• சுவி. சுசி பிரபாகரதாஸ் •
(நவம்பர் – டிசம்பர் 2024)

சுவி. சுசி பிரபாகரதாஸ்
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே சத்தியவசன நேயர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார் (கலாத்.4:5).
வருடத்தினுடைய இறுதிமாதம் வந்தவுடனே கிறிஸ்துமஸை நம் நினைவில் கொள்கிறோம். கிறிஸ்துமஸ் என்றால் கிறிஸ்து அனுப்பப்பட்டார் என்பதுதான் பொருளாகும். இந்தப் பொருள்தான் கலாத்தியர் 4:5இல் அடங்கியிருக்கிறது. அருமையானவர்களே கிறிஸ்துமஸ் காலத்திலே அநேக அன்பளிப்புகளை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வர். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கின்றனர். பிள்ளைகள் பெற்றாருக்கு கொடுக்கின்றனர். கணவன் மனைவிக்கு கொடுக்கிறான். மனைவி கணவனுக்குக் கொடுக்கிறாள். அதே போல நண்பர்களும் இவ்வாறு பரிசுகளைக் கொடுப்பது பழக்கமாகவும் பாரம்பரியமாகவும் மாறிவிட்டது. ஆனால், இவ்வாறு கொடுக்கிறதற்கு ஒரு அடிப்படையான ஒரு காரியம், பகிர்ந்து கொடுத்தல் (Sharing) என்று சொல்லலாம்.
எனவே, அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் என்றால், அது பகிர்ந்து கொடுக்கிற ஒரு தன்மை எனலாம். இந்நாட்களிலே மக்கள் தன் வாழ்வு – தன் குடும்பம் என வாழ்கின்றனர். அப்படிப்பட்ட மக்கள் மத்தியில் நாம் பகிர்ந்து கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அதுதான் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்!
பரலோகம் தம்முடைய மகிமையைப் பகிர்ந்து கொண்டது!
முதலாவது, பரலோகம் தம்முடைய மகிமையைப் பகிர்ந்துகொண்டது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக நம்முடைய இரட்சகராகிய இயேசுவானவர் இப்பூமியிலே பிறந்த சமயத்தில் மகிமை காணப்பட்டது. யோவான் 1:14ஆம் வசனத்திலே கிறிஸ்து பிறந்ததைக் குறித்து யோவான் எழுதும்போது சொல்லுகிறார்: அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. கிறிஸ்து பிறந்ததினாலே பரலோகத்தின் மகிமை மனுக்குலத்தில் வெளிப்பட்டது. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார் என பிலிப்பியர் 2:6-7ஆம் வசனங்களில் வாசிக்கிறோம். இவ்வாறு கிறிஸ்து பிறந்தபோது பரலோகம் தன்னுடைய மகிமையை இந்த பூமியிலே அது பகிர்ந்து கொண்டது.
மிருகஜீவன்கள் அல்லது கால்நடை தங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்துகொண்டது.
இரண்டாவதாக, லூக்கா 2:7ஆம் வசனத்தில் சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்த படியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள் என்று வாசிக்கிறோம். மரியாள் தன் பிள்ளையைப் பெற்றெடுத்தாள். ஆனால் சத்திரத்திலே அவர்களுக்கு இடம் இல்லை. ஆகவே மாடுகள் தங்குகிற அந்த முன்னணையிலே பிள்ளையைக் கிடத்தி இருந்தனர். முன் னணை என்பது மாடுகள் அல்லது கால்நடைகள் சாப்பிடுவதற்குரிய ஆகாரம் வைக்கிற இடமாகும்.
லூக்கா ஒரு சிறந்த வைத்தியன்; அதே சமயத்திலே நல்ல சரித்திர ஆசிரியர். அவர், “முன்னணையிலே கிடத்தினாள்” என்று எழுதுகிறார். முன்னணை என்பது அந்நாட்களிலே சிறந்த இடம் அல்ல; அது மிகவும் மோசமானதும், ஒரு அசுத்தமான ஒரு இடமுமாகும். ஒருவேளை யோசேப்பினதும் மரியாளினதும் அந்த சூழ்நிலையினிமித்தம் அந்த மிருகங்கள் அப்புறப்படுத்தபட்டிருக்கலாம்.
