• Dr.உட்ரோ குரோல் •
(நவம்பர் – டிசம்பர் 2024)

8. சிமிர்னா – துன்புறுத்தப்பட்ட சபை!

Dr.உட்ரோ குரோல்

இந்த இதழில் நாம் சிமிர்னாவின் சபையைப் பற்றி ஆராய்வோம். இது எபேசு சபையைப்போல பிரபலமான சபையல்ல; வெற்றியடைந்த சபை என்பதைக் காட்டிலும் இது துன்புறுத்தப்பட்ட ஒரு சபையாகக் காணப்பட்டது. ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட நமது வாழ்விலும் சில காரியங்கள் நடக்கும்பொழுது நாம் துன்பப்படுகிறோம். சிமிர்னா என்பதன் பொருள் “வெள்ளைப்போளம்” என்பதாகும். இது ஒரு நறுமணப்பொருள். இறந்த உடலைப் பாதுகாக்க இதனை பயன்படுத்துவர். அதனால் இந்நகரம் சிறப்புபெற்றது. இது எபேசு பட்டணத்திலிருந்து 35 மைல் வடக்கே அமைந்திருந்தது.

இரண்டாம் நூற்றாண்டில் இங்கு ஒரு தேவ மனிதர் வாழ்ந்துவந்தார்; அவருடைய பெயர் வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அவரை நாம் யாவரும் நன்கு அறிவோம். அவர் தான் பாலிகார்ப் என்பவர். யோவான் தனது வெளிப்படுத்தலைப் பெறும்பொழுது இவர் சிமிர்னாவில் ஓர் இளம்போதகராக இருந்தார். யோவான் ஒரு முதியவர், அப்பொழுது பாலிகார்ப் 20 அல்லது 30 வயதுடையவராக இருந்திருக்கலாம். கி.பி.166இல் ஒருநாள் அவருடைய இல்லத்தின் கதவு தட்டப்பட்டது. அவர் கிறிஸ்தவராக இருந்ததால் மரணத்துக்கு அழைப்பைப் பெற்றார்.

அவர் நீதிமன்றத்துக்கு இழுத்துச்செல்லப்பட்டார். இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கும்படி வற்புறுத்தப்பட்டார். ஆனால் பாலிகார்ப் மறுத்துவிட்டார். அவர் தன் விசுவாசத்திலிருந்து பின்வாங்கவில்லை. இன்றைக்கு இஸ்மிர் என்ற இடத்திலுள்ள பாலிகார்ப் ஆலயத்துக்குச் சென்றால் அங்கே பின்வரும் வாசகம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

“86 ஆண்டுகளாக நான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்தேன். அவர் எனக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை; என் அரசரை, என் ஆண்டவரை, என் இரட்சகரை நான் எப்படி தூஷிப்பேன்” என்று அவர் கூறினார். இந்த வார்த்தைகளுடன் அவர் உயிரோடு எரிக்கப்பட்டார். இயேசுவின் நாமத்துக்காக துன்புறுத்தப்பட தன்னை கிறிஸ்து அனுமதித்ததற்காக மகிழ்ச்சியுடன் அவர் மரித்தார். இவை யாவும் சிமிர்னா பட்டணத்தில் நிகழ்ந்தது.

துன்பப்படும் சபைக்கு நாம் என்ன சொல்வோம்? “சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்” என்று வெளி.2:8-9இல் நாம் வாசிக்கிறோம்.

இயேசு முதலாவதாக, “எனக்குத் தெரியாமல் நீ துன்புறுத்தப்படமாட்டாய். ஒவ்வொருவரும் நடத்தும் செயல்களை நான் கவனித்துக்கொண்டே இருக்கிறேன்” என்று கூறுகிறார். இயேசு ஏழு விளக்குத்தண்டுகளின் நடுவில் இருக்கிறார். எனவே ஒவ்வொரு முறையும் சபை உபத்திரவங்களைக் கடந்து செல்லும்போது இயேசுவும் அவர்கள் நடுவில் இருக்கிறார். அவர் உபத்திரவத்தை நீக்கிப்போடுவார் என்று நாம் சொல்ல முடியாது. ஆனால் அவருடைய பிரசன்னமில்லாமல் நாம் துன்பப்படுவதில்லை.

