• சகோதரி சாந்தி பொன்னு •
(நவம்பர் – டிசம்பர் 2024)

கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன் (சங்.116:12,13).

சகோதரி சாந்தி பொன்னு

சத்திய வசனம் வாசகர்களுக்கு எங்கள் அன்பின் கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஒரு புதிய வருடத்துள் பிரவேசிக்க இருக்கிறோம். நமது உள்ளுணர்வு எப்படி இருக்கிறது? நாட்டின் சூழ்நிலையில் இனி என்னவாகுமோ என்ற ஆதங்கத்துடன் இருக்கிறோமா? எதிர்பார்ப்புடன் இருக்கிறோமா? அல்லது என்னதான் நேரிட்டாலும் இதுவரை அற்புதமாக நம்மை நடத்திவந்த தேவாதி தேவன் இன்னமும் நடத்துவார் என்ற உறுதியுடன் இருக்கிறோமா? நடந்து முடிந்தவைகள் முடிந்தவையே, ஆனால் எதுவும் வீணுக்கல்ல என்பதை உணருவோமானால், இதுவரை கர்த்தர் செய்தவை அனுமதித்தவை யாவும் அவர் நமக்களித்த உபகாரங்கள் என்பதை மனதார ஏற்றுக்கொண்டு முழுஉள்ளத்துடன் ஆண்டவருக்கு நன்றி கூறுவோம் அல்லவா! நன்றி கூறுகின்ற இதயத்தில் தேவன் மகிழுகிறார். இதுவரை நாம் கடந்துவந்த பாதைகளில், கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு மாத்திரமல்லாமல், நமக்கு நன்மையல்ல என்று நாம் கருதுபவையும் தேவனுடைய அன்புப் பரிசுதான் என்பதை ஏற்றுக்கொண்டு அவருக்கு மனப்பூர்வமாக நன்றி கூறுவோமா.

ஒரு பாவியான பெண், அவளுடைய ஊராரால் நன்கு அறியப்பட்ட அவள், அது பரிசேயன் வீடு என்றும் பாராமல், ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து, அங்கே பந்தியமர்ந்திருந்த இயேசுவின் பாதங்களின் அருகே பின்னால் நின்று அவரது பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவரது பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள். பரிமளதைலம் மிகமிக விலை உயர்ந்தது. அவ்வளவு பணம் இவளுக்கு எப்படிக் கிடைத்தது. நீண்டகாலமாக அவள் பணத்தைச் சேகரித்திருப்பாள்; அவ்வளவு பணத்தையும் செலவுசெய்து, இந்த நறுமண தைலத்தை அவள் வாங்கியிருக்க வேண்டும். இத்தனைக்கும் அவள் இயேசுவை முதலில் சந்தித்ததாகவோ, மன்னிப்புப் பெற்றுக்கொண்டதாகவோ எழுதப்படவில்லை. ஆனால், அவள் தன்னைத்தானே உணர்ந்து, மனதார இயேசுவின் மன்னிப்பைப் பெற்று விடுதலை பெற்றிருக்காவிட்டால் இந்த நன்றிச் செயலை அவளால் செய்திருக்க முடியாது.

இந்த வெளிப்படையான செயலுக்குக் காரணம், அவளுடைய உள்ளான வாழ்வு விடுதலை அடைந்ததுதான்! அதற்குக் காரணமானவரை அவள் கண்டு, தனக்குள்ள எல்லாவற்றையும் கொட்டிக் கொடுத்து, அவரை வணங்கி தன் நன்றியைத் தெரிவிக்கிறாள். இப்படியிருக்க, இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தால் கிருபையாக மீட்கப்பட்ட நாம் எப்படி நன்றி சொல்லப்போகிறோம்.

“கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்” என்று சிந்தித்தபோது, தான் பெற்றுக்கொண்ட இரட்சிப்பின் பாத்திரம், புதிய வாழ்வு இவைதான் சங்கீதக்காரனுடைய இருதயத்தை நிறைத்திருந்தது. நாம் ஆண்டவருடைய மன்னிப்பைப் பெற்றது மெய்யானால், நன்றி சொல்லாமலும் இருக்கமுடியாது, அதைப் பிறருக்கு அறிவிக்காமலும் இருக்கமுடியாது. இப்படிப்பட்ட ஒரு நன்றிச் செயலுக்கு எதுவும் ஈடாகாது. மற்றவையெல்லாம் இதற்குப் பிறகுதான். இந்த நாளில் நன்றி நிறைந்த இருதயத்துடன் தேவன் அருளிய இரட்சிப்பின் ஜீவனுள்ள சாட்சியை யாராவது ஒருவருக்காவது அறிவித்து, ஒரு புதிய ஆத்துமாவை ஆண்டவரிடம் நடத்திய மகிழ்ச்சியுடன் புதிய ஆண்டுக்குள் பிரவேசிப்போமாக!

