ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 16 வியாழன்

ஒட்டன் சத்திரத்தில் சத்தியவசன பிரதிநிதியாக பணிபுரியும் சகோ.ஜேம்ஸ், நாசரேத்தில் பணிபுரியும் சகோ.ரூபன் புஷ்பராஜ் இருவரது ஊழியப்பணிகளில் கர்த்தர் உடன் இருந்து அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் ஆசீர்வதித்திட அவர்கள் சந்திக்கிற விசுவாசபங்காளர் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டுதல் செய்வோம்.

அதிகாலையின் ஆசீர்வாதம்

தியானம்: 2017 நவம்பர் 16 வியாழன்; வேத வாசிப்பு: யோசுவா 6:12-17

“ஏழாம் நாளில், அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப் பிரகாரமே பட்டணத்தை ஏழு தரம் சுற்றி வந்தார்கள்” (யோசுவா 6:15).

“அதிகாலை 3 மணிக்கு யாரோ எழுப்பிவிட்டதுபோல நான் எழுந்து, 2 மணி நேரம் தேவசமுகத்தில் இருப்பேன்.” இப்படிச் சொன்னது 20, 30 வயதுள்ள ஒருவரல்ல; 92 வயது நிறைந்த ஒரு தாயார்தான் இப்படி கூறினார். அதிகாலையில் எழும்புவதும், அந்த அமைதலான நேரத்தில் தேவசமுகத்தில் இருப்பதும் ஒரு வித்தியாசமான அனுபவம். என்றாலும் நம்மில் பலருக்கு அது கடினம்தான். ஆனால், அனுபவித்துப் பார்த்தால் அதன் ருசி விளங்கும்.

எரிகோவுக்கு எதிரான அமைதி யுத்தம் ஆரம்பித்துவிட்டது. கர்த்தர் சொன்னபடியே யோசுவாவும் ஆசாரியரும், ஜனங்களும் கர்த்தரின் பெட்டியுடன் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவந்து, பாளயத்திலே இராத்தங்கினார்கள். அடுத்தநாள் யோசுவா அதிகாலமே எழுந்திருந்தான் (6:12). அவனுக்கோ நித்திரையே வரவில்லைப்போலும். கர்த்தர் சொன்னபடியே ஆறு நாட்களும் அப்படிச் செய்து, இப்போது ஏழாவது நாள். இன்று என்ன நடக்குமோ! நம்மை அந்த யோசுவாவின் இடத்தில் அல்லது ஜனங்களின் இடத்தில் நிறுத்திச் சிந்தித்துப் பார்ப்போம். நாளை கர்த்தர் ஒரு காரியம் செய்வார் என்று தெரிந்தால் தூக்கம் வருமா? எல்லோருமே அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது நித்திரையைவிட்டு எழுந்துவிட்டார்கள். அதே பிரகாரம் ஏழு தரம் சுற்றி வந்தார்கள். ஏழாவதும் இறுதியானதுமான சுற்றிலே எக்காளம் ஊது கையில், யோசுவா சொன்னபடி மக்கள் ஆரவாரிக்க, எரிகோ மதில் இடிந்து விழுந்தது. என்னே ஆச்சரியம்!

“அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும். உம்மை நம்பியிருக்கிறேன். நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும். உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்” (சங்.143:8). இது தாவீதின் ஜெபம். நமது ஆண்டவர் உலகில் வாழ்ந்தபோது, “அவர் அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு வனாந்தரமான ஓர் இடத்திற்குப்போய், அங்கே ஜெபம் பண்ணினார்” (மாற்கு 1:35) என்று மாற்கு எழுதியுள்ளார்.

எந்த வேளையில் கூப்பிட்டாலும் தேவன் பதில் தருவார். ஆனால், அதிகாலை அமைதியான நேரம். நமது மனம் ஆறுதலாக ஆண்டவரில் அமர்ந்திருக்கக்கூடிய நேரம். வேறு எந்த இடையூறுகளும் இல்லாத நேரம். நமக்கு வெற்றி ஈட்டித்தரும் நேரமும் அதிகாலைதான். நாளை கர்த்தர் பெரிய காரியம் செய்வார் என்று விசுவாசித்தாலே போதும்; அதிகாலையிலேயே எழுந்திடலாம். இந்த அதிகாலை ஆசீர்வாதத்தையும் சந்தோஷத்தையும் நாம் இழக்கலாமா?

“என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது. எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்” (ஏசாயா 26:9).

ஜெபம்: ஆண்டவரே, அதிகாலை ஜெபத்தின் மேன்மைகளை கற்றுக்கொள்ள உதவி செய்தீர். அதிகாலமே உம்மைத்தேட உமதாவியின் வல்லமையை எங்களுக்குத் தாரும். ஆமென்.