முதல் 19ஆம் நூற்றாண்டு காலம் முழுவதும் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையைவிட இந்த 20ம் நூற்றாண்டின் எண்ணிக்கை அதிகம். இன்றும் அநேக இடங்களில் அன்றாடம் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். தங்களுடைய நம்பிக்கைக்காக 200 மில்லியன் கிறிஸ்தவர்கள் பாடுபடுகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஏறத்தாழ 1,50,000 மக்கள் தங்களுடைய விசுவாசத்துக்காக மரிக்கின்றனர். இந்த பூமியில் கிறிஸ்தவர்களே அதிக பாடனுபவிக்கின்றனர். ஏனெனில் சாத்தான் இந்த உலகில் அவர்களுக்கு எதிராக மிகவும் தீவிரமாக செயல்படுகின்றான்.

இரண்டாவதாக, இயேசு இவ்வசனத்தில், “உன் தரித்திரத்தை நான் அறிந்திருக்கிறேன்” என்று கூறுகிறார். உலகம் முழுவதிலுமுள்ள 1.9 பில்லியன் சபை மக்களில் 13 விழுக்காடு மக்கள் ஏழ்மையில் வாடுகின்றனர். நான் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களைப்பற்றி பேசவில்லை. அவர்கள் முழுவதுமான வறுமையில் வாழ்கின்றனர். உலகமுழுவதிலும் 247 மில்லியன் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர், சில நாடுகளில் கிறிஸ்தவர்கள் மோசமான வறுமையில் வாடுகின்றனர். அநேக சபைகளை நாம் இந்த சிமிர்னா சபையுடன் அடையாளப்படுத்தலாம். இது ஓர் உபத்திரவப்பட்ட வறுமையில் வாழும் சபையாகும்.

மூன்றாவதாக, இயேசு: “உன்னைப் பற்றி பேசப்படும் அநியாயமான அவதூறுகளையும் நான் அறிந்திருக்கிறேன். உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்” (வெளி.2:9). இது ஆட்டுக்குட்டியானவரின் கடினமான வார்த்தைகளாகும்.

வெளிப்படுத்தல் புத்தகமானது நீண்ட காலம் காத்திருப்புக்குப் பின்னர் நிகழவிருக்கும் நியாயத் தீர்ப்பைப் பற்றியது. வேதாகம புத்தகத்தில் இரட்சகராகக் காணப்படும் இயேசுகிறிஸ்து நியாயாதிபதியாக இங்கு கூறப்படுகிறார். “உன்னுடைய துன்பத்தையும் வறுமையையும் நான் அறியாதவனல்ல; நீ காரணமின்றி தூஷிக்கப்பட்டாய்.” “இதற்கு நான் ஏதாவது செய்தாகவேண்டும்” என்று பொருள்படும். எனவே நீங்கள் கிறிஸ்தவராய் இருப்பதினால் துன்புறுத்தப்பட்டீர்களானால், உங்களுடைய விசுவாசத்திற்கும், உழைப்புக்கும் பதவி உயர்வைப் பெற்றீர்கள் என்றோ, நம்முடைய விசுவாச வாழ்வு அயலகத்தாருக்கு சவாலாக இருக்கிறது என்றோ நீங்கள் நினைத்தீர்கள் எனில் இயேசுவும் அதை அறிவார் என்று நான் சொல்லுகிறேன்.

நீங்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கிறீர்கள் எனில் இயேசு ஏன் உங்களை பணக்காரராக மாற்றவில்லை என யோசிக்கிறீர்களா? சிலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தேவன் நம்மை செல்வந்தராக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறினாலும், நமக்கு ஏன் அது நடக்கவில்லை?” என்று நினைக்கிறீர்களா? இயேசு அதை அறியாதவர் அல்லர். சிமிர்னா சபையைப்போல நீங்கள் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், “நான் அதை அறிவேன்; எனக்கு யாவும் தெரியும்; பொறுமையுடன் காத்திருங்கள், நான் அதற்கானவைகளைச் செய்வேன்” என்கிறார் அவர்.

