ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 25 சனி

“தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறதே” (2 கொரி.1:20) மாறிப்போகாத தேவனுடைய வார்த்தைகள் குழந்தைப் பாக்கியத்திற்காக ஜெபிக்கக்கேட்ட 18 குடும்பங்களில் நிறைவேற வேண்டுதல் செய்வோம்.

தேவ அன்பிலிருந்து எதுவும் பிரிக்கமுடியாது

தியானம்: 2017 நவம்பர் 25 சனி; வேத வாசிப்பு: யோபு 3:1-26

“நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது. நான் அஞ்சினது எனக்கு வந்தது” (யோபு 3:25).

யோபு உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். இவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் இருந்தனர். அநேக ஆடுகள் மாடுகள், என்று ஏகப்பட்ட செல்வமும் இருந்தது. அநேக வேலைக்காரரும் இருந்தார்கள். இவர் வாழ்வில் ஒன்றன்பின் ஒன்றாக புயல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து முடிந்தன. முதலில் எருதுகளும் கழுதைகளும் போனது. பினனர் ஆடுகளும் வேலையாட்களும் மாண்டுபோனார்கள். பின்னர் ஒட்டகங்களை கல்தேயர் ஓட்டிக்கொண்டு போய்விட்டனர். வேலைக்காரரும் செத்து மடிந்தனர். இறுதியில் பிள்ளைகளும் மடிந்தனர். இவை போதாதென்று யோபுவும் வியாதிப்பட்டான். இப்படி நேரிடும்போது யாரால்தான் அதை ஏற்கமுடியும்? யோபு தன் வேதனையினிமித்தம், “நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது. நான் அஞ்சினது எனக்கு வந்தது. …எனக்கு அமைதலுமில்லை, எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது” என்று புலம்பினான்.

தான் பயந்த காரியம் தனக்கு நேரிட்டது என்று யோபு சொன்னதால், நாம் நினைப்பதெல்லாம் நமக்கு நேரிடும் என்று அர்த்தங்கொள்ள முடியாது. யோபு தேவனுக்குப் பயந்தவன்; அதில் அவன் கவனமாயிருந்தான். இப்போது ஏற்பட்ட துன்பம் அவனைத் தடுமாறவைத்துவிட்டது. தன்னுடைய நீதியுள்ள வாழ்வுக்கு எதிராக தனக்குத் துன்பம் நேரிட்டதைக் குறித்து யோபு குழம்பிவிட்டான் என்பதே உண்மை. அதைத்தான் இந்த முழு அதிகாரத்திலும் நாம் வாசிக்கிறோம். அவனது நல்ல கொள்கைகள் எல்லாம் பலனற்றதுபோல அவனுக்குத் தோன்றியது. அவன் தன் வாழ்க்கையின் நோக்கத்தையே இழந்துபோனான்.

நாம் ஒன்றை மறக்கக்கூடாது. சோதனைகளும் இழப்புகளும் அவை நிரந்தரமாயிருக்கலாம் அல்லது தற்காலிகமாயிருக்கலாம், அவை நமது வாழ்க்கையின் நோக்கத்தைத் தகர்க்கவே முடியாது. வாழ்க்கை என்பது வெறும் சந்தோஷங்கள் மாத்திரம் நிறைந்தது அல்ல. தேவனை மகிமைப்படுத்தவும் அவருக்குக் கனத்தைச் செலுத்தவுமே இந்த வாழ்வு நமக்கு அருளப்பட்டுள்ளது. நமது உணர்ச்சிகளின் அடிப்படையில் நமது வாழ்வு இல்லை; மாறாக, எனது வாழ்வை தேவனுடைய அன்பிலிருந்து எதுவும் பிரிக்கமுடியாது என்று நம்மால் சொல்லக்கூடுமானால் அதுவே வெற்றியுள்ள வாழ்வு. நாம் எதிர்கொள்ளும் பாடுகள் துன்பங்கள் பாதிப்பின் அளவை வைத்துக்கொண்டு தேவனுடைய அன்பை நம்மால் அளவிடமுடியாது. ஆகவே, எந்த நிலையிலும் தைரியங்கொண்டு நாம் சொல்லலாமே:

“தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோ.1:7).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எது வந்தாலும், என்ன நேர்ந்தாலும் நீர் என்னோடே இருக்கிறார் என்ற உறுதியையும் நிச்சயத்தையும் எங்களுக்குத் தந்திருக்கிறீர். உமக்கு நன்றி. ஆமென்.