ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 1 புதன்

“அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக் கொள்ளுகிறேன்” (எரேமி.31:3) என்று வாக்குப்பண்ணின ஆண்டவர் நம்மை நேசித்து இந்நாள்வரையிலும் நம்மை நடத்திவந்த கிருபைகளுக்காக  தேவனை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.

அழைத்தவர் உண்மையுள்ளவர்

தியானம்: 2017 நவம்பர் 1 புதன்; வேத வாசிப்பு: யோசுவா 1:1-4

நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன் (யோசுவா 1:3).

கண்களால் காணாத ஒரு தேசத்தை விசுவாசக்கண் கொண்டு பார்த்து, அதைச் சுதந்தரிப்பது என்பது இலகுவல்ல. வாக்களித்தவரின் வார்த்தைகளில் விசுவாசமும், அவருடைய வழிநடத்துதலில் நம்பிக்கையும் வைத்து ஆரம்பித்த பயணத்தைத் தொடர்ந்தால் மாத்திரமே, “கொடுத்தேன்” என்றவரின் வாக்கின் நிறைவேறுதலைக் கண்டுகொள்ளமுடியும். யோசுவா, இந்த நிறைவேறுதலைக் கண்டுகொண்டான்.

தேவபயம்; கடந்த காலத்தில் தேவன் அருளிய அற்புத விடுதலை, வழிநடத்துதல் எதையும் மறவாத மனம்; அதே தேவன் தொடர்ந்தும் வழிநடத்துவார் என்ற உறுதி; தேவன் மோசேக்கூடாகக் கொடுத்த கட்டளைகளை உத்தம இருதயத்தோடு பற்றிக் கொண்ட வாழ்க்கை; மோசேயின் தலைமைத்துவத்தின்கீழ் கீழ்ப்படிதல், மனத்தாழ்மை, உண்மை, உத்தமம் போன்ற குணாதிசயங்களோடு மோசேக்கு என்றும் பக்கபலமாகச் செயற்பட்ட செயற்திறன் என்று பல விஷயங்கள் யோசுவாவிடம் இருந்தன. இவையனைத்தின் பிரதிபலனாக மோசேயின் மரணத்தின்பின் கானானை நோக்கிய பயணத்தில் ஜனங்களை வழிநடத்த தேவன் இந்த யோசுவாவையே அழைத்தார். அழைத்தவர், தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லாமல், “உங் களுக்குக் கொடுத்தேன்” என்றார். இதுவரை வழிநடத்தி வந்த மோசே இறந்து போனாரே என்ற கலக்கமோ, பயமோ இல்லாத யோசுவா, தேவனின் அழைப்பைப் பெற்றதும், அவரது வாக்குத்தத்தத்தை விசுவாசத்தோடு பற்றிக்கொண்டு தாமதிக்காது செயற்பட்டான். வாக்குத்தத்தத்தின் நிறைவைக் கண்டுகொண்டான்.

“அழைத்தவர் உண்மையுள்ளவர்”. ஆனால், இன்று நம் வாழ்க்கையில் தேவன் தந்த வாக்குத்தத்தங்கள் ஏன் நிறைவேறவில்லை? பொறுமையின்மை, சுயமுயற்சி, கடந்தகால அற்புத வழிநடத்துதல்களை மறந்து முறுமுறுக்கும் நிலைமை, தடைகள் தாமதங்கள் ஏற்படும்போது வேதவசனத்திற்கூடாகப் பெலனடைந்து அமர்ந்திருக்காமை, தேவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளாமை, தேவனைக் குற்றப்படுத்தல் அல்லது பின்வாங்கிப்போதல், அவிசுவாசம் என இவையாவுமே நமது ஆவிக்குரிய பயணத்தில் நாம் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட வாக்குத்தத் தங்கள் நிறைவேறத் தடைக்கற்களாக இருக்கின்றன. அத்தடைகளை நீக்கி விசுவாசத்தோடு நம் பயணத்தைத் தொடர தேவாவியானவரின் துணைவேண்டி ஜெபிப்போமாக.

“பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல. மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல. அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரோ?” (எண்.23:19).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, என்ன தடை நேர்ந்தாலும், அழைத்தவர் நீர் உண்மையுள்ளவர் என்பதை நாங்கள் உறுதியாய் நம்பி தொடர்நது முன்னேறிச் செல்ல உமது கிருபை தாரும். ஆமென்.

வாருங்கள் போஜனம் பண்ணுங்கள்

அதிகாலை வேளையில்… (நவம்பர்-டிசம்பர் 2017)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: யோவான் 21:1-25
விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள் (யோவான் 21:4).

சூழ்நிலைகள் சாதகமாக அமையும் பொழுது தேவனுக்கு ஊழியம் செய்வது எளிதாக இருக்கும் என்பதையும் பாதகமான வேளையிலும் தோல்வியடைந்த வேளையிலும் தேவனுக்கு உழைப்பது மிகக்கடினமாக இருக்கும் என்பதையும் நீங்கள் கவனித்தது உண்டா? ஆம், வாழ்க்கையில் சூறாவளி அடித்து ஆவிக்குரிய வாழ்க்கையில் மனமடிவு உண்டாகும்பொழுது நாம் மனநிறைவைத் தேடுகிறோம். நமது செயல்பாடுகள் அதிகமாகும் பொழுது செயல்பாடு இல்லாமையும் தோன்றுகிறது.

இயேசுகிறிஸ்து இவ்வுலக ஊழியக் காலங்களில் பிரபலமாக இருந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய அற்புதங்களைக் கண்டும் அவருடைய போதனைகளைக் கேட்டும் கலிலேயா மலைகளில் தேடி வந்தனர். அவருடன் நெருங்கிப் பழகிய சீடர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.

சீடர்களுக்கு ஆண்டவருடனான உறவின் உச்சநிலை அவர் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்றிரவு நிகழ்ந்தது. பஸ்கா பண்டிகையை ஆசரிக்க அவர் தமது சீடர்களை மேலறையில் ஒன்று கூட்டினார். அவர்கள் அனைவரும் அவருடன் இருந்தனர்; ஜெபித்தனர்; பாடல்களைப் பாடினர்; அவருக்கு உண்மையாயிருக்க வாக்களித்தனர். இறுதி இராப்போஜனம் நிறுவப்பட்ட அன்று இரவு சீடர்கள் அதிக உற்சாகத்திலிருந்தனர். ஆனால், இந்நிலை சீக்கிரத்தில் அழிந்தது. இயேசு கெத்செமனே தோட்டத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். கொடூரமான அநியாயமான விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அவருடைய சீடர்கள் அவரைவிட்டு ஓடிவிட்டனர். திரும்பத்திரும்ப தான் சிலுவையில் பாடு அனுபவிக்க வேண்டும் என்று இயேசு தமது சீடர்களுக்குச் சொல்லியிருந்தும் அவர்களால் அந்த போதனையை கிரகித்துக்கொள்ள முடியவில்லை. அவருடைய மரணமும் அடக்கமும் சீடர்களின் உற்சாகத்தை அழித்துவிடடன. ஆண்டவரின் உயிர்த்தெழுதலும், சீடர்களுக்கு அவர் காட்சியளித்ததும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கப் போதுமானதாக இருக்கவில்லை.

ஆண்டவரின் கட்டளையின்படி சீடர்கள் கலிலேயாவுக்குத் திரும்பினர். கலிலேயாவின் மலைகளில் இயேசு தமது சீடர்களைச் சந்தித்ததையே இன்றைய தியானத்தில் நாம் பார்க்க இருக்கிறோம். அப்போஸ்தலர்களில் 7 பேர் தங்களது மீன்பிடிக்கும் பழைய தொழிலுக்குச் சென்றுவிட்டனர். அவர் உயிரோடிருக்கும்பொழுது அவரைப் பின்பற்றுவது எவ்வளவு எளிதாயிருந்ததோ அதேபோன்று அவரில்லாதபொழுதும் தங்களுடைய தொழிலுக்குத் திரும்புவதும் அவர்களுக்கு எளிதாயிருந்தது.

