வாக்குத்தத்தம்: 2025 ஜுன் 3 செவ்வாய்

பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார். (லூக். 12:32)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 17 | மாலை: யோவான் 11:1-26

ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 3 செவ்வாய்

ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் (யோவா.8:36) இவ்வாக்குப்படியே குடி மற்றும் போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டுள்ள நபர்கள் அவற்றிலிருந்து பரிபூரண விடுதலையைப் பெற்றுக்கொள்ளவும் குடும்ப சமாதானமில்லாது காணப்படும் குடும்பங்களில் உள்ள போராட்டங்கள் ஓய்ந்து தேவசமாதானம் குடும்பங்களை ஆட்கொள்ள ஜெபம் செய்வோம்.

திடன்கொள்!

தியானம்: 2025 ஜுன் 3 செவ்வாய் | வேதவாசிப்பு: சங்கீதம் 31:1-24

YouTube video

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார் (சங்கீதம் 31:24).

உடைந்துபோன பாத்திரம் உபயோகப்படுமா? அது அழகு குலைந்து, உபயோகம் அற்றதாகிவிடும். மனித வாழ்க்கைக்கூட ஒரு உடைந்துபோன பாத்திரம் போலாகும் வாய்ப்புக்களும் சந்தர்ப்பங்களும் பல உண்டு. வேதனையான சூழ்நிலை, வியாதி, தோல்வி, ஆபத்து என்பன ஒரு பக்கம்; பெற்றோர், பிள்ளை, இனத்தவர், சிநேகிதர், சகஊழியரால் ஏற்படும் வேதனை, எதிர்ப்பு, தனிமைப்படுத்தப்படுதல் என்பன இன்னொரு பக்கமாக நம்மை உடைத்துப்போடுகின்றன.

இப்படிப்பட்ட உடைவுகளுக்கூடாகக் கடந்துசென்றவர்களில் தாவீது ராஜாவும் ஒருவர். பல இன்னல்களுக்கூடாகச் சென்ற இவர், எதிராளிகளிடமிருந்து தன்னைத் தப்புவிப்பதற்காகவும், ஒரு சந்தர்ப்பத்தில் தனது மகன் அப்சலோமிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவும் மலைகளிலும் குகைகளுக்குள்ளும் ஓடி ஒளிந்து வாழ்ந்தார். இப்படியான சூழ்நிலைகளுக்கூடாகச் சென்ற தாவீது எழுதிய சங்கீதம் ஒன்றில், “செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன். உடைந்த பாத்திரத்தைப் போலானேன்” என்று பாடி வைத்துள்ளார் (சங்கீதம் 31:12). ஆனாலும், தாவீது தன்வாழ்வை உடைந்த பாத்திரமாகவே முடித்தாரா? இல்லை. அவர் தன் தேவனாகிய கர்த்தரை நம்பியிருந்தார். தன் வாழ்க்கையின் சூழ்நிலைகளால் அவ்வப்போது மனக்கிலேசத்தில் தேவனை நோக்கிக் கதறினாலும், தன் தேவன் தன்னைக் கைவிடமாட்டார்; உடைந்துபோன பாத்திரம் போலிருக்கும் தன் வாழ்வைத் திரும்பவும் உருவாக்கி, அழகுபடுத்தி, உபயோகிப்பார் என்ற விசுவாசத்தோடு அவர் தேவனை நோக்கிக்கூப்பிட்டார். தேவன் மறுஉத்தரவு அருளிச்செய்தார். கர்த்தர் தமது நாம மகிமைக்காக, திரும்பவும் தாவீதை ராஜா ஸ்தானத்தில் அமர்த்தினார்.

“வேதனை மிகுதியால், உடைந்துபோன பாத்திரம்போல ஆனேனே; இனி வாழ்ந்து என்ன பயன்” என்று போராடும் அருமையான தேவபிள்ளையே, “என் ஆத்துமாவே! நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு. அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் கர்த்தரைத் துதிப்பேன்” என்று தாவீதைப்போல திடநம்பிக்கையாயிரு. அவர் தன்னைத் திடப்படுத்தியதைப்போல நாமும் தேவனுக்குள் நம்மை திடப்படுத்திக்கொள்வோம்! அன்று தாவீதின் வாழ்வை “நிரம்பி வழியும்” பாத்திரமாக திரும்பவும் மாற்றிய தேவன், நமது வாழ்வையும் திரும்பவும் உருவாக்கி, அழகாக்கி, தமக்கென்று உபயோகிக்க அவர் என்றும் வல்லமைமிக்கவராயிருக்கிறார்.

ஆகவே, கலக்கத்தைத் தள்ளிவிட்டு, இன்றே தேவவார்த்தையால் திடன் கொண்டு, தேவனுக்குள் ஸ்திரப்படுவோமாக.

ஜெபம்: அன்பின் தேவனே, இன்றைக்கு நீர் எனக்குத் தந்த திட நம்பிக்கைக்காக உமக்கு ஸ்தோத்திரம். உடைந்துபோன பாத்திரத்தைப் போன்ற என் வாழ்க்கையை மறுசீரமைப்பதற்கு நீர் வல்லவராயிருக்கிறீர். உம்மிடத்தில் என்னை ஒப்புவிக்கிறேன். ஆமென்.