ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 5 ஞாயிறு
நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் மாம்சமே (யோவான் 6:51) என திருவுளம் பற்றின ஆண்டவரை நினைவுகூரும் இந்த நாளின் திருவிருந்து ஆராதனை கலந்துகொள்ளும் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் சீர்ப்படுத்திட பாரத்துடன் ஜெபிப்போம்.
தேவனுடைய வழி மாத்திரமே
தியானம்: 2017 நவம்பர் 5 ஞாயிறு; வேத வாசிப்பு: யோசுவா 3:1-17
“நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” (யோவான் 15:7).
ஒரு சுற்றுலாப் பயணம் என்றாலும், நம்மை நடத்திச் செல்பவரின் சொல்லுக்கும் ஒழுங்குக்கும் நாம் செவிகொடுக்காவிட்டால், குறிப்பிட்ட இடத்தைச் சென்றடையவே முடியாது. அப்படியிருக்க நமது வாழ்க்கைப் பயணத்தைக் குறித்து நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
யோசுவாவின் தலைமையில் யோர்தான் நதிக்கரைக்கு வந்தனர் இஸ்ரவேலர். அடுத்ததாக, யோர்தானைக் கடப்பதற்கு சில வழிமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டியிருந்தது. ஒன்று, ஜனங்கள் தங்களைப் பரிசுத்தம் பண்ணவேண்டும். அடுத்தது, உடன்படிக்கைப் பெட்டியையும், அதைச் சுமக்கிற ஆசாரியரையும் அவர்கள் பின்தொடரவேண்டும். கரைபுரண்டோடும் யோர்தான் நதி தானாக விலகாது. உடன் படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் விசுவாசத்துடன் நதியின் தண்ணீரில் படவேண்டும். ஆசாரியர்களும், இஸ்ரவேல் ஜனங்களும் தங்கள் தலைவனான யோசுவாவிலும், அவனுடைய வார்த்தைகளிலும் நம்பிக்கை வைத்தார்கள். எப்படிக் கால்வைப்பது என்று முறுமுறுக்காமல், யோசுவா சொன்னபடியே கீழ்ப்படிந்து, சொன்னதைச் சொன்னபடியே செய்தார்கள். அற்புதத்தைக் கண்டார் கள். கரைபுரண்டு ஓடிய யோர்தான் குவிந்தோட அவர்கள் தரையிலே நடந்து அக்கரைக்குச் சென்றனர்.
சுயதிட்டம், உலக ஆலோசனை, பாவ வாழ்க்கை என இவையாவுமே ஒருவனின் விசுவாச வாழ்க்கைப் பயணத்திற்குத் தடையாக அமையும். இத்தடைகள் அகற்றப் படவேண்டும்; கர்த்தருடைய வார்த்தையை நம்பிக் கீழ்ப்படியவேண்டும். அப்போது தான் நாம் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கின்ற காரியங்களைப் பெற்றுக்கொள்வோம். ஆகையால், முதலாவது நமது வாழ்க்கையை வேதவார்த்தைகளுக்கூடாக ஆராய்ந்து பரிசுத்தம் பண்ணிக்கொள்வோமாக. அடுத்ததாக, நமது சுய திட்டங்களையும் உலக ஆலோசனைகளையும் கைவிட்டு, இயேசுவின்மேல் நம் கண்களைப் பதித்து, அவர் வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் வேத வார்த்தைகளுக்கூடாகப் பெற்றுக்கொள்வோமாக. மொத்தத்தில் தேவனையே சார்ந்து நிற்போமானால், கர்த்தர் சகலத்தையும் சரியாய் செய்துமுடிப்பார். அதை நம்பி முன் செல்வோம். அப்போது வழிகள் தானாகவே திறக்கும்.
“நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங்கீதம் 32:8).
ஜெபம்: ஆண்டவரே, எங்கள் பாதை தடைப்பட்டிருப்பதன் காரணங்களை ஆராய்ந்து அவற்றைத் தகர்த்தெறிந்துவிட்டு, தேவனுடைய வழியில் மாத்திரமே நடப்பதற்கு எடுக்கும் தீர்மானங்களில் நிலைத்திருக்க உமதருளை தாரும். ஆமென்.