ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 30 திங்கள்

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை (புலம்பல் 3:22) உடைக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட எல்லா நேரங்களிலும் நேசர் தமது அன்பின் கரத்தால் அரவணைத்து, தமது கூடாரத்தில் நம்மை ஒளித்து பாதுகாத்து வந்த கிருபைகளை எண்ணி ஸ்தோத்திரபலியிட்டு துதிப்போம்.

ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள் என்றார் (லூக்கா 21 : 36).

வாழ்க்கை பேசட்டும்!

தியானம்: 2025 ஜுன் 30 திங்கள் | வேதவாசிப்பு: அப்போஸ்தலர் 16:25-34

YouTube video

பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான் (அப்.16:28).

கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்ததின் நிமித்தம் பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அதைக் காவல் புரியவேண்டிய சிறைக்காவலாளியோ நித்திரையாயிருந்தான். திடீரென நடு இரவில், யாருமே திறக்கமுடியாத சிறைச்சாலைக் கதவுகள் அதிசயமாய் திறவுண்டன. உண்மையில் அச்சமயத்தில் திறந்தது சிறைக்கதவுகள் மாத்திரமல்ல; மாறாக, சிறைக் காவலாளிக்கு நற்செய்தியை அறிவிப்பதற்கான ஒரு வாசலும் திறந்தது.

சிறைக் கைதிகள் யாவரும் தப்பிச் சென்றுவிட்டிருப்பார்களோ என எண்ணி, பயத்தினால் காவலாளி தன்னைத்தானே குத்தி தற்கொலை செய்ய முற்பட்டபோது, பவுலும் சீலாவும் அவனைத் தடுத்து நிறுத்தி, கைதிகள் எவரும் தப்பிப் போகவில்லை என்று கூறினார்கள். இந்த வேளையில் அச்சிறைக் காவலாளி பவுலையும் சீலாவையும் நோக்கிக் கேட்ட முதல் கேள்வி, “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்பதாகும். இந்த இடத்தில் பவுலோ சீலாவோ அவனுக்கு நற்செய்தி சொன்னதாக எழுதப்படவில்லை. ஒருவேளை அவன் ஏற்கனவே நற்செய்தியைக் குறித்து கேள்விப்பட்டவனாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் பவுல் சீலா இருவரது சாட்சியே காவலாளியை இரட்சிப்புக்கு நேரே வழிநடத்திற்று.

அருமையானவர்களே, இன்று கிறிஸ்துவின் நற்செய்தியை தொலைக்காட்சி, வீடியோக்கள், சோஷியல் மீடியாக்கள், இணையதளம், சஞ்சிகைகள், பத்திரிக்கைகள், நற்செய்திக்கூட்டங்கள் ஆகியவற்றின் வாயிலாக போட்டிப்போட்டுக் கொண்டு அறிவிக்கும் சபைகள், ஸ்தாபனங்கள் எங்கும் பெருகிவிட்டன. இது நல்லதுதான். சில இடங்களிலே அறிவிக்கப்பட்டவர்களுக்கே மீண்டும்மீண்டும் நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. ஆனால், நாம் அறிவிக்கும் நற்செய்தியை ஜனங்கள் காண்கிறார்களா என்பதுதான் முக்கியம். அன்று சிறைக்காவலாளி நற்செய்தியைக் கேள்விப்பட்டது மாத்திரமல்ல, அந்த நற்செய்தியை அறிவித்தவர்களுடைய வாழ்க்கையின் சாட்சியை நேரிலே கண்டான். உடனே தன்னை மட்டுமல்ல, தனது முழுக்குடும்பத்தையுமே கிறிஸ்துவுக்கென ஒப்புக்கொடுத்தான்.

அன்பின் சகோதரனே சகோதரியே! உன் குடும்பம் நண்பர்கள் உற்றார் உறவினர்கள், உன் பிரசங்கத்தை மாத்திரமே கேட்கிறார்களா? அல்லது அதை உன் வாழ்விலும் காண்கிறார்களா? அவர்கள் இரட்சிப்பிற்குள் வழி நடத்தப்பட வேண்டுமாகில், நீ அனுபவிக்கும் இயேசுகிறிஸ்துவின் சாயலை அவரது அன்பை உன் அன்றாட வாழ்க்கைக்கூடாக காண்பிக்கத் தவறாதே.

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நாங்கள் அறிவிக்கும் கிறிஸ்துவின் நற்செய்தி வெறும் வாய் பிரசங்கமாக மாத்திரம் இராமல் அதை எங்கள் நடத்தையிலும் செயலிலும் வெளிப்படுத்த கிருபை செய்தருளும். ஆமென்.