மேலும், “தமக்குப் பயந்திருக்கிறவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!” என்று தாவீது சந்தோஷமாகப் பாடி வைத்துள்ளார் (சங்.31:19). கர்த்தருடைய நன்மை யாருக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறது என்பதை இந்த வாக்கியம் தெளிவுபடுத்தியிருக்கிறது. ஒன்று, ‘தமக்குப் பயந்திருக்கிறவர்களுக்கு’ அதாவது, கர்த்தரை தங்கள் வாழ்வில் கனப்படுத்தி, அதாவது அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவரை மேன்மைப்படுத்துகிறவர்கள். இந்த விஷயத்திலே நாம் எங்கே நிற்கிறோம்? உலகத்துக்குப் பயந்து தேவனுடைய வாக்கியங்களுக்குத் தூரமாக நிற்கிறோமா? அல்லது வைராக்கியமாக வார்த்தையில் உறுதியாக நிற்கிறோமா?

அடுத்தது மனுபுத்திரருக்கு முன்பாக அவரை நம்புகிறவர்களுக்கு. இவர்கள் யார்? தான் கல்லெறிந்து கொல்லப்படுவது உறுதி என்று தெரிந்திருந்தும், பகைவர்கள் சூழ்ந்து நிற்க ஸ்தேவான் துணிகரமாக தேவனை சாட்சியாக அறிவித்தாரே. எப்படி? அவர் கல்லெறிந்து கொல்லப்பட்டது மெய்தான், ஆனால், அதற்கு முன்பதாக அவருக்காக வைக்கப்பட்டிருந்த நன்மையை அவர் கண்டார். “அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷ குமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்” என்றார். ஸ்தேவான் மரணத்துக்குப் பயந்து ஆண்டவரை மறுதலிக்கவில்லை. தைரியமாக தலைநிமிர்ந்து நின்றார். இன்று நாம் எப்படி? தேவனுடைய நாமம் அவதூறு பண்ணப்படுவதைக் காணும்போது, கர்த்தருடைய வார்த்தை புரட்டப்படும்போது நாம் என்ன செய்கிறோம்? இன்னும் சொன்னால் தானியேலின் நண்பர்கள் மூவரும் அக்கினியில் போடப்பட்ட போதும் துணிகரமாக நின்றார்களே எப்படி? அவர்கள் தாங்கள் ஆராதிக்கிற தேவனை நம்பினார்கள். அந்த வைராக்கியம் நமக்கு வேண்டும்.

தேவன் நமக்காக வைத்திருக்கிற நன்மைகளின் தொகையை கணக்கிட முடியாது. “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை; அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” என்று கொரிந்தியருக்கு எழுதிய பவுல், தொடர்ந்து, ஆனால், கிறிஸ்துவை நம்புகிற நமக்கோ அவருடைய மரணம், உயிர்த்தெழுதல், இரட்சிப்பு ஆகிய இரகசியங்களை ஆவியானவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்கிறார். ஆக, மன்னிப்பு, இரட்சிப்பு, உயிர்த்தெழுதல், நித்திய வாழ்வு இவைகளுக்கு மிஞ்சி என்ன நன்மைதான் நமக்கு வேண்டும்? நாமோ நாளை மாறிப் போகின்ற இந்த உலக வாழ்வின் நன்மைகளையே எண்ணி ஏங்குகிறோம். அவை அவசியம்தான். ஆனால் அழியாத அழிக்கப்படாத ஏராளமான நன்மைகளை நமக்காக வைத்திருக்கிற ஆண்டவர் இந்த உலகவாழ்வில் நம்மைக் கைவிட்டுவிடுவாரா?

நம்மில் அநேகருக்குப் பரிச்சயமான வசனம் ஒன்றுண்டு. “அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறீர்களே” (ரோம.8: 28) என்கிறார் பவுல்.

