• Dr.வாரன் W.வியர்ஸ்பி •
(நவம்பர் – டிசம்பர் 2024)

Dr.வாரன் W.வியர்ஸ்பி
புதிய ஏற்பாட்டில் ஒரே ஒரு தடவையும் பழைய ஏற்பாட்டில் இரண்டு தடவைகளும் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ள இயேசுவின் நாமங்களில் மிகச் சிறந்த ஒன்றைக் குறித்து நாம் சிந்திப்போம்.
அதுதான் “இம்மானுவேல்!”
அதன் பொருள் “தேவன் நம்மோடிருக்கிறார்.” புதிய ஏற்பாட்டில் இந்த நாமம் மத்தேயு 1:23இல் வருகிறது. இது ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை எடுத்துக்கூறுவதாகும் (ஏசா.7:14). “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு ‘இம்மானுவேல்’ என்று பேரிடுவார்கள்” என்று சொன்னான்.
இந்த உரையின் பின்னணியை அறிய அவர் பிறப்பதற்கு 700 வருடங்களுக்கு முன் உள்ள வரலாற்றை நாம் பார்க்கவேண்டும். ஏசாயா 7 முதல் 9 வரையுள்ள அதிகாரங்களைப் பார்க்கவும். ஆகாஸ் யூதாவின் அரசன். அவன் தேவனுக்குப் பயந்தவன் அல்ல. அவனைச் சிரியாவும் இஸ்ரவேலும் பயமுறுத்தின. அந்த இரு நாடுகளும் யூதாவைத் தாக்கத் திட்டமிட்டன. அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி ஆகாஸ் ராஜாவைத் தைரியப்படுத்தித் திடப்படுத்தினான். காத்தர்பேரில் முழு நம்பிக்கை வைத்துப் பயமில்லாமல் இருக்கும்படி கூறினான். ஆகாஸ் ஏசாயாவிடம் சரி, அப்படியே செய்கிறேன் என்று கூறிவிட்டு, இரகசியமாக அசீரியாவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்தான். அவர்களைத் தனக்குப் போரில் உதவி செய்யும்படி கோரினான். ஆகாஸ் ஒரு மாய்மாலக்காரன். வெளிப்படையாக அவன் “நான் கர்த்தரை நம்புகிறேன்” என்றான். ஆனால், மறைமுகமாகத் தனக்கு எதிரியான அசீரியாவின் உதவியைக் கோரினான். ஏசாயா அவனை உற்சாகப்படுத்தும்போது, “இம்மானுவேல், தேவன் நம்மோடிருக்கிறார். அவரை விசுவாசி. அவரது துணையோடு யுத்தத்துக்குப்போம். அவர் உனக்கு உதவி செய்வார்” என்றான் (ஏசா.7:14).
தேவன், “ஆகாசுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டுவேன்” என்றார். ஆகாஸ் “வேண்டாம்” என்று மறுத்தான். எனவே, தேவன் ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அது ஆகாஸ் ராஜாவுக்கு மட்டுமல்ல, இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் யூதா ஜனங்களுக்கும் கொடுக்கப்பட்டது. அந்த அடையாளம் இதுதான்:
“இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்”.
“இம்மானுவேல்” என்பதற்கு “தேவன் நம்மோடிருக்கிறார்” என்று அர்த்தமாம். இந்த தீர்க்க தரிசனம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பிறப்பின் மூலம் நிறைவேறியது.
யோசேப்பு ஒரு நீதிமான். அவனுக்கு ஒரு கன்னிப்பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அவன் “கன்னிமரியாளிடம் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது” என்று கேள்விப்பட்டவுடன் அவளைத் தள்ளிவிட மனதாயிருந்தான். அக்காலத்தில் திருமண நிச்சயத்தார்த்தம் என்பது திருமணத்தைப் போன்ற முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும். அந்த நிச்சயத்தின்படி திருமணம் நடக்காவிட்டால் அது திருமண முறிவு – விவாகரத்து செய்து கொண்டதற்குச் சமம்.
யோசேப்பு தான் திருமணம் செய்யச் சம்மத்திருந்த மரியாள் கருவுற்றிருக்கிறாள் என்று கேள்விப்பட்டான். எனவே, அந்த ஒப்பந்தத்தை மீறிவிட முடிவு செய்திருந்தான். அப்பொழுது ஒரு தூதன் யோசேப்பிடம் கன்னி மரியாள் பரிசுத்தமானவள். கர்த்தருடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அவளிடத்தில் தேவகுமாரன் பிறக்கப் போகிறான். அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு “இம்மானுவேல்” என்று பெயரிடுவார்கள். “இம்மானுவேல்” என்பதற்கு “தேவன் நம்மோடிருக்கிறார்” என்று பொருள் என்றான். “இயேசு” – இந்த நாமத்தை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை.