இன்று நாம் துன்புறுத்தப்படுவதைப் பற்றி அதிகம் பேசிவருகிறோம். “தியாகிகளின் குரல்” அல்லது “சர்வதேச கிறிஸ்தவ அக்கறை” போன்ற அநேக அமைப்புகள் உலகமெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களின் துன்புறுத்தலை ஆவணப்படுத்த ஆதாரங்களையும், அதிகமான நேரத்தையும் செலவிடுகின்றன. “தியாகிகளின் குரல்” என்ற பத்திரிக்கை ஆப்கானிஸ்தானிலிருந்து ஏமன் நாடு வரை உள்ள தேசங்களின் வாரியாக துன்புறுத்தல்கள் குறித்து வெளியிட்டுவருகிறது. கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா, சூடான், சவுதி அரேபியா, எகிப்து, துருக்கி, பர்மா, கிரீஸ், எத்தியோப்பியா, வியட்நாம் ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. அநேக இஸ்லாமிய நாடுகள் மாற்று சமயக்கொள்கையினரை வெறித்தனமான இராணுவக் கோட்பாடு களுக்கு உட்படுத்துகின்றனர். இந்த பட்டியலில் கிறிஸ்தவர்களே முதலிடத்தில் உள்ளனர்.

அனைத்துலக கிறிஸ்தவ ஒற்றுமைக்குழுவின் அறிக்கையின்படி வரலாற்றில் இதுவரை காணாத அளவு 20ஆம் நூற்றாண்டில் அநேக கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்துக்காக மரித்துள்ளனர் எனத் தெரியவருகிறது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு வெளியே 2009ஆம் ஆண்டில் மாத்திரம் 150 மில்லியன் கிறிஸ்தவர்கள் இரத்தச் சாட்சிகளாக மரித்துள்ளனர் என்று சர்வதேச அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகின்றது. இந்த எண்ணிக்கை மாறிக்கொண்டே இருக்கும். கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இயேசுவின் நாமத்துக்காக மரிப்பவர்களைத் தடுப்பதைவிட மரங்களை வெட்டுவதைத் தடுக்கவே அரசாங்கம் அதிக அக்கறை காட்டுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், கனடாவிலும் கிறிஸ்தவர்கள் பொதுஅலுவலகங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர், நண்பர்களாலும் வெறுத்து ஒதுக்கப்படுகின்றனர். அவர்கள் முட்டாள்களைப்போன்றும், திரைப்படங்களில் கேலியாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.

உலக முழுவதிலும் கிறிஸ்தவ விரோத மனப்பான்மை தீவிரமாக அதிகரித்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஹமூஸ்டன் நகரில் உள்ள ஒரு பெண்மணி ஹாலோவீன் திருவிழாவின்போது, தன் வீட்டுக் கதவைத் தட்டிய குழந்தைகளுக்கு வழங்கிவந்த நற்செய்திப் பிரதிகளை நிறுத்துமாறு உள்ளுர் காவல்துறை அவருக்குக் கட்டளையிட்டது. இச்செயல் சட்டவிரோதமானது என உயர் அதிகாரிகள் கூறினர். மேலும் அவள் கைது செய்யப்படுவாள் எனவும் எச்சரித்தனர். நண்பர்களே, இது தான் கிறிஸ்தவ விரோத தப்பெண்ண மனப்பான்மையாகும். ஆகவே நீங்கள் துன்புறுத்தப்படுவீர்கள் எனில் தேவன் உங்களுக்கு கிருபையையும் தைரியத்தையும் தரவேண்டும் என ஜெபியுங்கள். நீங்கள் துன்புறுத்தப்படும்பொழுது ஆண்டவருடைய செயல்பாடும், எந்த எதிர்வினையையும் செய்யாதிருக்க தைரியமும் உங்களுக்குத் தேவை. நீங்கள் எதைச்செய்தாலும் நிறைவு கொள்ளாதீர்கள். உங்களுடைய விசுவாசம் முக்கியமல்ல என்று நினைக்காதீர்கள். ஆகவே அமைதியாகி விடுவதும் சரியல்ல.

