ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 7 செவ்வாய்
“பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா.66:9) இவ்வாக்குப்படியே பிரசவத்திற்கு காத்திருக்கும் 5 சகோதரிகளுக்கு சத்துவத்தையும் பெலனையும் தந்து சுகப் பிரசவத்தை அருளிச்செய்திட ஜெபம் செய்வோம்.
இருதயத்தின் நுனித்தோல்
தியானம்: 2017 நவம்பர் 7 செவ்வாய்; வேத வாசிப்பு: யோசுவா 5:1-8
“…நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம் விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம் பண்ணு” (யோசுவா 5:2).
இஸ்ரவேல் வரலாற்றில் ‘விருத்தசேதனம்’ மிக முக்கியமான ஒன்று. கானான் தேசத்தை ஆபிரகாமுக்கும் அவருக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, “நான் அவர்கள் தேவனாயிருப்பேன்” என்று ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்த கர்த்தர், “உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் பண்ணக்கடவீர்கள். அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்” என்றும் சொன்னார் (ஆதி.17:4-14). ஆக, விருத்தசேதனம் என்பது தேவன் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கு ஒரு அடையாளம். இஸ்ரவேல் பிரித்தெடுக்கப்பட்ட ஜனம் என்பதற்கு ஒரு அடையாளம். அது கட்டளையுமாயிற்று (லேவி.12:3). எகிப்திலிருந்து புறப்பட்ட ஆண்மக்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள். ஆனால், அவர்கள் வனாந்தரத்தில் மாண்டுபோனார்கள். ஆகவே, இப்போது அவர்களுக்குப் பிறந்த ஆண்மக்களுக்கு விருத்தசேதனம் செய்யப்பட வேண்டியதாயிற்று. கர்த்தர் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கைக்குத் தாங்கள் உட்பட்டவர்கள் என்று அவர்களுக்கும் இது அடையாளமாயிற்று.
மாம்சத்தின் நுனித்தோல் அகற்றப்பட்டாலும் இஸ்ரவேல், தேவனுக்கும் அவருடைய உடன்படிக்கைக்கும் உண்மையுள்ளவர்களாக இருக்கவில்லை. அது வெறும் அடையாளம்தான். அது அவர்களின் அழுக்கை நீக்கி, நல்வழிப்படுத்தவில்லை. ஆகவேதான், இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம் செய்வது அவசியமாகின்றது. இது சரீர ரீதியான அடையாளம் அல்ல; இருதயம் மாற்றமடையவேண்டும்; இருதயத்தின் அழுக்குகள் நீக்கப்படவேண்டும். அன்று இஸ்ரவேல், தேவனுடைய மக்கள் என்பதை விருத்தசேதனம் அடையாளம் காட்டியது. இன்று நமது இருதயம், அதிலிருந்து புறப்படுகின்ற அனைத்தும் நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதற்கு அடையாளமாகிறது. இருதயம் சுத்தமானால் அதிலிருந்து புறப்படுவதும் சுத்தமாகும். (எரே.4:4, எசே.44:7,9, ரோமர் 2:28-29 யை வாசிக்கவும்).
இஸ்ரவேலர் கானானைச் சென்றடையுமுன், மாம்சத்தினாலான விருத்தசேதனம் எவ்வளவு முக்கியமாயிருந்ததோ, பரம கானானை நோக்கிப் பயணமாகியிருக்கும் நமக்கு, இருதயத்திலுண்டாகும் விருத்தசேதனம் மிகவும் முக்கியமானது. எனவே, தேவனுக்குப் பிரியமற்ற பாவ காரியங்களை ஒருமுறை அல்ல; தினமும் நாம் அகற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.
“ஆகையால், நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம் பண்ணுங்கள்” (உபா.10:16).
ஜெபம்: எங்கள் இருதயங்களை சோதித்தறிகிற ஆண்டவரே, நல்ல இருதயமாக நாங்கள் மாற்றப்படுவதற்கு எங்களை ஒப்புவிக்கிறோம். எங்களை ஏற்றுக் கொள்ளும். ஆமென்.