Daily Archives: May 19, 2019

வாக்குத்தத்தம்: 2019 மே 19 ஞாயிறு

நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் (எபி 4:16).
1இராஜாக்கள் 10,11 | யோவான்.5:1-27

ஜெபக்குறிப்பு: 2019 மே 19 ஞாயிறு

“கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்; எல்லாத் தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்” (சங்.97:9) உன்னதமான தேவனை அனைத்து இடங்களிலும் ஆராதித்துக்கொண்டிருக்கிற இந்நாளில் வடஇந்தியாவின் 6 இடங்களில் நடைபெறும் தேர்தலுக்காகவும், தேசத்தின் நன்மைக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.

நான் பிழைக்கும்படிக்கு…

தியானம்: 2019 மே 19 ஞாயிறு | வேத வாசிப்பு: ரோமர் 8:1-9

“…தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்” (ரோமர் 8:3).

இரண்டு கிட்னிகளும் பழுதடைந்த நிலையில் வாழ்வுக்குப் போராடிக் கொண்டிருந்த மகனைக் குணப்படுத்துவதற்குப் பெற்றோர் எடுக்காத முயற்சிகளே இல்லை; ஆனால் ஒரு பலனும் கிட்டவில்லை. இறுதியில் அவனது தாய் தன் வாலிப மகன் வாழ வேண்டும் என்பதற்காக தனது ஒரு கிட்னியைக் கொடுத்துவிட்டார். அறுவை சிகிச்சை முடிந்ததும், கண் விழித்த அந்தத் தாய், “என் மகன் சுகமாக இருக்கிறானா” என்று தான் கேட்டார். அதைக் கேட்டு அடுத்த கட்டிலில் சுகவீனமாய்ப் படுத்திருந்த என் கண்களே கலங்கியது.

இந்த அண்டசராசரத்தைப் படைத்து, ஆளுகை செய்கின்ற ஒப்பற்ற தேவாதி தேவன், நான் வாழவேண்டும் என்பதற்காகத் தம்மையே முழுமையாக ஒப்புக் கொடுத்தார் எனில், அந்த அன்பை எந்த மனித அறிவால் அறிய முடியும்? அன்று நியாயப்பிரமாணத்தால் செய்யக்கூடாததைச் செய்துமுடிக்கத் தேவன் தாமே முன் வந்தார். மிருக பலியினால் மனிதனை மீட்க முடியாது. ஆகவே, தமது பிள்ளைகளைப் பாவ அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்காக மகா பரிசுத்த தேவன், தம்முடைய மகா பரிசுத்தமுள்ள குமாரனையே பாவ மாம்சத்தின், அதாவது நமது சாயலாக்கினார் என்றால், இதுவும் மனித அறிவினால் கணக்கிட முடியாத ஒரு விஷயமே! மேலும், பாவ மாம்சத்தின் சாயலில் வந்த இயேசு, பாவத்தைப் போக்கும் ஏக பலியாகி பாவத்தின் கிரயமாகத் தமது பரிசுத்த இரத்தத்தைச் சிந்தி, தமது மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாக்கினார் என்று பவுல் எழுதுகிறார். பாவம் ஆக்கினைக்குள்ளானது. இது எத்தனை மகிழ்ச்சியான செய்தி! ஆகவே நாம் இனி மாம்சத்தின்படி, அதாவது பாவம் செய்கின்ற சுயவிருப்பத்தின்படி நடக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் பாவம் இனி நம்மை ஆள முடியாது. மாறாக, இயேசுவின் இந்தக் கிருபாதார பலியைத் துச்சமாக எண்ணி நாம் இன்னமும் பாவத்துக்கு இடமளிப்போமானால் அது தேவனுக்கு விரோதமான பகை என்கிறார் பவுல்.

தன் மகன் பிழைக்கும்படி ஒரு தாய் தனது உடலுறுப்பையே கொடுத்தாள். ஆண்டவரோ நாம் நித்தியமாய் பிழைத்திருக்கும்படி தமது ஜீவனையே கொடுத்தார். தவறுகள் நம்மைச் சோதிக்கையில் ஒரு கணம் கண்களை மூடி “எனக்காகவே பாவ மாம்சமாகி, பாவத்தை ஆக்கினைக்குட்படுத்திய” இயேசுவை நினைப்போமாக. இந்த உலகத்தைப் பார்த்து ஏன் பயப்படவேண்டும்? இயேசு உலகத்தை ஜெயித்துவிட்டார்! ஆகவே, மற்றவர்களையும் இயேசுவண்டை வழி நடத்த நாம் முயலுவோமாக.

“ஆதலால், இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல…” (ரோமர் 8:18).

ஜெபம்: ஆண்டவரே, நித்தியவாழ்வை தரும்படி, உமது ஜீவனையே எங்களுக்குத் தந்தீர். இனியும் நாங்கள் பாவத்துக்கு இடமளித்துவிடாதபடி வாழ அருள்புரியும். ஆமென்.

சத்தியவசனம்