நான்கு சுவிசேஷங்களிலும் எவருமே இயேசுவை “இம்மானுவேல்” என்று அழைப்பதைக் காணமுடியாது. உண்மையிலேயே இது ஒரு பட்டப்பெயர். அவர் யார் என்பதை விளக்கும் ஒரு சொல். இந்த நாமத்தினுள் இரண்டு அரிய சத்தியங்கள் பொதிந்து கிடக்கின்றன.
1. இயேசுவே தேவன்!
முதலாவதாக “இயேசுவே தேவன்” என்று அறியவேண்டும். “இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்” (மத்.1:23). இந்த உலகில் சிலர் “இயேசு தேவன் அல்ல, அவர் ஒரு தெய்வ பயமுள்ள மனிதன் அல்லது ஒரு நல்ல தெய்வ பயமுள்ள போதகர்” என்று கூறுவார்கள். இருப்பினும் புதிய ஏற்பாட்டின் ஆரம்பம் முதல் இயேசுகிறிஸ்து “தேவன்” என்று அறியப்படுகிறார். நான் என்னை “இம்மானுவேல்” என்று அழைத்துக்கொண்டு, “நான்தான் தேவன்” என்று உங்களிடம் கூறினால் எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று நினைப்பீர்கள். நீங்கள் நினைப்பது சரியே. ஆனால், புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் யாவரும் இயேசுகிறிஸ்துவுக்கு “இம்மானுவேல்” என்னும் பெயரைச் சூட்டினார்கள். அதன் பொருள்: “தேவன் நம்மோடிருக்கிறார்.”
(அ) இயேசு தன்னைத் தேவன் என்று கூறினார்
இயேசு தம்மைத் தேவன் என்று கூறித் தமது உயிருக்கு ஆபத்தை வருவித்துக்கொண்டார். யோவான் 10ஆம் அதிகாரத்தில் இயேசு கூறிய வார்த்தைகளைக் கவனியுங்கள்:
வசனம் 30 – “இயேசு நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்றார். இந்தக் கூற்று, “நானே தேவன்” என்று கூறுவதற்குச் சமம் அல்லவா?
வசனம் 31 – அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.
வசனம் 32 – இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
வசனம் 33 – யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணம் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.
“நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்று இயேசு கூறினபடியால், இயேசு தம்மைத் தேவன் என்று உரிமை பாராட்டுகிறார் என்று நினைத்தார்கள்.
யோவான் 14ஆம் அதிகாரத்தில், பிலிப்பு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில், “பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும்” என்று கேட்கிறதைக் காண்கிறோம் (யோவான் 14:9). அதற்கு இயேசு “இவ்வளவு காலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?” என்றார் (வச.9). எனவே இயேசு தம்மைத் தேவன் என்று கூறினார் என்று காண்கிறோம். அவர் இப்படிச் சொன்னதினால்தான் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.
யூதர்கள் பிலாத்துவிடம் “எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு, இவன் தன்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னபடியினால், அந்த நியாயப் பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள்” (யோவான் 19:7). இயேசு என்ன பேசுகிறார் என்பதைப் புரிந்துகொள்வதில் யூதர்களுக்குப் பிரச்சனை ஒன்றும் இல்லை. இயேசு தம்மைத் தேவன் என்றார்.
(ஆ) மற்றவர்கள் தம்மைத் தேவனாக வழிபடுவதை இயேசு ஏற்றுக்கொண்டார்.
மற்றவர்கள் தம்மைத் தேவனாக வழிபடுவதை இயேசு ஏற்றுக்கொண்டார். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. நீங்கள் ஏதாவது ஒரு ஜீவராசியைத் தொழுதுகொண்டால் அது விக்கிரக ஆராதனையாகும். நமக்கு இப்படி ஒரு கட்டளைத் தரப்பட்டிருக்கிறது. “உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக” (மத்.4:10).
“சாஸ்திரிகள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டார்கள்” (மத்.2:11).
“அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்” (மத்.14: 22-33).
பார்வையடைந்த பிறவிக்குருடன், “ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்” (யோவான் 9:38).
இவ்வாறு பலர் தம்மைப் பணிந்துகொண்டதை இயேசு ஏற்றுக்கொண்டார். இதன் பொருள், தாம் தெய்வம் என்பதை இயேசு அறிந்திருந்தார். எனவே அவர் தம்மைத் தேவன் என்றார். தேவன் என்று தம்மைக் கருதி மற்றவர்கள் பணிந்துகொள்ளுவதையும் ஏற்றுக்கொண்டார்.”
(இ) “தேவன்” என்று அழைக்கப்பட்டார்.
