வாக்குத்தத்தம்: 2025 ஜுன் 22 ஞாயிறு

உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது. (எரேமி. 15:16)
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 29 | மாலை: அப்போஸ்தலர் 2: 25-47

ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 22 ஞாயிறு

அகில உலகமெங்கும் நடைபெறும் சபை ஆராதனைகளில் மாறுபாடான, பொய்யான உபதேசங்கள் இராதபடி சத்திய மார்க்கத்தைக்குறித்த தெளிவான போதனைகள் கொடுக்கப்படுவதற்கும், சபை தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவில் வளரும்படி போதிக்கப்படவும், கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படுத்தப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.

ஒதுக்கப்பட்டுத் தள்ளப்பட்டாலும்…

தியானம்: 2025 ஜுன் 22 ஞாயிறு | வேதவாசிப்பு: ஆதியாகமம் 39:1-6

YouTube video

கர்த்தர் யோசேப்போடே இருந்தார். அவன் காரியசித்தியுள்ளவனானான் (ஆதியாகமம் 39:2).

கசப்பு, வெறுப்பு, பொறாமை, எரிச்சல் போன்ற பாவசுபாவம் ஆதிமுதல் மனிதனை அலைக்கழிக்கத்தான் செய்கின்றது. இதனால், அடுத்தவர் பாதிக்கப்படுவது வெகுசாதாரண நிகழ்வாகும். யோசேப்பின் வாழ்விலும் நடந்தது இதுதான். யாக்கோபின் பன்னிரண்டு பிள்ளைகளில் யோசேப்பு பதினோராவது மகன். இவன் தன் தகப்பனால் அதிகம் நேசிக்கப்பட்டவன். இளவயதினனாக இருந்தபோது, தனது தகப்பன், தாய், சகோதரர் சகலரும் தன்னை விழுந்து வணங்குவதுபோல அர்த்தப்படுத்தும் இரு கனவுகளைக் கண்டு, அவற்றைப் பெற்றோரிடமும் சகோதரரிடமும் சொல்லிவிட்டான். இதனால் சகோதரரின் பொறாமைக்கும், எரிச்சலுக்கும் ஆளானான். சகோதரரால் அடிமையாக விற்கப்பட்டு, எகிப்திலே பார்வோனின் பிரதானியும், தலையாரிகளுக்கு அதிகாரியுமான போர்த்திபார் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டான். அங்கே தன் எஜமானின் நம்பிக்கைக்குப் பாத்திரவானாய் நடந்தும், போர்த்திபாரின் மனைவியின் தவறான நடத்தைக்கு இணங்காததால், அநியாயமாகச் சிறைக்கு அனுப்பப்பட்டான்.

சிறையிலே, சிறைச்சாலை தலைவனின் கண்களில் தயவு கிடைத்தது. சிறையிலிருந்த ராஜாவின் பானபாத்திரக்காரன், சுயம்பாகி ஆகியோரது கனவுகளின் அர்த்தத்தையும் வெளிப்படுத்தினான். இதனால் சில காலத்திற்குப்பின் எகிப்து ராஜாவின் கனவுக்கும் அர்த்தத்தைக் கூறும்படியான தருணம் கிடைத்தது. யோசேப்பு, ராஜாவின் கனவையும் அதன் அர்த்தத்தையும் கூறினான். அத்துடன், வரப்போகும் பஞ்சத்தில் மக்கள் எப்படி காக்கப்படவேண்டும் என்றும் ஆலோசனை கூறினான். இதன் பலனாக, எகிப்து தேசம் முழுவதற்கும் அதிகாரியாக உயர்த்தப்பட்டான். யோசேப்பு தன் சகோதரரால் ஒதுக்கப்பட்டுத் தள்ளப்பட்டாலும், கர்த்தரையே பற்றியிருந்து, உண்மையோடு பொறுமையோடு வாழ்ந்ததால், கர்த்தர் ஏற்ற வேளையில் யோசேப்பை உயர்த்தினார்.

“கர்த்தர் யோசேப்போடே இருந்தார்” (ஆதி.39:2). யோசேப்பின் வாழ்வின் இரகசியம் இதுதான். ஆம், கர்த்தர் யோசேப்போடு இருந்தார் என்றால், யோசேப்பும் கர்த்தரோடு இருந்திருப்பார் அல்லவா! குடும்பம், சமுதாயம், தொழில், சபை என்று எல்லா இடங்களிலும் அந்தஸ்து, கல்வி, சாதி, மதம் போன்ற பேதங்களால் அநேகர் ஒதுக்கப்பட்டுத் தள்ளப்பட்டாலும் நாம் எதற்கு வருந்தவேண்டும்? ஏன் தேவனை நொந்து கொள்ளவேண்டும்? இன்று நம்மில் யாராவது ஒதுக்கப்பட்ட மனநிலையில் இருக்கிறோமா? யோசேப்பு தள்ளப்பட்டு ஒதுக்கப்பட்டாலும், தன் தேவனையே பற்றிக்கொண்டிருந்ததால் ஏற்றவேளையில் கர்த்தர் யோசேப்பை உயர்த்தினார். நாமும் கர்த்தரை பற்றிக்கொள்வோம்; அப்போது கர்த்தர் நம்முடனும் இருப்பார். ஏற்றக்காலத்தில் அவர் பதிலளிப்பார். ஆகையால், பொறுமையோடு ஓடுவோமாக!

ஜெபம்: அன்பின் தேவனே, நான் பிறரால் ஒதுக்கப்பட்டாலும் மனமொடிந்தாலும், யோசேப்போடே இருந்த தேவன் இன்று என்னோடும் இருக்கிறீர். உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.