ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 20 திங்கள்

“பரிசுத்த ஸ்தலத்தில் வாசம்பண்ணுகிற நான் .., நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்” (ஏசா.57:15) என வாக்குப்பண்ணின தேவன்தாமே 9 நபர்களது ஆவிக்குரிய வாழ்வை உயிர்ப்பித்து அவர்களைப் பிரகாசிக்கச் செய்திட பாரத்துடன்  வேண்டுதல் செய்வோம்.

மலையுச்சியும் அடிவாரமும்

தியானம்: 2017 நவம்பர் 20 திங்கள்; வேத வாசிப்பு: லூக்கா 9:28-45

“…பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது. …என்று, தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான்” (லுாக்கா 9:33).

ஒரு குடும்பத்தில் ஒரு மகன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டான். அவனுடைய தம்பி வியாதிப்பட்டபோது, அவனுக்குத் துணையாக நிற்க அவன் மறுத்துவிட்டான். இரட்சிக்கப்பட்ட தான், இவர்களோடு கலக்கமுடியாது என்று நினைத்தான் அவன். அது தவறு. கிறிஸ்தவ வாழ்வு என்பது உச்சியில் நின்று, உயர்வான சந்தோஷங்களை அனுபவிக்கின்ற வாழ்வு அல்ல.

அன்று மறுரூப மலையின் உச்சியில் நின்ற பேதுரு அப்படித்தான் நினைத்தான். உண்மைதான், அந்த அனுபவம், மகிழ்ச்சி எல்லாம் நமக்குண்டு; அவசியம். அதற்காக, அது மாத்திரம்தானா கிறிஸ்தவ வாழ்வு? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் ஏகபலியினால் கிருபையாய் கிடைத்த அந்த உன்னத சந்தோஷத்தைப் பெற்றுக்கொண்ட நாம், ‘நாம் இரட்சிக்கப்பட்டவர்கள்’ என்று சொல்லிக்கொண்டு, ஏனைய மக்களை ஒதுக்கி, உச்சியில் எப்போதும் நிற்கமுடியாது. இந்த உலகத்தில் இறங்கி, கிறிஸ்துவிடம் நாம் பெற்றதை உலகத்தாருக்குக் கொடுக்கவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இயேசு அதைத்தான் அன்று செயற்படுத்திக் காட்டினார்.

மலையடிவாரத்தில் ஒரே குழப்பம். பிசாசு பிடித்திருந்த தன் மகனுக்கு விடுதலை வேண்டி அவனைக் கொண்டுவந்திருந்தான் ஒரு தகப்பன். இயேசு அங்கே இல்லாததால், இயேசுவின் சீஷர்கள் மகனை விடுவிக்க முயன்றார்கள். அவர்களுக்கு முடியாமற்போனது. மலையின் உச்சியிலிருந்து இறங்கிவந்த இயேசு அந்த மகனை விடுவித்து, தந்தையின் கையில் கொடுத்தார்.

மறுரூப மலையின் அனுபவம் இன்பம்தான். ஆனால், மலையடிவாரத்தில் பலவித தேவைகளோடும், விடுதலை வேண்டியும் தமக்காகக் காத்திருக்கும் ஜனங்களை நாடிச் சென்றார் இயேசு. இன்று நாம் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, மறுரூப மலை உச்சியின் அனுபவங்களைப் பெற்றிருந்தாலும், இவ்வுலகில் நாம் வாழும்வரை மலையின் அடிவாரத்திலும் பலவிதமான தேவைகள், பாடுகளோடிருக்கும் ஜனங்கள் மத்தியிலும் நாம் வாழவேண்டும் என்பதை மறந்துபோகக்கூடாது. ஆகவே, பேதுருவைப்போல அல்லாது, இயேசுவின் மாதிரியின்படி மலை உச்சியின் அனுபவத்தோடுகூட, மலையின் அடிவாரத்தையும் நோக்கி இறங்குவோமாக.

“உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்” (கலா.5:14).

ஜெபம்: தூய ஆவியானவரே, எங்களுக்குள் எந்தவித இருதய கடினமும், பெருமையும் வந்திடாதபடி தாழ்மையின் சிந்தையோடே நடந்துகொள்ள உமதருளைத் தாரும். ஆமென்.