ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 12 ஞாயிறு

“இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்” (லூக்.9:48) இவ்வாக்குப்படியே இந்நாட்களில் சிறுவர்கள் மத்தியில் ஊழியம் செய்கிறவர்களுக்காகவும் சிறுபிள்ளைகள் உள்ளத்தில் வசனங்கள் ஆழமாக பதிந்து கிரியை செய்வதற்கும் ஜெபிப்போம்.

கீழ்ப்படிதலும், வெற்றியும்

தியானம்: 2017 நவம்பர் 12 ஞாயிறு; வேத வாசிப்பு: யோசுவா 6:6-16

“அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு போங்கள்… என்று சொல்லி…” (யோசுவா 6:6).

எரிகோ பட்டணத்தை முறியடித்து, கானான் பயணத்தைத் தொடருவதற்கு யோசுவா செய்யவேண்டியவற்றைக் குறித்து, கர்த்தர் அவனுக்குப் படிப்படியாகச் சொல்லிக்கொடுத்தார். யோசுவா கர்த்தருடைய ஆலோசனைகளைக் கேட்டு, கீழ்ப்படிந்து, அவற்றை ஆசாரியருக்கும் ஜனங்களுக்கும் தெரியப்படுத்தினான். யோசுவா எப்படி கர்த்தருடைய ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்தானோ, அப்படியே ஜனங்களும் யோசுவாவின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, சொன்னபடியே செயற்பட்டனர். அப்படியே எரிகோவின் மதில்கள் தகர்க்கப்பட்டு, அவர்கள் பெரிய ஜெயத்தைக் கண்டார்கள்.

தேவன் தாம் தெரிந்துகொள்ளுகிறவர்களை வெறுமனே அனுப்புகிறவர் அல்ல; தேவையான ஆலோசனைகளைக் கொடுத்தே அனுப்புகிறார். கர்த்தருடைய ஆலோசனைகளின்படி நடந்துகொண்டவர்கள் யாரும் தோற்றுப்போனதாகச் சரித்திரம் இல்லை. தேவ ஆலோசனைகளை மீறினவர்களின் முடிவு பரிதாபம் என்பதை வேதத்திலிருந்தே நாம் அறிகிறோம். இவர்களில் சவுல் ராஜாவும் ஒருவர். இன்று நமது காரியம் என்ன?

மாம்சீகமான பகைவனுக்கு எதிரான யுத்தத்திற்கு மாத்திரமல்ல, மாம்சத்துக்கும் ஆவிக்கும் எதிராக நமக்குள் நடக்கின்ற யுத்தத்துக்கும், பிசாசானவன் கொண்டுவருகின்ற சோதனைகளை மேற்கொள்ளும் யுத்தங்களுக்கும், அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கும் சகல யுத்தங்களுக்கும் தேவன் போதுமான ஆலோசனைகளைத் தமது வார்த்தையில் நமக்கு நிறைவாகத் தந்திருக்கிறார். எந்தவொரு காரியத்துக்கும் பரிசுத்த வேதாகமத்திலே பதில் உண்டு; ஆலோசனை உண்டு. ஆனால், நம் பிரச்சனை என்னவென்றால் காத்திருக்க நமக்குப் பொறுமை இல்லாதிருப்பதேயாகும். அதனால்தான் சவுல் ராஜா தள்ளுண்டு போனான். அடுத்தது, ஏற்கனவே நாம் ஒரு வழியை ஒரு திட்டத்தை போட்டுவிடுவோம். தேவனுடைய வார்த்தையின் ஆலோசனை அதற்கு எதிர்மாறாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள நமது மனம் மறுக்கிறது. மேலும் சொல்லப்போனால், சந்தேகம்; இது சரி வருமா? சரிவராமற்போகுமா? தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, அதற்குக் கீழ்ப்படிந்தால் மாத்திரமே அந்த வார்த்தை தருகின்ற ஜெயத்தை நம்மால் அனுபவிக்க முடியும். யோசுவா கர்த்தரின் ஆலோசனையைக் கேட்டான். மறுவார்த்தையின்றி சொன்னபடியே நடந்தான். மாபெரும் வெற்றியைக் கண்டான். அப்படியிருக்க நாம் ஏன் வீணாகத் தோற்றுப்போக வேண்டும்?

“மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும். ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்” (நீதி. 12:15).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே தேவ ஆலோசனைக்கு முழுமனதோடே கீழ்ப்படிவதற்கு எங்களை ஒப்புவிக்கிறோம். ஏற்றுக்கொள்ளும். ஆமென்.