வாக்குத்தத்தம்: 2025 ஜுன் 7 சனி

எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன் மேல் கிருபையாயிருப்பேன். (யாத்.33:19)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 24,25 | மாலை: யோவான் 12:23-50

ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 7 சனி

சத்தியவசன இலக்கிய ஊழியத்தின் எல்லையை விரிவாக்கவும் புதிய புத்தக வெளியீடுகள் மற்றும் மறுஅச்சுப்பதிப்பு செய்யப்பட வேண்டிய வெளியீடுகளின் பிரயாசங்களை கர்த்தர் வாய்க்கப்பண்ணவும், இந்நாட்களில் புத்தகங்களை வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை பெருகத்தக்கதாக ஜெபிப்போம்.

முதிர்வயதிலும்…

தியானம்: 2025 ஜுன் 7 சனி | வேதவாசிப்பு: லூக்கா 2:36-38

YouTube video

அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள் (சங்கீதம் 92:15).

எனது தாயார் மிகவும் சுறுசுறுப்பான ஒரு ஆசிரியர். ஆனால், முதிர்வயதானதும் நோயின் காரணமாகவும், வயோதிப நிலையின் காரணமாகவும் முன்புபோல் அவர்களால் சுறுசுறுப்பாக இருக்கமுடியவில்லை. இந்நிலையில், “நான் இப்படியே இருந்து என்ன பிரயோஜனம்? நான் யாருக்கும் உதவியாக இருக்கமுடியாமல் இருக்கிறதே” என அடிக்கடி மனமுடைந்து பேசுவார்கள். ஒருநாள் வேதத்தில் அன்னாள் என்ற தீர்க்கதரிசியைக்குறித்து வாசித்துவிட்டு, முன்புபோல் வெளியிலே சென்று மற்றவர்களுக்கு உதவியாக இருக்க முடியாவிட்டாலும், அன்னாளைப்போல வீட்டில் இருந்தபடியே எல்லோருக்காகவும் ஜெபிப்பேன் என்று கூறி அப்படியே செய்துவந்தார்கள். இப்படியாக தனது இறுதி நாட்களை கனிநிறைந்த சந்தோஷநாட்களாக மாற்றிக்கொண்டார்.

இன்று நாம் வாசித்த அன்னாள் ஒரு பெண் தீர்க்கதரிசி. இவர் திருமணமாகி ஏழுவருடம் மாத்திரமே புருஷனோடு வாழ்ந்த ஒரு விதவை. தன் கணவன் இறந்த பின் மறுமணம் செய்யாமல், ஆலயத்திலே இரவும்பகலும் உபவாசமிருந்து ஜெபித்து ஆராதனை செய்துவந்தார். இப்போது அவரது வயது எண்பத்து நான்கு. இவர், கிறிஸ்துவின் வருகையைக் காண்பதற்கு ஆவலோடு காத்திருந்தார். அப்படியே அதைக் கண்டுகொண்டார். அந்த அன்னாள் முதிர்வயதிலும் கனிகொடுத்து புஷ்டியும் பசுமையுமாய் அநேகருக்கு ஆசீர்வாதமாய் வாழ்ந்தார் என்பதில் ஐயமே இல்லை.

கனிகொடுத்தல் என்பது, பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்பதாகும். ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம். சரீரத்தில் பெலன் இருக்கும்போது, குடும்பத்தினருக்கும், பிறருக்கும் பயனுள்ள ஆசீர்வாதமான வாழ்வு வாழ்ந்துவிட்டு, சரீரம் பலமற்று, முதிர்வயதை எய்துவிட்ட நிலையில், ‘எவருக்கும் உதவியற்றிருக்கிறேனே. இனி என்னால் என்ன பயன்’ என வீணாகக் குழப்பமடைவது ஏன்? இன்று பல முதியோர்கள், பல கேள்விகளுடனும், ஏக்கம், வேதனை, தனிமை போன்ற உணர்வோடும் மனமுடைந்து முதியோர் இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களை நாம் உற்சாகப்படுத்தவேண்டும். முதியோர் இல்லங்களிலிருந்து இந்தத் தியானத்தை வாசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஏன் உங்களுக்கு வீண் கலக்கம்? அன்றும் இன்றும் கனிகொடுத்து, புஷ்டியும் பசுமையுமாய் வாழ தேவன் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். ஆக, அன்னாளைப்போல இன்றே ஜெபிக்க ஆரம்பியுங்கள். வாழ்நாள் இறுதிவரை செழிப்பும் புஷ்டியுமாய் நீங்கள் கனி கொடுப்பீர்கள். கர்த்தருக்கே எல்லாக் கனமும் மகிமையும் உண்டாகட்டும்.

ஜெபம்: அன்பின் தேவனே, பிறருக்குப் பயனுள்ளவாறு கனி கொடுக்கும் வாழ்வு வாழவும் அன்னாளைப்போன்று பிறருக்காக இடைவிடாமல் வேண்டுதல் செய்யவும் எனக்குக் கிருபை தாரும். ஆமென்.