ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 24 செவ்வாய்
அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம் (மத்தேயு 9:37) இவ்வாக்குப்படி வடஇந்தியாவிலும் மற்றும் பல தேசங்களிலும் தவனமுள்ள ஆத்துமாக்களைச் சந்திக்கும் கனமான ஊழியத்திற்கு, சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் தேவஅழைப்பைப் பெற்ற ஊழியர்கள், மிஷனரிகள் அநேகர் எழும்பவும் நற்செய்தி தீவிரமாய் அறிவிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.
பயமின்றி முன்செல்!
தியானம்: 2025 ஜுன் 24 செவ்வாய் | வேதவாசிப்பு: யோசுவா 1:1-9

…பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக (யோசுவா 1:7).
புதிய பொறுப்பு, புதிய பாதை என்று ஒரு புதிய காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும்போது எவருக்கும் மனதிலே ஒரு தயக்கமும், பயமும் எழும்புவதுண்டு. இப்படியான நிலையில்தான் யோசுவாவும் ஆரம்பத்தில் இருந்தார். கானான் நோக்கி இஸ்ரவேலை வழிநடத்திச் சென்ற மோசே, கானானுக்குள் பிரவேசிக்கும் முன்பதாகவே மோவாப் தேசத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்துப்போனார். அதன்பின்னர் நூனின் குமாரனான யோசுவா அப்பொறுப்பை ஏற்கவேண்டியதாயிற்று. அப்பொழுது கர்த்தர் யோசுவாவைப் பெலப்படுத்திப் பேசிய வார்த்தைகள், இன்று நம்மையும் உற்சாகப்படுத்துகின்றவையாகவே இருக்கின்றன. யோசுவா உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவரோடே கூடவே இருப்பதாகவும், “உன்னைவிட்டு விலகுவதில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்றும் கர்த்தர் வாக்களித்தார். வாக்களித்தபடியே கர்த்தர் யோசுவாவுடனே கூடவே இருந்தார்.
யோசுவா இஸ்ரவேலரை வழிநடத்திய பாதையில் முதலில் யோர்தானைக் கடந்து, பின்னர் எரிகோவைக் கைப்பற்ற வேண்டியிருந்தது. அதைத்தொடர்ந்து கானானுக்குள் செல்லும்வரை பல தடைகளையும், எதிர்ப்புகளையும் கடந்துசெல்ல நேர்ந்தது. ஆயினும் யோசுவா கலங்காமலும் பயப்படாமலும் முன் சென்றார். யோசுவாவினால் இது எப்படி முடிந்தது? ஆம், கர்த்தர் கூறியபடி மோசே கற்பித்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை தன் வாயைவிட்டுப் பிரிக்காமலும், அதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் செய்யவும் கவனமாய் இருந்தார் யோசுவா. இரவும்பகலும் அதைத் தியானித்து, தனக்கு எதிராய் எழுந்த சகல சூழ்நிலைகளையும் மேற்கொண்டு, இஸ்ரவேலை கானானுக்குள் கொண்டு சேர்த்தார் யோசுவா. அவருக்கு அளிக்கப்பட்ட புதிய பொறுப்பினிமித்தம் அவர் பயப்படவில்லை. கர்த்தர் அவரோடேகூட இருந்தார்.
அருமையானவர்களே, புதிய பொறுப்புகள், புதிய இடம் என்று ஏற்பட்ட திடீர் திருப்பங்களினால் நம்மில் யாராவது தடுமாறி நிற்கிறோமா? நம் வாழ்வுக்குத் தேவையான சகல ஆலோசனைகளையும், வாக்குறுதிகளையும் தேவன் எழுதியே தந்துவிட்டார். இன்று கர்த்தர் நமக்குக் கூறுவது, “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே, கலங்காதே. நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னேடே இருக்கிறார்” என்பதாகும். கர்த்தருடைய வார்த்தை நமது வாயிலும் இருதயத்திலும் செயலிலும் இருக்கிறதா என்பதை நிதானித்துப் பார்ப்போம். இருக்கிறது என்றால் நாம் எதற்குமே பயப்படவேண்டிய அவசியமே இல்லை. கர்த்தர் நம்மை முடிவு பரியந்தம் நடத்துவார்.
ஜெபம்: அன்பின் தேவனே, எவ்விதமானத் தடைகளையும் என் வாழ்வில் மேற்கொண்டு முன்செல்லும்படியாக உம் வார்த்தைகளைப் பற்றிபிடித்துக்கொள்ள கிருபை தாரும். ஆமென்.