Daily Archives: May 8, 2019

வாக்குத்தத்தம்: 2019 மே 8 புதன்

என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்; என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும் (சங் 89:24).
2சாமுவேல் 14,15 | லூக்கா.24:13-35

ஜெபக்குறிப்பு: 2019 மே 8 புதன்

“இருக்கிறவராக இருக்கிறேன்” (யாத்.3:14) என்னும் நாமமுள்ள தேவன் தாமே இந்த நாளின் சத்தியவசன அலுவலகக் கூட்டத்தில் பிரசன்னராயிருந்து ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்களின் சத்தத்துக்கு செவிகொடுக்கவும், செய்தியாளரை தம் வல்ல கரத்தில் எடுத்து உபயோகிக்கவும் வேண்டுதல் செய்வோம்.

உயிர்ப்பு தரும் உயிரோட்டம்

தியானம்: 2019 மே 8 புதன் | வேத வாசிப்பு: அப்.9:1-9; 1கொரி.15:1-10

“எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார்” (1கொரிந்தியர் 15:8).

ஒரு மாம்பழத்தைக் கண்டால், அதை உண்பது குறித்துத்தானே சிந்திப்போம். ஆனால், “அதற்குள் மறைந்திருக்கின்ற விதையை, அதற்குள் இருக்கும் உயிரை நான் பார்க்கிறேன்” என்று ஒரு நண்பர் சொன்னபோது பைத்தியக்காரத்தனமாகத் தென்பட்டது. ஆனால், பல வருடங்களின் பின், அவரைச் சந்தித்தபோது, ஒரு பெரிய மாந்தோப்புக்கு அவர் சொந்தக்காரராய் மாறியிருந்ததைக் கண்டபோதுதான் அவருடைய தூரநோக்குப் புரிந்தது.

கல்விமானும், மிடுக்கான வாலிபனுமாகத்தான் சவுல் காணப்பட்டான். ஆனால், கர்த்தரோ, அவனுக்குள் இருந்த வித்தைக் கண்டார். அதற்குள் மறைந்திருந்த உயிரோட்டத்தைக் கண்டார். ஸ்தேவானின் சாவுக்குச் சவுல் சாட்சியானதும், சீஷரைக் கொலை செய்யும்படி சீறியதும், தமஸ்குவிலுள்ள விசுவாசிகளைச் சிறைப்பிடிக்க உத்தரவு பெற்றதும் சாதாரண விஷயமே அல்ல. தனக்குள் இருப்பது இன்னது என்று தெரியாத சவுல் வீராவேசமடைந்தான். ஆனால், அவனுக்குள் இருந்ததை அறிந்த கர்த்தரோ, அவனுக்குத் தரிசனமாகும்படி அமைதியாயிருந்தார். “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்” என்று கர்த்தர் சொன்னபோது, சவுல் செத்துவிட்டான் என்று சொல்லலாம். ஏனெனில், இதுவரை நினைத்ததையெல்லாம் மிடுக்கோடு செய்துவந்த சவுல், முதற்தடவையாக, “ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்” என்கிறான். சவுலுக்காகவும் இயேசு மரித்தாரல்லவா! உயிர்த்த ஆண்டவர் சவுலின் வாழ்வைத் தலைகீழாய் மாற்றிப்போட்டார். தன் வைராக்கியத்துக்காய் எழுந்தவன், இப்போது இயேசுவுக்காய் எழுந்து நின்றான். பவுலின் மார்க்கவெறி, கர்வம், அறிவுத்திறன் எல்லாமே சுக்கு நூறாகியது. அதற்கு ஒரே பதில், உயிர்த்த கர்த்தர் அவனுக்குள் உயிரோட்டமானார். அவ்வளவுதான். தன்னை அகாலப்பிறவி என்று அறிக்கை செய்யுமளவுக்குப் பவுல் நொறுங்கிப் போனான். நிருபங்களை எழுதிய எழுத்தாணியாய் விளங்கினான்.

நம்மைக் கட்டியிருந்த பாவசங்கிலியைச் சிலுவையில் ஆணியடித்துக் கொன்று, மரணத்தை ஜெயித்து எழுந்த ஆண்டவர் இன்றும் ஜீவிக்கிறார் என்பதற்கு முதற்சாட்சி, நமது மனமாற்றம்தான். ஒரு மனிதன் தன் பாவ நிலையை விட்டு கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்வை ஆரம்பிப்பது போன்றதொரு அற்புதம் இந்த உலகில் வேறு இருக்க முடியாது. அந்த அற்புதம் என்னில் நிகழ்ந்ததா? பலவீனங்களுக்கும் அப்பால் எனக்குள் இருக்கும் உயிரோட்டமானது, உயிர்த்த இயேசுவுக்குச் சாட்சியாய் விளங்குகிறதா?

“சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, …தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான்” (அப்.9:22).

ஜெபம்: எங்கள் நல்ல ஆண்டவரே, உம்முடைய வசனத்தின்படியே எங்களை உயிர்ப்பியும். உமக்கே எந்நாளும் சாட்சிகளாய் வாழ உமதருள் தாரும். ஆமென்.

சத்தியவசனம்