மாறுவது எப்படி?
ஒருநாளில் ஓரு ஆயக்காரன் ஆலயத்திலே நின்று தன் பாவங்களை உணர்ந்தவனாய் மார்பில் அடித்துக்கொண்டு “தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்று கிருபைக்காகக் கெஞ்சினான். தன்னுடைய சுய நீதியை வைக்காமல் தனக்கு வைப்பதற்கு ஒன்றுமில்லை என்று உணர்ந்து இந்தப் பாலகனை நோக்கி “என்மேல் கிருபையாயிரும்” என்றபொழுது கிருபை நிறைந்த தேவன் அவனை நீதிமானாக்கினார். அதேவழிதான் நமக்கும் உண்டு. “பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்” என்று ஆண்டவரிடத்தில் கூறுவோம்.
2. ஆராதனையின் பாலகன்:
அவர் பிறந்தபொழுது, மத்தேயு 2ஆவது அதிகாரத்திலே கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் வந்து “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?” என்று ஏரோதினிடத்திற்குப் போய் விசாரித்துக் கொண்டு பின்பு நட்சத்திரத்தினாலே பிள்ளை இருந்த வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதன் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள் (மத்.2:11).
ஆராதனை என்பது நம்மை தாழ்த்துவதும் தேவனை உயர்த்துவதுமாகும். இந்த சாஸ்திரிகள் வந்து பாலகனாகப் பிறந்த இயேசுவைத்தான் வணங்கினார்கள். மரியாளையோ வாழ்த்தினார்கள். அந்த இயேசுவுக்குத்தான் தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள். ஆகவே, இந்தப் பாலகன் ஆராதனைக்குரிய பாலகன்! அவர் ஒருவரே ஆராதனைக்குரியவர்!!
நாம் அவரை ஆராதிக்கும்பொழுது என்ன நடக்கும்? அந்த தரியுராஜா தானியேலை சிங்கக் கெபிகளுக்குள் போட்டபொழுது, ராஜா தானியேலிடத்தில் வந்து; ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று கேட்டான். அப்பொழுது தானியேல் சொன்னான், “ஆம், என் தேவன் என்னைத் தப்புவித்தார் என்று சொன்னார்”. ஆராதனையின் தேவனை ஆராதிக்கும்பொழுது, நாம் சிங்கம் போன்ற பிசாசுக்கும், அவனது வஞ்சக நரிகளுக்கும் தப்புவிக்கப்படுவோம், விடுவிக்கப்படுவோம்.
3. பிரகாசிக்கிற ஒளியான பாலகன்:
இந்தப் பாலகன் பிரகாசிக்கிற ஒளியான பாலகன்! லூக்கா 2:30-ல் சிமியோன் தேவாலயத்தில் இயேசு என்னும் பிள்ளையை கைகளில் ஏந்திக்கொண்டு புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியைக் கண்டேன், சமாதானத்தோடே போகிறேன் என்று சொன்னார். உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி (யோவான் 1:9). என்னையும் உங்களையும் பிரகாசிப்பிக்கிற ஒளி, இந்த இயேசு பாலகன்தான்.
எப்படி பிரகாசிக்கப்பண்ணுகிறார்? ஒரு மெழுகுவர்த்தி தானாக வெளிச்சம் தருவதில்லை. அது எரிந்து உருகும் பொழுதுதான் வெளிச்சம் கொடுக்கிறது. தன்னையே அழித்துத்தான் தரணிக்கு வெளிச்சம் கொடுக்கிறது. அதேபோல் நமக்காக தம்மையே சிலுவையிலறையப்பட ஒப்புக்கொடுத்தார். அவர் நமக்குள் பிறக்கும்பொழுது, அவரது தன்மை நமக்குள் எரிய ஆரம்பிக்கிறது. அது நம் சுயத்தை சுட்டெரிக்கிறது. மாம்ச இச்சையாகிய இருளை நீக்குகிறது. ஜீவனத்தின் பெருமையாகிய இருளை நீக்குகிறது. இந்த இருள்கள் நீங்கும் பொழுது என்னில் வாழும் மெய்யான ஒளியாகிய இயேசுவின் வெளிச்சம் வெளிப்பட்டு என்னை பிரகாசிக்கச்செய்கிறது. அருமையானவர்களே, இந்த வெளிச்சம் உங்களிடம் உண்டா? ஒளியில்லையேல் இருள்தான். இயேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள். சுடராய்ப் பிரகாசிப்பீர்கள்.