ஒருமுறை நான் சீனாவில் ஒரு போதகரை சந்தித்தேன். புறப்படும்பொழுது அவருக்காகவும், அவரது சபைக்காகவும் ஜெபிப்பதற்கான குறிப்பைக் கேட்டேன். “நாங்கள் உங்களைப்போல மாறவேண்டாம்” என்று ஜெபியுங்கள் என்று சொன்னது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. மேற்கத்திய நாட்டு ஆலயங்களைப்போல இருக்கவேண்டாம். துன்புறுத்தல் நிறுத்தப்படவேண்டும் என்பது அவரது ஜெபமல்ல; சீனாவில் உள்ள கிறிஸ்தவர்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள்; அவர்கள் உபத்திரவத்தில் அமிழ்ந்து போய்விடமாட்டார்கள்; உலகத்துடன் ஒத்துப்போகாமல் அதற்கு மாற்று செயலினை அளிப்பார்கள் என்றார். நாமும் இந்த பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

துன்புறுதல் கடினமானதுதான். ஆனால், அது நம்மை தைரியமான சாட்சியாக மாற்றிவிடும். தேவனுடன் உள்ள நெருக்கத்தை இன்னும் ஆழப்படுத்தும். நீங்கள் துன்புறுத்தப்படாவிட்டால் தேவனுக்கு நன்றி. ஆனால் துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக நாம் ஜெபிக்கவேண்டும்.

முதலாவது இயேசுகிறிஸ்து, இந்த சபைக்காக அனுதாபப்பட்டார். அவர்களைப் பாராட்டினார். உங்களது உபத்திரவத்தையும் துன்பத்தையும் நான் அறிவேன். நீங்கள் மிகப்பெரிய எபேசு சபையைப் போன்றவர்கள் அல்ல; உலக மக்களின் பார்வையில் வெற்றி பெற்றவர்களும் அல்ல. ஆனால் வசனம் 10இல் “நீ படப்போகும் பாடுகளைக் குறித்து பயப்படாதே” என்கிறார்.

“பிசாசுகளால் நிறைந்துள்ள இவ்வுலகம் நம்மை அழிப்பதாக பயமுறுத்தினாலும் நாம் பயப்படோம். ஏனெனில் தேவனுடைய சத்தியம் நம் மூலமாக வெற்றி பெறவேண்டும் என்பது அவரது சித்தம்” என்ற மார்டின் லூத்தரின் பாடலானது இயேசு சிமிர்னா சபைக்குக் கூற இருப்பதை துல்லியமாக விளக்குகிறது. “எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது உனக்குத் தெரியாது; ஆனால் நீ பயப்படாதே. நான் உன்னோடும் இந்த சபையோடும் இருக்கிறேன்” என்கிறார்.

இரண்டாவதாக, “நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் நீங்கள் உபத்திரவப்படுவீர்கள். மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்” (வெளி.2:10). இந்த வசனத்தில் ஊக்கப்படுத்தல் உள்ளது. உபத்திரவங்களில் எப்படி ஊக்கப்படுத்தல் இருக்கும் என நீங்கள் கேட்கலாம். அந்த உபத்திரவம் பத்து நாட்களில் முடிந்து போகும். மிகச்சரியாக பத்து நாட்கள்தானா எனத் தெரியவில்லை. அது முக்கியமல்ல. “நீங்கள் துன்புறுவீர்கள்; ஆனால் விடுதலையாக்கப்படுவீர்கள்” என்று அவர் கூறுகிறார். எனவேதான் வெளிப்படுத்தல் புத்தகமானது ஊக்கப்படுத்தும் ஒரு சிறந்த நூலாகும். அதற்கு நீங்கள் வெற்றிபெறும் அணியில் இருக்கவேண்டும்.