தான் மீன்பிடிக்கச் செல்வதாக பேதுருவே முதலாவது கூறினார். தன்னுடைய மீன்பிடிக்கும் தொழிலுக்குச் செல்வதால் அப்போஸ்தல அழைப்பை நிராகரிப்பதாக ஆகாது. ஆண்டவர் தரும் கட்டளைவரும்வரை அவருக்கு நன்கு தெரிந்ததைச் செய்ய நினைத்தார். எனவே பேதுருவும் மற்றவர்களும் ஒரு படவிலேறி இரவு முழுவதும் மீன் பிடிக்க முயற்சித்தனர். ஆனால் ஒன்றும் அகப்படவில்லை மேசியாவுடன் அவர்கள் வாழ்ந்த ஆண்டுகளில் மீன் பிடிக்கும் நுணுக்கத்தை மறந்துவிட்டார்களா? சீடர்களாகத் தங்களை இயேசு அழைக்கும் முன்னர் வெற்றி பெற்ற தொழிலில் ஏன் அன்று தோல்வியைக் கண்டார்கள்? அவர்களுக்கு தெரியவில்லை.

விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார் (யோவான் 21:4). ஒருசில காரணங்களால் கரையில் நிற்பவர் இயேசு என்பதை சீஷர்கள் அறியாதிருந்தார்கள். அவர்களிடம் விசாரித்தபொழுது தங்களுடைய தோல்வியை அறிக்கையிட்டார்கள். தங்களது வலையை வலதுபக்கம் போடச்சொல்லும் வரையிலும் அவர்கள் உயிர்த்தெழுந்த ஆண்டவர் தங்களைச் சந்திக்க வந்திருக்கிறார் என்பதை உணராதிருந்தார்கள். இது தங்களுடைய அழைப்பின் ஆரம்பத்தில் அவர் கூறிய கட்டளையையும் அதன் விளைவையும் அவர்களுக்கு நினைவூட்டியது (லூக்.5:1-11).

திரளான மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு கரைக்கு வந்த பொழுது இயேசு அவர்களுக்கு, “வாருங்கள், போஜனம் பண்ணுங்கள்” என்று அழைப்பு கொடுத்தார். கடைசி இராப்போஜனத்துக்குப் பின்னர் தணிந்துவிட்ட அன்பையும் நெருக்கத்தையும் ஆண்டவர் தூண்டி எரியவிட்டது போன்று அது அமைந்தது. ஏனெனில் அதிருப்தி கீழ்ப்படியாமைக்கு வழி நடத்தும்.

நாமும் ஆண்டவருக்கு ஊழியம் செய்து அவருடன் நெருங்கிய வாழ்வு நடத்திய பின்னரும் அதிருப்தியடைந்து அவரை விட்டு பின்வாங்கிச் செல்வது மிகவும் எளிதாகும். ஆனால் ஆண்டவர் ஒவ்வொருவரையும் “வாருங்கள், போஜனம் பண்ணுங்கள்” என்று அழைக்கிறார். நாம் எஜமானருடைய கைகளில் சக்திவாய்ந்த உபயோகமான கருவிகளாக இருக்கவேண்டுமெனில் அவருடைய பந்திக்கு அடிக்கடி வர வேண்டும். அவர் பாதத்தில் அமர்ந்து அனுதினமும் அவருடைய வார்த்தைகளைப் புசிக்கவேண்டும்.


அதிகாலைப்பாடல்

உம் அன்பினால் எம் இதயத்தை நிரப்பி எங்களை உயிர்ப்பியும்;
உன்னத அக்கினியால் எம் ஆவி தூண்டப்படட்டும்,
அல்லேலூயா உமக்கே மகிமை!
அல்லேலூயா ஆமென்!
அல்லேலூயா உமக்கே மகிமை!
எங்களை மீண்டும் உயிர்ப்பியும்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (நவம்பர்-டிசம்பர் 2017)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

