ஜெபக்குறிப்பு: 2019 மே 24 வெள்ளி
சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகள் திங்கள், வியாழன், சனிக்கிழமை ஆகிய நாட்களில் HCJB வானொலி SW 9610 Khz 31 M இல் மாலை 6.30 மணியளவில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் தெளிவாகக் கேட்பதற்கும் அநேக புற இன மக்களும் இரட்சிப்பின் நற்செய்தியைக் கேட்டு மனந்திரும்ப ஜெபிப்போம்.
தொழிலைக் கொடுப்பாயா?
தியானம்: 2019 மே 24 வெள்ளி | வேத வாசிப்பு: லூக். 5:1-11, யோவா. 21:1-3, 15-17
“அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்” (1 யோவா.2:5).
தேவனின் பிள்ளைகள் முதலாவது தேவனுடைய வசனத்தைக் கைக்கொள்ள வேண்டும்; அவர்களிடமே தேவ அன்பு பூரணப்பட்டிருக்கும் என்று யோவான் எழுதுகிறார். அந்த அன்பு நமக்கிருக்குமானால் தேவ ஊழியம் செய்ய தடையேது? இயேசு பேதுருவிடம், ‘நீ என்னை உண்மையாகவே நேசித்தால் என் ஆடுகளை மேய்ப்பாயாக’ என்றல்லவா சொன்னார்.
கெனேசரேத்துக் கடல் அருகே வலைகளை அலசிக்கொண்டிருந்த பேதுருவை அழைத்தார் இயேசு. அவனும் இதுவரை அவனுக்கு உணவளித்த தொழிலை அப்படியே விட்டுவிட்டு ஆண்டவரைப் பின்பற்றி சென்றான். இந்த பேதுரு இயேசுவோடு மூன்றரை வருடகாலமாகக் கூடவே இருந்தார். ஆனால் இயேசு மரித்தவுடன், தனது பழைய மீன்பிடித் தொழிலுக்கு மற்றவர்களையும் கூட்டிக்கொண்டு போய்விட்டார். எனினும், மரணத்தினின்றும் உயிர்த்தெழுந்த இயேசு, அதே கடலருகே மீண்டும் பேதுருவை அழைத்தார். ஆண்டவர் இப்போது, பேதுருவைப் பார்த்து மூன்று முறை ஒரே கேள்வியைக் கேட்டார். ‘இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?’ ‘நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?’ ‘நீ என்னை நேசிக்கிறாயா?’ இந்தக் கேள்விகளால் மனமுடைந்த பேதுரு, தன்னை மறுபடியும் ஆண்டவர் பணிக்காக ஒப்புக்கொடுத்தார். தனது மீன்பிடித் தொழிலை முற்றிலுமாகக் கைவிட்டார். ஆம், தேவ பணிக்காக தன் தொழிலை முற்றிலுமாய் விட்டுவிட்டார்.
நாம் தேவனுக்காக எதைக் கொடுத்தாலும் அது அன்பினால் கொடுக்கப்பட வேண்டுமே தவிர, கட்டாயத்துக்காகவோ, வேறு எந்த நோக்கத்துக்காகவோ கொடுக்கப்படக்கூடாது. தேவ ஊழியத்தைச் செய்வதற்கென்று ஒப்புக் கொடுத்திருக்கும் அன்பான சகோதரனே, சகோதரியே, தேவ ஊழியத்தைச் செய்ய முன்பு தேவனையும் அவரது வார்த்தைகளையும் முதலாவது நேசிக்கப் பழகு. அதற்குக் கீழ்ப்படிய முதலாவது உன்னை ஒப்புக்கொடு. “மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே, ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” (1கொரி. 9:27) என பவுல் எழுதியுள்ளார். ஆம், நாம் தேவனுக்காகச் செய்யும் ஊழியமானது, நாம் அவருக்குக் கொடுக்கும் ஒரு அன்பின் காணிக்கையாய் இருக்கவேண்டும். அந்தவகையில் நாம் செய்யும் தொழிலைவிட்டு ஊழியத்திற்குப் போனாலும் அதுவும் அன்பின் நிமித்தமே செய்யப்படவேண்டும். மாறாக, பெருமை பாராட்டுவதற்காக இருக்கக்கூடாது.
“எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” (கொலோ. 3:24)
ஜெபம்: ஆண்டவரே, தேவ அழைப்பைப் பெற்றும், தடைகளோடு உள்ள எங்கள் வாழ்வை சரிசெய்யப்படுவதற்கு உமது கரத்திலே ஒப்புவிக்கிறோம். ஏற்றுக்கொள்ளும். ஆமென்.