அருமையான சகோதர சகோதரிகளே, இந்த உலகத்தை உருவாக்கினவர் அதை இரட்சிக்க வந்தார். அவர் தேவனுடைய குமாரன்; அப்படிப்பட்டவர் சாதாரணமான மாட்டுத்தொழுவில் வைக்கப்பட்டிருந்தார். அதை இன்னொரு கோணத்தில் நான் உங்களுக்கு சொல்லுகிறேன். பரலோகம் எவ்வாறு தன் மகிமையை பகிர்ந்துகொண்டதோ, அதேபோல இந்த மிருகங்களும் தங்களுடைய மகிமையை பகிர்ந்துகொண்டதை திருமறையிலே வாசிக்க முடிகிறது. ஏசாயா 1:3ஆம் வசனம்: மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார். அப்படியானால் மிருகங்கள்கூட ஆண்டவரை அறிந்துகொள்கிறது; தனது எஜமானைப் புரிந்துகொள்கிறது; ஆனால், மக்கள் தங்கள் எஜமானாகிய ஆண்டவரை அறியவில்லை என்று சொல்லி ஏசாயா தீர்க்கன் அங்கே வெளிப்படுத்தி எழுதுகிறார். மிருகங்கள் தங்களுடைய கொட்டகையை அல்லது தொழுவத்தைப் பகிர்ந்துகொண்டது எனப் பார்க்கிறோம். நம் வாழ்க்கையிலே ஆண்டவருக்கு என்று பகிர்ந்து கொண்டிருக்கிறோமா?
மனுக்குலத்தாரும் பகிர்ந்துகொண்டனர்!
மூன்றாவதாக, மனுக்குலத்தாரும் சிலர் பகிர்ந்துகொண்டனர். மத்தேயு 1:18,19ஆம் வசனங்களை வாசித்துப் பாருங்கள். மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
அருமையானவர்களே, பிரமாணத்தின்படி இப்படிப்பட்ட ஒரு பெண்ணை கல்லெறிந்து கொல்ல வேண்டும் (உபா.22:20,21). ஆனால், இந்த கல்லெறிதல் இல்லாதபடி இரகசியமாய் தள்ளிவிட யோசேப்பு எண்ணினான். மரியாள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து இயேசுவின் பிறப்பைக் குறித்துச் சொல்லும்பொழுது. நான் புருஷனை அறியாதவள் அல்லவா? இது எப்படி ஆகும் என்று கேட்டதற்கு தேவதூதன் மூலம் அவளுக்கு பதில் சொல்லப்பட்டது (லூக்கா 1:27-30). அதேபோல யோசேப்பு தள்ளிவிடலாமா என்று எண்ணும்போது ஆண்டவர் சொப்பனத்தின் வழியாக அவனோடு பேசி, வெளிப்படுத்தியபோது (மத்.1:20) அவனும் அதற்குக் கீழ்ப்படிந்து அவளை ஏற்றுக்கொள்கிறான். ஆகவே இரண்டு பேருடைய வாழ்க்கையிலும் அது ஒரு கடினமான சூழ்நிலைதான். ஆனாலும், ஆண்டவரின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர்கள் செயல்பட்டனர்.
நம்முடைய வாழ்க்கையைக் குறித்து நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். இயேசுவின் பெற்றோராகிய மரியாளும் யோசேப்பும் தங்கள் வாழ்வைத் தெய்வத்திட்டத்திற்கு அர்ப்பணித்து அவர்கள் இடங்கொடுத்ததினால் அவர்கள் வாழ்விலே ஆசீர்வாதமான காரியங்கள் நடைபெற்றது. அவர்கள் இருவரும் தெய்வத்திட்டத்திற்கும் தேவதீர்மானத்திற்கும் தங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டனர். சகோதர சகோதரிகளே, தேவதிட்டத்திற்கும் தேவ நோக்கத்திற்கும் உங்களை அர்ப்பணித்து கீழ்ப்படிகிறவர்களாக இருக்கிறீர்களா?
சாஸ்திரிகள் பகிர்ந்துகொண்டார்கள்
அடுத்ததாக, கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகளும் அங்கே பகிர்ந்துகொள்கின்றனர். மத்தேயு 2:1-11 வேதபகுதியை வாசித்து பாருங்கள். கிழக்கிலிருந்து ஞானிகள் அல்லது சாஸ்திரிகள் சிலர் வந்தனர். இவர்கள் மூன்று பேர் என்று சொல்வார்கள். நமக்கு எத்தனை பேர் என்று தெரியாது. அவர்கள் கிழக்கிலே தோன்றிய நட்சத்திரத்தைக் கண்டு, “யூதருக்கு ராஜா பிறந்திருக்கிறார்” என்ற செய்தியைப் புரிந்துகொண்டு நீண்டதூரம் பிரயாணம்செய்து அங்கு வருகின்றனர். இவர்கள் வான சாஸ்திரிகளாக இருக்கலாம் அல்லது நட்சத்திரங்களை கணிக்கின்ற ஞானிகளாகவோ விஞ்ஞானிகளாகவோ இருக்கலாம்.