(6) புதிய மொழிபெயர்ப்பு

1927-ம் ஆண்டு, லார்சன் குழுவினரால் திருத்தப்பட்ட புதிய ஏற்பாடு வெளிவந்தது. லார்சனின் மொழிபெயர்ப்பு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறவில்லை. இதற்கு முக்கிய காரணம், இம்மொழிபெயர்ப்புக்கெதிராக மாதா மாதம் நல்ல சமாரியன் எனும் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளேயாகும். இக்கட்டுரைகளில் சுட்டிக்காட்டப்பட்ட நியாயங்களைத் தொகுத்து, “புதிய தமிழ் மொழி பெயர்ப்பு அச்சிடாமலும் அதை உபயோகிக்காமலும் விடுவதற்கு ஒரு மனு” எனும் தலைப்பில் ஒரு ஆங்கில நூல் 1939-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில், லார்சன் குழுவினர் வேதாகமத்தின் பல வசனங்களை மாற்றியுள்ளனர்; அதில் பல வசனங்கள் விடப்பட்டுள்ளதோடு பல புதிய வசனங்கள் புகுத்தப்பட்டுள்ளன என்றும், மொழிபெயர்ப்புக் குழுவில் கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலித்த ஒருவர் இருக்கிறார் என்றும், இது 1611-ல் வெளிவந்த ஜேம்ஸ் அரசனின் பதிப்பு வேதாகமத்தைத் தழுவி மொழிபெயர்க்கப்படவில்லை என்றும், புதிய மொழிபெயர்ப்பில் இந்தியாவில் உபயோகிக்கப்படாத யாழ்ப்பாணத் தமிழ் கலந்திருக்கிறது என்றும், அம் மொழி பெயர்ப்புக்கு அடிப்படையாய் இருந்த சீனாய் மற்றும் வத்திக்கான் சுவடிகள் ஆதாரமற்றவை என்றும் சொல்லப்பட்டிருந்தது. மக்கள், லார்சன் மொழிபெயர்ப்பை வாசித்திராதபடியால், நல்ல சமாரியன் சுட்டிக்காட்டியவை உண்மை என நம்பினர். எனினும், லார்சன் மொழிபெயர்ப்பில் வாக்கிய அமைப்புகளே மாற்றப்பட்டிருக்கின்றன. அவை, வசனத்தின் கருத்தை மாற்றவில்லை என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும்.

லார்சன் குழுவினரது மொழி பெயர்ப்பில் யாழ்ப்பாணத் தமிழ் உள்ளது எனும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. ஹென்றி பவரின் மொழி பெயர்ப்பு, யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனெரிகளின் ஆலோசனைப்படி திருத்தப்பட்டபோதே யாழ்ப்பாணத் தமிழ், வேதாகமத்தில் புகுந்தது. ஆனால், லார்சன் மொழிபெயர்ப்பில் யாழ்ப்பாணத் தமிழ் புகுவதற்கு இடமிருக்கவில்லை. அவரது மொழிபெயர்ப்பு தமக்குப் பழக்கமற்ற நல்ல தமிழ் நடையாய் இருந்தமையே, அது யாழ்ப்பாணத் தமிழ் என்று சொல்லப்பட்டதற்கான காரணமாகும். கிறிஸ்தவர்கள், தாம் அதுவரை காலமும் உபயோகித்து வந்த மொழிபெயர்ப்பில் பழக்கப்பட்டுவிட்டதால், அதைவிட சிறந்த தமிழை இவ்வாறு குறை கூறினர். மொழிநடை திருத்தப்படும்போது, வசனத்தின் கருத்து மாற்றப்பட்டிருந்தால் மட்டுமே நாம் ஒரு மொழிபெயர்ப்பை நிராகரிக்கவேண்டும். லார்சனின் மொழிபெயர்ப்பு வேதவசனங்களின் கருத்தை மாற்றவில்லை. அப்படியிருந்தும், வேதத்தை மாற்றிவிட்டார்கள் எனும் பிரச்சாரம் அம்மொழிபெயர்ப்பைப் பிரபல்யமற்றதாக்கிவிட்டது. 1936-ம் ஆண்டு, லார்சன் குழுவினர் மொழிபெயர்த்த பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டுடன் சேர்த்து முழுவேதாகமமாக வெளியிடப்பட்டது.

லார்சன் குழுவினரது மொழி பெயர்ப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளாதமைக்கு இன்னுமொரு காரணம், மக்கள் ஹென்றிபவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பில் பழகிப்போனமையேயாகும். லூத்தரன் சபையைத் தவிர மற்ற அனைத்து சபையினரும் இம் மொழி பெயர்ப்பையே உபயோகித்து வந்தமையினால், அதுவே மக்கள் அறிந்திருந்த ஒரே ஒரு மொழிபெயர்ப்பாயிருந்தது. நாளடைவில், வேதாகமம் அதற்கும் முன்பே மொழிபெயர்க்கப்பட்டுத் திருத்தப்பட்டது என்பதை மக்கள் மறந்துபோயினர். தாம் உபயோகித்த வேதாகமத்தின் வசனங்களையே கிறிஸ்தவர்கள் மனனம் செய்து வந்தமையினால், அதன் மொழிநடையை மாற்ற எவரும் விரும்பவில்லை. ஹென்றி பவர் வேதாகமத்தை மொழிபெயர்த்தபோது, அதுவரைகாலமும் மக்கள் உபயோகித்து வந்த மொழிபெயர்ப்பின் வசனநடை மக்களை எவ்வாறு கவர்ந்துள்ளது என்பதை அறிந்து, வேதாகம மொழிநடை திருத்தப்பட்டுள்ளது என்பதை மக்கள் உணர்ந்திடாத வண்ணம் புதிய மொழிபெயர்ப்பை செய்தமையினால், எல்லோரும் அவருடைய புதிய மொழி பெயர்ப்பை ஏற்றுக்கொண்டனர். லார்சன் குழுவினர் இதைக் கருத்திற்கொள்ளாதமையினால் அவர்களது மொழிபெயர்ப்பு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

லார்சன் மொழிபெயர்ப்பு நிராகரிக்கப் பட்டதன்பின் அதை மறுபடியுமாகத் திருத்தி மொழிபெயர்க்க வேண்டும் எனும் எண்ணம் உருவாகத் தொடங்கியது. நல்ல சமாரியன் குழுவினர், ஹென்றி பவரின் மொழி பெயர்ப்பையே தொடர்ந்தும் உபயோகிக்க வேண்டும் எனக்கூறி வந்தனர். எனினும் அம்மொழிபெயர்ப்பு, 16-ம் நூற்றாண்டில் அங்கீகரிக்கப்பட்ட கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிருந்தமையினால் திருப்திகரமான மொழிபெயர்ப்பு அல்ல என்பதே வேத பண்டிதர்களின் கருத்தாயிருந்தது. லார்சன் மொழிபெயர்ப்பு பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்படாதிருப்பினும் அது, மிகவும் நம்பகமான சீனாய் மற்றும் வத்திக்கான் சுவடிகளை ஆதாரமாய்க் கொண்டிருந்தமையினால், அதுவே மூலமொழிக்கு ஏற்றமொழிபெயர்ப்பு என்பதை மூலமொழியை அறிந்திருந்த அனைவரும் நன்கறிந்திருந்தனர். எனவே, நம்பகமான பிரதிகளை அடிப்படையாய்க்கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமத்தை ஏற்றுக்கொள்ளாமல், ஆதாரக் குறைவான மூலப்பிரதியை அடிப்படையாய்க் கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமத்தை உபயோகிப்பது நல்லதல்ல என பலர் கருதத் தொடங்கினர். ஆனால், லார்சன் குழுவினரது மொழிபெயர்ப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளாதமையினால், அதை, மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாகத் திருத்தி மொழிபெயர்க்க வேண்டுமென்று 1939-ல் சென்னை வேதாகமச் சங்கம் தீர்மானித்தது.

