வாக்குத்தத்தம்: 2025 ஜுன் 2 திங்கள்

அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். (லூக். 12:7)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 15,16 | மாலை: யோவான் 10:22-42

ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 2 திங்கள்

ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம் (பிரச.10:10) புதிய கல்வியாண்டிற்குள் செல்லும் பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகள் அனைவரும் கல்வியில் முழுக்கவனம் செலுத்தி படிப்பதற்கு வேண்டிய ஞானத்திற்காகவும், முதன்முதலாக பள்ளிக்கு செல்லும் சிறுகுழந்தைகளின் பாதுகாப்பு போன்ற எல்லா காரியங்களுக்காகவும் ஜெபிப்போம்.

செய்வது வாய்க்கவில்லையா?

தியானம்: 2025 ஜுன் 2 திங்கள் | வேதவாசிப்பு: சங்கீதம் 1:1-6

YouTube video

அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் (சங்கீதம் 1:3).

தேவஊழியரின் ஆசீர்வாதத்தோடு சொந்த வியாபாரம் ஒன்றை ஆரம்பித்தான் ஜாண். நாட்கள் நகர தேவஆசீர்வாதத்தினால் வியாபாரம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. இதனால் சொந்தமாக ஒரு அழகான வீடு, பணம் சேகரிப்பு, உல்லாசப் பயணம், பிள்ளைகளுக்கு வசதியான பள்ளி என்று சுகபோகமாக வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்தான். ஆனால், வருடங்கள் சில உருண்டோடிய பின்னர் செழிப்பான வாழ்க்கையில் வறட்சி ஏற்பட ஆரம்பித்தது. சேகரித்த சொத்துக்கள் ஒவ்வொன்றாகக் கைவிட்டுபோயின. இப்பெரிய இழப்பு ஏற்பட காரணம் என்ன என்ற கேள்வியோடு, அநேகநாட்களுக்கு பின்னர் அதே தேவஊழியரிடம் சென்றான். அந்த ஊழியர் ஜாணிடம் இந்த முதலாம் சங்கீதத்தை விளக்கி போதித்தார். அப்போதுதான், ஆரம்பத்தில் தான் தேவனோடு கொண்டிருந்த உறவுக்கும், தற்போதுள்ள தன் நிலைமைக்குமுள்ள வித்தியாசத்தை உணர்ந்தான் ஜாண். தன் விழுகைக்குரிய காரணத்தைப் புரிந்து மனங்கசந்து, திரும்பவும் தேவனோடு உறவைச் சரிசெய்திட தீர்மானித்தான்.

துன்மார்க்கர், பாவிகள், பரியாசக்காரர் – இவர்களது கூட்டுறவும் ஆலோசனையும் ஒன்று. வேதத்தைத் தியானிப்பவர்கள், அதன்படி நடப்பவர்கள் – இவர்களது கூட்டுறவும் ஆலோசனையும் இன்னொன்று. இந்த முதலாம் சங்கீதத்தின் இறுதியில் இவ்விரு சாராரின் முடிவும் தரப்பட்டுள்ளது. வாழ்க்கையின் செழிப்பும் இளைப்பும் ஒரு மனிதனின் தெரிந்தெடுப்பிலேதான் தங்கியுள்ளது. இந்த ஜாண் முதலில் தேவபிள்ளையாயிருந்து, வேததியானத்தோடும், தேவஊழியரின் ஆலோசனையுடனுமே தன் தொழிலை ஆரம்பித்தான். ஆனால், பின்னர் செழிப்பு வளர வளர தன் வழியைத் துன்மார்க்கர், பாவிகள், பரியாசக்காரரோடு இணைத்து, அவர்களுடைய ஆலோசனைகளில் நடந்தான். அதன் விளைவைக் கண்டுகொண்டான்.

இன்று பலருக்குச் சொந்தமாகத் தொழில் உண்டு. வசதி வாய்ப்புகள் உண்டு. ஆனால், முந்திபோல எந்த நல்ல பலனையும் காணமுடிவதில்லை. காரியங்கள் இப்போது வாய்ப்பதில்லை, இது ஏன்? பிரியமானவர்களே, இக்கேள்விகளுக்கான பதிலைப் பெற்றுக்கொள்ள முதலாம் சங்கீதத்தை ஆராய்ந்து பாருங்கள். இரவும் பகலும் கர்த்தருடைய வேதத்தில் தியானமாயிருந்து அவருடன் நல்லுறவில் இருந்த நாட்களுக்கும், இன்று தோல்வியைத் தழுவிக்கொண்ட இந்த நாட்களுக்கும் இடையில் என்ன நடந்தது என்பதை சிந்தியுங்கள். தேவசமுகத்தில் அமர்ந்து உங்களை நீங்களே உய்த்து ஆராய்ந்து பாருங்கள். உங்கள் பின்மாற்றத்திற்கான காரணம் உங்களுக்குத் தெரியவரும். தவறான உறவு, தவறான ஆலோசனை எதுவாயினும் இன்றே தேவனிடம் அறிக்கைசெய்து விட்டுவிடுவோம். அப்போது நாம் செய்வதைத் தேவன் வாய்க்கப்பண்ணுவார்.

ஜெபம்: அன்பின் தேவனே, நீர் எங்களுக்கு சொன்னதை செய்கிறீர். ஆனால் நாங்களோ உமக்கு பிரியமாய் நடவாதபடி பின்வாங்கிப் போகிறோம். மனந்திரும்ப உமது சமுகத்தில் எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.