ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 9 வியாழன்
அவாந்தரவெளியைத் தண்ணீர்த் தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றுகிற (சங்.107:35) தேவன்தாமே இம்மட்டும் தந்த மழைக்காக ஸ்தோத்திரித்து வேளாண்மைக்கு தேவையான நல்ல மழையை இன்னும் தந்தருளுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.
எரிகோ மதில்
தியானம்: 2017 நவம்பர் 9 வியாழன்; வேத வாசிப்பு: யோசுவா 6:1-24
“எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது. ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை” (யோசுவா 6:1).
யோர்தான் என்ற முதலாவது தடையை ஊடுருவி நடந்து வெளியே வந்ததும், இரண்டாவது தடை காத்திருந்தது. இது ஊடுருவிச் செல்லும் தடையல்ல; மாறாக, தகர்க்கப்படவேண்டிய தடை. யோர்தான் இயற்கையில் இருந்தது, அதை அவர்கள் தாண்டவேண்டியதிருந்தது. ஆனால், எரிகோவின் மதில், எரிகோ மக்களால் அவர்களுடைய பாதுகாப்புக்காக அவர்களால் போடப்பட்டது, அது இங்கே இஸ்ரவேலின் பயணத்துக்குத் தடையாயிற்று.
அந்த மதில் எரிகோ நகரத்தைச் சுற்றிலும் மிகவும் அரணிப்பாகக் கட்டப்பட்டிருந்தது. எத்தனை யானைப் பெலம் சேர்ந்தாலும் அதைத் தகர்ப்பது மிகக் கடினமாயிருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோவை நெருங்கி வந்துள்ளார்கள் என்று கேள்விப்பட்டதும் எரிகோவின் ஜனங்கள் பயந்து நகரத்தின் வாசல்களை அடைத்துப்போட்டார்கள். மட்டுமல்ல, அவர்கள் இஸ்ரவேலரோடு போராடவும் தயாராயிருந்தார்கள். ஆனாலும், வானளாவ உயர்ந்ததும், மிகவும் பலம் வாய்ந்ததும், அதிக அரணிப்பும், எந்த மனித பெலத்தாலும் தகர்க்க முடியாததுமான எரிகோவின் மதிலை யோசுவா நோக்கிப் பார்த்தும், அவன் கலங்கவில்லை. “இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும் யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்” (வச. 2) என்று கர்த்தர் சொல்லிவிட்டார். இம்மட்டும் வழிநடத்தியவரும், “பயப்படாதே, மோசேயோடுகூட இருந்தது போலவே உன்னோடும்கூட இருக்கிறேன்” என்று சொன்னவருமான தேவனாகிய கர்த்தர் தொடர்ந்தும் நடத்துவார் என்பதை யோசுவா விசுவாசித்தான்.
நமக்கு முன்னே தெரிகின்ற எதிரான தடைகளைக் கண்டு நாம் பயப்படவேண்டிய அவசியமில்லை. அவற்றை ஜெயமெடுக்கின்ற பலத்தையும் வாக்குத்தத்தத்தையும் தேவன் நமக்கு அருளிவிட்டார். நாம் செல்லும் பயணம் சாதாரணமானது அல்ல. அது பரம கானானை நோக்கிய பயணம். இஸ்ரவேலர் வருவார்கள் என்றா எரிகோ மதிலை எழுப்பியிருந்தார்கள்? அவர்கள் தங்களுக்காக எழுப்பியிருந்த மதில் இஸ்ரவேலுக்குத் தடையாய் தெரிந்தது. ஆனால், இஸ்ரவேலை நடத்திச் சென்றவர் கர்த்தர். இன்று நம்முடன்கூடவே பயணிக்கிறவர் கர்த்தர். பின்னர் ஏன் நமக்கு முன்னே தெரிகிறவற்றைத் தடைகள் என்று எண்ணவேண்டும? கர்த்தர் மதிலை வீழ்த்துவார். நாம் அவருக்குக் கீழ்ப்படிந்தால் போதும்.
“உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலது கையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்”
(ஏசா.41:13).
ஜெபம்: ஆண்டவரே, எரிகோ போன்ற பிரச்சனைகள் வந்தாலும் நீர் எங்களுக்கு தந்த வாக்கின்படி அந்த தடைகளையெல்லாம் தாண்டிச்செல்ல எங்களுக்கு துணை செய்கிறீர் உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.