Daily Archives: May 15, 2019

ஜெபக்குறிப்பு: 2019 மே 15 புதன்

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் முன்னேற்றப் பணிகளில் அங்குள்ள முன்னேற்றப் பணியாளருக்கு உதவியாளராக ஊழியம் செய்ய ஆண்டவரது அழைப்பைப் பெற்ற சகோதரர் கிடைக்கப்பெறுவதற்கும், அங்குள்ள ஊழியத்தின் எல்லையை தேவன் விரிவாக்கவும் ஜெபம் செய்வோம்.

எல்லாம் புதிதாயின!

தியானம்: 2019 மே 15 புதன் | வேத வாசிப்பு: ரோமர் 6:1-6

“ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்” (ரோமர் 6:5).

“இவனுக்கு நம் சொத்தில் ஒரு பங்கும் இல்லை பாகமும் இல்லை.” தகப்பனின் சுவீகார மகனுக்கு எதிராகக் கொதித்து எழுந்தான் மகன். “இவன் என் சுவீகார புத்திரன். இவன் பெயருக்குப் பின்னால் என் பெயர் இணைக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் என்னுடைய எல்லாவற்றிலும் அவனும் இணைந்திருக்கிறான் என்பதை நினைத்துக்கொள்” என்றார் தகப்பன். சரியான பதில்!

கிறிஸ்துவின் மரணத்தின் சாயல், அது எப்படிப்பட்டது என்று தனித்திருந்து சிந்தித்திருக்கிறோமா? இயேசு பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, நண்பனினாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு, அடிக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளாகி, கேவலப்படுத்தப்பட்டு, பெரிய பெரிய ஆணிகளால் சிலுவைமரத்தில் கடாவப்பட்டு, அருகிலிருப்பவனின் பரிகாசத்தையும், சகித்துக்கொண்டு, எல்லாவற்றுக்கும் மேலாக, என் பாவத்தைத் தம்மில் ஏற்று தாம் பாவியாய் தொங்கியதால் பிதாவின் முகத்தினின்று மறைக்கப்பட்டுத் தவித்து, சிலுவையில் எனக்காய் தமது ஜீவனைவிட்டாரே! இவையாவும் எனக்காக என்று நான் வெறுமனே விசுவாசிக்கிறேனா? உள்ளம் நொருங்குண்டு விசுவாசிக்கிறேனா? இந்த மரணத்தின் சாயலில்தான் நாம் இணைக்கப்படுகிறோம் என்பதை நாம் விசுவாசிப்பது மெய்யென்றால், எங்கள் தீய குணங்கள், பாவத்தின்மீது கொண்டிருந்த அவா, பாவத்துடன் இணைக்கப்பட்ட கட்டுகள் யாவும் செத்துவிட்டது என்றும் விசுவாசிக்கவேண்டும். இப்படியாக இயேசுவின் மரண சாயலில் நாம் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்றால் நமது பாவசுபாவம் மரித்துப்போக, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலிலும் நாம் இணைக்கப்படுகிறோம். இப்போது நாம் கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டிகள். ஆதாமினால் உண்டான தேவனுடனான பிரிவினை இனி இல்லை. நமது பரம பிதாவோடு பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் அவருக்குரியவர்கள்! அவருடைய எல்லாமே நம்முடையவைகள்!!

இந்தப் பெரிய பாக்கியத்தை நாம் பெற்றிருக்க, ஒரு பெறுமதிப்பும் அற்ற இந்த உலகத்தின் வஞ்சகங்களுக்கு இடமளிக்கவும் முடியாது; இந்த உலகத்திற்கான பிரச்சனைகள், கஷ்டங்கள், வியாதிகள் எதைக்குறித்தும் நாம் முறுமுறுக்கவும் முடியாது; இனிப் பாவம் நம்மைச் சூழவந்து பயமுறுத்தினாலும், அதற்கு எதிராகப் போராடி கிறிஸ்துவின் உயிர்ப்பின் வல்லமையால் அதை மேற்கொள்ள முடியாமல் தோற்றுப்போகவும் முடியாது. இந்த ஜெயமுள்ள வாழ்வை நமக்கு அருளிய ஆண்ட வரை நன்றியோடே துதிப்போமாக.

“…ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2கொரி.5:17).

ஜெபம்: கர்த்தாவே, இன்னமும் நான் என்னைப் பலவீனனாக எண்ணாமல், கர்த்தருக்குள் ஜெயம் பெற்று, சாட்சியாய் விளங்க உமது வல்லமையைத் தாரும். ஆமென்.

சத்தியவசனம்