லார்சன் மொழிபெயர்ப்பு ஹென்றி பவரின் மொழிநடையில் திருத்தப்பட வேண்டும் என வேதாகமச் சங்கம் கூறியது. ஹென்றி பவரும் இதேவிதமாகவே தனது மொழிபெயர்ப்பைத் திருத்தியிருந்தார். அவருடைய காலத்தில் மக்கள் பெப்ரீஷியசின் மொழிநடையில் பழகிப்போயிருந்தமையினால், ஹென்றிபவர் அம்மொழிநடையை மாற்றவில்லை. புதிய திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பை மக்கள் வாசித்தபோது, தாம் பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பையே வாசிக்கின்றோம் எனும் உணர்வு ஏற்படும் வண்ணம் ஹென்றிபவரின் மொழிபெயர்ப்பு அமைந்திருந்தது. இதனாலேயே, லார்சன் மொழி பெயர்ப்பு ஹென்றிபவரின் மொழி நடையில் திருத்தப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு, லார்சன் மொழிபெயர்ப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெகோவா எனும் பதத்தை, பழைய மொழிபெயர்ப்பிலுள்ளது போன்று கர்த்தர் என்றே மாற்றவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. புதிய மொழி பெயர்ப்புக் குழுவுக்குப் பொறுப்பாக சி.எச்.மோனஹன் என்பவர் நியமிக்கப்பட்டார். அயர்லாந்தைச் சேர்ந்த இவர் 1893 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மிஷனரியாக வந்தவராவார். தான் அதுவரைகாலமும் பணியாற்றிய மிஷனிலிருந்து 1940 இல் ஓய்வு பெற்றபோது, இவர் வேதாகம மொழி பெயர்ப்பு வேலைகளை ஆரம்பித்தார்.

மோனஹன் குழுவினரது மொழி பெயர்ப்புப்பணி காரணமாக 1942-ல் புதிய ஏற்பாடு வெளிவந்தது. இது நெஸ்லே என்பவர் தயாரித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிருந்தது. இப்பிரதியில், ஆரம்பத்தில் அப்போஸ்தலர்கள் எழுதியவை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

(தொடரும்)

வாசகர்கள் பேசுகிறார்கள்

(நவம்பர்-டிசம்பர் 2017)

1. ஜூலை ஆகஸ்டு மாத தியானபுத்தகத்தின் தியானங்கள் மிகவும் அருமை. நீதிமொழிகள் மற்றும் சங்கீதம் புஸ்தகத்தில் இருந்து தினசரி தியானங்கள் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது. தியானங்களை எழுதிய தர்ஷினி சேவியர் அவர்களுக்கும் நன்றி கூறுகிறோம்.

Mr.N.Manickam, Erode.


2. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானம் எனக்கு மிகவும் மன ஆறுதல்களையும் நான் இழந்துபோன அநேக ஆசீர்வாதங்களை நினைவுபடுத்துவது மட்டுமல்ல; என்னுடைய பெலவீனத்தில் என்னை பெலப்படுத்துகிறதாயும் உள்ளது. சகோதரி சாந்திபொன்னுவின் ஆலோசனைகள் மிகவும் ஆறுதலாக உள்ளது. தேவன் போதுமானவராக உள்ளார்.

Mr.J.Richard Sam Alex, Chennai.


3. தாங்கள் அனுப்பிவைக்கும் அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசன சஞ்சிகை கிடைக்கிறது. சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகளையும் டிவி நிகழ்ச்சிகளையும் கேட்டு ஆசீர்வாதம் பெற்று வருகிறேன்.

Mr.A.John Raj, Nazareth.


4. அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் புத்தகங்கள் ஒழுங்காக வருகிறது. ஒவ்வொருநாளின் தியானங்களினால் ஆவிக்குரிய சத்தியங்களை அறிந்து கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். சத்திய வசனம் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mr.S.Ponniah Vincent, Tirunelveli.


5. ஜூலை ஆகஸ்டு மாத அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை படித்து மகிழ்ந்தேன். சகோதரி சாந்திபொன்னு எழுதிய ஆகஸ்டு மாத தியானங்கள் மிகவும் ஆசீர்வாதமாக பயனுள்ளதாக இருந்தது. அதிலுள்ள குறிப்புகளையெல்லாம் எழுதி வைத்து வருகிறேன். மற்றவர்கள் பிரயோஜனப்படும்படியாக எழுதிவருகிறேன். ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mrs.Jothimaniammal, Madurai.

page 1 of 2