புதிய ஏற்பாட்டில் பல தடவைகளில் இயேசு “தேவன்” என்று குறிப்பாக அழைக்கப்பட்டுள்ளார். இந்த வேதப்பகுதிகளைப் பார்ப்போம்:
யோவான் 1:1இல் “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது”.
“வார்த்தை” என்பது இயேசுகிறிஸ்துவைக் குறித்தது. ஏனெனில் 14ஆம் வசனத்தில், “அந்த வார்த்தை மாம்சமாகி, … நமக்குள்ளே வாசம் பண்ணினார்” என்று உள்ளது. அந்த வார்த்தை இயேசுவே. யோவான் 1:18இல், இயேசுகிறிஸ்து ‘தேவன்’ என்று அழைக்கப்படுகிறார். “தேவனை ஒருவனும், ஒருக்காலும் கண்டதில்லை. பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்”. அவர் தேவனாய் இருப்பதனால்தான் அதைச் செய்யமுடிகிறது. இந்த வசனம் வேறுவிதமாகவும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. “ஒரே குமாரனாகிய தேவன், பிதாவின் அருகில் இருக்கிறார்”. இன்னொரு மொழிபெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது. “ஒரேபேறான தேவன் தம்முடைய பிதாவின் மடியில் இருக்கிறார்”.
ரோமர் 9:5இல் அப்போஸ்தலனாகிய பவுல், இஸ்ரவேல் தேசத்தைப்பற்றிக் கூறும்போது, “பிதாக்கள் அவர்களுடையவர்களே. மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே. இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்துக்கும் மேலான தேவன்” (தீத்து 2:13) என தெளிவாகக் கூறுகிறார்: “மகா தேவனும், நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய, மகிமையின்..” “மகா தேவனும், நமது இரட்சகருமாகிய” என்று ஒரே அடைமொழிதான் கிரேக்க மொழியில் உள்ளது. “நம்முடைய இரட்சகர் தேவனே” இயேசுகிறிஸ்துவே தேவன். எபிரெயர் 1:8இல் “குமாரனை நோக்கி, தேவனே உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. 2 பேதுரு 1:1 இல் “நம்முடைய தேவனும், இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்து” இதில் ஒரே நபர். அவருக்கு தேவன், இரட்சகர் என்ற இரண்டு நாமங்கள்.
1 யோவான் 5:20, “கிறிஸ்துவே தேவன்” என்பதற்கு உறுதியான அத்தாட்சியாய் இருக்கிறது. “அன்றியும் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம். இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார்.” ஆம், நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே தேவன்!
2. நம்மோடிருக்கும் தேவன் இயேசுகிறிஸ்துவே!
“இம்மானுவேல்” என்னும் நாமத்திலிருந்து இரண்டாவதாக ஒரு சத்தியம் வெளிப்படுகிறது. இயேசு “தேவனாயிருப்பது” மட்டுமல்ல, “நம்மோடிருக்கும் தேவனுமாய்” இருக்கிறார். நம்முடைய தேவன் நம்மைவிட்டு வெகுதூரத்தில் இருப்பவரல்ல. நம்மைக்குறித்துக் கரிசனை இல்லாமலும், விலகியும் இருப்பவரல்ல. அவர் நம்மோடு இருக்கிறவர்!
இயேசுகிறிஸ்து கன்னிமரியாளிடத்தில் இந்த உலகத்தில் ஒரு சிறு குழந்தையாக வந்து பிறந்தபோது அவர் இந்தப் பூமியில் உள்ள மக்களோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டார். அவரே உண்மையான தேவமனிதன். அவரே தேவன் அதேவேளையில் அவர் “நம்மோடிருக்கும் தேவனாகவும்” இருக்கிறார்!
வேதாகமத்தில் ஒரு வாக்குத்தத்தத்தை அடிக்கடி பார்க்கலாம். அது, “நான் உங்களோடு இருக்கிறேன்”. தேவன் இந்த வாக்குத்தத்தத்தை மோசேக்குக் கொடுத்தார். தேவன் இதை யோசுவாவுக்குக் கொடுத்தார். அவர் யோசுவாவிடம் “நான் மோசேயோடு இருந்ததுபோலவே உன்னோடும் இருப்பேன்” (யோசுவா 1:5) என்றார். தேவன் இதே வாக்குத்தத்தத்தை நமக்கும் தந்திருக்கிறார்.