மீண்டுமாக மார்டின் லூத்தர் தனது பாடலில், “பொருட்களும் உறவினர்களும் சென்றுவிடுவர். இந்த வாழ்வும் அழியும்; இவ்வுடலை அவர்கள் அழிக்கலாம்: ஆனால், தேவனுடைய உண்மை என்றும் நிலைத்திருக்கும். அவரது இராஜ்யம் என்றும் உள்ளது” என்கிறார். இயேசுகிறிஸ்து இத் துன்புறும் சபைக்குச் சொல்வதையே மார்டின்லூத்தர் இப்பாடலில் அவர் குறிப்பிட்டுள்ளார். “நீ பயப்படாதே; உன் உபத்திரவங்கள் முடிந்து போகும்.”

மூன்றாவதாக இயேசு, “நீ மரணபரியந்தம் உண்மையாயிரு” என்றார் (வெளி. 2:10).

இப்பாடத்தின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பாலிகார்ப் என்ற இச்சபையின் போதகர் இழுத்துச் செல்லப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டார். ஒருவேளை அவர் உயிருடனிருந்து இன்று நம்முடன் பேசினால் என்ன சொல்லுவார்? “இயேசுவுடன் நித்தியநித்தியமாய் வாழும் விவரிக்கமுடியாத மகிழ்ச்சியுடன் இந்த உபத்திரவத்தை ஒப்பிடும்பொழுது துன்பகாலம் மிகக்குறுகியது என்றே கூறி யிருப்பார். உபத்திரவத்தைப்பற்றி நமக்கு இல்லாத கண்ணோட்டம் அவருக்கு இருந்தது. அதன் வழியாய் அவர் கடந்து சென்றார். “உபத்திரவம் முடியும்; ஆனால் நித்தியம் முடிவிராதது.” இந்த சபை மக்களுக்கு இயேசு கூறும் ஆறுதலானது, “உங்களுக்கு எந்த உபத்திரவமும் வராது. என் ஜனங்களை துன்புறவிட மாட்டேன்” என்பதல்ல.

நாம் துன்பப்பட்டாலும் அது ஒரு நாள் முடிவுக்கு வரும். அவர் என்றும் நம்முடன் இருப்பார். இன்று உபத்திரவம் நம்மைவிட்டு நீங்குவதைவிட அது மேலானது. “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத் தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்” என்று அப்.பவுல் எழுதியுள்ளார் (ரோமர் 8:18). துன்பம் கடினமானது, உபத்திரவம் கொடுமையானது. ஆனால் இயேசுவும் பவுலும் மரணபரியந்தம் உண்மையாயிருக்க கூறியுள்ளனர். “நீ மரண பரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன்” (வெளி.2:10). மரணபரியந்தம் உண்மையாயிருந்தால் “நீங்கள் இதுவரை காணாத ஒரு வெகுமதியை உங்களுக்குத் தருவேன். ஆம் அது ஜீவ கிரீடம்!”

உங்களில் ஒரு சிலர் ஆண்டவராகிய இயேசுவுக்கு வாழ்வை அர்ப்பணிக்க அழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஒருவரும் உபத்திரவங்களை எதிர்பார்த்திருக்கமாட்டோம். “சிலுவை முதலில், பின்னர் கிரீடம்” என்று இயேசு கூறுகிறார். எபேசு சபை மக்கள் கிரீடத்தை முதலாவதாகவும், சிலுவையைப் பின்னதாகவும் எதிர்பார்த்தனர். ஆனால், உபத்திரவப்பட்ட சிமிர்னா சபையோ சிலுவை சுமப்பதை அறிந்திருந்தனர். எனவேதான் இயேசு, “கிரீடம் தரிப்பது என்றால் என்னவென்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்” என்றார்.

“சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்” என்று யாக்கோபு 1:12 கூறுகிறது.

அவரில் அன்புகூருகிறவர்கள் அவருக்காக துன்பத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பார்கள். இறுதிவரை உண்மையாயிருப்பார்கள். நாம் கிறிஸ்துவை நேரில் காணும்பொழுது அம்மகிமை விளங்கும். எனவே துன்பத்தில் சோர்ந்து போகாதிருங்கள்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை