ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 26 வியாழன்

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்திற்காக ஜெபிப்போம். மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் எங்கும் சுவிசேஷப்பணி நடைபெறவும் சபைகள் கட்டப்படவும், சுற்றுலா மற்றும் புனித யாத்திரைக்கு வரக்கூடிய மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டு அவர்கள் இரட்சிக்கப்படவும், மாவட்ட ஆட்சியாளர் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்காகவும் ஜெபிப்போம்.

தேவசத்தம் கேட்கின்றதா?

தியானம்: 2025 ஜுன் 26 வியாழன் | வேதவாசிப்பு: ஆதியாகமம் 3:1-11

YouTube video

நீ எங்கே இருக்கிறாய் என்றார் (ஆதியாகமம் 3:9).

இரு பிள்ளைகளும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு தாய் அறைக்குள் பலவகையான விளையாட்டுப் பொருட்களினால் நிறைத்திருந்தாள். பிள்ளைகளை அறைக்குள் கூட்டிச் சென்று, “இவை எல்லாமே உங்களுக்குத்தான். ஆனால், அந்த மேஜையின் மேல் இருக்கும் விளக்கை மட்டும் தொடக்கூடாது” என்று கட்டளை கொடுத்தாள். மகிழ்ச்சியால் நிறைந்த பிள்ளைகளின் சத்தம் வீட்டையே நிலைகுலையச் செய்தது. ஆனால், சடுதியாக ஒரு அமைதி உண்டானது. உடனே அந்த அம்மா, “பிள்ளைகள், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்” என்று குரல் கொடுத்தாள். அதற்கு பதில் இல்லை. திரும்பவும் கூப்பிட்டாள். அப்போது, “தொடக்கூடாது என்ற விளக்கு உடைந்துபோனதால், தாங்கள் பயந்து ஒளித்திருப்பதாக” பிள்ளைகள் சொன்னார்கள். பார்த்தீர்களா, ஆதாமில் ஆரம்பித்தது, இப்போதும் தொடருகிறது.

தேவன் வானத்தையும் பூமியையும் அதிலுள்ள யாவையும் சிருஷ்டித்தார். சகல வளமும் நிறைந்த ஏதேன் தோட்டத்தையும் உண்டாக்கினார். பின்பு, மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அந்த ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். அப்போது, அங்கிருந்த எல்லா மரத்தின் கனிகளையும் புசிக்கலாம் என்றும், தோட்டத்தின் நடுவிலுள்ள மரத்தின் கனியை மாத்திரம் புசிக்கக்கூடாது என்றும் கட்டளை கொடுத்தார். ஆனால் மனிதனோ, அந்தக் கட்டளையை மீறினான். இதன் விளைவாக தங்களை நிர்வாணிகளாகக் கண்டனர். இதனால், தம்மைச் சந்திக்க வந்த தேவனுடைய சத்தத்தைத் தோட்டத்தில் கேட்டபோது, ஒளித்துக்கொண்டனர். ஒளித்திருந்தால் தப்பித்துக்கொள்ளலாம் என நினைத்தார்கள்போலும். ஆனால், கர்த்தரோ, “ஆதாமே நீ எங்கேயிருக்கின்றாய்?” என்று கேட்டார். தேவசத்தத்திற்கு தன்னை ஒளித்துக்கொள்ள முடியாத ஆதாம், தாங்கள் தேவகட்டளையை மீறியதால் ஒளித்துக்கொண்டிருக்கின்றோம் என்று பதில் கொடுத்தான். ஆதாம்முதல் இன்றும் பல மனிதர்கள், தேவாதிதேவனுக்குப் பயந்து தங்களை ஒளித்துக்கொள்ள முயலுகின்றனர். கர்த்தருடைய பார்வைக்கு நம்மால் ஒளிந்திருக்க முடியுமா? இன்று நம்மில் எத்தனை பேர், இப்படியாக ஒளித்துக்கொண்டிருக்கிறோம்?

பிரியமான தேவபிள்ளையே, “நீ எங்கேயிருக்கிறாய்” என்ற தேவசத்தம் இன்று நமது காதுகளில் விழுகிறதா? இந்த சத்தம் இன்று நமது ஆவிக்குரிய வாழ்க்கையைத் தட்டி எழுப்பட்டும். ஆரம்பத்தில் தேவனோடு நாம் கொண்டிருந்த ஐக்கியம் இன்று வளர்ந்திருக்கிறதா, அல்லது குன்றிப்போய், நாம் ஒளிந்து வாழுகிறோமா? தவறுகளோடே வெளியே வந்து, அவற்றை உண்மையாய் அறிக்கை செய்வோம். ஆண்டவர் நம்மை மன்னிப்பார்.

ஜெபம்: அன்பின் தேவனே, நான் தவறுகள் செய்ததை ஒத்துக்கொள்கிறேன். உமது சத்தத்துக்குக் கீழ்படிய என்னை அர்ப்பணிக்கிறேன். உம்மோடுள்ள உறவைப் புதுப்பித்துக்கொள்ள எங்களுக்குக் கிருபை தாரும். ஆமென்.