நட்சத்திரம் ஒருபோதும் பகலில் காணப்படாது. ஆகவே, இரவில்தான் அவர்கள் பயணம் செய்து வருகிறார்கள். அவர்கள் பிள்ளை இருந்த இடத்துக்கு வந்தபோது பிள்ளையையும் மரியாளையும் கண்டு, பிள்ளையைப் பணிந்துகொண்டனர். அந்த வேளையில் பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைக்கின்றனர். தங்கள் ஐசுவரியத்தையும் பொக்கிஷங்களையும் ஆண்டவருக்கென்று பகிர்ந்துகொண்டார்கள். பொன்னானது விசுவாசத்தைக் குறிக்கலாம். அது ராஜாக்களோடு சம்பந்தப்பட்டதாகும். தூபவர்க்கமானது ஆசாரியனோடு சம்பந்தப்பட்ட தாகும். வெள்ளைப்போளம் பலியோடும் அவரது மரணத்தோடும் சம்பந்தப்பட்டதாகும். விலை மதிக்க முடியாத இந்த ஐசுவரியத்தை ஆண்டவருக்கென்று அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
அருமையானவர்களே, உங்கள் வாழ்க்கையில் இந்த கிறிஸ்துமஸ் காலங்களிலே ஆண்டவருக்கென்று நமது ஐசுவரியத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு முன்வருவோமா? இந்த சாஸ்திரிகள் காணிக்கையாக அளித்த மூன்று பொருள்களும் ஆண்டவருடைய எதிர்கால திருப்பணியையும் எதிர்கால அழைப்பையும் அது உறுதிப்படுத்துவதாக இருந்தது.
இயேசுவே இராஜாவாக, இயேசுவே ஆசாரியனாக. இயேசுவே நம் எல்லோருக்கும் ஜீவபலியாய் மடியப்போகிறார் என்பதை தீர்க்கதரிசனமாக அவர்கள் கையளித்ததிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
மேய்ப்பர்களும் பகிர்ந்துகொண்டனர்!
லூக்கா 2:15-20 வரையுள்ள வேதவசனங்களை வாசித்து பாருங்கள். இந்த பகுதியிலே, மேய்ப்பர்கள், கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி … கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம் பண்ணினார்கள். தூதனுடைய வார்த்தையைக் கேட்டு உடனடியாக மேய்ப்பர்கள் போய் குழந்தையைக் கண்டு பணிந்துகொண்டனர். அவர்கள் கண்டதை பிரசித்தம் பண்ணிக்கொண்டே சென்றனர். இரட்சகர் இவ்வுலகில் உதித்த செய்தியை மற்றவர்களிடம் அவர்கள் பகிர்ந்துகொண்டனர். மேய்ப்பர்களைப் போன்று நாமும் இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள முன்வருவோம்.
ஆண்டவருடைய பிறந்த நாளிலே பரலோகம் தனது மகிமையைப் பகிர்ந்துகொண்டது. கால்நடைகள் தங்களது இருப்பிடத்தைப் பகிர்ந்துகொண்டது. யோசேப்பு மரியாளும் கீழ்ப்படிந்து தங்கள் வாழ்வையே ஆண்டவருக்கு பகிர்ந்துகொண்டனர். சாஸ்திரிகள் தங்கள் ஐசுவரியத்தைக் கொடுத்து அதை பகிர்ந்துகொண்டார்கள். மேய்ப்பர்கள் பிள்ளையைக் கண்டு, தூதர் மூலமாக சொல்லப்பட்ட செய்தியை எங்கும் பிரசித்தம் பண்ணுகிறார்கள்.
தேவபிள்ளையே, இன்றைக்கு நாம் கிறிஸ்துமஸை கொண்டாடுகிறோம். ஆலயத்திற்கு செல்கிறோம், பண்டிகையை கொண்டாடுகிறோம். நல்ல உணவை நாம் சமைத்து உண்கிறோம். புத்தாடைகளை நாம் அணிந்து மகிழ்கிறோம். நல்லது! ஆனால், நற்செய்தியை, இரட்சகர் இவ்வுலகில் உதித்த செய்தியை யாராவது ஒருவரிடத்தில் நாம் பகிர்ந்திருக்கிறோமா? இந்த கேள்விக்கு நாம் பதிலளிக்க அழைக்கப்படுகிறோம்.
வாசகர்கள் அனைவருக்கும் அன்பின் கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!