• Bro.K.P.ஆபிரகாம் •
(நவம்பர் – டிசம்பர் 2024)

Bro.K.P.ஆபிரகாம்
நம் இரட்சகரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட திருநாளையும் அதோடு சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் நாட்களில் நினைவு கூர்ந்து வருகிறோம். இயேசுகிறிஸ்துவின் பிறப்பு தற்செயலாய் நடந்ததல்ல; நாம் வேதாகமத்தை உற்றுநோக்கும்போது பழைய ஏற்பாட்டில் அவருடைய பிறப்பைக் குறித்தும் அவருடைய வாழ்க்கையைப்பற்றியும் தீர்க்கதரிசனங்களாக தேவ ஆவியானவரால் எழுதப்பட்டிருக்கிறதை நாம் அறியலாம். அவரது பிறப்பின் சம்பவங்களின் மகத்துவங்களை மேலெழுந்தவாரியாகக் கடமைக்காகத் தியானித்துவிட்டு உலகப்பிரகாரமான கொண்டாட்டங்களில்மட்டும் நாம் ஆர்வம் காட்டுவோமானால் அது வீணான ஆசரிப்பாயிருக்கும்.
ஆதாமின் பாவத்தினால் பிசாசானவன் மனுக்குலத்தைப் பாவத்திற்குள்ளும் இச்சைகளுக்குள்ளும், இருளிலும், சமாதானக் கேட்டிலும் அடைத்து வைத்தான். மனிதனுடைய இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்று கர்த்தர் கண்டு அவனைப் படைத்ததற்காய் அவர் மனஸ்தாபப்பட்டார். தன்னைவிட்டு விலகி சென்ற மனுக்குலத்தை முழுவதுமாய் அழித்து அவர் நிர்மூலமாக்கியிருக்கக்கூடும். அவர் இருதயம் விசனத்தினால் நிறைந்திருந்தாலும் மனுக்குலத்தை மீட்க ஒரு அன்பின் திட்டம் அவரிடத்திலிருந்தது. ஆதாமை சிருஷ்டித்து தேவபக்தியுள்ள சந்ததியை அவன்மூலம் இப்பூமியில் உண்டாக்கும் படியான தேவ திட்டத்தை பிசாசானவன் தான் தோற்கடித்துவிட்டதாக எண்ணினான். ஆனால், பிதாவின் ஆதீனத்திலிருந்த “மனுக்குலத்தை மீட்பதற்கான அன்பின் திட்டத்தை” குமாரன் நிறைவேற்றத் தன்னை ஒப்புக்கொடுத்தார். தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய இதோ, வருகிறேன் என்று சொன்னார் (எபி.10:9).
அவர் பிதாவின் மடியில் செல்லப்பிள்ளையாயிருந்தவர். அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர்மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை (யோவான் 1:2,3). இப்படிப்பட்ட மகத்து வமான தேவகுமாரன் தம்மைத்தாமே வெறுமையாக்கித் தாழ்மையின் ரூபமெடுத்தார். பிசாசானவன் தேவனது மீட்பின் திட்டத்தைக் குலைத்துப் போட எவ்வளவோ முயன்றும் தோற்றுப்போனான். மனுக்குலத்தை மீட்க தேவகுமாரன் மாம்சத்தில் வெளிப்பட்ட அந்தத் திருநாளைத்தான் நாம் கிறிஸ்துமஸாகக் கொண்டாடுகிறோம்.
இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட நாளைவிட அவர் வெளிப்பட்ட நோக்கமே அதிக விசேஷித்ததும் மேன்மையானதுமாகும். அந்த உன்னதமான நோக்கத்தை அறிந்தவர்களாய் நாம் கிறிஸ்து பிறப்பின் பண்டிகையை ஆசரித்தால் அது அர்த்தமுள்ளதாயும் நிறைவான சந்தோஷத்தை நமக்குத் தருவதாயும் இருக்கும். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வெளிப்பட்டதற்கான ஒருசில நோக்கத்தைப் பற்றி நாம் தியானிப்போம்.
1. நம்முடைய பாவங்களை சுமந்துதீர்க்க வெளிப்பட்டார் (1 யோவான் 3:3).