இந்த நன்மை எது என்பதை அறிய அடுத்த வசனத்தை நாம் படிக்கவேண்டும். அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு…(ரோம.8:29). நமக்கு நேரிடுகிற யாவுமே தேவகுமாரனுடைய சாயலை நாம் தரித்துக்கொள்வதற்கு நம்மை உருவாக்க ஏற்ற காரியங்கள். இந்தப் பெரிய நன்மையை உதாசீனப்படுத்தலாமா?

மேலும், நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது என்கிறார் யாக்கோபு. ஆம், நமது தேவன் நன்மைகளின் தேவன். “அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.” அவர் ஜோதிகளின் பிதா…… யாக்கோபு 1:17ல் குறிப்பிடப்படுகின்ற இந்த நன்மை எது?˜ ஆம்,…”நம்மைச் சத்தியவசனத்தினால் ஜெநிப்பித்தார்.” கிறிஸ்து வுக்குள் நமக்குப் புதிய வாழ்வை தேவன் கட்டளையிட்டிருக்கிறார். இந்த நன்மையை உலகம் நமக்குத் தரமுடியுமா?

பிரியமானவர்களே, நமக்கு முன்னே இருக்கிற வருடத்தின் நாட்கள் எப்படிப்பட்டது என்பதை நாம் அறியோம். நாம் ஒருபோதும் நடவாத வழியிலே நம் காலடிகளை வைக்கப்போகிறோம். இந்த இடத்தில் நமது நம்பிக்கையை யாரில் வைத்திருக்கிறோம் என்பதே கேள்வி. தேவனிலா, நம்மிலா, தேசத்திலா, அல்லது நமது வளங்களிலா? தேவனையே நம்புகிறோம் என்றுதான் நிச்சயமாகவே சொல்லுவோம். அப்படிச் சொல்லுவது மெய்யானால், மெய்யாகவே தேவனையே நாம் நம்பி முன்செல்கிறோம் என்றால், இதோ ஒரு சவால் நமக்கு முன் வைக்கப்படுகிறது. ஆம், கர்த்தரிடத்திலிருந்து சொல்லிமுடியாத நன்மைகளைப் பெற்றுக்கொள்கிற நாம் நமக்கு இது நன்மைதான் என்று காண்கிறவற்றைக் குறித்து அவரைத் துதிக்கிறோம், மகிழுகிறோம், சாட்சி சொல்லுகிறோம், நல்லது, அது செய்யப்படவேண்டியதே. அதேசமயம், தேவன் நன்மைகளின் தேவன், அவரிடத்தில் தீமை இல்லை. இப்படியிருந்தாலும், சிலசமயங்களில் நமக்கு நன்மையல்ல என்று நமக்குத் தோன்றுகிறவைகள், கவனிக்கவும், நமக்கு நன்மையில்லை என்று நமக்குத் தோன்றுகிறவைகள், உதாரணத்துக்கு வியாதி, தோல்வி போன்ற காரியங்களுக்கு நாம் முகங்கொடுக்கும் போது, இவையும் தேவனால் நமக்கு அருளப்படுகின்ற மேன்மையான மிகச்சிறப்பான பரிசுகள், இவற்றிலும் கர்த்தர் நன்மை வைத்திருக்கிறார் என்று மனதார அவற்றை ஏற்கமுடியுமா? அந்த நன்மைகளை உணர்ந்து கர்த்தரைத் துதிக்க முடியுமா? சாட்சி பகரமுடியுமா?

இந்த சவால் சற்றுக் கடினமாக இருந்தாலும், நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்பது மெய்யானால் கர்த்தர் நம்மை உருவாக்குகிறவர், இயேசு ராஜாவின் சாயல் நம்மில் பிரகாசிக்கும்வரைக்கும் நம்மைப் புடமிடுகிறவர் என்பதை நம்புவோமானால் வரவிருக்கும் புதிய ஆண்டிலும் என்னதான் நேரிட்டாலும் என் ஆண்டவர் நன்மைகளின் பிதா என்று சொல்லி, இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளலாமே. கர்த்தர் நமக்காக வைத்திருக்கிற நன்மைகளை நினைந்து, ஒளியின் பிள்ளைகளாக, அந்தகாரத்தை நோக்கி உருளுகின்ற இந்த உலகில் வரவிருக்கும் புதிய ஆண்டில் நன்மை யின் வெளிச்சத்தைப் பிரகாசிக்க தேவஆவியானவர் நமக்குத் துணை செய்வாராக. ஆமென்.