ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 2 வியாழன்
“என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்” (சங்.30:2) என்ற வாக்குப்படியே 13 நபர்களுக்கு தேவன் அருளிச்செய்த சுகத்திற்காக நன்மைகளுக்காக ஆசீர்வாதங்களுக்காக நன்றி செலுத்தி ஜெபிப்போம்.
எதிர்ப்பை எதிர்கொள்!
தியானம்: 2017 நவம்பர் 2 வியாழன்; வேத வாசிப்பு: யோசுவா 1:5-9
“நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை” (யோசுவா 1:5).
கடந்த ஒருசில வருடங்களாக பல்வேறு எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டது. ‘நான் என்ன குற்றம் செய்தேன்?. ஏன் இத்தனை எதிர்ப்புகள்?’ என்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன. இதனால் அதிக வேதனைப்பட் டேன். என் கேள்விகளுக்குப் பதில் வேண்டி என்னைத் தேவசமுகத்தில் நிறுத்தி ஆராய்ந்தேன். அந்தச் சமயத்தில், நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை என்று கர்த்தர் யோசுவாவுக்குக் கொடுத்த வாக்கு என்னைப் பெலப்படுத்தியது. அந்த நிமிடமே என் உள்ளத்தில் சமாதானம் உண்டானது. எதிர்ப்புகள் மத்தியிலும் அதை மேற்கொண்டு செல்லும் வழியை என் தேவன் எனக்குக் காண்பித்தார் என்ற நிச்சயம் உண்டானது. இப்போது, தேவனைப் பற்றிய விசுவாசத்தோடு முன் செல்லுகிறேன்” என்றார் ஒரு சகோதரி.
யோசுவா பெரியதொரு சவாலை முன்னெடுக்க வேண்டியதிருந்தது. ஒரு பெரிய சேனை; குழந்தைகள் பெரியவர்கள் உட்பட இலட்சக்கணக்கான ஜனம். அவர்கள் நடந்துவந்த வழியிலே மோசேக்கு எதிராக முறுமுறுத்ததெல்லாம் யோசுவாவுக்குத் தெரியும். இப்பொழுது யோர்தான் நதிக்கரையிலிருந்து இவர்களைக் கானானுக்கு நேராக நடத்திச் செல்லவேண்டிய மகாபெரிய பொறுப்பு யோசுவாவின் தலையில் விழுந்தது. “கால்மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்” என்று கர்த்தர் சொன்னது உண்மைதான். என்றாலும், யோசுவாவுக்கு தேவபெலம் அதிகமாகத் தேவைப்பட்டது. கர்த்தர் யதார்த்தத்தை உணர்த்தினார். வழியிலும் வாழ் நாளிலும் எதிர்ப்புகள் வரும்; ஆனால், எந்த எதிர்ப்பும் அவர்களது பயணத்தைத் தடுத்து நிறுத்தமாட்டாது என்று கர்த்தர் உறுதியளித்தார்.
நமது தேவன் முன்கூட்டியே நாம் நடக்கவேண்டிய வழிகளையும், அதிலே நாம் எதிர்கொள்ளப்போகும் எல்லாக் காரியங்களையும் அறிந்திருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்கு அவசியம். நமது வாழ்வுப் பயணத்தில், பல எதிர்ப்புகள் வரலாம்; பல அநீதியான குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம்; எதுவும் நடக்கலாம். ஆனால், நம்மோடு இருப்பவர் பெரியவர். அவர் சர்வ அதிகாரமும் கொண்ட சர்வ வல்லமையுள்ளவர். ஆகையால், நமது உன்னத இலக்கை நோக்கிய பரிசுத்த பயணத்தில் நாம் எதிர்ப்புகளைக் கண்டு கலங்கவேண்டியதில்லை. முழு விசுவாசத்தோடு தேவ கரத்தைப் பற்றியவர்களாக முன்செல்லுவோமாக.
“பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” (யோசுவா 1:9).
ஜெபம்: தேவனே, நாங்கள் எதிர்கொள்ளப்போகும் எதிர்ப்புகள், தடைகள் எல்லாவற்றையும் நீர் முன்னறிந்தவரானபடியால் கலக்கமின்றி வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்திட உதவி செய்யும். ஆமென்.