அவர் உன்னதமான தேவனுடைய குமாரனாயிருந்தும் இந்த உலகத்தில் மேன்மையான ஸ்தானத்தை அடைந்துவிடும் நோக்கத்தோடு மானிட அவதாரம் எடுக்கவில்லை. அவர் ஜென்ம பாவத்தினால் அடிமைப்பட்ட பாவமனுஷனுடைய சாயலில் அடிமையின் ரூபமெடுத்து ஏழ்மையின் கோலமானார். ஆனால், அவரிடத்தில் பாவமில்லை. பாவமேயறியாத அவர் நம்முடைய பாவங்கள் யாவற்றையும் சுமந்து தீர்க்கும்படியே பாவமானார். யோவான் ஸ்நானன் இவரைப்பற்றிக் கூறும்போது, இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி (யோவான் 1:28) என்று கூறினார். நம்முடைய பாவத்தை சுமந்து தீர்க்கும்படி வெளிப்பட்ட இயேசுகிறிஸ்து உங்கள் உள்ளத்தில் பிறந்திருக்கிறாரா? நம்முடைய பாவத்தைச் சுமந்து தீர்க்கவேண்டும் என்ற நோக்கத்தோடே இயேசுவானவர் இந்த உலகத்தில் வந்தார் என்பதை நினைவுகூர்ந்து இந்தக் கிறிஸ்மஸ் பண்டிகையை அனுசரிப்போம். “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்” (1தீமோ.1:15) என்ற நன்றியுணர்வோடு இயேசுவானவர் வெளிப்பட்டதின் நோக்கத்தை பவுல் நினைவுகூர்ந்தார்.
2. பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கே இயேசுகிறிஸ்து வெளிப்பட்டார் (1யோவா.3:8).
உலகத்தில் பாவம் தோன்றியபின் பிசாசானவனின் ஆளுகையின் கீழ் இவ்வுலகம் சென்றது. அவனுடைய கிரியை உலகமுழுவதும் பரவி துன்பங்களினாலும், நோய்களினாலும், தீராத பிரச்சனைகள், மற்றும் பிரிவினைகளினாலும் மனுக்குலத்தை அவன் அலைக்கழித்து வருகிறான். அவனுடைய கிரியைகளை அழிக்கும் படிக்கே இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தில் பிறந்தார். அவர் பிசாசுகளைத் தம்முடைய வார்த்தையினாலும் அதிகாரத்தினாலும் துரத்தினார். பிசாசுகள் அவரை உன்னதமான தேவனுடைய குமாரனே என்று அறிக்கையிட்டு ஓடின. பொல்லாங்கனுக்குள் கிடக்கிற இந்த உலகத்திலே, இயேசு அவனுடைய கிரியைகளை அழித்து தேவனுடைய இராஜ்ஜியத்தை ஸ்தாபித்தார். பிசாசின் கிரியைகளை நடப்பித்து வந்த நம்மை, அவர் சிந்தின இரத்தத்தினாலே விடுவித்து தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி அழைத்தார். பிசாசின் கிரியைகளிலிருந்த நம்மை விடுவிக்கும்படியே இந்த உலகத்திற்கு வந்த இயேசுகிறிஸ்து நம் உள்ளத்தில் பிறக்க இடம் கொடுத்திருக்கிறோமா? “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினால் அழிக்கும்படிக்கும் …. யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார் (எபி.2:14,15).
3. எந்த மனுஷனையும் பிரகாசிக்கும் மெய்யான ஒளியாக வந்தார் (யோவான் 1:9).
பாவஇருளால் ஆட்கொள்ளப்பட்ட இந்த உலகில் தோன்றிய எத்தனையோ மகாத்துமாக் களையும், ஆன்மீகத் தலைவர்களையும் மக்கள் ஒளியாகவும், ஞானஜோதியாகவும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், அவர்களால் எந்த மனுஷனையும் பிரகாசிக்கப்பண்ண முடியவில்லை. அவர்களும் அவர்களின் ஆன்மீகப் போதனைகளும் அந்தகாரத்திலிருந்த மக்களை வெளிச்சத்திற்குள் கொண்டுவர இயலவில்லை. அவர்களையெல்லாம் மரணஇருளானது கவ்விக்கொண்டது.
ஆனால், இயேசுவானவரோ எந்த மனுஷனையும் பிரகாசிக்கப் பண்ணுகிற மெய்யான ஒளியாய் வந்தார். இருளானது அந்த ஒளியைப் பற்றிக்கொள்ளவில்லை. இதைத்தான் ஏசாயா தீர்க்கதரிசி, “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசா.9:2)” என்று இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்துத் தீர்க்கதரிசனமாக உரைத்தார். அந்தகாரத்திலிருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு நாம் அழைக்கப்பட்டோம் என்று பேதுரு குறிப்பிடுகிறார் (1 பேதுரு 2:9). மெய்யான ஒளியாகவும் பெரிய வெளிச்சமாகவும், ஆச்சரியமான ஒளியாகவும் வெளிப்பட்ட இயேசு கிறிஸ்து, பாவஇருளிலிருந்த எந்த மனுஷனையும் பரிசுத்தமாக்கி அவனைப் பிரகாசிக்கும்படி செய்கிறார். எத்தனையோ கொடிய பாவிகளுக்கும், கொலைகாரர்களுக்கும், துன்மார்க்கர்களுக்கும், அவர்தாம் சிந்தின இரத்தத்தினால் பாவமன்னிப்பை அருளி, இந்த உலகத்திலே பிரகாசிக்கச் செய்துள்ளார். அதற்கு நாமும் சாட்சிகளாயிருக்கிறோம்.
4. சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்கப் பிறந்தார் (யோவான் 18:37).
எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின (யோவான் 1:17). சத்தியத்தை கைக்கொள்ள முடியாமல் அவரைவிட்டுப் பின்வாங்கிப் போன மனுக்குலத்திற்கு அவரையே சத்தியமாயும் கிருபையாயும் பிதாவானவர் அனுப்பினார். சத்தியத்திற்கு சாட்சி கொடுக்கும்படி பிறந்த அவரை இஸ்ரவேலர் தள்ளிப்போட்டனர். அவருடைய சாட்சி உண்மையாயிருந்தும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், சத்தியத்திற்கு சாட்சிகொடுக்க வந்த அவரை அறிந்துகொண்ட புறஜாதிகளாகிய நம்மையோ, அந்த சத்தியமானது பாவம், மரணம் என்ற பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்று. “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்” (யோவான் 1:14). சத்தியத்தைக் குறித்து சாட்சிகொடுக்க வந்த இயேசுவானவர் நம் உள்ளத்தில் பிறந்திருக்கிறாரா? அவர் நம் உள்ளத்தில் பிறந்திருந்தால் இந்தக் கிறிஸ்துமஸ் நாட்களில் உண்மையான விடுதலையையும் அவரது மகிமையையும் நாம் அனுபவிப்பவர்களாய் இருப்போம்.
5. நியாயப்பிரமாணத்தை அழிக்கிறதற்கு அல்ல; நிறைவேற்றுகிறதற்கே வந்தார் (மத். 5:17).
நியாயப்பிரமாணத்தினால் பாவமானது அடையாளம் காட்டப்பட்டது. நியாயப்பிரமாணம் இஸ்ரவேல் ஜனத்திற்குப் பாரமாகக் காணப்பட்டது. நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் நித்திய மீட்பை ஏற்படுத்தவில்லை. நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே (கலா.2:16).
நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டு வந்த பலியையும் காணிக்கையையும் சர்வாங்க தகனபலிகளையும் பாவ நிவாரண பலிகளையும் தேவன் விரும்பவில்லை. அவைகள் அவருக்குப் பிரியமானதாகவும் இருக்கவில்லை. ஆகையால், இயேசுகிறிஸ்து தம்முடைய சரீரத்தை ஒரே தரம் பலியிடுவதற்கு ஒப்புக்கொடுத்தார். அதினால் நியாயப்பிரமாணம் நிறைவேற்றப்பட்டது. “விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்” (ரோமர் 10:4). பூமியிலுள்ள நாம் அனைவருமே தேவனுடைய பிள்ளைகளாகும்படி இயேசுகிறிஸ்துவினாலே கிருபையின் பிரமாணம் உருவானது. இயேசு நியாயசாஸ்திரியினிடம் கூறும்போது, தேவனிடத்தில் அன்புகூருவது முதலாம் பிரதான கற்பனை என்றும் பிறனிடத்தில் அன்புகூருவது இரண்டாம் கற்பனை என்றார். இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார் (மத்.37:40). இதுவே அன்பின் பிரமாணமாகும். இதை நிறைவேற்றவே இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வெளிப்பட்டார்.
நமக்கு நித்தியமீட்பு ஏற்படும்படியாக தம் இரத்தத்தைச் சிந்தி நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றும்படி வந்த இயேசுவின் பிறப்பு இந்த உலகிற்கு உண்மையிலேயே மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் செய்தியே!
நாம் இதுவரை தியானித்தபடி, இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்ததற்கான நோக்கத்தை அறிந்துகொண்டவர்களாய் கிறிஸ்து பிறப்பின் பண்டிகையை ஆசரிப்போம்! இந்த நற்செய்தியை மற்றவர்களுக்கும் எடுத்துசெல்வோம்.
உங்கள் யாவருக்கும் எமது கிறிஸ்துமஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.