மத்தேயு தன்னுடைய நற்செய்தி நூலை இந்த வாக்குத்தத்தத்துடன் ஆரம்பிக்கிறார் (மத்.1:23). அதுபோலவே தனது நூலை முடிக்கிறதைப் பாருங்கள்: “இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகலநாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” (மத்.28:20). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் எப்போதும் நம்மோடு இருக்கிறார். எந்தெந்தப் பகுதிகளில் அவர் நம்மோடு இருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
(அ) இரட்சிப்பு
இரட்சிப்பில் இயேசு நம்மோடிருக்கிறார். அவர் ஒரு பரிசுத்தமுள்ள தேவன். அதேவேளையில் நாம் பரிசுத்தமில்லாதவர்களாய் இருப்பதால் அவர் நமக்கு எதிராக இருக்கவேண்டும். ஆனால் இரட்சிப்பில் அவர் நம்மோடு இருக்கிறார். நீங்கள் அவருக்கு உங்கள் இருதயத்தைத் திறந்து கொடுப்பீர்களாகில், அவர் உங்கள் இருதயத்தில் வந்து, உங்களோடு வாசமாயிருப்பார். அவர் உங்களை மன்னிப்பார். அவர் உங்களோடு ஐக்கியமாயிருப்பார்.
(ஆ) சோதனைகள்
நம்முடைய வாழ்க்கையில் சோதனைகள் ஏற்படும் வேளைகளில் தேவன் நம்மோடிருக்கிறார். தேவன் தந்திருக்கும் ஏசாயா 43:2 முதல் 5 வசனங்களில் உள்ள வாக்குத்தத்தத்தை நான் எத்தனை முறை படித்துத் திடன் பெற்றிருப்பேன்!?
“நீ தண்ணீர்களைக் கடக்கும்போது, நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது”. “நீ பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்”.
ஏசாயா 41:10இல் “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன் …”. நாம் எந்தவகையான சூழ்நிலையில் இருந்தாலும், இயேசுகிறிஸ்து நமக்குத் துணையாக, உதவியாக நம்மோடிருக்கிறார். அவர்கள் புறப்பட்டுப் போய் எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார் (மாற்கு 16:20).
கர்த்தர் நம்மோடுகூட நடப்பது மட்டுமல்ல, கிரியையும் செய்கிறார். கர்த்தருடைய ஊழியம் செய்யும்போது நாம் சோர்வடையும் பல சமயங்கள் உண்டு. கர்த்தருடைய ஊழியம் குறித்து நாம் களைப்படைவதில்லை. ஏனெனில் அது சுவையானது; பரவசமூட்டுவது. நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்யக்கிடைத்த வாய்ப்புக்காக மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், சிலவேளைகளில் நாம் சோர்வடைவதுண்டு. அந்த நேரத்திலும் ஆண்டவர் நம்மோடிருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்வது நல்லது.
கொரிந்து பட்டணத்தில் பவுல் யூதர்களின் எதிர்ப்பைக் கண்டபோது, (அப்.18) அதை விட்டு விட்டுப் போக ஆயத்தப்பட்டான். அப்பொழுது தேவன் பவுலுக்குத் தரிசனமாகி, “பவுலே, நீ பயப்படாமல் பேசு. மவுனமாயிராதே; நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்கு செய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்” (அப்.18:9,10). அங்கே பவுல் தொடர்ந்து பேசினான். பவுலின் நண்பர்கள் சிலர் அவனைவிட்டு விலகிய போதிலும்கூட, தேவன் முடிவுவரை அவனோடிருந்தார்.
(இ) துக்க நேரங்களிலும் நித்திய காலமாகவும்
நம் வாழ்க்கையில் ஏற்படும் துன்ப நேரங்களிலும், சூழ்நிலைகளிலும் அன்பானவர்கள் இறக்கும் போதும், நமது துக்கம் மற்றும் கண்ணீர் சிந்தும் வேளைகளிலும், அன்பானவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரியும்போதும், நமது தோல்வி, இழப்பு, நஷ்டங்களிலும் இயேசு நம்மோடிருக்கிறார்.
தேவனுடைய வாக்குத்தத்தம் சங்கீதம் 23:4இல் காணப்படுகிறது: “நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்”. அவர் நம் வாழ்க்கையின் துன்ப நேரங்களில் நமக்குத் துணையாக நம்மோடு இருக்கிறார். நித்தியநித்திய காலமாக அவர் நம்மோடு இருப்பார். “மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன் தாமே அவர்களோடே கூட இருந்து, அவர்களுடைய தேவனாயிருப்பார்” (வெளி.21:3).
“இம்மானுவேல்” – “தேவன் நம்மோடு இருக்கிறார்” (மத்.1:23). இயேசுகிறிஸ்துவே தேவன். அவரை விசுவாசியுங்கள். அவரைப் பணிந்துகொள்ளுங்கள். உங்களிடம் உள்ள சிறந்த பொருளை அவருக்குக் கொடுங்கள்.
மொழியாக்கம்: Mr.G.Wilson