ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 5 வியாழன்
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு (பிலி. 4:13) தொழில் செய்துவரும் பங்காளர் குடும்பத்தின் நபர்களது தொழிலில் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் கர்த்தர் தந்து, தொழிலுக்கு எதிராக வரக்கூடிய எல்லாப் போராட்டங்களுக்கும் வன்கண்ணுக்கும் விலக்கி ஆசீர்வாதத்தைக் கட்டளையிட வேண்டுதல் செய்வோம்.
பொறுப்பில் தவறாதே!
தியானம்: 2025 ஜுன் 5 வியாழன் | வேதவாசிப்பு: 1சாமுவேல் 2:12-26

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் (நீதிமொழிகள்22:6).
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தமது ஜனத்தை மீட்டு, கானானுக்குள் கொண்டுவந்து சேர்த்த கர்த்தர், யோசுவாவிற்குப் பின்னர், தொடர்ந்து மக்களை நடத்துவதற்கு நியாயாதிபதிகளைத் தெரிந்துகொண்டார். இவர்களில் ஒருவர் தான் ஏலி. இவர் ஒரு ஆசாரியர் மாத்திரமல்ல, நாற்பது வருடங்கள் இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்தார் (1சாமு.4:18). ஒரு பிள்ளைக்காக தேவாலயத்தில் கர்த்தரின் பாதத்தில் கண்ணீரோடு ஜெபித்த அன்னாளிடம், சமாதானத்துடன் போ… உன் விண்ணப்பத்தின்படி உனக்குக் கட்டளையிடுவார் (1சாமு.1:17) என்று அவளைத் திடப்படுத்தியது இந்த ஏலிதான். தன் பொருத்தனைப்படியே அன்னாள் தனக்குப் பிறந்த சாமுவேலை ஆலயத்தில் கொண்டு வந்துவிட்டாள். அவனைக் கர்த்தருக்குள் வளர்த்ததும் இந்த ஏலிதான். பின்பு சாமுவேல் இஸ்ரவேலின் தீர்க்கதரிசியானான்.
சாமுவேலை சிறுவயதிலிருந்து கர்த்தரின் வழிகளில் வளர்த்த ஏலி, தனது குமாரர் விஷயத்தில் தவறியது என்ன? ஆம், ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை (1சாமு.2:12). அவர்கள் தவறான நடத்தையுள்ளவர்களாய் கர்த்தருக்குப் பிரியமற்ற காரியங்களைச் செய்துவந்தார்கள் (1சாமு.2:22). இதைக்குறித்து கர்த்தர் ஏலியை எச்சரித்தார். ஏலியோ தன் குமாரரிடம் சாதாரணமாகப் பேசினாரேதவிர, அவர்களைக் கண்டிக்கவுமில்லை, தண்டிக்கவுமில்லை. தேவாலயத்தின் ஆசாரியப் பணியிலிருந்து அவர்களை விலக்கவுமில்லை. இதனால் ஏலியின் குடும்பமே தேவகோபத்திற்கு ஆளாயிற்று. எத்தனை பரிதாபம்!
இந்த ஏலியைப்போல இன்றும் பல பெற்றோர் தமது பிள்ளைகளின் தீய நடத்தைகளைக் கண்டும் காணாதவர்கள்போல இருப்பது மிகவும் வேதனையான காரியமாகும். பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்தையும் கொடுக்கிறார்கள்; ஆனால் சிறுவயதிலிருந்து தேவனை அறியும் அறிவிலே பிள்ளைகளை வளர்ப்பதற்கு முழுமுயற்சியும் எடுப்பதில்லை. பிள்ளைகள் வளர்ந்தபின்பு, அவர்கள் வளர்ந்துவிட்டார்கள்; ஏற்றவேளையில் அவர்களே தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்துவார்கள் என்று தப்பிக்கொள்கின்றனர். நமது வாழ்க்கை முறையும், சமுதாய அமைப்பும் கால ஓட்டத்தில் மாறலாம். ஆனால், கர்த்தரும், அவர் தமது பிள்ளைகளோடு இடைபடும் முறைகளும் ஒருபோதும் மாறாது. எனவே பிள்ளைகளைக் குறித்துப் பெற்றோரே கர்த்தருக்குக் கணக்கு ஒப்புவிக்கவேண்டியவர்கள். பிள்ளைகளை நல்வழியில் நடத்துவது பெற்றோரின் பொறுப்பு, அதில் நாம் தவறலாமா? ஆகவே, ஏலியின் நிலைமை நமது குடும்பத்திற்கும் வராதபடிக்கு இன்றே நமது பிள்ளைகளை தேவவழியில் நடத்த தீர்மானிப்போம்.
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, என் குடும்பத்திலுள்ள எனது பிள்ளைகள் தேவபயத்துடன் வளரவும் உம்மை அறியும் அறிவையும் பரிசுத்தத்தையும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கவும் எனக்கு கிருபை தாரும். ஆமென்.