4. மகிழ்ச்சியூட்டும் பாலகன்:
நான்காவதாக, இந்த பாலகன் மகிழ்ச்சியூட் டும் பாலகன் ஆவார். பிறக்கப்போகிற இயேசு பாலகனைப்பற்றி ஏசாயா தீர்க்கதரிசனம் கூறும்போது ஏசாயா 9:3இல் அந்த பாலகனின் பிறப்பினால் என்ன நடக்கும் என்று திட்டமாகக் கூறியுள்ளான். “அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறது போலவும், கொள்ளையைப் பங்கிட்டுக் கொள்ளுகையில் களிகூருகிறது போலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள்.” இயேசு நமக்குள் பிறக்கும்பொழுது நமக்குள் மகிழ்ச்சி. நமது வீட்டில் இயேசு பாலகன் பிறக்கும்பொழுது குடும்பத்தில் மகிழ்ச்சி. இதைத்தான் இயேசுவின் பிறப்பை அறிவித்த தூதனும், “இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் (லூக்.2:10,11)” என்றான். இயேசு பரலோகத்திற்கு போகுமுன் சீஷர்களிடம், “என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன் (யோவா.15:11)” என்றார் .
அருமையானவர்களே, இந்த மகிழ்ச்சியும் நிறைவான சந்தோஷமும் உங்களுக்குள்ளும் உங்கள் குடும்பத்திற்குள்ளும் இருக்கவேண்டுமானால் ஒன்று செய்யவேண்டும். நான் ஒரு அசுத்த பாவி என்பதை ஒத்துக்கொண்டு, பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்படி அதை ஆண்டவரிடம் அறிக்கை செய்யுங்கள். இயேசுவின் இரத்தம் உங்களை பாவங்களற கழுவி சுத்தப்படுத்தும். இதுவே இரட்சிப்பு. இப்படி இரட்சிக்கப்படுகிறவர்களை இயேசு குற்றமே செய்யாத நீதிமானாக்குகிறார். நீதிமானின் கூடாரத்தில் எப்பொழுதும் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு. “நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டு கொள்வீர்கள்” (ஏசா.12:3). பூமியில் மட்டுமல்ல, மனந்திரும்புகிற ஒரு பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷமுண்டு. உங்களுக்கு இந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் வேண்டுமென்றால் இயேசு உங்களுக்குள் பிறக்கும்படி ஜெபியுங்கள்.
5. ஆளுகை செய்யும் பாலகன்:
ஐந்தாவதாக, அந்தப் பாலகன் ஆளுகை செய்யும் பாலகன்! அவரது பிறப்பைக் குறித்த தீர்க்கதரிசனங்களைப் பார்ப்போம்:
“அவர் (இயேசு) உன் (சாத்தானின்) தலையை நசுக்குவார்” (ஆதி. 3:15).
“ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத் புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்” (எண்.24:17).
“யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்” (எண்.24:19).
“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் (Government) அவர் தோளின் மேலிருக்கும்; … தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இது முதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை” (ஏசா.9:6,7).
“இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத் திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்” (மீகா 5:2).
“அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்” (தானி.4:34) .
நிச்சயமாகவே இயேசு பாலகன் ஆளுகை செய்யும் பாலகன். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது (மத்.28:18) என்றார். இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும். அவருக்கு நம் ஆவி ஆத்துமா சரீரத்தின் மேல் அதிகாரமுண்டு. இரையாதே என்றால் கொந்தளிக்கும் கடல் அமைதியாகும். லாசருவே வெளியே வா என்றால் மரித்து நாறினவன் உயிரோடே வருவான். மரணத்தின் மேலும் ஆளுகையுண்டு. பூமியின் ராஜாக்களை ஆளுகிறார். ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறார். நம்முடைய சிந்தைகளை அவர் ஆளுகை செய்யும்படி அவரிடத்தில் ஒப்புக்கொடுப்போம். எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் நம் இருதயங்களை ஆளக் கடவது. இன்று அவருடைய ஆளுகையை உங்களுடைய வாழ்வில் ஏற்றுக்கொள்ள தீர்மானியுங்கள். “எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மைமாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப் படுத்துவோம்” (ஏசா.26:13) .
கிறிஸ்துமஸ் சந்தோஷமும் சமாதானமும் நித்திய மட்டும் உங்களோடிருக்கும். உங்களுக்கு என் கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சிந்தியுங்கள்!
கிறிஸ்துமஸ் வாங்குவதில் அல்ல, கொடுப்பதிலேயே மகிமை பெற்றிருக்கிறது!
உங்களுக்குத் தெரியுமா?
யோசேப்பின் குமாரன் என இயேசு அழைக்கப்பட்டாலும் அவர் மரியாள் மூலமாக பிறந்த தேவனுடைய குமாரன் ஆவார்!